Search This Blog

Saturday, February 18, 2012

எனது இந்தியா! (இருவர் வாழ்க்கை! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

 
இதைத்தான் பெர்னர் போன்ற ஆய்வாளர்கள் வேறு விதமாகக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, தன் மகளைக் குணப்படுத்திய ஆங்கிலேய மருத்துவருக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக, சூரத் துறைமுகத்தில் வரி இல்லாமல் பொருட்களை வணிகம் செய்து​கொள்ளலாம் என்று ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தார் மன்னர் ஷாஜஹான். அப்படித்தான் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தனது வணிகத்தை ஸ்தாபிக்கத் தொடங்கியது என்கிறார்கள்.  ஜஹானாரா, தனது தாய் இறந்த பிறகு, அவளது சொத்தில் பாதியை உரிமையாகப் பெற்றிருந்தாள். அந்தப் பணத்தை, டச்சு வணிகர்களுடன் சேர்ந்து கப்பல் வணிகம் செய்தாள் என்றும் மகாஜன் வித்யாதரின் குறிப்பு கூறுகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஆங்கிலேயருக்கு அவள் வணிகம் செய்ய உதவி  இருக்​கக்கூடும். மன்னரோடு மாளிகையில் வாழாமல் தனியே தனக்கென ஓர் அரண்மனை அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர் ஜஹானாரா. தனிமையில் வாழ்ந்த அழகியான ஜஹானாராவை, யூசுப் என்ற கவிஞன் காதலித்தான். அவளும் அவன் மீது மிகுந்த காதலுடன் இருந்தாள். தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், அந்தக் காதல் முறிந்துபோனது என்றொரு கதையும் வரலாற்றில் உலவுகிறது.1658-ம் ஆண்டில் ஷாஜகான் உடல் நலமற்றுப்​போனார். பதவியைக் கைப்பற்ற நான்கு புதல்வர்கள் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. 1659-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி ஒளரங்கசீப்பின் ஆட்கள், தலை வேறு உடல் வேறாக தாராவை வெட்டிக் கொன்றார்கள். வயோதிகத்தைக் காரணம் காட்டி ஷாஜகானைச் சிறையில் அடைத்தான் ஒளரங்கசீப். தனிமையும் நோயுமாக தனது வயோதிகக் காலத்தைக் கழித்த ஷாஜகானுக்கு இருந்த ஒரே ஆறுதல் மகள் மட்டுமே. அவள், ஷாஜகானின் இறுதி நாள் வரை உடனிருந்து பராமரித்து வந்தாள். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு அவள் தனித்துவிடப்பட்டாள். ஒளரங்கசீப்பால் துரத்தப்பட்ட அப்பாவின் மற்ற மனைவிகளையும் அரண்மனைப் பெண்களையும் தனது பொறுப்பில் கவனித்தாள். ஒளரங்கசீப் அவள் மீது இரக்கம்கொண்டு மீண்டும் அவளுக்கு அரண் மனையின் உயரிய பதவியான முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை அளித்தார். அதைப் பெரிதாகக் கருதாமல் 16 ஆண்டுகள் அப்பாவின் நினைவில் வாழ்ந்த ஜஹானாரா, 1681-ம் ஆண்டு இறந்துபோனார். அவளுக்கு, நிஜாமுதீன் தர்காவில் கல்லறை அமைக்கப் பட்டது. 'என்னுடைய கல்லறையை அலங்காரமாக மூட வேண்டாம். அங்கே பசும்புற்கள் முளைத்து என்னை மூடட்டும்’ என்ற அவளது இறுதி வார்த் தைகள் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன.
 
ஜஹானாரா எழுதிய பெர்ஷியக் கவிதை களின் தொகுப்பு ஒன்று ஆன்ட்ரியா புடென்ஷோன் என்​பவரால் கண்டு பிடிக்கப் பட்டு, 300 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. ஒரே விதியால் எழுதப்பட்ட இருவர் என்பது போலதான் ஜெப்உன்நிசாவின் வாழ்க்கையும் ஜஹா​னாரா வாழ்க்கையும் உள்ளது. ஒரு வேளை தனது அத்தையின் பாதிப்புதான் ஜெப்உன்நிசாவினை இப்படி ஆக்கியதோ என்னவோ? சொந்தச் சகோதரனைக் கொன்ற கொடுங்கோலன், பிள்ளைகளிடம்கூட அன்பு செலுத்தாத தந்தை என்று அடையாளம் காட்டப்படும் ஒளரங்கசீப்பின் விருப்பத்துக்குரிய மகள் ஜெப்உன்நிசா. இந்த ஒரு விஷயத்தில் ஒளரங்கசீப் தனது தந்தை ஷாஜகானைப் போலவே நடந்துகொண்டார். மகள் மீது இவருக்கும் தீராத பாசம் இருந்திருக்கிறது.ஜெப்உன்நிசா 1667-பிறந்தார். பெர்ஷியா, அரபி, உருது மொழிகளைக் கற்றுத்தேர்ந்து, 14 வயதிலேயே பாடல்கள் எழுதத் தொடங்கினார். உஸ்தாத் பயஸ் என்ற அவரது ஆசிரியர் தந்த ஊக்கத்தால் கவிதைகள் எழுதினார். நிசாவின் 21 வயதில் ஒளரங்கசீப் நாட்டின் மாமன்னர் ஆனார். தனது ஆட்சிக் காலத்தில் ஜெப்உன்நிசாவை தனது அரசுப் பணிகளை உடனிருந்து கவனிக்கச் செய்ததோடு, முக்கியப் பதவிகளுக்கு உரியவர்களைத் தேர்வு செய்து நியமிக்கும் உரிமையை அவளுக்கு வழங்கி இருந்தார்.நீதி, வரி வசூல், கொடைகள், அண்டை நாடுகளின் உறவு போன்றவற்றைப் பற்றி விவாதிக்கும்போது தன்னுடன் ஜெப்உன்நிசாவை ஒளரங்கசீப் வைத்துக்கொண்டதோடு அவளது ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். தனது அத்தையைப் போலவே இவரும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை.
 
கலைகள், வானவியல், மொழி, தத்துவம், மெய்யியல் என்று ஆழ்ந்து பயின்ற ஜெப்உன்நிசா சிறந்த கவிஞராக விளங்கினார்.
'நீர்வீழ்ச்சியே
உனக்கென்ன துயரம்,
எந்த வேதனை என்னைப்போல
கல்லில் தலை மோதி இரவெல்லாம்
உன்னையும் இப்படி விம்மியழச் செய்கிறது?’
- என்ற ஜெப்உன்நிசாவின் கவிதையில் வெளிப்படும் கவித்துவம் எவ்வளவு அழகாக இருக்கிறது!

ஒளரங்கசீப் தீவிரமான மதப் பற்றாளர். ஆனால், அவரது ஒழுக்க நெறிகளின் கடுமைகளை ஏற்றுக்கொள்ளாமல் திறந்த மனதோடு அனைத்து மதக் கருத்துக்களையும் தனதாக்கிக்கொண்டாள் ஜெப்உன்நிசா. ஒளரங்கசீப்புக்குக் கலைகளில் ஈடுபாடு கிடையாது. 'இசை கேட்பது காலத்தை விரயம்செய்யும் வேலை’ என்று கடிந்து சொல்லக்கூடியவர். ஆனால், ஜெப்உன்நிசா கலையிலும் இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். சூபி இசை மரபு தொடர்வதற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.அரண்மனையைச் சேர்ந்த பெண்கள் பொது விவாதங்களில், இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி கறுப்பு நிற உடை அணிந்து தனது கஜல் பாடல்களை இலக்கிய விழாக் களில் பகிர்ந்துகொண்டார் ஜெப்உன்நிசா. இவர் பாடிய 400 கஜல் பாடல்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே தொகுப்பாக வெளியானது. தனது ரசனைகொண்ட கவிஞர்கள், ஞானிகளைச் சந்தித்து உரையாடுவதற்காக தனி சபை ஒன்றை அமைத்திருந்தார். அந்தச் சபையில் நாட்டின் அத்தனை முக்கியக் கவிஞர்களும் வந்து பாடியிருக்கிறார்கள்.நிசாவுக்கு நான்கு சகோதரிகள். அவர்களில் ஜீனத் என்ற தங்கையோடு நிசா மிகுந்த நெருக்கமாக இருந்தார். இருவரும் மாறி மாறிக் கவிதைகள் பாடுவது வழக்கம். அகில் கான் ராஷி என்ற கவிஞரை நிசா காதலித்தாள் என்றொரு கட்டுக் கதை உண்டு.அரண்மனையில் ஒரு நூலகம் அமைத்து, சித்திர எழுத்துகளை எழுதுவோர்களை உடன்வைத்துக் கொண்டு அழகான புத்தகங்களை தானே வடிவமைப்பதும், அரிய புத்தங்களை மொழியாக்கம் செய்துவைப்பதுமாக வாழ்ந்திருக்கிறாள் நிசா. தனது சேமிப்பில் இருந்து ஆண்டுக்கு நான்கு லட்ச ரூபாயை மெக்கா செல்பவர் களுக்கு உதவிப் பணமாகத் தந்திருக் கிறாள். பிரதி எடுப்பதற்காக காஷ் மீரில் இருந்து தயாரிக்கப்பட்ட காகிதங் களைக்கொண்டு தினமும் காலை நேரங்களில் தனக்குப் பிடித்தமான கவிதைகளை எழுதுவாள் நிசா.பிரபலமான கவிஞர்கள் பலரும் தங்களது கவிதைத் தொகுப்புகளை, அவளது மதிப்பீட்டுக்காக அனுப்பி இருக்கின்றனர். அப்படி, அவள் ரசித்த கவிதைகளுக்கு சன்மானமாக முத்துக் களையும் தங்கப் பாளங்களையும் அனுப்பி கவிஞர்களை சிறப்பித்து இருக்கிறாள்.  இன்று பெண்கள் அணியும் குர்தா, துப்பட்டா ஆகிய வற்றை வடிவமைத்தது நிசாதான். தனக்காக அவள் பிரத்யேகமாக உருவாக்கிக்கொண்ட அந்த ஆடைதான், இந்தியாவில் இன்று பிரபலமாக விளங்குகிறது.ஒளரங்கசீப் -  ஜஹானாரா ஆகிய இருவருக்கும் இடையில் அதிகார அரசியல் காரணமாக உருவான விலகல் போலவே, ஒளரங்கசீப்பின் நான்காவது மகனான முகமதுவுக்கும் அவரது சகோதரியான ஜெப்உன்நிசாவுக்கும் அரசியல் நிலைப்பாடு சார்ந்த பிரச்னை உருவாகி இருந்தது. அப்பாவை எதிர்த்து தன்னைத்தானே, 'அரசன்’ என்று முகமது கூறிக்கொண்டதை நிசா கண்டித்தார். ஆனால், அவளுக்கு உள்ளூற முகமது மீது தீராத பாசம் இருந்தது. தங்களுக்கு இடையே உள்ள பிணக்கைத் தீர்த்துவைத்து அன்பு செலுத்தும்படியாக கடவுளிடம் பிரார்த்தனை செய்து இருக்கிறாள். அக்பரோடு சேர்ந்துகொண்டு தனக்கு எதிராக செயல்படுகிறாள் என்று நினைத்த ஒளரங்கசீப், நிசாவைத் தனிமைச் சிறையில் அடைத்து இருக்கிறார். வெற்றுச் சுவரைப் பார்த்தபடியே மனத் துயரில் கவிதைகள் பாடியபடியே நாட்களைக் கழித்து இருக்கிறார் நிசா.


இந்த இரண்டு பெண்களுமே தந்தையை அதிகமாக நேசித்து இருக்கிறார்கள். அவர்கள் பொருட்டு தங்களது சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து இருக்கின்றனர். கலைகளும் ஆன்மிக ஈடுபாடும்தான் அவர்களின் உலகமாக இருந்து இருக்கிறது. சிற்றின்ப வாழ்வைவிட, மெய்ஞான பேரின்ப வாழ்வே பெரியது என்று தேடி இருக்கிறார்கள். அரண்மனையில் கோடானகோடி செல்வங்களும் சுகங்களும் இருக்க, அதை உதறி வெளியே வந்து எளிய மனிதராக வாழ்வது ஒரு சவால். அதை இருவருமே தங்கள் வாழ்நாளில் செய்து காட்டியிருக்கின்றனர்.பதவி ஆசை சொந்தச் சகோதரர்களைக் கொன்று குவித்தபோது, 'நல்லவேளை நான் ஆணாகப் பிறக்கவில்லை. இல்லாவிட்டால், என்றோ நான் பிணமாகி இருப்பேன்!’ என்று ஜஹானாரா சொன்னது 100 சதவீதம் உண்மை.  தனிமையும் வெறுமையுமாக வாழ்ந்து 1701-ம் ஆண்டு நிசா இறந்தாள். அழகான நீருற்றுகள்கொண்ட தோட்டத்தின் நடுவே அவளது கல்லறை உருவாக்கப்பட்டது. டெல்லியின் புதைமேடுகளுக்குள் இரண்டு இளவரசிகளும் புதைந்துபோய்விட்டார்கள். வரலாறு அவர்களின் நினைவுகளைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிட்டது. ஆனால், இன்றும் பெர்ஷியக் கவிதைகள் மீது ஆர்வமான யாரோ ஒரு ரசிகன் கை நிறைய ரோஜாப் பூக்களை அள்ளி வந்து அந்தக் கல்லறைகளில் தூவிக் கவிதைகளைப் பாடிவிட்டுப் போகிறான்.டெல்லியின் ஏதோ ஒரு வீதியில் ஒரு பக்கீர் தன்னை மறந்து அவர்களின் பாடலை பாடிக்கொண்டே இருக்கிறான். அந்தக் குரலின் வழியே கவிஞர்களாக வாழ்ந்த இரண்டு பெண்களும் நினைவுகொள்ளப்படுகிறார்கள். அவர்களை அறிந்த நிலவு வானில் பழைய நினைவுகளுக்குள் புதைந்தபடியே டெல்லியைப் பார்க்கிறது. விசித்திரங்களின் நீருற்றைப் போல வரலாறு தன் இயல்பில் கொந்தளிப்பதும் உள் அடங்குவதுமாக இருக்கிறது.

விகடன் 
 

No comments:

Post a Comment