Search This Blog

Wednesday, February 01, 2012

எனது இந்தியா!(அசோகரின் ஆணை ) - எஸ். ராமகிருஷ்ணன்....


சாலை ஓரங்களில் அசோகர் மரம் நட்டுவைத்தார், கலிங்கப்போருக்குப் பிறகு புத்த மதத்தைத் தழுவினார், அறக்கோட்பாடுகளை கல்வெட்டுகளில் பொறித்தார் என்பன போன்ற பொதுவான தகவல்களைத் தாண்டி, அசோகரின் செயல்பாடுகளும் அதற்கு பின்னால் உள்ள அக்கறைகளும் சரித்திரப் பாடப் புத்தகத்தில் முக்கியத்துவம் பெறவே இல்லை. அசோகரை இன்றைக்கு ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? வரலாறு என்றாலே, கடந்த காலம்தானே? அதை எதற்காக நாம் அறிந்துகொள்ள வேண்டும்? என்ற கேள்வி பொதுவாகப் பலருக்கு இருக்கிறது. வரலாறு என்பது கடந்த காலம் அல்ல. அது, நிகழ்காலத்தை நிர்ணயிக்கும் விசை. இன்னும் சொல்வதாக இருந்தால், எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்ற மறைமுக சக்தி.ஒரு எளிய நிர்வாகவியலை அந்தக் காலத்திலே அசோகர் அறிமுகம் செய்து இருக்கிறார். அரசின் சட்டங்கள், அரசு ஆணைகள், பொது நலம் குறித்த அறிவிப்புகள் யாவும் பொதுமக்கள் கவனத்தில் படும்படியாக பொது இடங்களில் கல்வெட்டுகளில் எழுதப்பட வேண்டும், அரசு ஆணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்தத் தவறினால், மக்கள் அதைச் சுட்டிக்காட்ட இதுவே எளிய வழி. அரசின் செயல் திட்டங்கள் மக்களைச் சென்று அடைய மக்கள் அது குறித்துத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, கல்வெட்டுகளின் வழியே மக்கள் இந்த ஆணைகளை தினமும் வாசிப்பார்கள், அவற்றைக் கடைப்பிடிப்பார்கள், ஒருவேளை இதில் ஏதாவது குளறுபடிகள் ஏற்பட்டால், அரசின் கவனத்துக்கு அதைக் கொண்டுவருவார்கள் என்ற நேரடியான நிர்வாக முறையை அமல்படுத்தியவர் அசோகர்.


கி.மு. 262-ல் வெளியிடப்பட்ட அவரது கல்வெட்டுகளில் ஒன்றைப் பாருங்கள். அதன் முக்கியத்துவம் இன்றும்கூட எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள்.கடவுளுக்குப் பிரியமான மன்னர் பியாதாசி இவ்வாறு சொல்கிறார்: 'இதற்கு முன் அரசாங்க வேலைகளைச் சரியாகக் கவனிக்க முடியாமலும், சரியான நேரத்தில் சரியான தகவல்களைப் பெற முடியாத நிலையும் இருந்து வந்தது. அதனால், இந்தப் புதிய ஆணை பிறப்பிக்கப்படுகிறது. மாமன்னராகிய நான் எந்த நேரத்திலும், உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கையறையில் சயனம்கொண்டு இருந்தாலும், தேரில் பயணம் செய்துகொண்டு இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், கேளிக்கை நிகழ்வுக்காக பூங்காவில் இருந்தாலும், வேறு எந்த இடத்தில் எப்படி இருந்தாலும், அரசாங்க அலுவலர்கள் மூலம் மக்களின் பிரச்னைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் எனக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே மக்களின் பிரச்னைகளை உடனடியாக என்னால் கவனிக்க முடியும். கொடை மற்றும் நலத் திட்டப் பொது அறிவிப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தைகளாகப் பிறப்பித்து இருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர உத்தரவுகள் தொடர்பாக யாருக்காவது ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்கள் உடனடியாக மன்னராகிய என்னிடம் வந்து சேரவேண்டும். இது என்னுடைய ஆணை. வேலையைக் கவனமாகச் செய்வதிலும் அதற்காக கடுமையாக உழைப்​பதிலும் போதும் என ஒரு நாளும் நான் திருப்தி அடை​வது இல்லை. மக்கள் அனைவரது நலத்தையும் பேணுவதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது, ஆகவே, வேலை​களைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை. இந்தத் தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும், கல்வெட்டில் எழுதப்படுகிறது’ - இவ்வாறு, அந்தக் கல்வெட்டில் எழுதப்பட்டு இருக்கிறது.


அசோகரின் கல்வெட்டுகள் வரலாற்று நினைவுகள் மட்டுமே அல்ல. அவை, ஒரு சமூகம் பின்பற்ற வேண்டிய அடிப்படை அறங்கள். அசோகரைப் புனித பிம்பமாக்கிய நாம் அவரது அறக்கோட்பாடுகளை அப்படியே கைகழுவிவிட்டோம் என்பது வருத்தம் தோய்ந்த உண்மை. ஜேம்ஸ் பிரின்செப் கண்டுபிடித்துச் சொல்லும் வரை, அசோகரின் கல்வெட்டுகள் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெறவே இல்லை. செப்டம்பர் 15, 1819-ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள நாணயத் தொழிற்சாலையில் வேலை செய்தவற்காக இங்கிலாந்தில் இருந்து பிரின்செப் வந்து சேர்ந்தபோது, அவருக்கு வயது 20. நாணயங்களை உருவாக்​குவதில் தேர்ச்சி பெற்ற அவர், உதவி வடிவமைப்பாளராக வேலை செய்தார். அங்கே இருந்து காசிக்கு மாற்றப்பட்ட பிரின்செப், வாரணாசி நகரின் பழமையில் தோய்ந்துபோய், அது குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். காசி நகரின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை முதன்முதலாக நிகழ்த்தியவர் பிரின்செப். ஒரு நுண்ணோவியக் கலைஞர் என்பதால், காசி நகரின் முக்கியமான இடங்களை சிறப்பான ஒவியமாக வரைந்து இருக்கிறார். அத்துடன் கழிவு நீர் போவதற்கு காசி நகருக்குள் உள்ள தடைகளைக் கண்டறிந்து விஞ்ஞானப்பூர்வமான கழிவு நீர்க் குழாய்களை அமைத்துத் தந்தவர் பிரின்செப்.காசியில் இருந்த நாட்களில் சமஸ்கிருதம், வானவியல் மற்றும் ரசவாதம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்த பிரின்செப், நாணயவியலில் அதிக ஆர்வம் காட்டினார். அதற்காக, பழமையான நாணயங்களை சேகரித்தார். அப்போது, ரஞ்சித் சிங் என்ற மன்னரின் தளபதியாக இருந்த பிரெஞ்சு அதிகாரி பூமியைத் தோண்டும்போது கிடைத்ததாகத் தந்த நாணயங்களை ஆராய்ச்சி செய்தார். அப்போதுதான், அதில் உள்ள எழுத்துக்களை வாசித்து அறிய வேண்டும் என்ற ஆசை உண்டானது. அதற்காக, அகராதிகளைப் புரட்டினார். வரலாற்று ஆய்வாளர்களைச் சந்தித்து விளக்கம் கேட்டும் புரிந்துகொள்ள முயன்றார் பிரின்செப். இதற்கிடையில், அவர் மீண்டும் கல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆங்கில - சமஸ்கிருத அகராதி தயாரிக்கும் பணியைத் தொடங்கினார் பிரின்செப். அந்த நாட்களில்தான், அவருக்கு அசோகரின் கல்வெட்டுப் பிரதி ஒன்று கிடைத்தது. அதை, பல நாட்கள் போராடி வாசித்த அவர் அந்தக் கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்கள் சமஸ்கிருதம் அல்ல என்பதைக் கண்டுகொண்டார். அது எந்த மன்னரின் கல்வெட்டு என்று அப்போது அவருக்குத் தெரியவில்லை.பல மாதப் போராட்டங்களுக்குப் பிறகு, தேவனாம்பிரியா பிரியதர்சி என்ற பெயரை அடையாளம் கண்டார். ஆனால், அப்படி ஓர் அரசன் இந்தியாவை ஆண்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிந்துகொள்ள முடியவில்லை. யார் தேவனாம்பிரியா என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தார். அப்போது, ராவல்பிண்டியில் இன்னொரு கல்வெட்டு கிடைத்தது. அது மாமன்னர் அசோகராக இருக்கலாம் என்ற சந்தேகம் பிரின்செப்புக்குத் தோன்றியது. அந்தக் கருத்தை மனதில்கொண்டு, தொடர்ந்து ஆராய்ந்து முடிவில், அது மாமன்னர் அசோகரின் கல்வெட்டு என்று உறுதியாக அறிவித்தார். அதன் பிறகே, அசோகரின் கல்வெட்டுக்கள், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


அசோகரின் மிகப் பெரிய யுத்தமாகக் கருதப்படும் கலிங்கப் போர் நடைபெற்ற தௌலி இப்போது ஒரிசாவில் உள்ளது. இந்த தௌலி, தயா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கேதான் கலிங்கப் போர் நடந்தது என்கிறார்கள். இன்றைய ஒரிசாதான் அன்றைய கலிங்கம். இன்றைய பீகார்தான் அன்றைய மகதம். மௌரிய சக்கரவர்த்தி சந்திரகுப்தனின் பேரன்தான் அசோகர். இவரது தந்தை பிம்பிசாரன். பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக்கொண்டு இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். சந்திரகுப்தன், ஜைன மதத்தை ஆதரித்தவர். அதே நேரம், அவருக்கு குருவாக இருந்தவர் சாணக்கியர். சந்திரகுப்தனால் மௌரிய வம்சம் நிலைபெற்றது. பிம்பிசாரன், சந்திரகுப்தனைப் போல வலிமையான அரசனாக இருக்கவில்லை. அசோகர் தனது சொந்த சகோதரர்களைக் கொன்று, அரியணை ஏறினார்.அசோகர் குறித்து இன்றுள்ள சித்திரம் யாவும் அவர் மிக மூர்க்கமானவராக, மோசமானவராக இருந்தார், கலிங்கப் போருக்குப் பிறகு அவர் புத்த மதத்துக்கு மாறிய பிறகே, சாந்தியும் சமாதானத்தையும் முன்னிறுத்தி ஆட்சி புரிந்தார் என்று தெரிவிக்கிறது. இது குறித்து இன்றளவும் நிறையச் சர்ச்சைகள் இருக்கின்றன.வேண்டும் என்றே மோசமான மன்னராக அசோகரை சித்திரிக்கிறார்கள் என்கிறார் தாமஸ் ட்ருமென். அதற்கு அவர் சொல்லும் சான்று, அசோகர் காலத்துக்கு முன்பு வரை பௌத்தம் அரசோடு கலக்கவில்லை. ஆகவே, அரசு மதமாக பௌத்தம் மேலோங்கியதால் அசோகன் பற்றிய சித்திரமும் இப்படி மோசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்.இதுபோலவே, கலிங்கப் போருக்குப் பிறகுதான் அசோகர் மதம் மாறினார் என்பதும் தவறான தகவலே. அதற்கு முன்பே அவர் பௌத்த மதத்தை ஏற்றுக்​கொண்டுவிட்டார். கலிங்கப் போருக்கும் அவர் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர், பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டதற்கு முக்கியக் காரணம், ஆட்சி அதிகாரத்தில் பிராமணர்கள் அதிகமாகத் தலையிடுவதைத் தவிர்ப்பதற்காகத்தான். பிம்பிசாரன் காலத்தில் தினமும் 60 ஆயிரம் பிராமணர்களுக்கு உணவும் தானமும் அளிக்கப்பட்டு வந்தது.கௌடில்யரின் உதவியோடுதான் மௌரியர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதால், பிராமண ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அதனால், தனது அரசாட்சியை விரும்பியபடி நடத்த முடியவில்லை என்றே, அசோகர் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டார் என்கிறார் ஜோசப் கித்ஹவா என்ற வரலாற்று ஆய்வாளர்.இவரது ஆய்வுப்படி, அசோகர் எந்தக் கல்வெட்டிலும் புத்த மதத் தத்துவங்களைப் பொறித்துவைக்கவில்லை. அவர், பௌத்த மதத்தை ஆழ்ந்து கற்றதாக எங்குமே தகவல் இல்லை. புத்த மதம் மீதான எளிய ஈடுபாடுதான் அவரிடம் இருந்தது. அவர், புத்தம் முன்வைத்த அறக்கோட்பாடுகளைத் தனதாக்கிக்கொண்டார். அதனால்தான் அசோகரின் கல்வெட்டுகளில் சகிப்புத்தன்மை, மத ஒற்றுமை, உயிர்க் கொலைத் தடுப்பு, வேட்டையாடுதல் நிறுத்தப்படுவது, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உரிய முறையில் வைத்தியம் செய்ய வேண்டும் என்பது, நாட்டு மக்களைத் தனது சொந்தப் பிள்ளைகளைப் போல பாவித்து நடக்க வேண்டும் என்ற நியதி, அரசு ஊழியர் ஒருபோதும் கோபம்கொள்ளவோ, பரபரப்புடன் நடந்துகொள்ளவோ கூடாது ஆகியவை கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு உள்ளன.

மத ஒற்றுமையைக் கண்காணிக்க மகாமாத்ரர்கள் என்ற சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். உருட்டி மிரட்டியோ, வன்முறையைப் பிரயோகித்தோ அரசு அதிகாரிகள் நடந்துகொண்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அசோகரின் தௌலி கல்வெட்டுக்களில் உள்ளது பிராமி மொழியே. ரைஸ் டேவிட் என்ற பாலி மொழி அறிஞர், பிராமி எழுத்து முறை மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறார். ஹன்டர் மற்றும் ரேமண்ட் போன்ற அறிஞர்கள், பிராமி எழுத்து முறை இந்தியாவின் சிந்துச் சமவெளி எழுத்துக்களில் இருந்து தோன்றி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

 விகடன் 

No comments:

Post a Comment