Search This Blog

Tuesday, May 15, 2012

இடம் காலி இல்லை!


உலகத்தில் தட்டுப்பாட்டுக்கு பஞ்சமே இல்லை. மின் தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு, பெட்ரோல் தட்டுப்பாடு, வேலை தட்டுப்பாடு இவற்றுக்கிடையில் இப்பொழுது உலகத்தைத் திகைக்க வைத்திருப்பது ‘வலை தட்டுப்பாடு’. ஆமாம்! இணையம் கூடிய சீக்கிரம் முகவரிகள் இல்லாமல் திண்டாட இருக்கிறது. வலை உலக ஜாம்பவான்கள் கூகிளும், ஃபேஸ்புக்கும் இதற்கு மாற்றான ஒன்றுக்கு இப்பொழுதே ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.விஷயம் என்னவென்றால், நாம் எல்லோரும் இன்டர்நெட் ஐ.பி.அட்ரஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். உதாரணத்துக்கு www.google.com என்று இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் நாம் அடித்தவுடன், அது google இணையதள வழங்கியைப் (server) பின்புலமாகத் தேடி உங்களுக்கு அந்த வழங்கியிலுள்ள அதாவது இணையதள உள்ளடக்கங்களைக் காண்பிக்கும். பின்புலத்தில் கல்கி ஆன்லைன் என்ற பெயருடன் வழங்கியின் ஐ.பி.அட்ரஸ் இணைக்கப் பட்டிருக்கும். அந்த முகவரிதான் இப்பொழுது தீர இருக்கிறது.

புகழ்பெற்ற ஃபேஸ்புக் இணையதளத்தின் இந்தப் பின்புல முகவரி 66.220.149.32. இந்த முகவரி இணையதளங்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவதில்லை. செல்பேசிகள், இ-புத்தகங்கள், தொலைக்காட்சிகள், இப்படிப் பலவித சாதனங்களிலும் இந்த முகவரிகள் ஒவ்வொரு காரணத்துக்காக உபயோகப்படுத்தப்படுகின்றன.மொத்தம் 430 கோடி முகவரிகள்தான் தற்போதைய முறையில் சாத்தியம். 10 கோடிக்கும் குறைவாகவே இன்னும் முகவரிகள் பாக்கி இருக்கின்றன. தெருவுக்குத் தெரு ஏ.டி.எம். என்பது போல, இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வீடு இணையதளம், செல்பேசிகள் என்று ஆகிவிட் டது. இந்தச் சூழ்நிலையில் 10 கோடி முகவரிகள் என்பது ஜுஜுபி. இதற்கு மாற்றாக ipv6 (பதிப்பு 6) தேவைப்படுகிறது. இந்த முறையில் எவ்வளவு முகவரிகள் உருவாக்க முடியும் தெரியுமா? இதை எப்படிக் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அந்த எண்ணிக்கை: 340,282,366,920,938,463,463, 374,607, 431,768,211,456 - அம்மாடியோவ் இத்தனை முகவரிகள் உருவாக்கலாம். இன்னும் ஓர் ஆயிரம் வருடங்களுக்குக் கவலைப்படத் தேவையில்லை!தற்பொழுது உபயோகத்திலிருக்கும் ipv4 (பதிப்பு 4) 1970களில் உருவாக்கப்பட்டது. 430 கோடி முகவரிகளும் இப்படி 30 வருடங்களில் சுவாஹா ஆகும் என்று அப்பொழுது கனவில் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். நாம் இருக்கும் இந்த ‘டிஜிட்டல் காலத்தில்’ அசுர வேகத்தில் ஏற்படும் வளர்ச்சியை எண்ணிப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஐ.பி.அட்ரஸின் ஆறாவது பதிப்பு 10 வருடங்களுக்கு முன்பே புழக்கத்தில் வந்தபொழுதும் யாரும் அதை கால்தூசி அளவுக்குக் கூட மதிக்கவில்லை. (அப்போதெல்லாம் கண்டுக்காம விட்டுப்புட்டு இப்போ லபோ திபோன்னு அடிச்சுக்கறாங்க!!)இப்பொழுது நமக்கு இருக்கும் சவால் என்னவென்றால் உலகத்தில் வழக்கத்தில் இருக்கும் வழங்கிகள், திசைவிகள் (routers) எல்லாவற்றுக்கும் பதிப்பு 4ஐத்தான் புரிந்துகொள்ள முடியும். பதிப்பு 6 நடைமுறைக்கு வந்தால் என்ன ஆகும்? எல்லாம் அம்பேல்தான். அதனால் இணைய உலக ஜாம்பவான்கள் எல்லாம் முடியைப் பித்துக் கொள்கின்றனர். ஏகப்பட்ட கோடி அமெரிக்க டாலர்கள் தண்டச்செலவு வேறு இதற்கு தேவைப்பட இருக்கிறது.

வெரிஸான் மாதிரி தொலைபேசி நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக அமைதியாக பதிப்பு6ற்கு மாறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக 4G செல்பேசிகளில் இந்தப் புதிய முகவரி மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. ஃபேஸ்புக் கடந்த மூன்று வருடங்களாக இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் பதிப்பு 6 முகவரி www.v6.facebook.com இருங்க இருங்க உடனே உங்க கணினில இதைத் தட்டிப் பார்க்காதீங்க. உங்கள் கணினியில் பதிப்பு 6 ஆதரவு இருந்தால்தான் இது வேலை செய்யும். இல்லையென்றால் புஸ்ஸூதான்! இந்த மாதிரி பிரச்னைகளால் கொஞ்ச நாளில் டிஜிட்டல் போர் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ஆண்டவா, இந்த உலகத்தையும் அதோட தம்பி ‘இணைய உலகத்தையும்’ காப்பாற்றுப்பா!

தி.சு.பா

No comments:

Post a Comment