Search This Blog

Sunday, February 12, 2012

என்ன ஆச்சு யுவராஜுக்கு?


சச்சின் இன்னமும் சாதனை செஞ்சுரியை அடிக்கவில்லையே என்று சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ‘யுவராஜ் சிங்குக்கு கேன்சர்’ என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ‘பயப் படத் தேவையில்லை என்று டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள்; சிகிச்சை முடிந்து சீக்கிரமே கிரிக்கெட் மைதானத்தில் இருப்பான் என் மகன்’ என்று நம்பிக்கையோடு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் யுவராஜின் அப்பா யோக்ராஜ். ‘யுவராஜ் மீது கிரிக்கெட் ரசிகர்கள் வைத்திருக்கும் பாசத்துக்கும், அன்புக்கும் எங்கள் நன்றி. ஆனால், வீண் வதந்திகளோ, பரபரப்புச் செய்திகளோ வேண்டாம்; எங்களுடைய பிரைவசியை மதித்து நடந்துகொள்ளுங்கள்’ என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார் யுவராஜின் அம்மா ஷப்னம் சிங். அவ்வப்போது அவரது உடல்நலம் குறித்த தகவல்களை நாங்கள் மீடியாவுக்குத் தருவதாக இந்திய கிரிக்கெட் வாரியமும் தெரிவித்திருக்கிறது. உலகக் கோப்பையின் நாயகன் என்ற பெருமை பெற்றாலும், யுவராஜுக்கு உலகக் கோப்பைப் போட்டியில் ஆடுகிற போதே உடல் நலம் சரியில்லை; அப்போதே திடீரென்று இரவு நேரத்தில் எழுந்து கொண்டு, மூச்சு விடத் திணறுவார்; விடாமல் இருமல்; வாந்தி; சிறிது நேரத்தில் மிகவும் சோர்ந்து போய்விடுவார். இருந்தபோதிலும், தன் உடல் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், மிகவும் திறமையாக ஆடி, இந்தியா, கோப்பையை வெல்ல யுவராஜ் அந்த அளவுக்கு உதவினார் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் சாதாரணமாக மறந்துவிடமாட்டார்கள். ஆனால், தன் உடல் நலம் பற்றி அக்கறை காட்டாமல் இருந்துவிட்டது எத்தனை பெரிய தவறு என்று யுவராஜ் தனக்கு நெருங்கிய ஒரு ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட்டிடம் வருத்தப்பட்டிருக்கிறார். 


உலகக் கோப்பை முடிந்த பிறகு மருத்துவப் பரிசோதனைக்குப் போக, நுரையீரலுக்கு இடையில் கால்ஃப் பந்து அளவுக்கு ஏதோ வளர்ச்சி அடைந்திருப்பது தெரியவந்தபோது, மொத்த குடும்பமும் ஆடிப்போய்விட்டது. இதற்கிடையில் முதலில் எடுத்த யுவராஜின் பயாப்சி ரிப்போர்ட் காணாமல் போய்விட்டது என்றும், அடுத்த ரிப்போர்ட்டில் தவறாக டயக்னைஸ் செய்யப்பட்டிருந்தது என்றும் தகவல்கள் வெளியாயின. இந்திய கிரிக்கெட் வாரிய முக்கியஸ்தர்களிடம் விஷயத்தைச் சொல்ல, அவர்கள் உடனடியாக யுவராஜ் அமெரிக்கா சென்று பாஸ்டன் புற்று நோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் பிரத்யேக சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்கள். (நுரையீரலை ஒட்டிய பகுதியில் உள்ள அதிகப் படியான வளர்ச்சியின் விட்டம் 42.67 மி.மி. என்று டாக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள்).‘யுவராஜ் நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாகி இருப்பதாகவும், இல்லை’ அவருக்கு வந்திருப்பது நுரையீரல் புற்று நோய் இல்லை; அது ஜெர்ம் செல் கேன்சர்; அதைக் குணப்படுத்திவிட முடியும்’ என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது .

சென்னை கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் பணியாற்றும் டாக்டர் ராஜ் குமார் சொல்கிறார் யுவராஜ் சிங்குக்கு வந்திருப்பதாகச் சொல்லப்படுவது ஜெர்ம் செல் கேன்சர் என்ற வகையைச் சேர்ந்தது. பெண்ணின் கருமுட்டை, ஆணின் விந்து இவை உற்பத்தியாகக் கூடிய செல்களில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத்தான் ஜெர்ம் செல் கேன்சர் என்று சொல்வார்கள். இருந்தாலும், சில சமயங்களில் வயிற்றுப் பகுதியிலோ, நெஞ்சுப் பகுதியிலோகூட தானாகவே வருவதுண்டு. இதில்கூட பல வகைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் செமினோமா என்பது. அதுதான் யுவராஜுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது”“இரண்டு நுரையீரல்களுக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் இந்தக் கட்டி வந்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பகுதி உடலின் மிக முக்கியமான பகுதி. இங்கேதான் இதயமும், நுரையீரல்களும் இருக்கின்றன. உடலின் பல பாகங்களிலிருந்தும் ரத்தத்தை இதயத்துக்கு எடுத்துக்கொண்டு வருகிற, இதயத்திலிருந்து உடலின் பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துக்கொண்டு போகிற முக்கியமான ரத்தக் குழாய்களும் இருக்கின்றன.கட்டியின் காரணமாக இந்தப் பகுதியில் ஏற்படும் கூடுதல் அழுத்தம் காரணமாக நரம்புகள் புடைத்து, முகம் வீக்கம் அடைய வாய்ப்பு உண்டு. முற்றிய நிலையில், ரத்தக் குழாய்களில் அரிப்பு ஏற்பட்டு விபரீதம் நிகழக் கூடும்.நல்ல காலம், யுவ ராஜுக்கு வந்திருக்கும் இந்த செமினோமா ரக புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, சிகிச்சை அளித்துக் குணப்படுத்திவிட முடியும் என்பது முக்கியமான விஷயம். இந்தக் கட்டிபோன்ற வளர்ச்சியைக் கதிர்வீச்சு சிகிச்சையின் மூலமாக நீக்கிவிடலாம்; ஆனால், கதிர்வீச்சு சிகிச்சை அளித்தால், அதனால் சில பக்க விளைவுகள் வரும் என்ற காரணத்தால், மருந்துகள் மூலமாகவே குணப்படுத்துவதும் சாத்தியம். இதனை ‘கீமோதெரபி’ என்று சொல்லுவார்கள். யுவராஜைப் பொருத்தவரை, மருந்துகள் கொடுத்தே அந்த வளர்ச்சியைக் கரைத்துவிடலாம் என்று அமெரிக்க மருத்துவர்கள் முடிவெடுத்து, சிகிச்சையை ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு நிச்சயம் நல்ல பலன் கிடைத்து, கட்டி முழுமையாகக் கரைந்து போய்விடும். அப்படிக் கரையவில்லை என்றால், அதன்பிறகு அறுவைச் சிகிச்சை மூலமோ, கதிர் வீச்சு சிகிச்சை மூலமாகவோ கட்டியை அகற்றுவார்கள். 

புற்று நோய் பரவாத தன்மை கொண்டிருந்தால் நூற்றுக்கு எண்பது சதவீதத்தினரை முற்றிலுமாகக் குணப்படுத்திவிட முடியும். அதன்பிறகு அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. அவர்களால் நார்மல் வாழ்க்கை வாழமுடியும். பொதுவாகவே, மக்கள் மத்தியில் புற்று நோய் என்றாலே ஒருவிதமான பயம் இருக்கிறது. அதற்குக் காரணம், மக்களுக்கு புற்று நோய் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை என்பதுதான். சாதாரணமான கேன்சரை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் உரிய சிகிச்சை அளித்து, பூரணமாகக் குணப்படுத்திவிட முடியும்”  டாக்டர்களால் கைவிடப்பட்ட, பல நோய்கள் பிரார்த்தனையாலும் அன்பினாலும் கடவுளின் கருணையாலும் இருந்த இடம் தெரியாமல் மறைந்த அற்புதங்கள் பல நடந்த சாட்சியம் நம்மிடம் உண்டு. தேசத்துக்கு உற்சாகம் தந்து பலரின் மனத்தில் இடம் பெற்ற விளையாட்டு வீரர் யுவராஜ், நமது மானசீகமான பிரார்த்தனையால் மீண்டும் களத்தில் வருவார் என்று கடவுளின் பேரன்பால் நம்புவோமாக!

No comments:

Post a Comment