Search This Blog

Sunday, May 27, 2012

ஐ.பி.எல். ஹீரோக்கள்!

ஐ.பி.எல்., இந்திய உள்ளூர்ப் போட்டி என்று சொல்லப்பட்டாலும், உலகக்கோப்பைக்கு நிகராக அந்தஸ்து பெற்றதற்கு முக்கிய காரணம், ரசிகர்கள். சென்னையிலும் பெங்களூருவிலும் எழுநூறு, ஆயிரம் ரூபாய் இல்லாமல் மேட்ச் பார்க்க முடியாது. ஆனாலும், அங்கெல்லாம்கூட ஒரு மேட்சிலும் மைதானம் காலி இல்லை. ஐ.பி.எல். சர்ச்சைகள், டி.வி. சேனல்களுக்கு சரியான தீனி அளித்தபோதும், ரசிகர்கள் கிரிக்கெட்டைத் தவிர மற்றவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த ஐ.பி.எல்.-ன் உண் மையான ஹீரோ, ரசிகர்கள்தான். இருந்தாலும் மைதானத்தில் ஹீரோவாக ஜொலித்தவர்கள் யார்?

க்ரிஸ் கெல் :

கெல் இல்லாத ஐ.பி.எல்.-ஐ நினைத்துப் பார்க்க முடியாது. ஒரு மனிதனால் இவ்வளவு லகுவாக சிக்ஸர்கள் அடிக்கமுடியுமா? இதிலுள்ள பெரிய வினோதம் என்ன தெரியுமா? 2011 ஐ.பி.எல். ஏலத்தில் கெலை எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை. ஏலத்தில் கெலை இரண்டே கால் கோடிக்குக்கூட வாங்க யாருமில்லாத நிலையில், டெரிக் நானஸ் காயத்தில் அடிபட்டபோது, டக்கென்று கெலைத் தம் பக்கம் இழுத்துக்கொண்டது பெங்களூரு.  கிட்டத்தட்ட காய்கறிக் கடையில் கொத்தமல்லி, கருவேப்பிலையை இலவசமாக வாங்குவதுபோல வெறும் 3 கோடி ரூபாய்க்கு கெலை வாங்கியது பெங்களூரு. (மும்பை, தினேஷ் கார்த்திக்குக்கு 11 கோடியும், பெங்களூரு, சோரூப் திவாரிக்கு 8.80 கோடியையும் அளித்ததோடு கெலின் ஏலத்தொகையை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்). கெல், இந்தத் தொகைக்கு ஒப்புக்கொள்ளாமல் ஏலத்துக்குச் சென்றிருந்தால் நிச்சயம் 11 கோடிவரை சம்பாதித்து டை பிரேக்கர் வழியாக வேறொரு அணிக்குப் போயிருக்கமுடியும். ஆனால், பெங்களூரு அணிக்கு விசுவாசமாக இருந்துவிட்டார் கெல். 

அஜிங்க்யா ரெஹானே:

ஓபனிங் பேட்ஸ்மேன்களில் சச்சின், ஷேவாக்குக்குப் பிறகு யார் என்பதற்கு விடை கிடைத்துவிட்டது. கம்பீருக்குத் தோள் கொடுக்கத் தயாராகிவிட்டார் அஜிங்க்யா ரெஹானே. ஆஸ்திரேலியா முத்தரப்புப் போட்டியில் ரெஹானாவுக்கு இடம் கிடைக்காதபோது எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆனால், அவமானத்தையே உரமாகக் கொண்டு ஐ.பி.எல்.-லில் ஜமாத்துவிட்டார். கோலி, ரைனா, ரோஹித் சர்மா, ரெஹானே என்றொரு எதிர்கால வரிசை உருவாகிவிட்டது. இவர் ஏற்கெனவே இந்திய அணியில் இடம் பிடித்துவிட்டாலும் நிரந்தரமான ஓர் இடம் இல்லை. இந்த ஐ.பி.எல்., ரெஹானேவின் முழுத் திறமையும் காண்பித்து, புதிய தலைமுறையின் அடையாளமாக மாற்றியிருக்கிறது.

மார்னே மார்கல்:

ஓர் அற்புதமான ஓவரால் ஆட்டத்தின் போக்கையே மாற்றமுடியும் என்பதை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நிரூபித்தார் மார்கல். இரண்டு ஓவருக்கு 15 ரன்கள் தேவை என்கிற நிலையில் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து தில்லியின் வெற்றிக்கு வழிசெய்து கொடுத்தார் மார்கல். தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டீன், பிலாண்டருக்கு மத்தியில் கவனம் பெறாத மார்கல், இந்த ஐ.பி.எல்.-லை தன்வசமாக்கிக் கொண்டார். எம்.ஆர்.எஃப் பேஸ் ஃபவுண்டேஷன் போல எக்கச்சக்க வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ள தில்லி அணியில் மார்கல் தான் பெரிய அண்ணன். இளம் இந்திய வீரர்களுக்கு பல ஆலோசனைகள் சொல்லி ஊக்கப்படுத்தி வருகிறார் மார்கல். ஐ.பி.எல்.-ன் மகத்துவங்களில் இதுவும் ஒன்று. ஐ.பி.எல். இல்லாவிட்டால் மார்கல், இந்திய அணி வீரர்களுக்கு வித்தைகள் சொல்லிக்கொடுப்பதெல்லாம் சாத்தியமாகுமா?

நரைன்:

இந்த வருட ஐ.பி.எல்., மேற்கு இந்தியத் தீவு அணி வீரர்களுக்கானது. கெல், நரைன், பொலார்ட், ப்ராவோ, கூப்பர் என்று எல்லாமே.இ.வீரர்களும் ஜொலித்தார்கள். இத்தனை பேர்களில், நரைன் சென்ற வருட சேம்பியன் லீக்கிலேயே அதிரடியாகப் பேசப்பட்டவர். இவர் பந்தை யாராலும் தொடக்கூட முடியவில்லை. எந்தப் பயிற்சியாளரிடம் இத்தனை வித்தைகளைக் கற்றார் என்று தெரியவில்லை. ஆனால் நரைன், கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடிய அத்தனை தகுதிகளும் உள்ளவராக இருக்கிறார். 

ஒவ்வொரு வருட ஐ.பி.எல்.-லும் ஓர் இந்திய வீரருக்குத் திருப்புமுனையாக அமையும். தேசிய அணியில் இடம்பிடிக்க இதுவே முக்கிய காரணமாக அமைந்துவிடும். முதல் ஐ.பி.எல்.-லில் யூசுப் பதான், இரண்டாவது ஐ.பி.எல்.-லில் நெஹ்ரா , மூன்றாவது ஐ.பி.எல்.-லில் அஸ்வின், நான்காவது ஐ.பி.எல்.-லில் ராகுல் சர்மா என பல வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைவதற்கான கதவைத் திறந்தது, ஐ.பி.எல். இந்த வருடம் ரெஹானே தவிர சிகார் தவான், மந்தீப் சிங், பர்விந்தர் அவானா, டிண்டா போன்றோர் கவனம் பெற்றிருக்கிறார்கள்.   
 

No comments:

Post a Comment