பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வு இது.
பெரியவா தரிசனம் தந்துகொண்டிருந்த நேரத்தில், நான்கு, ஐந்து வித்வான்கள் அமர்ந்திருந்தனர்.
சஹஜமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, பெரியவா '
பக்தர்கள் எனக்கு நமஸ்காரம் பண்றப்போ, 'நாராயணா, நாராயணா'ன்னு நான்
ஆசீர்வாதம் பண்றேன். உங்களைப் போல ஸம்ஸாரிகள்லாம் எப்படிப் பண்ணுவேள்' என
அவர்களிடம் கேட்டார்.
'தீர்க்காயுஷ்மான் பவ ஸௌம்ய'ன்னு சொல்லுவோம்' என அவர்களில் ஒருவர் சொன்னார்.
'அதுக்கு என்ன அர்த்தம்?'
'நீண்ட காலத்துக்கு ஸௌக்யமா இருங்கோன்னு அர்த்தம்'.
பக்கத்திலிருந்த மற்றவர்களிடமும் இதைக் கேட்டபோது, அப்படியே அவர்களும் பதில் சொன்னார்கள்.
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த பெரியவா, 'நீங்க சொன்ன அர்த்தம் தப்பானது' என மெதுவாகச் சொன்னார்.
பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள். எல்லாருமே பெரிய பெரிய வித்வான்கள்; சிரோமணி பட்டம் வாங்கியவர்கள்.
கொஞ்சம் சாதாரணமாகவே ஸம்ஸ்க்ருதம்
தெரிந்தவர்களுக்கும் கூட இந்த வாக்கியத்தின் அர்த்தம் சுலபமாக இப்படித்தான்
புரிந்திருக்கும். அவ்வளவு எளிமையான வார்த்தைகள். ஆனால், இதென்ன, பெரியவா
இது தப்பு என்கிறாரே!
'இப்ப நான் சொல்லட்டுமா?'
வித்வான்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டார்கள்.
"27 யோகங்கள்ல 'ஆயுஷ்மான்'ன்னு ஒண்ணு இருக்கு.
பதினோரு கரணங்கள்ல ஒண்ணுத்துக்குப் பேரு 'பவ'. வார நாள்ல, புதன் கிழமைக்கு
'ஸௌம்ய' வாஸரம்னு பேரு.
இந்த மூணுமே, அதாவது ஆயுஷ்மான் யோகமும், பவ
கரணமும் ஒரு புதன் கிழமையன்னிக்கு வந்தா அது ரொம்பவே ஸ்லாக்யம்னு
சொல்லுவா. அப்பிடி இந்த மூணும் சேர்ந்து வர்றதால எவ்வளவு மேலான பலன்கள்
கிடைக்குமோ, அது அத்தனையும் உனக்குக் கிடைக்கட்டும்னு ஆசீர்வாதம்
பண்றதுதான் இந்த வாக்யம்."
அமர்ந்திருந்த வித்வான்கள் எழுந்திருந்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தனர்.
இதுவரை கிளிப்பிள்ளை மாதிரி ஒரு வாக்கியத்தைச்
சொல்லிக்கொண்டிருந்த அனைவருக்குமே புரிகிறமதிரி அந்த ஞானப்பிள்ளை அன்று
எடுத்துக் காட்டியது.
No comments:
Post a Comment