Search This Blog

Sunday, February 05, 2012

கடன் இல்லாமல் வாழ

கடன் வலை!


கார் வாங்கணுமா, வீடு வாங்கணுமா? 'மூன்று நிமிடங்களில் கடன் தருகிறோம்'' என்று சும்மா இருப்பவர்களின் மனதில் ஆசை விதையை விதைக்கின்றன விளம்பரங்கள். நம் இன்டெர்நெட் பேங்கிங் கணக்கை திறந்தால், ''உங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் தரத் தயார்'' என்கிறது கவர்ச்சிகரமான அறிவிப்பு!இதைவிட சுவாரஸ்யமான விஷயம், பல வங்கிகள் 'நீங்கள் சிறப்பாக வங்கிக் கணக்கை பராமரித்து வருவதைப் பாராட்டி, உங்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் கடனுக்கான காசோலையை இத்துடன் இணைத்து அனுப்பி இருக்கிறோம்’ என கடிதத்தோடு செக்கையும் அனுப்புகின்றன. இதுபோல, நாம் கேட்காமலே கிரெடிட் கார்டுகளையும் பல வங்கிகள் அனுப்புகின்றன.  கடன் கேட்டு பல ஆயிரம்பேர் கால் கடுக்க நிற்க, நம்மை தேடிவந்து கடன் கொடுக்கிறார்கள் என்னும் போது, இதன் பின்னணியில் இருக்கும் சூழ்ச்சியை நாம் உணர்வதில்லை. அதனால் கடனில் மாட்டி நாம் தவியாய்த் தவிக்கிறோம்.


 எதற்கெல்லாம் வாங்கலாம்?

கடன் வாங்குவதே தவறு என சொல்ல முடியாது. ஆனால், எதற்கெல்லாம் கடன் வாங்கலாம் என சில விதிமுறைகள் இருக்கின்றன. இவற்றை தெரிந்து கொண்டு கடன் வாங்கினால், எதிர்காலத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கத் தேவையில்லை.
வீட்டுக் கடன்!

வீடு கட்டுவதற்கு, கட்டிய வீட்டை வாங்குவதற்கு, நிலம் வாங்குவதற்கு வீட்டுக் கடன் வாங்குவதில் தவறே இல்லை. மொத்தமாக பணம் சேர்த்து வீடு வாங்குவது என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு முடியாதச் செயல். உதாரணமாக, மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் சென்னை புறநகரில் 20 லட்ச ரூபாயில் ஃபிளாட் ஒன்றை இன்றைய தேதியில் கடனில் வாங்குகிறார் எனில், அவர் மாதம் சுமார் 20,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டினால் போதும். அடுத்த இருபதாண்டுகளில் அந்த ஃபிளாட் அவருக்குச் சொந்தமாகிவிடும். இதுவே, அவர் மொத்த பணத்தையும் சேர்க்க வேண்டுமெனில் எட்டு ஆண்டுகள் ஆகும். அப்போது அந்த இடத்தின் விலை 30 லட்சம் ரூபாய்க்குமேல் இருக்கும். மேலும், திரும்பக் கட்டும் அசல் மற்றும் வட்டிக்கு வரிச் சலுகையும் உண்டு. இதுமாதிரி பல நல்ல அம்சங்கள் வீட்டுக் கடனில் இருப்பதால் அதை வாங்குவதை தவறு என்று சொல்ல முடியாது!

வாகனக் கடன்!

ஒரு பைக் வாங்கினால், அலுவலகத்திற்கு எளிதாக போய்வர முடியும் என்கிறபோது வாகனக் கடன் வாங்கி, அதன் மூலம் ஒரு பைக்கை வாங்குவது தவறே இல்லை. வாகனத்திற்கு தேய்மானம் இருக்கிறது. அதையும் கணக்கில் கொண்டு லாபகரமாக இருந்தால் மட்டுமே கடனில் வாங்க வேண்டும். ஜாலியாக ஊர் சுற்றவே வண்டி எனில் நிச்சயம் வாகனக் கடன் வாங்கக் கூடாது.

நிச்சயமான வருமானம்!


இதுதவிர, நிச்சயமான லாபம் இருக்கும் பட்சத்தில் கடன் வாங்கலாம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அதாவது, நீங்கள் 10 சதவிகித வட்டிக்கு கடன் வாங்கி, அந்த கடனை உபயோகப்படுத்துவதன் மூலம் 15%-த்திற்கு மேல் வருமானமோ அல்லது செலவு குறைப்போ செய்ய முடியும் எனில் கடன் வாங்கலாம். திரும்பக் கட்டக்கூடிய சக்தி உங்களுக்கு நிறைய இருந்தால் நீங்களும் தயங்காமல் கடன் வாங்கலாம். உதாரணமாக, ஒருவரது மாதச் சம்பளம் 40,000 ரூபாய். செலவு எல்லாம் போக அவருக்கு மிச்சமாகும் தொகை 30,000 ரூபாய் எனில், இதில் பாதியை (15,000 ரூபாய்) கடனாக வாங்கினால் சிக்கல் ஏற்பட வழியில்லை.

கடனை அடைக்க கடன்..!

ஏற்கெனவே வாங்கிய கடனை கட்ட முடியாதச் சூழலில், அந்த கடனை அடைக்க மேற்கொண்டு கடன் வாங்குவது கூடாது! இது பொதுவான விதியாக இருந்தாலும், சில கடனை அடைக்க கடன் வாங்குவது தவறில்லை. உதாரணமாக, கிரெடிட் கார்டு கடன்கள். இந்த கடனுக்கு நாம் கட்டும் வட்டி சுமார் 40%. 18-22 சதவிகித வட்டியில் கிடைக்கும் தனிநபர் கடனை வாங்கி, இந்த கிரெடிட் கார்டு கடனை ஒழித்துக் கட்டினால் தப்பில்லை.  உங்களிடம் தங்க நகை, வீட்டுப் பத்திரம், எல்.ஐ.சி. எண்டோவ்மென்ட் பாலிசி, அரசு பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை இருந்தால் அவற்றை அடமானம் வைத்து, 9 - 13 சதவிகித வட்டிக்கு கடன் வாங்கி, கிரெடிட் கார்டு கடனை குளோஸ் பண்ணலாம். சிலர், லட்சக்கணக்கான ரூபாயை 8 சதவிகித வட்டிக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருப்பார்கள். ஆனால், 18 - 24 வட்டிக்கு கடன் வாங்கி, அந்த பணத்தில் ஒரு காரை வாங்கி ஓட்டிக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் பணத்தை எடுத்து கார் கடனை முடிப்பதே புத்திசாலிதனம். அதைவிட புத்திசாலிதனம் ஆரம்பத்திலேயே ஃபிக்ஸட் டெபாசிட் பணத்தை எடுத்து கார் வாங்குவது.

ஆஃபர் மோசடி!

பண்டிகை காலத்தில் ஆஃபர் என்கிற பெயரில் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கார் போன்றவற்றுக்கு தள்ளுபடி அறிவித்து, அவற்றை வாங்க கடனையும் தருவார்கள். இதற்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். தள்ளுபடி மூலம் விட்டதை வட்டியாக வசூலித்துவிடுவார்கள் கடைக்காரர்கள். எனவே, அந்த கடனுக்கான வட்டி விகிதத்தை தெரிந்து கொள்ளாமல், மெகா ஆஃபர் என்கிற பெயரில் ஏமாற வேண்டாம்! தவிர, ஜீரோ இன்ட்ரஸ்ட், வட்டியே இல்லை என்பதெல்லாம் சாத்தியமில்லை. அதை நம்பவே வேண்டாம்.

தவணை அம்பு!  

மாதா மாதம் கொஞ்சமாக கட்டிவிடலாம் என மத்தியதர வர்க்கத்தினர் பலரும் நினைப்பதால்தான் தவணை அம்பில் சிக்கித் தவிக்கிறார்கள். இப்படியில்லாமல் வருட ஆரம்பத்தில் தவணைத் தொகை அளவுக்கான பணத்தை ஆர்.டி.யில் போட்டு வரலாம்.உதாரணமாக, ஒரு பொருளை 45,000 ரூபாய்க்கு கடனில் வாங்குகிறீர்கள். இந்தத் தொகையை 36 மாதங்களில் மாதம் 2,450 வீதம் கட்ட சொல்வார்கள். அதன்படி நீங்கள் மொத்தம் 88,200 ரூபாய் கட்ட வேண்டும். கூடுதலாக வட்டி மட்டும் 43,200 ரூபாய் கட்டி இருப்பீர்கள். இதே 2,450 ரூபாயை நீங்கள் கிட்டத்தட்ட 18 மாதம் ஆர்.டி.யில் போட்டு, அதற்கு 7% வட்டி கிடைத்தால்கூட 46,500 ரூபாய் சேர்ந்திருக்கும். கூடுதலாக சேர்ந்திருக்கும் 1,500 ரூபாய் பொருளின் விலை உயர்வுக்கு சரியாகப் போய்விடும் என்றால்கூட, கடன் வாங்காமல் அந்தப் பொருளை வாங்கிவிடலாம்.

இதெல்லாம் எதற்கு...? செலவை குறைத்து, சேமிப்பை அதிகப்படுத்தி, வருமானத்தைப் பெருக்கினால் கடன் என்கிற பிரச்னையே நமக்கு வராது. இந்த முத்தான மூன்று வழிகளை கடைப்பிடித்தால், கடன் இல்லாத வாழ்க்கை உங்களுக்கும் நிச்சயம்!    

- சி.சரவணன்   

விகடன்  

No comments:

Post a Comment