உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பது. அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடும். மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம்... குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது. அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு. காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய புருஷனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் என்று எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள்தான்! என்ற ஒரு பேதைமை உண்டு. ஒருமுறை அந்த அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் பெரியவாளை தரிசனம் பண்ண ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் போட்ட நிபந்தனை "நா அங்க வருவேன். pant
shirt தான் போட்டுப்பேன். பஞ்சகச்சம் விபூதி எதுவும் கெடையாது. அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்". பாவம் அந்த அம்மா ஒத்துக் கொண்டாள். போனார்கள். அவர் காலில் போட்டிருந்த ஷூவைக் கூட கழற்றவில்லை. அந்த அம்மா மானசீகமா பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணினாள் கணவருக்கு நல்ல புத்தி வேண்டி. நம்ம பெரியவா சாக்ஷாத் காமாக்ஷித் தாயாரில்லையா? "நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்" என்று சொல்லுவதுபோல், மேனாவுக்குள் இருந்து லேசாக எட்டி அந்த மனுஷனைப் பார்த்தார். அவ்வளவுதான்! கொஞ்ச நாள் கழித்து கணவர் "வாயேன்...போய் மடத்ல ஸ்வாமியை பார்த்துட்டு வருவோம்". சாதாரண வேஷ்டி, ஷர்ட், லேசான விபூதி கீற்று! கொஞ்சநாள் கழித்து, பஞ்சகச்சம், குடுமி வைத்துக் கொள்ள ஆரம்பித்து, நாட்கள் செல்ல செல்ல, அந்த அம்மாவை விட பெரியவா மேல் பித்தாகிப் போனார். வேலையை விட்டார். பெரியவா படத்தை வைத்துக் கொண்டு சதா பஜனை, தியானம் என்று பரம பக்தராக மாறிவிட்டார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால்.......பெரியவா அன்று ஒரே ஒரு தடவை அவரை கடாக்ஷித்ததுதான்! அப்புறம் ஒரு வார்த்தை பேசக் கூட இல்லை! மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!
No comments:
Post a Comment