Search This Blog

Friday, March 08, 2013

சாம்பலான சச்சினின் உலக சாதனை!


1988-ல், சச்சினும் காம்பிளியும் 664 ரன்கள் அடித்த உலக சாதனையோட ஸ்கோர் ஷீட் இருந்தால் கொடுங்கள். நான் 10 லட்சம் தருகிறேன்," என்று மும்பை ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனிடம் கேட்டிருக்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர். இன்றுவரை பேசப்படும் உலக சாதனையின் முக்கியமான ஆவணம் அது. அசோசியேஷனைச் சேர்ந்த எச்.எஸ்.போரிடமிருந்து கிடைத்த பதில். அதெல்லாம் கிடையாதுங்க. பழைய ரெக்கார்டுகளை எலி கடிச்சு நாசம் பண்ணதால, மொத்தத்தையும் எரிச்சுட்டோம்!"

மறக்கமுடியுமா அந்தச் சாதனையை? சச்சினுக்கும் அப்போது கிட்டத்தட்ட 15 வயது. காம்பிளிக்கு 16. இருவரும் சாரதாஷ்ரமம் வித்யா மந்திர் பள்ளி.

மாணவர்கள் பள்ளிகளுக்கிடையே நடக்கும் ஹாரிஸ் ஷீல்ட் அரையிறுதிப் போட்டியில், 1988 பிப்ரவரி 23 - 25 ஆகிய தினங்களில் நடந்த மேட்சில், செயின்ட் சேவியர் பள்ளியுடன் மோதியது சாரதாஷ்ரமம். பள்ளி மாணவனாக இருந்தாலும், சச்சின் அப்போதே மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் படு ஃபேமஸ். இன்று டெஸ்டில் களம் இறங்குவதுபோல நான்காவதாக விளையாட வந்தார் சச்சின். முதல் நாள் இறுதியில், இருவருமே இரட்டைச் சதத்தை நெருங்கியிருந்தார்கள்.

அணியின் கோச் ராம்கந்த் அச்ரேகர், கண்டிப்பாக மறுநாள் காலையில் டிக்ளேர் செய்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அடுத்த நாள், அச்ரேகர் மைதானத்தில் இல்லாததால், தொடர்ந்து ஆடி, சிக்ஸரும் பவுண்டரியுமாக நொறுக்கிக் கொண்டிருந்தார்கள் சச்சினும் காம்பிளியும். டிரிங்ஸ் கொண்டு வந்த நண்பர்கள், கோச்சின் கட்டளையை ஞாபகப்படுத்தியபோது இருவரும் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இவர்களுடைய ஆட்டத்தைக் கேள்விப்பட்டுக் குவிந்த பார்வையாளர்களால் மேலும் உற்சாகமடைந்தார்கள். 2ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது, சச்சின் 326 ரன்களும், காம்பிளி 349 ரன்களும் அடித்திருந்தார்கள். சச்சின், அச்ரேகருக்கு போன் செய்து, காம்பிளியின் ஸ்கோரை மட்டும் சொல்லி, அவன் 350 அடிக்க ஆசைப்படுகிறான் என்று சொன்னபோது, கடும் கோபம் கொண்டார் அச்ரேகர். எல்லாம் போதும். டிக்ளேர் செய் என்றார். இறுதியில், 120 ஓவரில் 748 ரன்கள். அந்தச் சமயத்தில், தாங்கள் உலக சாதனை செய்திருக்கிறோம் என்பதை சச்சினும் காம்பிளியும் அறியவில்லை. அம்பயர் மார்கஸின் உதவியால்தான் இவர்களுடைய சாதனை, கின்னஸ் வரை சென்றது. (பிறகு 2006ல் இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது.)

25 வருடமாக ஸ்கோர் ஷீட்டைப் பாதுகாப்பது முடியாத ஒரு விஷயம். அந்தக் காலத்தில் ஸ்கேனர் எல்லாம் இருந்திருந்தால் பாதுகாத்திருக்கலாம்," என்கிறார் எச்.எஸ். போர். ‘உங்களால் முடியாவிட்டால் ஸ்கோர் ஷீட்டை என்னிடமோ சச்சினிடமோ கொடுத்திருந்தால்கூட பத்திரப்படுத்தி வைத்திருப்போமே! அதையெல்லாம் விட்டுவிட்டு, இன்றைக்கு வந்து எலி கடித்துவிட்டது, எரித்துவிட்டோம் என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?’ என்று செய்தியறிந்து மிகவும் வேதனைப்படுகிறார் காம்பிளி. நியாயமாக அந்த ஸ்கோர் ஷீட்டை ஃப்ரேம் பண்ணி சுவரில் மாட்டியிருந்தாலாவது பத்திரமாக இருந்திருக்கும். அல்லது பி.சி.சி.ஐ. யாவது பொறுப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். யாருக்கும் அக்கறையில்லாததால், இறுதியில், சச்சினின் உலக சாதனையைச் சாம்பலாக்கியதுதான் மிச்சம்.

1 comment:

  1. சிறிது கஷ்டமாத்தான் இருக்கு...

    இருந்தாலும் இப்பவும் சாதனைகள் தொடருகிறதே...

    ReplyDelete