Search This Blog

Tuesday, February 14, 2012

அருள் மழை -- 31


காமகோடி பீடம் ஸர்வக்ஞ பீடம் என்ப்படும்.இதன் பொருள்எல்லாம் தெரிந்தவர் என்பது. ஐந்து ஆண்டுகள் வேத,வேதாந்தம் முதல் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நம் ஆச்சார்யர் கற்றறிந்தார்.திருச்சிக்கு அருகிலுள்ள மகேந்திரமங்கலம் என்ற இடத்தில் பெரியவாளுக்கு படிப்பு தொடர்ந்தது.இறைவனே இறங்கி வந்திருக்கிறார் என்ற உண்மை தெரிந்தவர்களுக்கு பெரியவா படித்துத்தான் எதையும் தெரிந்து கொள்ள வேண்டுமா என்று கேள்வி எழுவது நியாயமே. உலக மரியாதையை ஒட்டித்தான் அவர் இந்த ஏற்பாட்டுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஆனால், படித்த முறையில் அவர் தன்னை மறைக்க முடியாமல் வெளிப்படுத்திய சம்பவங்கள் உண்டு. இவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள் அந்தக் காலகட்டத்தில் பெரிய மேதைகள்.அவர்கள் மற்ற இடங்களிலிருந்து கும்பகோணத்திலும் மகேந்திரமங்கலத்திலும் பெரியவாளுக்குப் பாடம் சொல்லித் தருவதற்கென்றே வந்து தங்கினார்கள். ஒருநாள் வழக்கம்போல் மடத்துக்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் கொட்டகை அமைத்து அதில் காவேரி மணலைப் பரப்பிய இடத்தில் (வேறு சாதனங்கள் இல்லாத காலம்) பாடம் தொடங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால்,சொல்லித்தர வந்த குரு, சீடரான பெரியவாளை நமஸ்கரித்துவிட்டுத்தான் பாடம் தொடங்குவார்.[தலை கீழ்ப் பாடம்] ஏனென்றால் கற்றுக் கொள்பவர் ஜகத்குரு ஆயிற்றே!

ஒருநாள் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது சீடர் மணலை அளைந்து கொண்டேயிருப்பதை குரு பார்த்தார்.எதுவும் சொல்லாமல் தொடர்ந்து பாடத்தை எடுத்து முடித்தார். மறுநாளும் அப்படியே நடக்கவே குரு பாடத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு எழுந்து, "நான் ஊருக்குப் போகிறேன்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. "பாடம் நடந்து கொண்டிருக்கிறதே...." என்று நயமாகச் சொல்லிப் பார்த்தார். என்ன பிரச்னை என்பதை எப்படிக் கேட்பது? குருவே சொன்னார், "இப்போது படிப்பது சாதரணப் படிப்பு அல்ல. மனம்,புத்தி முழுவதையும் ஒருமுகப்படுத்த வேண்டிய படிப்பு. கவனம் எங்கேயும் திசை திரும்பக்கூடாது." ஆத்மார்த்தமாகப் பாடம் நடத்துகிற அந்த குரு முதல் நாள் தன் சீடர், தான் சொல்வதை கவனமாகக் கேட்கவில்லை என்ற மனத்தாங்கலுடன் இருந்தார். பதினைந்து வயதான சீடர் பாடம் நடக்கையில் மணலில் விரலை அளைந்து விளையாடிக் கொண்டிருந்தது, அவருக்குப் பொறுக்கவில்லை.ஆனால், கண்டிக்கவும் முடியவில்லை.அந்த சீடர் ஜகத்குரு ஆயிற்றே! என்ன செய்வது? "பாடம் கேட்கப் பிடிக்காதவருக்காக நான் ஏன் சிரமப்பட்டு ஊரைவிட்டு ஊர்வந்து காத்துக் கொண்டிருக்க வேண்டும்?" என்று தோன்றிவிட்டது .அதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பெரியவா அடக்கமாக,"கோபித்துக் கொள்ளாதீர்கள்; நான் நேற்று மணலில் விளையாடிக் கொண்டிருந்தது உண்மைதான், என்றாலும் நீங்கள் சொன்னதில்தான் என் முழு கவனமும் இருந்தது" என்று சமாதானப்படுத்த முயன்றார். குருவின் கோபம் குறையவேயில்லை. இதை எப்படி நம்புவது என்றும் புரியவில்லை.

அதையும் தெரிந்து கொண்ட பெரியவா, "நான் சொன்னதில் நம்பிக்கையில்லை என்றால் சோதித்துப் ருங்களேன்..."என்று
கேட்டுக்கொண்டார். அதன்படியே முதல் நாள் நடந்த பாடத்தில் சில கடினமான கேள்விகளை குரு எழுப்பினார்.அவர் முடிக்குமுன் பதில் பிரமாதாமாக பெரியவாளின் வாயிலிருந்து வந்தது.அவர் கேட்டதற்கு மட்டுமில்லாமல் அதற்கு முன்னால் நடந்த செய்திகளையும், பின்னால் வரப்போகிற செய்திகளையும் கூடப் பொழிந்து தள்ளினார். இதைக் கேட்ட குரு ஸதம்பித்துப் போனார். "மன்னிக்க வேண்டும்..மன்னிக்க வேண்டும்!" என்று மனமுருகிக் கண்ணீர் விட்டார். நெடுஞ்சாண் கிடையாய்க் காலில் விழுந்தார். "எனக்கு உத்தரவு தரணும்:நான் ஊருக்குப் போகிறேன்!" என்றார்."மறுபடியும் புதிராக இருக்கிறதே!" என்று பெரியவா திகைத்தார். "முதலில் நான் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று கோபித்துக் கொண்டு புறப்பட்டது நியாயம்.இப்போது நான் எல்லாம் சரியாகச் சொல்லியும் ஏன் கிளம்புகிறார்?" என்று நினைத்த பெரியவா கேட்டே விடுகிறார். "நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே..." என்று தயங்கியபடி பேசினார். உடனே குரு, "நீங்கள் அருமையாகப் பதில் சொன்னீர்கள். உங்களமிடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும். தண்ணீர் கீழேயிருந்து மேலே பாயும் அதிசயத்தை நான் பார்த்தேன். இனி எனக்கு இங்கு வேலையே இல்லை!உத்தரவு கொடுங்கள்!" என்றார். 

எட்டு வயதில் நாலு வேதத்தையும் படித்து,12 வயதில் கற்க வேண்டிய அனைத்தையும் கற்றுவிட்டவர் ஆதிசங்கரர். அவரது மறு அவதாரம்தானே பெரியவா! இருவரும் எல்லாவற்றிலும் கரை கண்டிருப்பதில் எந்த அதிசயமும் இல்லை!. 

[எஸ்.கணேச சர்மா எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி டைப் அடிக்கப்பட்டது]
No comments:

Post a Comment