18 மாதப் பயணத்துக்குப் பிறகு, மதராஸ் வந்து சேர்ந்தார்
கிளைவ். கிழக்கிந்தியக் கம்பெனியில் அவருக்குத் தரப்பட்ட சம்பளம் ஆண்டுக்கு
5 பவுன். அதாவது, இந்தியப் பணத்தில் 50 ரூபாய். அன்று, கம்பெனியின் உயர்
அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் 300 பவுன். அதை அடைய அவர்கள் நான்கு
ஆண்டுகள் வேலை செய்து பணியில் சிறப்புப் பெற வேண்டும். இந்த 5 பவுன்
சம்பளத்துடன் தங்கும் இடமும் சாப்பாடும் இலவசம்.ஆனால், சலவைக் கூலி, மெழுகுத்திரிக் கூலி, தட்டுமுட்டுச் சாமான்கள்
அத்தனையும் அவர்களே வாங்கிக் கொள்ள வேண்டும். கம்பெனி ஊழியர்களுக்கு மூன்று
மாதங்களுக்கு ஒருமுறை பரிசு ஊதியம் என்று ஒரு தொகை தரப்படும். அதை முதலீடு
செய்து இந்தியப் பொருட்களை வாங்கி இங்கிலாந்துக்குக் கப்பலில் அனுப்பி
வணிகம் செய்து தனியே பொருளீட்டிக் கொள்ளலாம். சில மாதங்களிலேயே கிளைவ்,
கம்பெனி உயர் அதிகாரிகளின் பலவீனங்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கு
உரிய காணிக்கை களைச் செலுத்தி, தனது பதவியை உயர்த்திக் கொள்ளத்
தொடங்கினார். கல்கத்தாவில் சில காலம் பணியாற்றியபோது, யுத்தக் கைதியாகப்
பிடிபட்டார் கிளைவ். பிணையக் கைதியாக இருந்தபோது கையூட்டு கொடுத்துத்
தப்பித்து வந்த கிளைவின் தந்திரத்தை, கம்பெனி வெகுவாகப் பாராட்டியது.அவருக்குப் புதிய பதவியைத் தந்தது. இந்த சூழலில் கிளைவ் தனது நண்பர்
எட்மண்ட் மஸ்கில்னேயின் சகோதரி மார்க்ரெட்டின் புகைப்படம் ஒன்றைப்
பார்த்தார். அவளையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதற்குள், எட்மண்டின் பதவியைப் பயன்படுத்தித் தன்னை உயர்த்திக்கொள்ள
வேண்டும் என்ற ஆசையே கிளைவுக்கு இருந்தது. 1753-ம் ஆண்டு சென்னை புனித
ஜார்ஜ் கோட்டையில் உள்ள தேவாலயத்தில், மார்க்ரெட்டை ராபர்ட் கிளைவ்
திருமணம் செய்துகொண்டார். சில நாட்களில் மனைவியோடு பம்பாய் சென்று மண
வாழ்க்கையைத் தொடங்கினார்.
உள்நாட்டுப் பிரச்னையைப் பயன்படுத்தி இரண்டு பக்கமும் பணம் பறிப்பது என்ற
புதிய வழியைக் கண்டுபிடித்தார் ராபர்ட் கிளைவ். தங்களுக்குள்
சண்டையிட்டுக்கொண்ட நவாப்களுக்குள் தலையிட்டு இரண்டு பக்கமும் பணம்
வாங்கிக்கொண்டு உதவுவது போல நடித்து, இரண்டையும் அழித்து, தானே முழுமையான
அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டார். குறுக்கு வழியில் சம்பாதித்த பணத்தை
அரசியல் சூழ்ச்சிகளை ஏற்படுத்தப் பயன்படுத்திக்கொண்டார். அதன் வழியே,
மிதமிஞ்சிய ஆதாயம் கிடைக்கும் என்ற அவரது நம்பிக்கை நனவாகியது. இத்துடன்,
வங்காளம் மற்றும் பீகாரில் உள்ளுர் வரி வசூல் செய்யும் முழு உரிமையை கிளைவ்
வைத்துக்கொண்ட காரணத்தால், அவரால் எளிதாகப் பணம் குவிக்க முடிந்தது.1760-களில் ராபர்ட் கிளைவ் இங்கிலாந்து திரும்பிய போது அவரிடம் இருந்த பணம்
இரண்டு லட்சத்து 34,000 பவுண்ட். அதாவது, இந்திய மதிப்பு 1 கோடியே 81
லட்சத்து 93,554 ரூபாய்.1773-ல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கிளைவ் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டில் ஒரு புள்ளிவிவரம் காணப்படுகிறது. அதன்படி, அன்றைய
வங்காளத்தின் மொத்த வருமானம் 1 கோடியே 30 லட்சத்து 66,761 ரூபாய். செலவு 9
லட்சத்து 27,609 ரூபாய். ராபர்ட் கிளைவ் அடைந்த ஆதாயம், 2 லட்சத்து 50,000
ரூபாய். இப்படிப்பட்ட சுயநலமிதான் ராபர்ட் கிளைவ். 2004-ம் ஆண்டு லண்டனில்
உள்ள சூத்பே என்ற ஏலக்கடை வரலாற்றுச் சிறப்புமிக்க பழம்பொருட்களை
விற்பனைக்குக் கொண்டுவந்தது. அதில், ராபர்ட் கிளைவ் வசம் இருந்த மொகலாயர்
காலத்தில் செய்யப்பட்ட, வைரம் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட நீர் ஊற்றும்
தங்கக் குடுவை ஒன்றும் 5.2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தக் குடுவையை இந்தியாவில் இருந்த நவாபிடம்
இருந்து பறித்தது.லஞ்சப் பணத்தில் தனது தந்தையின் கடன்களை அடைத்து, சகோதரிகளுக்குப்
பிரம்மாண்டமாக திருமணம் நடத்திவைத்து, பெரிய பண்ணை வீடுகளை வாங்கி,
இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என்ற நிலையை அடைந்தார் கிளைவ்.இங்கிலாந்து அரசியலில் செல்வாக்குப் பெறு வதற்காக பெரும் பணத்தைச்
செலவழித்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் கிளைவ். லண்டன் நகரின் முக்கிய
இடத்தில் 92,000 பவுண்ட் கொடுத்து பெரிய மாளிகையை விலைக்கு வாங்கினார்.
1773-ல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி
இந்தியாவில் மிகப் பெரிய கொள்ளை நடத்தினார் கிளைவ் என்ற குற்றச்சாட்டு
எழுந்தது. அது குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. என் மேல் குற்றம்
இருந்தால், எனது சொத்துக்களைப் பறிமுதல் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். என்
சுய கௌவரத்தைக் காப்பாற்றுங்கள் என்று நடித்தார் கிளைவ்.குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டாலும், மனச்சாட்சியிடம் இருந்து விடுபட
முடியவில்லை. அவரது உடல் நலம் மெள்ள நலிவடையத் தொடங்கியது. குறிப்பாக,
ரத்தக் கொதிப்பும் தூக்கமின்மையும் ஏற்பட்டு அவதிப்பட்டார். பித்தப்பை
கோளாறு முற்றியது. சாவோடு போராடிக் கொண்டு இருந்த கிளைவ், தனது கடந்த காலம்
இந்தியாவின் எதிர்காலத்தைச் சூறையாடிய ஒன்று என்பதை உணர்ந்தே இருந்தார்.
அவரது கடிதங்களும் குறிப்புகளும் அதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
கிளைவ்வை நாயகனாகக் கொண்டாடிய கிழக் கிந்தியக் கம்பெனியே அவர் ஒரு துரோகி
என்று குற்றம் சாட்டியது. தனது சேமிப்பை இந்தியாவில் இருந்து எளிதாக
எடுத்துச் செல்ல வைரமாக மாற்றிக் கொண்டார் என்றொரு குறிப்பும் வரலாற்றில்
காணப்படுகிறது. இதுபோலவே, அவர் 1,400 தங்கப் பாளங்களைக் கொண்டுசென்ற
டோனிங்டன் கப்பல், புயலில் சிக்கி மூழ்கியது. ஆழ்கடலில் புதையுண்ட அந்தக்
கப்பலில் இருந்த தங்கத்தின் ஒரு பகுதியை இன்றும்கூட தேடிக்கொண்டு
இருக்கிறார்கள்.கிளைவின் சமகாலத்தைச் சேர்ந்த ஜோசப் பிரான்சிஸ் மார்க்கெஸ் துய்ப்ளெக்ஸ்
ஒரு வணிகரின் மகன். 1720-ல் புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு கவர்னரின்
கவுன்சில் உறுப்பினராக சேர்ந்த துய்ப்ளெக்ஸ், 1742-ல் புதுச்சேரி
கவர்னராகப் பொறுப்பேற்றார். ஆங்கிலேயர்களைப் போலவே தானும் நாடு பிடிக்கும்
போட்டியில் இறங்கினார். உள்நாட்டுக் குழப்பத்தை முதலீடாகக்கொண்டு தனது பணம்
பறிக்கும் வேலையைத் தொடங்கிய அவரைப் பற்றி, துபாஷியாக இருந்த ஆனந்தரங்கம்
பிள்ளை தனது டயரிக் குறிப்பில் எழுதி இருக்கிறார்.துய்ப்பௌக்ஸ், ழானை திருமணம் செய்து கொண்டது ஒரு தனிக் கதை. ழானின் அப்பா
அல்பெர்ட் மருத்துவச் சேவை செய்ய புதுச்சேரிக்கு வந்தபோது, எலிசெபெத் என்ற
இளம்பெண்ணைச் சந்திக்கிறார். அவள் ஒரு போர்த்துகீசியத் தந்தைக்கும், இந்திய
வம்சாவழிப் பெண்ணுக்கும் பிறந்தவள். அவளையே திருமணம் செய்துகொள்கிறார்.
இந்தத் தம்பதிக்குப் பிறந்த எட்டுக் குழந்தைகளில் மூத்தவள் ழான்.1706-ம் ஆண்டு ழான் பிறந்தாள். 13-வது வயதில், பிரெஞ்சுக் கம்பெனியில்
பணியாற்றும் வணிகரான வேன்சானைத் திருமணம் செய்துகொண்டாள். வேன்சானின்
கூட்டாளியாக இருந்த துய்ப்ளெக்ஸ், ழானின் அழகில் மயங்கி அவளைக் காதலிக்கத்
தொடங்கினார். கல்கத்தாவை அடுத்துள்ள சந்திர நாகூருக்கு துய்ப்ளெக்ஸ் இடம்
மாற்றப்பட்டார். ழான் மீதுள்ள காதலால், வேன்சானையும் தான் இருக்கும்
பகுதிக்கே அழைத்துச் சென்றார் துய்ப்பிளக்ஸ்.சரக்குக் கப்பலில் வேன்சானை அனுப்பிவிட்டு ழானின் காதலில்
மூழ்கிக்கிடந்தார் துய்ப்ளெக்ஸ். 1739-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி தனது
60-வது வயதில் வேன்சான் இறந்துபோனார். அதன் பிறகு, ழானை முறைப்படித்
திருமணம் செய்துகொண்டார் துய்ப்ளெக்ஸ். அப்போது, அவள் 11 குழந்தைகளின்
தாய். வயது 33.திருமணமான சில வாரங்களில் புதுச்சேரி கவர்னராகப் பதவி ஏற்கிறார்
துய்ப்ளெக்ஸ். எந்த நகரில் சாதாரண வணிகனின் மனைவியாக இருந் தாளோ, அதே
நகருக்கு கவர்னரின் மனைவி யாக வருகிறாள் ழான். சிறு வயதில் இருந்தே
வறுமையும் ஏக்கமும்கொண்ட அவள், பதவியைப் பயன்படுத்திப் பணம் பறிக்க
ஆரம்பிக்கிறாள். அரசின் முக்கிய உத்தரவுகளை அவளே பிறப்பிக்கிறாள். தனக்கான
தனி விசுவாசிகளின் படை ஒன்றை வைத்துக்கொண்டு கட்டளைகளை நிறைவேற்றச்
செய்கிறாள். ஜெசுவிட் மிஷினரிகளுடன் இணக்க மாக இருந்த ழான், அவர்களுக்காகக்
கிராமங்களைத் தானமாகத் தந்திருக்கிறாள். மரக்காணம், செய்யாறு, கடப்பாக்கம்
உள்ளிட்ட ஊர்கள் மிஷினரி வசம் ஒப்படைக்கபட்டன. அதே நேரம், இந்து ஆலயங்கள்
இடிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தாள். புதுச்சேரியில் உள்ள
சிவன் ஆலயத்தை இடிக்க துய்ப்ளெக்ஸ் உத்தரவு இடுவதற்கு இவளே தூண்டுகோலாக
இருந்திருக்கிறாள் என்கிறார்கள்.துய்ப்ளெக்ஸோடு உருவான மண வாழ்க்கையில் தனது 12-வது பிள்ளையைப் பெற்றாள்
ழான். அந்தக் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிட்டது. வாரிசு
இல்லாமல் போன வணிகர்களின் சொத்துக் களைப் பிடுங்கித் தனதாக்கிக்கொண்டாள்
ழான். கணவனின் கவர்னர் பதவியைப் பயன்படுத்தி மிரட்டி தனக்கு தேவையான தங்கம்
மற்றும் வெள்ளியை வாங்கிக்கொண்டாள். ஊழலின் தேவதையைப் போல விளங்கினாள்
ழான்.அரசியல் வாழ்வில், துய்ப்ளெக்சுக்கு எதிர்பாராத வீழ்ச்சி ஏற்பட்டது.
விசாரணைக்காக, பிரான்ஸ் அழைக்கப்பட்டார். தன்னுடன் வர வேண்டாம் என்று
துய்ப்ளெக்ஸ் சொன்னபோதும், நெருக் கடியிலும் துணை நிற்பதாகக் கூறிய ழான்,
பிரான்ஸ் சென்றாள். தனது 50-வது வயதில் அங்கேயே இறந்துபோனாள்.
இந்தியாவை தனதாக்கிக்கொள்ள முயன்ற கிளைவ், தற்கொலை செய்துகொண்ட காரணத் தால்
தேவாலயத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தப் படவில்லை. தற்கொலையை தேவாலயம்
ஏற்றுக் கொள்ளாது என்பதால், அவரது கல்லறையில் பொறிக்கப்படும் கல் கூட
அனுமதிக்கப்படவில்லை. அடையாளமற்ற ஒரு புதை மேடாகவே அவர் மண்ணில் புதையுண்டு
போனார். இன்றுள்ள கல்லறை பின்னாளில் உருவாக்கப்பட்டது. இதே நிலைதான்
துய்ப்ளெக்ஸுக்கும். இன்று, புதுச்சேரி கடற்கரையில் உள்ள அவரது சிலை
பின்னாளில் அவர் நினைவாக உருவாக்கப்பட்டதே!அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்கிறது சிலப்பதிகாரம். அது
தவறும்போது சாவுக்குப் பின்பும் அவமானப்படுவதைத் தவிர்க்கவே முடியாது
என்பதுதான் உண்மை. லஞ்சம் ஊழல் என்று சுய லாபத்துக்காகப் பொருள் தேடிய
கிளைவும், ழானும் அந்த அறக் கோபத்தால் வீழ்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
சாவுக்குப் பின்னாலும் சிலரை வரலாறு மன்னிப்பது இல்லை என்பதுதான் இந்த
இருவர் வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது!
விகடன்
see the truth
ReplyDelete