என்னாச்சு இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு? சமீபத்திய செய்திகள் அனைத்தும் மனத்தைப் பிசைவதாகவே இருக்கின்றன.பெற்றோர்கள் ஊருக்குப் போயிருக்கும் சமயத்தில், ஒரு மாணவன் தன் நண்பன் மூலமாக தன் வீட்டிலேயே 55 சவரன் நகைகளையும், 20 லட்சம் ரூபாயையும் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்திருக்கிறான்.சென்னையில் ஒரு மாணவன் தனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்ணைத் தந்திரமாகப் பேசி, தனியாக வரவழைத்து, தன் நண்பர்களோடு சேர்ந்து கூட்டாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கி இருக்கிறான். ‘பஸ் டே’வைக் கொண்டாட அனுமதிக்காததால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாணவர்கள் கலவரம்; கல்வீச்சு. இவற்றுக்கெல்லாம் உச்சக்கட்டமாக சென்னையில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், பட்டப்பகலில், வகுப்பறையில் தன் ஆசிரியரையே கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொன்ற கொடூரம்.
இளைஞர் சமூகத்துக்கு ஏனிந்த வெறி?
நாம் அனைவருமே ஒரு விதத்தில் இத்தகைய சமூகச் சீர்கேட்டுக்குக் காரணம்.“2002-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற அகில உலகக் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் சொற்பொழிவாற்றிய உலகப் புகழ்பெற்ற மனிதவளப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் கவி, ‘அமெரிக்காவில் குற்றங்கள் பெருகி வருகின்றன. அமெரிக்கக் குடும்பங்களில் பணம் இருக்கிறது; வசதிகள் இருக்கின்றன. ஆனால் அமைதி இல்லை. காரணம் இங்கே குடும்பக் கட்டமைப்பு நிலை குலைந்து போய் விட்டது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம்’ என்று அமெரிக்காவின் நிலைமையைச் சுட்டிக் காட்டிவிட்டு, தொடர்ந்து, ‘நாம் கிழக்கு நோக்கி, குறிப்பாக இந்தியாவைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் அங்கே காணப்படும் குடும்பக் கட்டமைப்பு’ என்றார். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் பத்தாண்டுகளில் இங்கே நிலைமை எப்படி மாறிவிட்டது?
“ஒன்பதாம் வகுப்பு மாணவன் உணர்ச்சிவசப்பட்டு, கோபத்தில் தன் டீச்சரைக் குத்திக் கொல்லவில்லை; இரண்டு நாட்கள் கத்தியோடு தக்க தருணத்துக்காகக் காத்திருந்து கொலை செய்திருக்கிறான். இது சமூகத்துக்கு ஒரு அபாய மணி எச்சரிக்கை. பணத்துக்கும், அந்தஸ்துக்கும், வசதியான வாழ்க்கைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் கொடுக்கப்படவில்லை. “கன்ஸ்யூமரிசம் என்ற வெள்ளம் சமூகத்தில் அனைவரையும் அடித்து இழுத்துச் செல்கிறது. மேற்கத்திய நாடுகளில் இருக்கும் மோசமான விஷயங்களை நாம் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறோம். “பெற்றோர்களுக்குப் பணம் சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. அந்தப் பணத்தின் மூலமாக, குழந்தைகளுக்கு சந்தோஷத்தை அளித்துவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். அவர்களுக்கு நல்லொழுக்கத்தைச் சொல்லித் தரத் தவறிவிடுகிறார்கள். இது மிகவும் தவறு. அபாயமானது. அதன் விபரீத விளைவுகளைத்தான் இன்று சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையைச் சீர் செய்வது சாத்தியமா என்று சந்தேகமாக உள்ளது.“ஒரு மாணவன், ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணி முதல் நான்கு மணி வரை சுறுசுறுப்பாக இருக்கும் பகல் பொழுதினை, பள்ளிக்கூடத்தில்தான் கழிக்கிறான். அவனைப் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிக்கு முக்கியமான பங்கு உண்டு. பொதுவாக இன்று ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பதில்லை. அதேபோல என்னுடைய ஆசிரியர்களிடம் இருந்த கடமையுணர்வும், கனிவும், அன்பும் இன்று ஆசிரியர்களிடம் அரிதாகவே காணப்படுகின்றன.
“பள்ளிக்கூடங்களில் பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், ‘சாஃப்ட் ஸ்கில்ஸ்’ எனப்படும் படிப்புக்கும் அப்பாற்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள்ளும் வழிகளையும் சொல்லித்தர வேண்டும்.“மனித வாழ்க்கையின் அங்கமான சில விஷயங்களை, சினிமாவில் காட்டும்போது இலை மறை காயாகத்தான் சொல்ல வேண்டும்; சினிமாவில் எதற்காக இவ்வளவு வன்முறையைக் காட்ட வேண்டும்? புதுமை என்ற பெயரில் ஆபாசம் அதிகரித்து வருகிறது. சமூகச் சீரழிவுக்கு அவர்கள் காரணமாகலாமா?“எப்படி ஊழலை சட்டத்தின் மூலமாக மட்டுமே ஒழித்துவிட முடியாதோ, அதே போல இந்தச் சமூகச் சீரழிவையும் சட்டத்தின் மூலமாகச் சரி செய்து விட முடியாது. இப்போது மக்கள் மத்தியில் எப்படி ஊழலைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதோ, அதேபோல சமூகச் சீரழிவு பற்றியும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும், பள்ளிக்கூடங்களும், இந்தச் சமூகமும், மீடியாவும் தங்கள் கடமையை உணர வேண்டும்,”
இராதாகிருஷ்ணன், ஐ.பி.எஸ்.
No comments:
Post a Comment