Search This Blog

Wednesday, February 08, 2012

அர்ஃபா = அன்பு + அறிவு

ர்ஃபா கரீம் ரந்தவா...

அழகான இந்தப் பெயரைக்கொண்ட குழந்தையின்  சொந்த ஊர், பாகிஸ்தானின் ராமதேவாலி கிராமம். அப்பாவுக்கு ராணுவத்தில் வேலை. அர்ஃபா, பள்ளியில்  நன்றாக படிக்கும் மாணவி. அபாரமான ஞாபக சக்தி உண்டு. அவளை, அருகில் இருந்த கணினிப் பயிற்சி மையத்துக்கு அப்பா அனுப்பி வைத்தார்.   அங்கே, தனது கிரகிக்கும் மற்றும் சிந்திக்கும் ஆற்றலால் எல்லோரையும் திகைக்கவைத்தாள் அர்ஃபா. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல்வேறு புரொகிராம்களைத் தானே உருவாக்கும் அளவுக்கு நிபுணத்துவம் பெற்றாள். மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தொழில்நுட்ப அறிவுள்ளவர்களைக் கண்டறிவதற்காக நடத்தும் தேர்வில், தனது பத்தாவது வயதில் கலந்துகொண்டு தேர்ச்சி அடைந்தாள். இதன் மூலம், அந்நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற உலகின் முதல் இளைய நபர் என்கிற சாதனையைப் பெற்றாள்.

இது பற்றி பத்திரிகையாளர்கள் அவளிடம் கேட்டபோது, ''அந்தச் சாதனைக்கு பிறகு, பில் கேட்ஸ் அவர்களை மைக்ரோசாஃப்ட் கேம்பஸில் சந்திக்கிற வாய்ப்புக் கிடைத்தது. அவர் கோட், சூட் போட்டுக்கொண்டு இருப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால், ரொம்ப சிம்பிளாக இருந்தார். என்னுடன் சிரிக்கச் சிரிக்கப் பேசினார். நிறையக் கேள்விகள் கேட்டார். பதில் சொன்னேன். திருப்பி அவரை ஒரே ஒரு கேள்வி கேட்டேன். அங்கிள் பதில் சொல்லாமல் நழுவிவிட்டார். என்ன கேள்வி தெரியுமா? 'என் வயதில் இருக்கிற புத்திசாலிகளை ஏன் நீங்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்வது இல்லை?’ என்று கேட்டேன்.'' என்று குறும்புடன் சிரித்தாள் அர்ஃபா.அர்ஃபாவின் இளம் வயது சாதனையை, லவினாஸ்ரீ என்கிற தமிழகத்து குழந்தை  எட்டியபொழுது அதைப் பற்றியும் கேட்கப்பட்டது. 'சாதனை என்பது முறியடிக்கத் தான். வளர்ந்துவரும் நாடுகளில் இப்படிப்பட்ட திறமையாளர்கள் இருக்கிறார்கள் என மேற்கு நாடுகள் தெரிந்துகொள்ளட்டும்'' என்றாள் சர்வ சாதாரணமாக. 

இப்படி அறிவினாலும் அன்பினாலும் அனைவரையும் கவர்ந்த அர்ஃபா, இன்று உயிரோடு இல்லை. மென்மையான அவளது இதயத்தை மாரடைப்பு தாக்கியது. மூளை நரம்புகள் செயல் இழந்தன. படுக்கையிலே இருந்தவாறு பிரபல கவிஞர் முஹம்மது இக்பாலின் கவிதைகளைக் கேட்டுக்கொண்டே இருந்தாள். ஜனவரி பதினான்காம் தேதி, அந்த அறிவுச் சுடர் தனது வெளிச்சத்தை நிறுத்திக்கொண்டது. பாகிஸ்தான் அரசு அவளின் சவப் பெட்டி மீது தேசியக் கொடியை போர்த்தி மரியாதை செய்தது. கண்ணீரோடு லாகூர் நகரமே அவளுக்குப் பிரியா விடை கொடுத்தது.

விகடன் 

1 comment: