Search This Blog

Tuesday, May 08, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - ஜெயிக்கப்போவது யாரு?


ஒருவழியாக வேட்பாளர் யார் என்பது நிச்சயமாகி விட்டது. வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் இரண்டாவது முறையாக அதிபர் பராக் ஒபாமா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக்கட்சி வேட்பாளர் ரோம்னி என்பது இப்போது நிச்சயமாகி விட்டது. அமெரிக்க அரசியலில் உட்கட்சி ஜனநாயகம் மிக வலுவானது. வேட்பாளரை உயர்மட்டக் குழு தேர்ந்தெடுப்பது, கட்சி தலைமைக்கு வழங்கப்படும் அதிகாரத்தால் நியமிக்கப்படுவது போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் கிடையாது. வேட்பாளராகத் தகுதி பெற்ற, போட்டியிட விரும்புபவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் கட்சி மாநாடுகளில் மற்றவர்களை விட அதிக வோட்டுகள் பெற்று முன்னிலையில் இருக்க வேண்டும். அவர்தான் கட்சியின் வேட்பாளராக முடியும். 65 வயது ரோம்னி நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வருபவர். மாஸாசுஸட்ஸ் மாநில கவர்னராக இருந்தவர். அவரது தந்தையும் மாநில கவர்னராக இருந்தவர். 2008 அதிபர் தேர்தல் வேட்பாளராவதற்கு உட்கட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஒதுங்கியவர். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ. படிப்புக்குப் பின் நிதி நிறுவன பிஸினஸ் தொடங்கி மிகப் பெரிய வெற்றிகளை அடைந்தவர். 5 குழந்தைகளும், 15 பேரக் குழந்தைகளும் உள்ள இவர், இன்று அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். சொத்தின் மதிப்பு 250 மில்லியன் டாலர்கள். ஆண்டு வருமானம் 45 மில்லியன் டாலர்கள்.உட்கட்சித் தேர்தலில் இவரின் செல்வாக்கு ஓங்குவதைக் கவனித்து வந்த ஒபாமா மற்றவர்களைக் கண்டு கொள்ளாமல் இவரது வாதங்களுக்கு மட்டுமே பதிலளித்துக் கொண்டிருந்தார். கட்சித் தேர்தல்கள் முடிந்து வேட்பாளர் நிலையை அடைந்ததும் தீவிரப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார் ரோம்னி. ஒபாமா எல்லாவகையிலும் தோல்வி அடைந்துவிட்டார், அவரது அரசு செயலிழந்து கிடக்கிறது" என ஆரம்பித்து, வரிவிதிக்கும் முறைகளில் மாற்றம் என்ற பெயரில் சாதாரண அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிகளைக் கூட்ட முயற்சிக்கிறார்; பொருளாதாரச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் தனியார் துறைகளில் அரசின் தலையீடு; கட்டுப்பாடு இல்லாத பெட்ரோல் விலையேற்றம்" என ஒபாமா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைக்கிறார். முக்கியமான விஷயம் ஒபாமா அறிவித்துச் செயல்படுத்த முடியாமல் தவிக்கும் புதிய மருத்துவப் பாதுகாப்புத் திட்டம். இது கிட்டத்தட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாதிரி. அமெரிக்காவில் அரசாங்க மருத்துவமனை என எதுவும் தனியாகக் கிடையாது. தனிநபர் மருத்துவச் சேவைக்கு மிகஅதிக கட்டணம். இதை நோயாளிகளின் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து மருத்துவமனை பெற்றுக் கொள்ளும். இதை மாற்றி வயதானவர்களுக்கும், ஏழ்மையில் உள்ளவர்களுக்கும் ஆகும் மருத்துவச் செலவை, அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மருத்துவமனைகள் பெறுவதற்கு ஒபாமா ஒரு திட்டத்தை அறிவித்தார். இது இப்போது அரசியலாகி இருக்கிறது. இருக்கும் நல்ல சிஸ்டத்தை விட்டு விட்டு மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் திட்டம் இது என்பது ரோம்னியின் வாதம். 


அடுத்தது கடந்த தேர்தலின் போது ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வாபஸ் பெறுவேன் எனச் சொல்லி, அதை இன்னும் முடிக்காமல் இப்போது ஈரானுக்கு அதிக அமெரிக்கப் படைகள் அனுப்பப்படுகின்றன. அவர் சொன்னது எல்லாம் ‘தேர்தல் நேர சத்தியங்கள்’ மட்டுமே என பாய்கிறார்.  அதிகாரபூர்வமாக தேர்தல் பிரசாரங்கள் தொடங்கப்படாவிட்டாலும், அதிபர் ஒபாமாவின் சமீப பேச்சுகளில் அரசியல் தொனிக்க ஆரம்பித்துவிட்டன. நிறைய சம்பாதிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர்கள்- ரோம்னி போன்றவர்கள், குறைவாக 15 சதவிகிதம் வரி மட்டுமே செலுத்துகிறார்கள். இது நியாயமில்லை. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதிக்கும் அமெரிக்கர்கள் 30% வரி செலுத்த வேண்டும். இது அரசாங்கத்தின் பல நலத் திட்டங்களுக்கு உதவும் என அறிவித்திருக்கிறார். ரோம்னி அளவு பணக்காரர் இல்லையென்றாலும் ஒபாமாவும் ஒன்றும் சாமானியன் இல்லை. சாதாரண அமெரிக்கர்களை விட பணக்காரர். அவர் எழுதிய புத்தகங்களிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் 2 மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். உலகின் முதல் பணக்காரர்கள் பட்டியலில் ஆண்டுதோறும் தவறாமல் இடம் பெறும் வாரன் பஃபெட், ஒபாமாவின் வரி உயர்வு திட்டத்தை வரவேற்று இது சமூகக் கடமை என அறிவித்திருக்கிறார். வரியை உயர்த்தப் போகிறோம் என்று சொல்லி வோட்டு கேட்கப் போகும் முதல் அரசியல்வாதி ஒபாமாவாகத்தானிருப்பார். மாறுதல்கள் வரும் எனச் சொல்லி, கடந்த தேர்தலில் வென்ற ஒபாமா அவருக்கு முன்பிருந்த குடியரசுக் கட்சி அதிபர் புஷ் செய்த அத்தனை மோசமான காரியங்களையும், எந்த மாறுதலுமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார். எகிப்து, லிபியாவில் புரட்சிகளை உருவாக்கியது, ஈரானுக்குப் படைகளை அனுப்பியது, ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ராணுவத்தளம், ராணுவ ஜெயில்களில் மனித உரிமை மீறல், அக்கிரமங்கள், வீக்கி லீக் போன்ற பிரச்னைகளின் மூலம் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளப்பார்க்கிறார். அமெரிக்கா வலிமையாக இருந்தால்தான் உலகம் பத்திரமாகயிருக்கும் என நம்புபவர்தான் அமெரிக்க அதிபர். இதை விரும்பும் அமெரிக்க மக்கள் தேர்தல் நேரத்தில் இதை யார் செய்வார்கள் என நம்புகிறார்களோ அவர்தான் ஜெயிப்பார்," என்கிறார் இந்திர ஜித் பார்மர். இவர் மான்செஸ்டர் பல்கலைக் கழகப் பேராசிரியர். அமெரிக்க அரசியல், அதிபர்கள் பற்றிப் பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.மக்கள் என்ன நினைக்கிறார்கள்? கடந்த மாதமே கருத்துக் கணிப்புகள் தொடங்கி விட்டன. முதல் கருத்துக் கணிப்பில் சிறிய வித்தியாசத்தில் ரோம்னி முந்தினார். இப்போது ‘கால்ப் டெலி’ என்ற மீடியா சார்பில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட கணிப்பில் ஒபாமாவுக்கு 50 சதவிகித ஆதரவும்; ரோம் னிக்கு 44 சதவிகிதமும் பதிவாகி இருக்கிறது. இடைவெளி 6 சதவிகிதம் என்பது அதிகம் மட்டுமின்றி, ஆட்சியில் உள்ள அதிபர் 50 சதவிகித மக்கள் ஆதரவு பெற்றிருப்பது, ஆச்சர்யமான ஒரு திருப்பம். 

நீண்ட நாள் தேடலுக்குப் பின் அதிரடி ஆபரேஷனில் பின்லேடனைக் கொன்றது, பல நூற்றுக்கணக்கான வங்கிகள் திவாலானதால் ஏற்பட்ட சிக்கலைச் சரி செய்தது, சிட்டி பாங்க் போர்ட் போன்ற நிறுவனங்களை அரசு பணத்தில் காப்பாற்றி வேலை வாய்ப்பைப் பெருக்கியதால் அமெரிக்க மக்கள் கிளிண்டன், புஷ்ஷுக்குத் தந்தது போல ஒபாமாவுக்கு இரண்டாவது வாய்ப்பைத் தருவார்களா? அல்லது ‘அவர் தந்த ஒரே மாற்றம் ஏமாற்றம்தான்’ என்று ரோம்னி சொல்வதை ஏற்று அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப் போகிறார்களா? தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. இன்னும் பல கருத்துக் கணிப்புகள் நடக்க இருக்கும் நிலையில், உலகின் எல்லா ஜனநாயக நாட்டின் தேர்தல்களைப் போல இதிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். 

No comments:

Post a Comment