Search This Blog

Saturday, May 05, 2012

இன்று நள்ளிரவு பெட்ரோல் விலை ஏறப்போகிறது..

 
'இன்று நள்ளிரவு பெட்ரோல் விலை ஏறப்போகிறது’ என்று, அறிவிக்கப்​பட்டால், உடனே வண்டியின் பெட்​ரோல் டேங்கை நிரப்ப வரிசையில் காத்தி​ருந்த அனுபவம் இருக்கிறதா? இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம், இனி, அடிக்கடி நிற்கத்​தான் போகிறீர்கள். இன்றைய நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 7.67 இழப்பைச் சந்திக்கின்றன. ஒரு நாளைக்கு ஆகும் இழப்பு மட்டும் சுமார் 48 கோடி. இதன் காரணமாக, பெட்ரோல் விலையை உயர்த்தி தரச்சொல்லி மத்திய அரசை வற்புறுத்தி வருகிறது.முக்கியமான எந்தத் தேர்தலும் இல்லாத சூழ்நிலையிலும்கூட, மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வுக்கு இன்னும் அனுமதி கொடுக்காதது, ஆச்சர்யம்தான். ஆனால், நீண்ட நாட்களுக்கு நிலை இப்படியே நீடிக்காது. காரணம், குரூட் ஆயிலைச் சுற்றி நடக்கும் லாபி. ஏனென்றால், உலக அரசியலின் போக்கையே மாற்றும் தன்மை குரூட் ஆயிலுக்கு உண்டு.கடந்த பிப்ரவரி மாத ஆரம்பத்​தில் ஒரு பேரல் குரூட் ஆயிலின் விலை 96 டாலர். இப்போது 105 டாலருக்கும் மேலாக உயர்ந்து விட்டது. அடுத்த உயர்வு எப்போது என்பது தெரியவில்லை.அமெரிக்காவுக்கு ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக சந்தேகம். அந்த நாட்டின் வருமானத்தைக் குறைக்க நினைக்கும் அமெரிக்கா, 'ஈரானில் இருந்து எந்த நாடும் குரூட் ஆயிலை வாங்கக் கூடாது’ என்று தடை விதிக்கிறது. இந்தத் தடை, வரும் ஜூன் மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர இருக்கிறது.இதன் காரணமாகவே, குரூட் ஆயில் விலை உயர்ந்து உள்ளது. ஈரானில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. ஈரானுடைய ஏற்றுமதியில் 16 சதவிகிதம் இந்தியாவுக்கு வருகிறது. இந்தியத் தேவையில் 12 சதவிகிதத்தை ஈரான் பூர்த்தி செய்கிறது. (இதைவிட அதிகமாக சவூதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம்).
 
மார்ச் இறுதியில் நடந்த பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா) நாடுகளின் சந்திப்பில், அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'ஈரான் மீதான நடவடிக்கையால், குரூட் ஆயில் விலை உயரும். இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிப்பு அடையும்’ என்று பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் கூட்டாக அறிவித்து இருக்கிறார்கள்.ஆனால் ஒபாமா, 'உலகச் சந்தையில் போதுமான அளவுக்கு குரூட் ஆயில் இருக்கிறது. ஈரானைத் தவிர வேறு நாடுகளில் இருக்கும் குரூட் ஆயிலைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்’ என்கிறார்.'ஈரான் மீதான தடை நியாயம் இல்லாதது’ என்று இந்தியா சொல்லிக்கொண்டு இருந்தாலும், மறைமுகமாக இறக்குமதியை குறைக்கச் சொல்லி இருக்கிறது. எம்.ஆர்.பி.எல். மற்றும் எஸ்ஸார் ஆயில் நிறுவனங்கள்தான் ஈரானில் இருந்து அதிகமான குரூட் ஆயிலை இறக்குமதி செய்கின்றன. இதை உறுதிசெய்யும் விதமாக, ஈரானில் இருந்து இறக்குமதியைக் குறைத்துக்கொண்டு வெனிசுலா, ஃபிரேசில், மெக்ஸியோ மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்போவதாக எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவித்து இருக்கிறார்.அணு ஆயுதம் மட்டும்தான் அமெரிக்காவுக்கு பிரச்னையா?''இதுவரை குரூட் ஆயிலை இறக்குமதி செய்துவந்த அமெரிக்கா, இப்போது ஏற்றுமதி​யாளராக மாறி இருக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுத் தேவை குறைந்து இருப்பதுடன், உள்நாட்டு உற்பத்தியும் கடந்த எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. ஒரு நாளைக்கு 10 லட்சம் பேரல் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. 1949-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஏற்றுமதியாளராக அமெரிக்கா மாறி இருக்கிறது.அமெரிக்கா இப்போது ஏற்றுமதியாளர் என்ற நிலைக்கு உயர்ந்து இருப்பதால், குரூட் ஆயில் விலையைக் குறைய விட மாட்டார்கள். உண்மையில் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும்போதுதான், தேவை அதிகமாகி குரூட் ஆயில் விலை அதிகரிக்கும். இப்போது இந்தியா, சீனா தவிர பெரும்பாலான நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. சில நாடுகளில் மைனஸாகவும் வளர்ச்சி இருக்கும் சூழ்நிலையிலும் குரூட் ஆயில் விலை உயருகிறது என்றால், அதற்கு அமெரிக்காவின் லாபிதான் காரணம்'' என்று சொல்கிறார்கள் பொருளாதாரப் புள்ளிகள்.
 
ஒரு மனிதனை நிலைகுலைய வைக்க வேண்டும் என்றால் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினால் போதும், அதை நிரூபிக்கத் தேவை இல்லை’ என்பார்கள். அதேபோல, ஈரான் மீது அணுஆயுதம் என்ற ஆபத்தான பிரம்மாஸ்திரத்தை அமெரிக்கா வீசி இருக்கிறது. இதன் விளைவுகள் நம் நாட்டிலும் எதிரொலிக்கத் தொடங்கும்போது, நீங்களும் எந்த இரவிலும் பெட்ரோல் பங்க் வாசலில் காத்திருக்க நேரிடலாம்!

விகடன் 

No comments:

Post a Comment