இப்போதெல்லாம் சூரியனில் அடிக்கடி கடும் சீற்றம் ஏற்பட்டு வருகிறது. அதைத்
தொடர்ந்து சூரியனின் மேற்புறத்திலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் பயங்கர
வேகத்தில் தூக்கி
எறியப்படுகின்றன. அந்தத் துகள்கள் பிரம்மாண்டமான முகில் வடிவில் பல
சமயங்களிலும் பூமியை நோக்கி வருகின்றன. அந்த முகிலில் அடங்கிய துகள்களின்
மொத்த எடை 100 கோடி
டன்னாகவும் இருக்கலாம். சூரியனிலிருந்து இப்படி ஆற்றல் மிக்க துகள்கள்
வருவதை சூரியப் புயல் என்றும் வருணிப்பது உண்டு. இந்த ஆண்டில் ஏற்கெனவே பல
சூரியப் புயல்கள்
தோன்றியுள்ளன. சூரியப் புயலின் விளைவாக பூமியில் கடும் பாதிப்புகள் ஏற்பட
வாய்ப்பு உண்டுஆகவேதான் பல செயற்கைக்கோள்கள் தொடர்ந்து சூரியனைக் கண்காணித்துக்
கொண்டிருக்கின்றன. சூரியப் புயல் தோன்றினால் இந்தச் செயற்கைக்கோள்கள் உடனே
எச்சரிக்கை
விடுக்கின்றன, இந்தத் தகவலைப் பெறும் அமெரிக்க அமைப்புகள் உடனே
உலகெங்கிலும் இது பற்றி அபாய அறிவிப்பை வெளியிடுகின்றன.சூரியனில் ஏற்படும் சீற்றமும் (solar flares) துகள் முகில்களும் (Coronal
Mass Ejection) மனித குலத்துக்கு ஆபத்து எதையும் ஏற்படுத்துவதில்லை. அப்படி
மனித குலத்துக்கு ஆபத்து ஏற்படுவதாக இருந்தால் பூமியில் என்றைக்கோ உயிரினம்
அனைத்தும் அழிந்து போயிருக்கும். ஆனால் சூரியப் புயலினால் ஏற்படும் துணை விளைவுகள் தகவல் தொடர்புகளில்
பாதிப்பை உண்டாக்கலாம். மின்சப்ளை பாதிக்கப்படலாம். அந்த வகையில் பெரும்
பொருட்செலவு
ஏற்படலாம்.சூரியனைப் பார்த்தால் சீறிப் பொங்கி ருத்ர தாண்டவம் ஆடுகின்ற ஒன்றாகத்
தோன்றவில்லை. ஆனால் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன் ஆட்டம் போடுகிறது.
சூரியனில்
தோன்றும் கரும் புள்ளிகளே இதற்குக் காரணம். சூரியனின் ஒளித்தட்டில்
அவ்வப்போது கரும்புள்ளிகள் (Sun Spots) தோன்றுகின்றன. இந்தக்
கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது
கிடையாது. சூரியனில் கரும்புள்ளிகளே இல்லாத கட்டமும் உண்டு. எனினும்
கரும்புள்ளிகள் தென்பட ஆரம்பித்ததும் அது படிப்படியாக அதிகரிக்கும். சுமார்
ஐந்தரை ஆண்டுகளுக்குப்
பிறகு இந்தக் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டும். பிறகு
அவற்றின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். சுமார் ஐந்தரை
ஆண்டுகளுக்குப் பிறகு
கரும்புள்ளிகள் அனைத்தும் அனேகமாக மறைந்து விடும். கரும்புள்ளிகளே இல்லாத
கட்டத்தில் தொடங்கி மறுபடி கரும்புள்ளிகளே இல்லாத கட்டம் தோன்றுவதற்கு 11
ஆண்டுகள்
ஆகிவிடும். இதைக் கரும்புள்ளிக் காலவட்டம் (Sun Spot cycle) என்று
கூறுகிறார்கள்.
சூரியன் மிகப் பிரகாசமாக இருப்பதால் சூரியனின் முகத்தில் உள்ள
கரும்புள்ளிகள் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் விசேஷ கருவிகளைக் கொண்டு
பார்த்தால் சூரிய ஒளித்தட்டில்
கரும்புள்ளிகளைக் காண முடியும். (வெறும் கண்ணால் சூரியனைக் காண முற்படக்
கூடாது. கண்பார்வை போய்விடும்). சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகள்
உண்மையில்
கரும்புள்ளிகளே அல்ல. சூரியனின் மேற்பரப்பில் சில இடங்களில் வெப்பம்
குறைந்த பகுதிகள் தோன்றும். மற்ற இடங்களுடன் ஒப்பிட்டால் இந்த இடங்களில்
வெப்பம் குறைவு என்பதால்
இவை கரும்புள்ளிகளாகக் காட்சி அளிக்கின்றன. சூரியனில் ஏற்படும் ஒரு
கரும்புள்ளி என்பது சில பூமிகளைப் போட்டு நிரப்பி விடலாம் என்ற அளவுக்குப்
பெரியதாக இருக்கும். சூரியனில் இப்போது கரும்புள்ளி ளின் எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது. இந்த
ஆண்டு ஜனவரியில் இவற்றின் எண்ணிக்கை 58 ஆக இருந்தது. அடுத்த ஆண்டில்
கரும்புள்ளிகளின்
எண்ணிக்கை உச்சத்தை எட்டலாம். அப்போது கரும்புள்ளிகளின் எண்ணிக்கை 200 ஆகக்
கூட இருக்கலாம்.இப்போதைய காலவட்டத்தில் அதாவது 2008 ஜனவரியில் 4 கரும்புள்ளிகளே இருந்தன. அதன் பிறகுதான் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தன.சூரியனில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கும்போதுதான் சூரியனில் சீற்றம்
தோன்றுகிறது. இப்படிச் சீற்றம் ஏற்படும் காலத்தில்தான் சூரியனிலிருந்து
ஆபத்தான துகள் முகில்
தூக்கி எறியப்படுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் உச்சத்தில் இருக்கும்போது
ஒரு நாளில் மூன்று துகள் முகில்கள் அதாவது சூரியப் புயல்கள்
தோன்றக்கூடும். ஆனால் இவை எல்லாமே
கடும் ஆபத்தை உண்டாக்கக் கூடியவை என்று சொல்ல முடியாது. தவிர,
சூரியனிலிருந்து புறப்படும் துகள் முகில் ஒவ்வொரு தடவையும் பூமியை
நோக்கித்தான் வரவேண்டும் என்ற
அவசியம் இல்லை. அது வேறு திசையிலும் செல்வதாக இருக்கலாம்.
சூரியனிலிருந்து கிளம்பும் துகள் முகில் பூமியை வந்தடைய மூன்று முதல்
நான்கு நாள்கள் ஆகலாம். சூரியனில் என்ன நிகழ்கிறது என்று கவனிப்பதற்காகவே
செயற்கைக்கோள்கள்
உள்ளன. அவை உடனே தகவல் தெரிவிப்பதுடன் சூரியனைத் தொடர்ந்து படம் பிடித்து
அனுப்பிக்கொண்டிருக்கின்றன. செயற்கைக்கோளிலிருந்து வரும் தகவல்கள்
கிட்டத்தட்ட ஒளி
வேகத்தில் வருவதால் நிபுணர்களுக்கு துகள் முகில்கள் பற்றி முன்கூட்டித்
தகவல் தெரிந்து விடுகிறது.சூரியனிலிருந்து வெளிப்படும் ‘சூரியக் காற்று’ மற்றும் ஆபத்தான துகள்
முகில் ஆகியவற்றை பூமியைச் சுற்றி அரண் போல அமைந்துள்ள காந்தமண்டலம்
தடுத்து விடுகிறது.
அப்படியும் கூட துணை விளைவுகளால் பாதிப்புகள் உண்டு. அதாவது
வான்மண்டலத்தில் மிக உயரத்தில் கூடுதல் கதிர்வீச்சு ஏற்படும். குறிப்பாக
துருவப் பகுதியில் இது அதிக அளவில்
இருக்கும். ஆகவேதான் துகள் முகில் தாக்குதல் பற்றிய அறிவிப்பு வந்ததும் பல
விமானங்கள் பாதையை மாற்றுகின்றன். இவை வழக்கமாக அமெரிக்காவிலிருந்து வட
துருவம் வழியே
ஹாங்காங் செல்பவை. துகள் முகில் தாக்குதலால் துருவப் பகுதிகளுக்கு மேலே
உள்ள பகுதியில் விமானங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் இடையிலான தகவல்
போக்குவரத்து
பாதிக்கப்படும் ஆபத்து உண்டு. ஆகவே தான் விமானங்களின் பாதைகள்
மாற்றப்படுகின்றன.பயங்கர மின்னல் தாக்கினால் என்ன ஏற்படுமோ அந்த மாதிரி விளைவை சூரியப் புயல்
உண்டாக்குகிறது. எனவே பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களின் கருவிகள்
செயல்படாமல்
போகலாம். உதாரணமாக 1997-ம் ஆண்டில் டெல்ஸ் டார் 401 என்ற செயற்கைக்கோள்
அடியோடு செயல்படாமல் போனது. தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக செயல்படாமல் போன
செயற்கைக்கோள்கள் பல உண்டு. டிவி ஒளிபரப்பு முதல் பங்கு மார்க்கெட்
பேரங்கள் வரை பலவற்றுக்கும் நாம் செயற்கைக்கோள்களை நம்பியிருக்கிறோம்.
ஒருசமயம் சூரியப் புயலினால்
ஒரு செயற்கைக்கோள் பாதிக்கப்பட்ட போது அமெரிக்காவில் ஏ.டி.எம். சேவையும்
பாதிக்கப்பட்டது.உலகில் பல்வேறு இடங்களில் மின்சார சப்ளை கேபிள்கள், டிரான்ஸ்பார்மர்கள்
பாதிக்கப்படலாம். 1989-ம் ஆண்டு மார்ச் மாதம் கனடாவில் மின்சார சப்ளை
பாதிக்கப்பட்டு 60 லட்சம்
மக்களுக்குப் பல மணி நேரம் மின் சப்ளை கிடைக்காமல் போவிட்டது.
ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு எரிவாயு, பெட்ரோலிய குரூட்
எண்ணெய் ஆகியவற்றை
அனுப்புவதற்காகத் தரை வழியே அமைக்கப்பட்ட நீண்ட தூரக் குழாய்களில்
மின்சாரம் பாய்ந்து அவை பாதிக்கப்பட்டது. அதே ஆண்டு ஜுன் மாதம் ரஷியாவில்
எண்ணெய்க் குழாய்
வெடித்தது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
பூமிக்கு மேலே சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம்
உள்ளது. பூமியை ஓயாது சுற்றிக்கொண்டிருக்கும் இந்த சர்வதேச நிலையத்தில்
எப்போதும்
ஆறு விண்வெளி வீரர்கள் உள்ளனர். துகள் முகில் இந்த நிலையத்தைத் தாக்கினால்
விண்வெளி வீரர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம். ஆகவே துகள் முகில்
எச்சரிக்கை
விடப்பட்டால் இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பான அறைக்குள்
ஒளிந்துகொள்வர். அடுத்த ஆண்டில் சூரியனில் கரும் புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டிய
பிறகு அவற்றின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து சூரியனில்
சீற்றம் குறையும்
போது நாம் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.
இன்று
ReplyDeleteவிஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2
"அந்த விண்வெளி வீரர்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது !"
ReplyDelete