Search This Blog

Saturday, November 20, 2010

ஊழல் தடுப்பு - விட்டல் நடவடிக்கை

(மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த விட்டல், தனது பதவிக்காலத்தில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகவும் பாரபட்சமற்றும் நடந்து, புகழ் பெற்றவர்.) 


ஜனநாயகம்தான் தேர்தலை நடத்துகிறது. ஆனால், அந்த ஜனநாயகமேகூட கறுப்புப் பணத்தை எரிபொருளாக்கிச் செலுத்தப்படுவது எத்தனை வேதனை!

தேர்தலில் 'டிரான்ஸ்ஃபரன்ஸி' எனப்படும் வெளிப்படையான தன்மை என்பதே சுத்தமாக இல்லை. அமெரிக்காவில் தேர்தல் நடந்தால், அங்கு ஒபாமா தன் கட்சிக்காக எவ்வளவு தொகையை, எப்படிச் சேகரித்தார் என்பதற்கு கணக்குகள் இருக்கும். பிரிட்டன் போன்ற நாடுகளில் அந்தக் கணக்குகளை தெளிவாக ஆடிட் செய்கிறார்கள். பிரிட்டனில் டோனி பிளேர் பிரதமராக இருந்தபோது, தன் 'லேபர் கட்சி'க்காக வியாபார முதலாளிகளிடம் இருந்து கடன் பெற்று அதைச் செலவு செய்து வெற்றி பெற்றார். அப்படி வெளிப்படையாக நிதி திரட்டுகிறார்கள். நம் நாட்டில் அப்படியா?

முன்பு கியாஸ் சிலிண்டர்கள், தொலைபேசி இணைப்புகள் ஆகியவற்றுக்கு கோட்டா வைத்திருந் தார்கள். அப்படிச் செய்வதன் மூலம், அந்தப் பொருட் களுக்குப் பற்றாக்குறை ஏற்படுத்தி, அதன் மூலம் ஊழல் செய்து அதிக வருமானம் பார்த்தார்கள். இப்படித்தான் காலம்தோறும் ஊழல் வெவ்வேறு ரூபத்தில் தொடர்ந்து நடக்கிறது. அப்படித்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலும்!

போஃபர்ஸ் ஊழல் 65 கோடி என்று 20 வருஷங் களுக்கும் மேலாகக் கதை பேசி வருகிறோம். இப்போது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு மேல் என்று ஸ்பெக்ட்ரத்தால் நாட்டுக்கு வந்த நஷ்டம் பெருத்துப் போயிருக்கிறது!  

இலவசங்கள் இருக்கும் நாட்டில், ஊழலும் இருக்கத்தான் செய்யும். நேத்தா, பாபு, லாலா, ஜோலா, தாதா என்று ஊழல் சக்கரத்தில் ஐந்து அச்சாணி கள் இருக்கின்றன. நேத்தா - ஊழல் செய்யும் அரசியல் தலைவர். பாபு - என்பவர்கள் 'மரியாதைக்குரிய' அதிகாரிகள். லாலா - என்றால் வியாபாரிகள். ஜோலா - சமூகத்தை மேம்படுத்துகிறேன், ஊழலை ஒழிக்கிறேன் என்று கிளம்பியிருக்கும் தன்னார்வ நிறுவனங்கள். தாதா - என்றால் சொல்லத் தேவையில்லை... கிரிமினல்கள்! இந்த ஐந்தும்தான் அரசு இயந்திரத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கின்றன. இவற்றில் இருந்து அரசு இயந்திரத்தை மீட்டுவிட முடியுமா என்பது பேராசைதான்!

ஊழல் என்பதை நான்கு பேரால் மட்டுமே முற்றிலும் நாட்டில் இருந்து நீக்க முடியும். முதலாவது, உச்ச நீதின்றம் தன் நிலையில் இருந்து மாறாமல் இருக்க வேண்டும். எந்த சட்டத்தில் வேண்டுமென்றாலும் நாடாளுமன்றம் திருத்தம்கொண்டு வரட்டும். ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளில் அரசு கைவைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. நாடாளுமன்றத்துக்கு முறையான வழிகாட்டுதல்களை இதனால் நிச்சயமாகத் தர முடியும். அதற்கு நீதிபதிகள் துளிகூட அசைந்துகொடுக்காமல் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். 2004-ல் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும் என்று சொன்ன பிறகுதான் நம் அரசியல்வாதிகளில் பலரின் முகத் திரைகள் கிழிந்தன!

இரண்டாவது, தேர்தல் ஆணையம்! சேஷன் பதவியில் அமர்ந்துவிட்டுப் போன பிறகுதான் அந்த ஆணையம் தனிச் சிறப்போடு செயல்படுகிறது. அவர் கொண்டுவந்த 'கோட் ஆஃப் கான்டக்ட்' இன்றும் பின்பற்றப்படுகிறது. தேர்தலுக்கு நீங்கள் செய்த செலவை கணக்குக் காட்ட வேண்டும், இப்படித்தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று நெறிமுறைகளை இறுக்கிப் பிடித்தார். அவற்றை மீறியவர்கள் மேல் தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. தேர்தலையே ரத்துசெய்யும் உரிமை தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் வரையில், தேர்தல்களில் ஊழல் நடப்பது வெகுவாகத் தவிர்க்கப்படும்.

மூன்றாவது, சி.ஏ.ஜி. எனப்படும் 'காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட் ஜெனரல்'. அரசு செலவழிக்கும் ஒவ்வொரு காசுக்கும் இதனிடம் கணக்கு சொல்லியாக வேண்டும். நிதி உரிமைகள் அனைத்தும் இதன் இடத்தில்தான் இருக்கின்றன. நாடாளுமன்றத்துக்காக இந்த அமைப்பு வேலை செய்கிறது. அப்படி இருக்கும்போது, பப்ளிக் அக்கவுன்ட்ஸ் கமிட்டி அமைத்து, அதற்குப் பொதுவாக எதிர்க் கட்சித் தலைவரை சேர்மனாக அமர்த்தி, கணக்குகளைத் தணிக்கை செய்யலாம். இப்போதுகூட ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்களுக்கு வந்த தகவல்களின் அடிப்படையில்தான் அனைத்துக் கணக்குகளையும் பதிவுசெய்து இருக்கிறோம் என்று சி.ஏ.ஜி. சொல்லி இருக்கிறது. தணிக்கை செய்ததன் மூலம்தான் இந்த ஊழலே வெளியே வந்தது!

இறுதியாக... ஆனால், முக்கியமானது 'சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன்'. மிகப் பெரிய கடிவாளம் இவர்களிடமே உண்டு. ஊழலைக் கண்டுபிடித்தால் இப்படி எல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என்று இந்த அமைப்பால் பரிந்துரைக்க முடியும். அதைத் தாண்டி எதுவும் செய்ய முடியாதது இவர்களது பலவீனம்!

ஊழல் வழக்குகளில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஊழல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் ஆறு மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். வருடக் கணக்கில் இழுத்தடிக்க முடியாதபடி, ஒரே ஒரு அப்பீல்தான் செய்ய முடியும் என்று வரையறுக்க வேண்டும். 

நம் நாட்டில் சட்டங்களுக்குக் குறைவில்லை. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில்தான் நிறையக் குறைபாடுகள். ஊழல் செய்தவர்களுக்கு சட்டம் அளிக்கும் தண்டனையைப் பார்த்து, இனி ஊழல் செய்ய ஒவ்வொருவரும் பயப்படும் நிலை வரவேண்டும். அந்த நாள் வரும் வரையில் மாற்றம் என்பது கானல் நீர்தான்!''



1 comment: