Search This Blog

Friday, February 17, 2012

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...ஓ பக்கங்கள் , ஞாநி

 
சென்ற வாரம் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார் அமெரிக்க வாழ் நண்பர் அருள். ஒரு சிறுவன் விளையாட்டு பீரங்கி போன்ற ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து வீசப்படும் மிட்டாய்கள் எங்கே எவ்வளவு தொலைவு போகின்றன என்று கண்ணை அகல விரித்துக் கொண்டு குழந்தை போல ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒபாமா.வெள்ளை மாளிகையில் இரண்டாவது வருடமாக நடக்கும் சிறுவர் - இளைஞர்களின் அறிவியல் கண்டுபிடிப்புக் கண்காட்சியின்போது நடந்த நிகழ்ச்சி அது. அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்து சுமார் 100 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடைய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இது பள்ளிக்கூடங்களில் வழக்கமாக மாணவர்களுக்குப் பயிற்சிக்காக நடத்தப்படும் அறிவியல் கண்காட்சி போன்றது அல்ல.
 
மாணவர்களின் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஹேலீ, அமெரிக்காவின் காஃபிக் கடைகளில் சர்க்கரைப் பொடிகளை அடைத்துத் தரும் காகிதப் பாக்கெட்டுகளுக்கு மாற்றைக் கண்டுபிடித்திருக்கிறாள். “ஸ்டார்பக்ஸ் கம்பெனியின் காஃபிக் கடைகளில் மட்டுமே வருடத்துக்கு 20 லட்சம் பவுண்ட் குப்பை சேர்கிறது. இதை ஒழிக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவும். அதனால்தான் ஹேலீக்கு இந்த ஐடியாவை வியாபாரமாக மாற்ற மாஸ்டர் கார்ட் கம்பெனி பத்தாயிரம் டாலர் பரிசு அளித்திருக்கிறது” என்று சொன்னார் ஒபாமா. ஹேலீ கண்டுபிடித்தது கரையக் கூடிய சர்க்கரைப் பை. உருளைக் கிழங்கு ஸ்டார்ச்சிலிருந்து தயாரித்தது. ஹேலீக்கு வயது 16!  கான்சாஸ் நகரில் ஆறாவது படிக்கும் வெஸ்லியும் தாம்ப்சனும் மதிய சாப்பாடு எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸை உருவாக்கியிருக்கிறார்கள். இது வெறும் டிபன் பாக்ஸ் அல்ல. இதில் காலையில் வைத்த சாப்பாட்டை மதியம் எடுக்கும்போது சாப்பாடு கெடாமல் இருப்பதற்காக அல்ட்ரா வயலட் கதிர்கள் செயல்பட்டு உணவில் கிருமிகள் இல்லாமல் அழித்துவிடும். டென்னசி மாநிலத்தைச் சேர்ந்த மேரியானா ஆடு வளர்ப்பில் மரபியல் அறிவியலைப் பயன்படுத்தியிருக்கிறாள். தங்கள் பண்ணையில் வளர்க்கும் ஆடுகளின் ரோமம் செயற்கையான நிறத்தில் வளர்க்கப்படுவதை மாற்றி இயற்கையான நிறத்தில் வளர்வதற்கு மரபியல் கூறை ஆராய்ந்து மாற்றங்களைச் செய்திருக்கும் மேரியானாவுக்கு வயது 18.அறிவியல் ஆய்வுகள் செய்து புதுக் கண்டுபிடிப்புகளைச் செய்ய மாணவர்களுக்குத் தேவையான நிதியை அவர்கள் பல விதங்களில் திரட்டியிருப்பதை ஒபாமா தன் பேச்சில் சுட்டிக்காட்டுகிறார். டெக்சாஸ் மாநிலத்திலேயே வசதி குறைவான பகுதியான பிரசிடோவில் மாணவர்கள் ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வு செய்தார்கள். “இதற்குப் பணம் திரட்டுவதற்கு, ஆசிரியர்கள் தின்பண்டங்கள் சமைத்து சர்ச் வாசலில் விற்றார்கள். ஒரு ஆட்டை ஏலம் விட்டார்கள். 200 மைல் தொலைவில் போய் மலிவாக உணவு வாங்கிவந்து லாபத்துக்கு விற்றார்கள்” என்று ஒபாமா சொன்னார். கடலில் எண்ணெய்க் கசிவுகள் ஏற்படுவதால் கடல் நாசமாவதைத் தடுக்க, ஒரு மாணவன் ஒரு படகைக் கண்டுபிடித்திருக்கிறான். இந்த ஆளில்லாத படகை எண்ணெய்ப் படலம் உள்ள கடல்பரப்பில் இயக்கினால், அது அந்தப் படலத்தை நீரின் மேற்பரப்பிலேயே துடைத்து எடுத்துவிடும்.இன்னொரு மாணவன் நியூயார்க்கைச் சேர்ந்த ஏய்டன் டையர். சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்போது அதிக நேரம் சூரிய ஒளியைப் பெறுவது எப்படி என்று ஆய்வு செய்தான். மரங்களின் கிளைகள் மிக அதிக அளவு சூரிய ஒளியைப் பெற வசதியான வடிவத்தில் வளர்வதைக் கவனித்து அதைப் பின்பற்றி, சோலார் பேனல்களை அமைத்தால் அதிக சூரிய ஒளி பெறமுடியும் என்று நிரூபித்திருக்கிறான். கிளைகளின் அமைப்புகள் கணிதமுறையில் Fibonacci (ஃபிபனாச்சி) எண் அடிப்படையில் இருப்பதே அவன் ஆய்வுக்கு அடிப்படை. (முதல் இரு எண்களின் கூட்டுத் தொகையாக அடுத்த எண் இருப்பதே Fibonacci எண் வரிசை 0,1,1,2,3, 5,8, 13,21,34,55..... என்று போகும்.) இந்தச் சிறுவனுக்கு வயது 13.
 
கலிபோர்னியா மாணவி ஏஞ்செலா புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து நேரடியாக புற்றுநோய்க்கான ஸ்டெம் செல்களுக்கே சென்று வேலை செய்ய வைப்பதற்கு நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆய்வு செய்திருக்கிறாள். இந்த ஆய்வைத் தொடர்வதற்காக அவளுக்கு சீமென்ஸ் நிறுவனம் ஒரு லட்சம் டாலர் பரிசளித்திருக்கிறது. ஏஞ்செலாவின் வயது 17.ஜார்ஜியாவில் படிக்கும் இந்தியச் சிறுவன் ஆனந்த் சீனிவாசன், தம் மூளையின் மின்னலைப் பதிவுகளிலிருந்து (EEG) எடுத்த தகவல்களை வைத்து, கணினிக்கு ஒரு செயல் நிரலியை எழுதி அதைக் கொண்டு ஒரு ரோபோ கையை இயக்கமுடியுமா என்று ஆய்வு செய்திருக்கிறான். கை, கால், துண்டிக்கப்பட்டவர்கள், முடக்குவாதத்தில் செயலிழந்தவர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பயன் தரக் கூடும். ஆனந்தின் வயது 15. விரல்களில்லாத ஒரு சிறுமி எழுத உதவுவதற்காக, செயற்கைக் கையை உருவாக்கியிருக்கும் அயோவாவைச் சேர்ந்த கேபி, மெக்கன்சி, கேட் மூவரும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்.நெவாடாவைச் சேர்ந்த டெய்லர் வில்சன், சிறு அளவில் அணுக்கதிரியக்கமுள்ள பொருள்களை யாரேனும் எடுத்துச் சென்றால் கண்டறியக்கூடிய மானிட்டரை உருவாக்கியிருக்கிறான். துறைமுகங்களில் சரக்கு கண்ட்டெய்னர்களில் யுரேனியம் 234, ஆயுதத்துக்கான புளூட்டோனியம், செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தால் இந்த மானிட்டர் சொல்லிவிடும். டெய்லரின் வயது 17.ஜெசிகா, காட்டன், ஆனா மூவரும் உருவாக்கியிருப்பது புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்தோரை, தங்க வைப்பதற்கான குடில். இதில் சுத்தமான குடிநீர், விளக்கொளி எல்லாம் மறுசுழற்சி முறையில் அமைக்கப்பட்டுள்ளன. கலிபோர்னியா மாணவன் பெனெடிக்ட் விளையாட்டு வீரர்களின் ஹெல்மெட்டில் பொருத்த கண்டுபிடித்துள்ள கருவி, விளையாடும்போது ஹெல்மெட்டில் அடிபட்டால், அந்த அடி விளையாட்டு வீரரின் மூளையைப் பாதிக்கும் அளவு பலமானதா என்பதை உடனே கண்டறிந்து தெரிவித்து விடும். உடனே வீரரைக் களத்திலிருந்து வெளியேற்றி, சிகிச்சைக்கு அனுப்ப முடியும். இதே போல ராணுவ வீரர்களுக்கான ஹெல்மெட்டுக்கான கருவியை வர்ஜீனியாவைச் சேர்ந்த ஜாக் டட்லியும் சிட்னி டயானியும் உருவாக்கியிருக்கிறார்கள். எல்லாரும் எட்டாவது படிக்கும் மாணவர்கள். பென்சில்வேனியா மாணவன் மரியன் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிப்பதற்காக விலை மலிவான கருவியை உருவாக்கியிருக்கிறான். இவன் வயது 17.
 
 
அமெரிக்காவில் ஸ்டெம் எனப்படும் சயன்ஸ் (எஸ்), டெக்னாலஜி ( டி) , இன்ஜினீயரிங் (ஈ), மேதமேட்டிக்ஸ் ( எம்) ஆகியவற்றைப் பயிற்றுவதற்கான ஒரு லட்சம் பள்ளி ஆசிரியர்களை உருவாக்க, ஒபாமா எட்டுக் கோடி டாலர்களையும் இந்தத் துறைக் கல்வியை மேம்படுத்த இன்னொரு 10 கோடி டாலர்களையும் ஒதுக்கியிருக்கிறார்.பணம் மட்டுமே இதில் விஷயம் அல்ல. இந்தியாவில் சில சமயங்களில் இதை விட அதிக பணம் கூட ஒதுக்கப்படுகிறது. அணுகுமுறையே முக்கியமானது. கல்வித் துறையின் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரின மன நிலை பெரும்பாலும் கூலிக்கு மாரடிப்பதாகவே இருக்கிறது. விதிவிலக்கானவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவில் பொது வாழ்க்கையில் இருக்கும் பல பிரபலங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகளுக்கு, புத்தகம் வாசித்துக் காட்டி அவர்களையும் கூடவே படிக்கச் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். இது ஓர் இயக்கமாகவே அங்கே செயல்படுகிறது. பல குடியரசுத் தலைவர்கள், அவர்களுடைய மனைவிகள், எழுத்தாளர்கள் இதைச் செய்கிறார்கள். அண்மையில் கூட ஒபாமா, டெக்சாஸ் கல்லூரியில் உரையாற்ற சென்றபோது, அதற்கு முன்னர் ஒரு மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்குக் கதை படித்துக் காட்டினார். அவர்களின் வயது 5க்குக் கீழே. மொத்தம் எட்டே குழந்தைகள். அவரைச் சுற்றிலும் அரைவட்டமாக உட்கார, படக்கதையைப் படித்தார். நம் நாட்டில் எண்ணூறு மாணவர்களை, தம்மைச் சுற்றி உட்காரவைத்துக் கொண்டு போஸ் கொடுத்து இமேஜ் காட்டும் வேலை மட்டும்தான் நடந்திருக்கிறது. குடியரசு மாளிகையில் அறிவியல் கண்காட்சி ஏதும் நடந்ததும் இல்லை.இந்தியாவிலும் இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுகள், பரிசுகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவை அரசின் விஞ்ஞானத்துறையின் கீழ் உள்ள ஆய்வகங்கள் சார்ந்ததாகவும் உயர்கல்வி முடித்தவர்களுக்கானவையுமாகவே இருக்கின்றன. பெரும்பாலும் பெலோஷிப் எனப்படும் உபகாரத் தொகைகள். அவை பள்ளி மட்டத்திலேயே ஆய்வை ஊக்குவிக்கவும் உதவவும் கூடிய சூழல் இங்கு இல்லை. சென்ற வருடம் மத்திய அரசின் கவுன்சில் ஃபார் சயன்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்சின் பொன்விழா விருதுகள் சிறுவர்களுக்கானவை அறிவிக்கப்பட்டன. மொத்தம் வந்த கண்டுபிடிப்புகள் 353. இரண்டே பரிசுகள்தான் தரப்பட்டன. ரூபாய் பத்தாயிரம் பரிசுகள், பார்வையற்றோருக்கான இன்ஃப்ரா ரெட் கதிர் பயன்படுத்தி வழிகாட்டும் ஸ்மார்ட் கம்புகளை உருவாக்கிய தில்லி மாணவன் சந்தனுவும், பைகள்,ஜெர்கின்களில் இருக்கும் சிப்புகளைப் பூட்டுவதற்குப் புது மாடல் பூட்டை உருவாக்கியதற்காக பஞ்சாபைச் சேர்ந்த அன்கித் குமாரும் பெற்றனர். முதல் பரிசான ஐம்பதாயிரத்துக்குத் தகுதியாக எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. 
 
வெளிநாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் மெத்தப் படித்த இளைஞர்களில் கூடப் பெரும்பாலோர் ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப சலிக்காமல் நேர்த்தியாகச் செய்து தரும் நல்ல வேலையாட்களாகவே தயாரிக்கப்பட்டிருக்கிறார்கள். உயர் ஆய்வுகள் செய்வதற்கான மனநிலை, துடிப்பு, உழைப்பு, அதற்கேற்ற வசதிகள், நெளிவு சுளிவான விதிமுறைகள் முதலியவற்றுடன் நம் இளைஞர்கள் உருவாவதற்கேற்ற சுழல் இங்கே நம் பள்ளிகள் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை இல்லை. இவற்றில் அக்கறை காட்டக்கூடிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்னொரு பக்கம் நம்மிடம் இல்லாததே இல்லை; எல்லாம் இருந்தது என்று கற்காலப் பெருமைகள் பற்றிப் புலம்புவோரும் அதையும் மெய்யென நம்புவோருமாக ஒரு கூட்டம் இருக்கிறது. எப்போது, எப்படி மாற்றம் வரும்? உங்களோடு சேர்ந்து நானும் ஏங்குகிறேன்.
 
இந்த வாரக் கேள்வி!
 
அடையாறு புற்று நோய் நிலையத்தைப் பல வருடங்களாக நிர்வகித்துவரும் புகழ் பெற்ற மருத்துவர் வி. சாந்தாவை தங்கள் பிரசாரத்துக்கு அணுசக்தித்துறை பயன்படுத்துகிறது. ‘ கதிரியக்கத்தால் புற்று நோய் வராது’ என்று சாந்தா சொல்லும் டி.வி. விளம்பரங்களை அணுசக்தித் துறை வெளியிட்டுள்ளது. இதே சாந்தாவின் அடையாறு புற்று நோய் நிலையத்தின் இணையதளத்தில் புற்று நோய்க்கான காரணங்கள் பட்டியலில் ‘அயனைசிங் ரேடியேஷன்’ குறிப்பிடப்பட்டிருக்கிறது ! (http://www.cancerinstitutewia.org/abtcancer.htm)எது உண்மை ? சாந்தா அணுசக்தி விளம்பரத்தில் சொல்வதா? தம்முடைய கேன்சர் சென்ட்டரின் இணையதளத்தில் சொல்வதா? இரண்டில் ஒன்றுதானே உண்மையாக இருக்க முடியும் ? 

No comments:

Post a Comment