ஒருவர் வேலை தொடர்பாக அமெரிக்காவுக்குச் செல்கிறார் என்றாலே நிறைய
ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற
செவ்வாய் கிரகத்துக்குப் போவதென்றால் முன்கூட்டியே பல ஏற்பாடுகளைச்
செய்தாக வேண்டும்.முதல் காரியமாக செவ்வாய் கிரகத்தைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்தக் கிரகத்தில் எங்கு போய் இறங்கினால் வசதியாக இருக்கும்? காற்று
மண்டலம் எப்படி
இருக்கும்? தண்ணீர் கிடைக்குமா என்று பல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள
வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் பல ஆளில்லா விண்கலங்கள் செவ்வாய்
கிரகத்துக்கு
அனுப்பப்பட்டு, பல தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 2011-ம் ஆண்டு நவம்பர்
மாதம் கியூரியாசிடி என்ற ஆளில்லா விண்கலம் ஒன்றை அமெரிக்கா அனுப்பியது.
சந்திரன்
பற்றியும் இப்படிப் பல ஆய்வுகளைச் செய்த பிறகே மனிதன் 1969 ஜூலையில்
சந்திரனில் போய் இறங்கினான்.ஆனால சந்திரன் வேறு. செவ்வாய் வேறு. சந்திரன் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.சொல்லப் போனால் சந்திரன் நமது அவுட் ஹவுஸ் மாதிரி. இரண்டு நாள்களில் போய்ச்
சேர்ந்து விடலாம். ஆனால் செவ்வாய் கிரகம் குறைந்தது 20 கோடி கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது. விண்கலத்தில் ஏழு மாத காலம் பயணம் செய்த பிறகுதான்
செவ்வாய்க்குப் போய்ச் சேர முடியும். இப்படிப் பல மாத காலம் விண்வெளியில்
பயணம்
செய்வதில் பல பிரச்னைகள் உள்ளன. ஆபத்தான கதிர்வீச்சுப் பிரச்னை அவற்றில்
ஒன்று.
நட்சத்திரங்களிலிருந்தும் சூரியனிலிருந்தும் ஓயாது ஆபத்தான கதிர்கள்
வெளிப்பட்ட வண்ணம் உள்ளன. பூமியின் காற்று மண்டலம் இந்தக் கதிர்கள் நம்மைத்
தாக்காதபடி
பாதுகாப்பு அளிக்கிறது. ஏழு மாத காலம் விண்கலம் மூலம் பயணம் செய்யும்போது
செவ்வாய்க்குச் செல்லும் விண்வெளி வீரர்களை இந்தக் கதிர்கள் தாக்காதபடி
தகுந்த
பாதுகாப்பு இருக்க வேண்டும். இரண்டாவது பிரச்னை உடல் சம்பந்தப்பட்டது.
பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டு விண்வெளிக்குச் சென்ற பின்
விண்கலத்துக்குள் தரையில்
கால் ஊன்றி நிற்க முடியாது. விண்கலத்துக்குள் அந்தரத்தில் பறந்தபடிதான்
ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்குச் செல்ல முடியும். பல மாத காலம்
விண்வெளியில் இப்படிப்பட்ட
நிலையில் இருந்தால் கால்களுக்கு வேலை இல்லாமல் சூம்பி விடும். தோள் பகுதி
பருத்து விடும். முகம் சற்று உப்பிவிடும். உயரமும் சற்று அதிகரிக்கும்.
இருதயம்
சோம்பி விடும்.பல மாத விண்வெளிப் பயணத்துக்குப் பிறகு செவ்வாயில் போய் இறங்கும்போது
காலுன்றி நிற்பது கஷ்டம். இப்போதே கூட பூமிக்கு மேலே 350 கிலோ மீட்டரில்
பறக்கும்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில காலம் இருந்து விட்டு பூமிக்குத்
திரும்புகிற விண்வெளி வீரர்களில் சிலரை ஸ்டிரெச்சர் மூலம் தூக்கிச் செல்ல
வேண்டியிருக்கிறது.ஓர் அறையில் சிலரை பல மாத காலம் அடைத்துப் போட்டால் நிச்சயம் அவர்களிடையே
தகராறு மூண்டு விடும். மனநிலையில் ஏற்படுகிற மாற்றம் இதற்குக் காரணம்.
ஆகவே செவ்வாய்க்கு நீண்ட பயணம் மேற்கொள்கிற ஆறு விண்வெளி வீரர்களின்
மனநிலை முக்கியமான விஷயம். இப்படியான நிலைமையில் பிரச்னை இல்லாமல்
இருக்குமா
என்று கண்டறிய மாஸ்கோ அருகே ஆறு பேரை ஒரு கூட்டுக்குள் 500 நாள்கள்
அடைத்துப் போட்டு கடந்த ஆண்டில் பரிசோதனை நடத்தினர். அந்தப் பரிசோதனையின்
பலன்கள் நம்பிக்கை ஊட்டுவதாகவே உள்ளன.
செவ்வாய் கிரகத்தில் போய் இறங்கினால் பல பிரச்னைகளைச் சமாளிக்க
வேண்டியிருக்கும். செவ்வாயில் தண்ணீர் கிடையாது. காற்று மண்டலம் உண்டு.
ஆனால்
அதில் சுவாசிப்பதற்குத் தேவையான ஆக்சிஜன் கிடையாது. செவ்வாயின் காற்று
மண்டலத்தில் கார்பன்டையாக்சைட் வாயுதான் அதிகம். தவிர, அந்தக் கிரகத்தில்
கடும்
குளிர் வீசும். ஆகவே பாதுகாப்பான கூட்டுக்குள்தான் தங்கியிருக்க வேண்டும்.
செடி, கொடி எதுவும் இல்லை. புழு, பூச்சி கூடக் கிடையாது. செவ்வாய்
கிட்டத்தட்ட ஒரு
பாலைவனம் போன்றது.எனினும் செவ்வாயின் வட பகுதியில் நிலத்துக்கு அடியில் உள்ள உறைந்த
பனிக்கட்டியிலிருந்து தண்ணீர் பெற முடியும் என்று நிபுணர்கள்
கூறுகிறார்கள். அந்தக் கிரகத்தின்
காற்று மண்டலத்திலிருந்து ஆக்சிஜனைத் தனியே பிரித்துப் பயன்படுத்த
முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்செவ்வாயில் போய் இறங்கி, சில நாள் தங்கி விட்டு உடனே கிளம்ப முடியாது.
பூமிக்குத் திரும்ப வாய்ப்பான சமயத்தை எதிர்பார்த்து கட்டாயம் சில மாதம்
தங்கியாக வேண்டும். அங்கிருந்து கிளம்பினால் மறு படி ஏழு மாதப் பயணம். ஆகவே
18 அல்லது 20 மாத காலத்துக்கான உணவும் தண்ணீரும் கிடைக்க வழி செய்யப்பட
வேண்டும்.
விண்கலத்தில் பயணம் செய்யும்போது கீரை, தக்காளி போன்றவற்றை
விண்கலத்துக்குள்ளாக வளர்த்துக்கொள்ள முடியும் என்றாலும் அது அடிப்படை
உணவுப் பிரச்னையைத்
தீர்க்க உதவாது.செவ்வாய்க்குக் குறைந்தது ஆறு பேரை அனுப்பியாக வேண்டும். இவர்கள் செல்லும்
விண்கலம் நேரடியாக செவ்வாயில் போய் இறங்க முடியாது. அந்த விண்கலம்
செவ்வாய்க்குப்
போய்ச் சேர்ந்த பின் செவ்வாய் கிரகத்தைச் சுற்ற ஆரம்பிக்கும். அதிலிருந்து
சிறிய விண்கலம் பிரிந்து கீழே தரை இறங்கும். அதில் நால்வர் இருக்கலாம்.
மேலே தொடர்ந்து
சுற்றிக் கொண்டிருக்கின்ற தாய்க் கலத்தில் இருவர் இருந்தாக வேண்டும். கீழே
இறங்குகிறவர்கள் சில மாதம் தங்கிப் பணியை முடிக்கிற வரையில் தாய்க் கலம்
உயரே
சுற்றிக்கொண்டிருக்கும். செவ்வாயில் இறங்கியவர்கள் சிறிய ராக்கெட் மூலம்
மேலே வந்து தாய்க் கலத்துக்கு மாறுவர். பிறகு அது பூமியை நோக்கிக்
கிளம்பும்.
விண்வெளி வீரர்கள் செவ்வாயில் தங்கியிருக்கிற நான்கு மாத காலத்தில்
அவர்களுக்குத் தேவையானவற்றை ஆளில்லா விண்கலங்கள் மூலம் அனுப்பி வைத்து
சமாளிக்க
இயலும். செவ்வாய் கிரகப் பயணம் இப்போதைய நிலையில் ஏட்டளவில் சாத்தியமே.ஆனால் செவ்வாய்க்குச்
செல்வதற்கான ராக்கெட், விண்கலம் ஆகியவற்றை வடிவமைத்துத் தயாரிப்பதில்
தொடங்கி எண்ணற்ற பணிகளை இனிமேல்தான் செய்ய வேண்டியுள்ளது. அமெரிக்காவோ,
ரஷியாவோ இதற்கு இப்போது சில லட்சம் கோடி பணம் ஒதுக்கும் நிலையில் இல்லை.
எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது செவ்வாய் கிரகப் பயணம்
மேற்கொள்ளப்பட
இன்னும் 25 ஆண்டுகள் ஆகலாம்!
இராமதுரை
மிக நன்றாக ஆராய்ந்து எழுதியிருக்கீங்க. நன்றி.
ReplyDelete