கூலிப் படைகளைவைத்துக் கொள்ளை அடிப்பதும் கொலை செய்வதும் வரலாறு நெடுக
உண்டு. 18-ம் நூற்றாண்டில் வலிமைமிக்க கூலிப் படையாக ஒரு இனமே
செயல்பட்டுவந்தது. அவர்களை பிண்டாரிகள் என்று அழைத்தனர். 20 ஆயிரம்
பேருக்கும் அதிகமான பிண்டாரியர், அப்போது மத்திய இந்தியாவைத்
தங்கள்வசமாக்கி வைத்து இருந்தனர். இவர்களை, கட்டுப்பாட்டுக்குள் அடங்காத
கொள்ளைக் கூட்டம் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். முகலாயப் பேரரசின் ஆட்சி நிலை குலைய ஆரம்பித்தவுடன், வட இந்தியாவில்
நிறையக் குட்டி ராஜ்ஜியங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. மராட்டிய
ஆட்சியாளர்களான சிந்தியா மற்றும் ஹோல்கர் ஆகியோரின் பாதுகாப்பு,
பிண்டாரியருக்குக் கிடைத்த காரணத்தால் அவர்கள் வெல்ல முடியாத பெரும்
சக்தியாக வளர்ந்து நின்றனர். நர்மதைப் பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு,
கிழக்கே ஒரிசாவின் கட்டாக், மேற்கே சூரத், தெற்கே ஆந்திர மாநிலத்தின்
குண்டூர் மற்றும் கஞ்சம் ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளை அடித்து
வந்தனர்.பிண்டாரிகள் தமக்கென தனியே அரசு எதுவும் அமைக்கவில்லை. ஆனால், கூட்டமாகச்
சேர்ந்து தாக்கிக் கொள்ளையிட்டு, அதைவைத்து வாழ்வதுதான் அவர்களின் தொழில்.
பிண்டாரியர் என்ற பெயர் வந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
சோளத்தில் இருந்து வடித்து எடுக்கப்படும் மதுவின் பெயர் பிந்தா. ஆகவே,
அதைக் குடித்தவர்கள் பிந்தாரியர் என்று இர்வின் கூறுகிறார். பந்தார் என்ற
இடம், பர்ஹான்பூருக்கு அருகில் உள்ளது. அங்கே இருந்து வந்தவர்கள் என்பதால்,
அவர்கள் பிண்டாரிகள் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சரித்திர
ஆசிரியர் சிவனடி, பிண்டாரியர்கள் பற்றிய தனது கட்டுரை ஒன்றில், 'பல
முக்கியத் தகவல்களைக் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது கட்டுரையில்,
ஒளரங்கசீப்பின் ஆட்சிக்குப் பிறகே, பிண்டாரிகள் ஒன்று திரண்டு பெரும்
கொள்ளைக் கூட்டமாக மாறினர். இவர்களின் மூதாதையர்கள் தக்காணத்தில் உள்ள
பிஜப்பூரைச் சேர்ந்தவர்கள். அவர்கள், பட்டாணிய வம்சா வழியில் வந்தவர்களாக
இருக்கக்கூடும். இவர்கள் முகமது கான், அகமது கான் என்ற இரண்டு
ஆப்கானியர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதுவோரும் உண்டு. மராட்டிய
ஆட்சியின் எழுச்சிக்கும், பிண்டாரிகளின் செயல்களுக்கும் இடையில் நெருக்கமான
தொடர்பு இருந்து இருக்கிறது. அதாவது, போர்க் காலங்களில் சம்பளம் தரப்படாத
துணைப் படை ஒன்று எப்போதுமே இருக்கும். இந்தப் படையின் வேலை, தோல்வி அடைந்த
நாட்டுக்குள் புகுந்து அங்குள்ள மக்களைக் கொன்று, அவர்களின் வீடுகளுக்குத்
தீ வைத்து, கையில் கிடைத்த பொருட்களைக் கவர்ந்து, பெண்களை வன்புணர்ச்சி
செய்து எதிரி மீண்டும் தலை எடுத்துவிடாமல் அழித்து ஒழிப்பதாகும். அப்படி,
அரசின் அனுமதியோடு கொள்ளையடிக்க அனுப்பப்படும் ஒரு பிரிவாகவே பிண்டாரிகள்
இருந்தனர். அவர்களுக்கு அரசு மானியமாக நிலமும் தானியங்களும்
தரப்பட்டதற்கும் சான்றுகள் இருக்கின்றன’ என்கிறார்.
இந்தப் பிண்டாரிகள், தனித்தனிக் குழுவாக இயங்கினர். இந்தக் குழுவில்
கடன்காரர்கள் பிடியில் இருந்து தப்பியவர்கள், குற்றங்களைச் செய்துவிட்டு
அரசிடம் இருந்து தப்பி வந்தவர்கள், சமூகத்தில் விலக்கிவைக்கப்பட்டவர்கள்
எனப் பலரும் தாமாக வந்து சேர்ந்தனர். அதனால், பிண்டாரிகளின் எண்ணிக்கை
வெகுவாக உயர்ந்தது. பிண்டாரி இனப் பெண்களும் கொள்ளைக்கு உடன் செல்வது
உண்டு. அப்படிச் செல்லும்போது, அவர்கள் ஒட்டகத்தையும் மட்டக்குதிரையும்
பயன்படுத்துவார்கள். இவர்களும், இரக்கமற்று வன்கொலை செய்யக் கூடியவர்கள்
என்று, வரலாற்று ஆசிரியர் ஜென்கின்ஸ் கூறுகிறார்.பிண்டாரிகள் ஓர் இடத்தில் கொள்ளையடிக்கப் போகும் முன், சாமியார்கள்,
ஜோதிடர்கள் மற்றும் வேலையாட்களை ஒற்றர்களாக அனுப்பித் தகவல்களைச்
சேகரிப்பது வழக்கம். இவர்கள் ஆண்டு முழுவதும் கொள்ளை அடிக்கச் செல்வது
இல்லை. வறட்சியான காலங்களில் மட்டுமே கொள்ளைக்குக் கிளம்புவார்கள். மழைக்
காலம் வரும் வரை இந்தக் கொள்ளை நீடிக்கும். மழை தொடங்கிவிட்டால், கிடைத்த
பொருட்களோடு இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அறுவடை முடிந்த பிறகு,
எதிர்பாராமல் கிராமங்களைத் தாக்கி கொள்ளை அடிப்பதும் உண்டு. கொள்ளை அடித்த
பொருட்களை, தங்களுக்குள் முறையாகப் பிரித்துக்கொள்வார்கள். சில வேளைகளில்,
கொள்ளை அடித்த பொருட்களை சிறு நகரச் சந்தைகளுக்குக் கழுதைகளில் ஏற்றிச்
சென்று வணிகம் செய்வதும் உண்டு.பிண்டாரிகளைக் கூலிப் படையாக வைத்திருந்தவர்கள் மராட்டிய ஆட்சியாளர்களே.
மராட்டியப் படை ஒரு பகுதிக்குள் நுழையும் முன், பிண்டாரிகளை
அவிழ்த்துவிடுவார்கள். இவர்களின் மூர்க்கமான தாக்குதலால் பயந்து மக்கள் ஒடுங்கிவிடுவார்கள். அதன் பிறகு, தங்களுக்கு
வேண்டிய பொருட்களைக் கொள்ளையடித்துக்கொள்ள அனுமதி தரப்படும். சில
நேரங்களில், பிண்டாரிகள் கொள்ளை அடித்த பொருட்களில் முக்கியமான நகைகள்,
வைரங்களை படைத் தலைவர்கள் பறித்துக்கொள்வதும் உண்டு. யுத்தம் இல்லாத
காலத்தில், பிண்டாரிகளுக்குத் தானியமும் அடிப்படை வசதிகளும் செய்துதர
வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.முரட்டுத் துணியால் ஆன உடை அணிந்து, தலையில் கைக்குட்டைகளைக் கட்டி
இருப்பது பிண்டாரிகளின் தனித்துவம். அவர்களின் விருப்பமான ஆயுதம், ஈட்டி.
அதைப் பயன்படுத்துவதில், பிண்டாரிகளை யாராலும் மிஞ்ச முடியாது. 12 முதல் 18
அடி நீளம்கொண்ட ஈட்டிகள் வைத்து இருந்தனர். பிண்டாரிகளின் தலைவன் சர்தார்
என்று அழைக்கப்படுவார். அவரிடம் மட்டுமே துப்பாக்கி இருக்கும். 1,000 பேர்
கொண்ட ஒரு பிண்டாரியர் குழுவில், 400 பேர் குதிரைகளிலும் மற்ற 400 பேர்
ஒட்டகம், எருமை, கழுதை உள்ளிட்ட வாகனங்களையும், மற்றவர்கள் கொள்ளையிட்ட
பொருட்களைத் தூக்கி வருவதற்கும், ஏவல் பணி செய்வதற்கும் இருப்பார்கள்.
இவர்களைப் படைப் பொறுக்கிகள் என்று பிண்டாரிகள் குறிப்பிடுகின்றனர். கொள்ளை
அடிக்கச் சென்ற இடத்தில் இருந்து, அழகான பெண்களைத் தூக்கி வந்து திருமணம்
செய்துகொள்வதும், வலிமையான ஆண்களை அடிமைகளாக வைத்துக்கொள்வதும்
பிண்டாரிகளின் வழக்கம். அவர்கள் கொள்ளைக்குக் கிளம்பும்போது, சிவப்பு
வண்ணத்தில் பாம்பு உருவம் பதித்த கொடியுடன் கிளம்புவார்கள். சில குழுக்கள்
பச்சை அல்லது மஞ்சள் கொடியைப் பயன்படுத்துவதும் உண்டு.பிண்டாரி ஆண்கள் சவரம் செய்ய மாட்டார்கள். ஆகவே, அடர்ந்த தாடியோடு உள்ள
அவர்களது தோற்றம் அச்சம் தருவதாக இருக்கும். நாய்கள்தான் அவர்களுக்குத்
துணை. எங்கே சென்றாலும் பிண்டாரி, ஒரு நாயை துணைக்கு அழைத்துச் செல்வான்.
பிண்டாரிகளில் யாராவது இறந்துவிட்டால், அவரை உட்கார்ந்த நிலையில்
வைத்துத்தான் புதைப்பார்கள்.பிண்டாரிகள், குதிரைகளைப் பழக்குவதில் தேர்ச்சி பெற்றவர்கள். பொதுவாக, குதிரையில் ஒருநாளில்30 கிலோ மீட்டர் தூரமே பயணம் செய்வார்கள். ஆனால், பிண்டாரிகள் அவசரக்
காலங்களில் ஒரு நாளில் 90 கிலோ மீட்டர் தூரத்துக்குக்கூட குதிரையில்
செல்வது உண்டு. அப்படி வேகமாகச் செல்வதற்காக குதிரைகளுக்குப் போதை தரும்
செடிகளைத் தின்னக் கொடுப்பார்கள். அதுபோல, பிண்டாரிகள், படைப் பிரிவுகளை
எதிர்கொண்டால் அவர்களோடு சண்டை இடுவதற்குப் பதிலாக, தப்பிச் செல்லத்தான்
முயற்சிப்பார்கள். காரணம், அவர்கள் சண்டை போடுவதைவிட கொள்ளை அடிப்பதே
தங்கள் வேலை என்று நினைக்கக்கூடியவர்கள். மீறி, படை வீரர்கள் அவர்களைத்
தாக்கினால் சிறு குழுக்களாகப் பிரிந்து சட்டென ஒளிந்துவிடுவார்கள்.பிண்டாரிகள், எந்த ஒரு தலைவனுக்கும் விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள்.
அவர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடியவர்கள். ஆகவே, அவர்கள் தங்களையும்
கொன்றுவிடக்கூடும் என்று பயந்த மராட்டிய ஆளுனர்கள், பிண்டாரிகளை
சந்தேகத்துடனேயே எப்போதும் நடத்தினர். தசரா விழாதான் பிண்டாரிகளின் முக்கிய
விழா. அந்த நாட்களில் அவர்கள் கொடி ஏற்றி தங்களின் வீரப்பிரதாபங்களைக்
காட்டுவார்கள். விழா நேரங்களில், அவர்களுக்குள் குழுச் சண்டை ஏற்படுவதும்
உண்டு. தசரா முடிந்தவுடன் கொள்ளைக்குத் திட்டமிடுவார்கள். காரணம், கடவுளின்
ஆசி தங்களுக்குப் பூரணமாக கிடைத்து இருக்கிறது என்ற நம்பிக்கையே!பிண்டாரிகளில் பலர் முஸ்லிம்களாக இருந்தபோதும், அவர்கள் உள்ளூர்க்
குலதெய்வங்களை வழிபடுவதில் ஈடுபாடு காட்டினர். அதிலும், கொள்ளை அடிக்கப்
போகும்போது, குலதெய்வங்களுக்குப் படையல் போட்டு வணங்கிச் செல்வது வழக்கம்.
'ராம்ஷா’ என்ற ஞானியின் உருவம் பதித்த சிறிய டாலரை அவர்கள் கழுத்தில்
அணிந்துகொண்டு கொள்ளை அடிக்கச் செல்வது வழக்கம். கொள்ளை அடிக்கப் போன
இடங்களில், மக்களை சித்ரவதை செய்வதில் பிண்டாரிகள் மிகக் குரூரமானவர்கள்.
பழுக்கக் காய்ச்சிய இரும்பைக்கொண்டு குதிகாலில் சூடு போடுவது, குதிரைக்கு
வைக்கும் கொள்ளுப் பைக்குள் சுடுசாம்பலைக் கொட்டி அதைத் தலையில்
கட்டிவிடுவது, துணிகளின் மீது எண்ணெய் ஊற்றி உயிரோடு நெருப்பு வைப்பது, கை
கால்களைத் துண்டிப்பது, இடுப்பில் மரப் பலகையைப் போட்டு அதன் மீது ஏறி
நின்று இடுப்பை முறிப்பது என்று, அவர்களின் கொடூரமான சித்ரவதைகளுக்குப்
பயந்து, அவர்கள் கேட்ட பொருட்களை மக்கள் உடனே கொடுத்துவிடுவார்கள்.
பிண்டாரிகளின் பெயரைக் கேட்டாலே மக்கள் அஞ்சி நடுங்கினர். சில ஊர்களில்,
கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து, பிண்டாரிகள் வருவதைப் பற்றி எச்சரிக்கை
செய்வதும் நடந்து இருக்கிறது.
1815-ம் ஆண்டு சென்னை ராஜதானியில் இருந்த மசூலிப்பட்டினம் பகுதிக்குள், 10
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிண்டாரிகள் தாக்குதல் நடத்தி, 300-க்கும்
மேற்பட்ட கிராமங்களில் கொள்ளை அடித்தனர். இந்தப் பகுதியில், கர்னல் டவ்டன்
தலைமையில் ஒரு படை பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு இருந்தது. அந்தப் படையின்
கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பிண்டாரிகள் கொள்ளை அடித்தனர். இந்தக்
கொள்ளையின்போது, பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருந்த அலுவலகங்கள், வீடுகள்,
அத்தனைக்கும் தீ வைத்துவிட்டனர். பயந்து போன மக்கள் ஊரைக் காலி செய்து
வெளியேறினர். பிரிட்டிஷ் படையால் மக்களைப் பாதுகாக்க முடியாது என்ற நிலை
உருவாகிவிட்டதைக் கண்டு, ஆத்திரம் அடைந்த ஹேஸ்டிங் பிரபு, பிண்டாரிகளை
ஒடுக்க தனிப் படைப் பிரிவு ஒன்றை உருவாக்கினார். அந்தப் படையினர்,
பிண்டாரிகளின் கொள்ளையைத் தடுக்கும் முயற்சியில் இறங்கினர். பிடார் மற்றும்
கஞ்சம் பகுதிகளில் கொள்ளை அடிக்க வந்த கும்பலை, மேஜர் மெக்டோவல் சுற்றி
வளைத்துத் தாக்கினார். எதிர்பாராத இந்தத் தாக்குதலில், பிண்டாரிகளில் பலர்
படுகாயம் அடைந்தனர். பேஷ்வா ஆட்சிப் பகுதியில் கொள்ளையிட வந்தவர்களை, மேஜர்
லூசிங்டன் மறைந்திருந்து தாக்கினார். இதில், 300-க்கும் மேற்பட்டோர்
பிடிபட்டனர். 500 பேர் தப்பி ஓடினர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி
கொடுக்க, பிண்டாரிகள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். பூரி ஜெகனாதர்
ஆலயத்தைத் தாக்கிக் கொள்ளை அடிக்கப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன்,
பிரிட்டிஷ் படை அதன் பாதுகாப்புக்குப் போனது. ஆனால், அவர்கள் அங்கே கொள்ளை
அடிக்காமல், கஞ்சம் பகுதியைத் தாக்கிப் பெரும் கொள்ளை அடித்தனர்.
விகடன்
No comments:
Post a Comment