Search This Blog

Thursday, May 10, 2012

தண்ணீரையும் விஷமாக்கிவிட்டோம்....


நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் நிலத்தடி நீர் விஷமாகிவருவதை நாடாளுமன்றத்திலேயே ஒப்புக்கொண்டு இருக்கிறது இந்திய அரசு. மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, நாட்டின் 385 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் மிகுந்து காணப்படுகிறது; 267 மாவட்டங்களில் ஃபுளோரைடு மிகுந்து காணப்படுகிறது; 158 மாவட்டங்களில் தண்ணீர் உப்பாக மாறிவருகிறது; 63 மாவட்டங்களில் துத்தநாகம், குரோமியம், காட்மியம் போன்ற உலோகங்கள் மிகுந்து காணப்படுகிறது.இது என்ன அவ்வளவு பெரிய செய்தியா? இவை எல்லாம் தண்ணீரில் மிகுந்து இருந்தால் என்னவாகும் என்று ஒருவேளை நீங்கள் கேட்டால், அதற்கான பதில்... ஆம்; முக்கியமான செய்திதான். எந்த அளவுக்கு முக்கியமானது என்றால், நீங்கள் உங்கள் உயிருக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறீர்களோ, அந்த அளவுக்கு.தண்ணீரை வெற்றுத் திரவமாக நாம் பார்த்தாலும், ஏராளமான காரணிகள் அதில் உண்டு. குறிப்பாக, இரும்பு, அமோனியம், மாங்கனீஸ், மெக்னீசியம், சல்பேட், சல்பைடு, தாமிரம், துத்தநாகம், குளோரைடு, ஃபுளோரைடு, பேரியம், கால்சியம், செலினியம் போன்ற வேதியியல் காரணிகள். இவை அந்தந்த மண்ணின் இயல்புக்கு ஏற்ப தண்ணீரில் கலந்து இருக்கும். தண்ணீரில் இந்த வேதியியல் காரணிகள் ஒரு குறிப்பிட்ட அளவு வரை இருக்கலாம். இதற்கென ஒரு வரையறை உண்டு.உதாரணமாக, ஒரு லிட்டர் தண்ணீரில், பாதரசம் 0.001 மில்லி கிராம் இருக்கலாம்; ஈயம் 0.1 மில்லி கிராம் இருக்கலாம். ஆனால், இந்த வரையரையைத் தாண்டும்போது, அந்தத் தண்ணீர் குடிக்கத் தகுதியற்றதாக மாறிவிடும். அதாவது, அந்தத் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகளைச் சிதைத்து, கொல்லும் விஷமாக மாறிவிடும். அப்படி விஷமாகிவருவதைத்தான் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறது அரசு.

தண்ணீர் நஞ்சான கதை

உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பகுதியை உள்ளடக்கிய இந்தியாவில், தண்ணீர் வளம் குறைவுதான். இந்தியா ஆண்டுக்கு 40 கோடி ஹெக்டேர் மீட்டர் தண்ணீரை மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவின் மூலம் பெறுகிறது. 18 கோடி ஹெக்டேர் மீட்டர் தண்ணீரை நதிகள் மூலமாகவும் 6.7 ஹெக்டேர் மீட்டர் தண்ணீரை நிலத்தடியில் இருந்தும் நாம் பெறுகிறோம். நிலத்தடி நீராதாரம் நமக்கு அரிதானது என்பதாலேயே, நம்முடைய பாரம்பரிய நீர்ப் பயன்பாடுகள் நீர்நிலைகளைப் பிரதானமாகக்கொண்டு அமைந்து இருந்தன. ஆனால், சுதந்திரத்துக்குப் பின் - குறிப்பாக தொழில் புரட்சி, பசுமைப் புரட்சிக்குப் பின் இந்தக் கதை மாறியது. நீர்நிலைகள் மூலமான நீர்ப் பயன்பாடு குறைந்து, நிலத்தடி நீர்ப் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. மக்களுக்கும் நீர்நிலைகளுக்குமான நேரடி உறவுச் சங்கிலி அறுந்துபோகத் தொடங்கியது. தண்ணீர் நஞ்சாக மாற இதுவே அடித்தளம்.இந்தியாவில் நிலத்தடி நீர் விஷமாக மூன்று முக்கியக் காரணங்கள்: வேளாண் துறை, தொழில் துறை, குப்பைகள் - கழிவுகள்!

விஷப் புரட்சி

நிலத்தடி நீர் விஷமாக வேளாண் துறையை முக்கியமான காரணமாகக் குறிப்பிடுவது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. பல லட்சம் கோடிகளைச் செலவழித்தும் அரசின் தவறான கொள்கைகளால், இந்தியாவில் வெறும் 15 சதவிகித நிலங்கள் மட்டுமே கால்வாய்ப் பாசன வசதியைப் பெற்று இருக்கின்றன. அதே சமயம், பசுமைப் புரட்சிக்குப் பிறகு, கிணற்றுப் பாசனம், ஆழ்குழாய்க் கிணற்றுப் பாசனம் என்று விவசாயிகளைத் தவறாக வழிநடத்தி, நிலத்தடி நீர்ப் பாசனத்தை ஊக்குவித்து, பாசனத்தில் தன்னுடைய பொறுப்பில் இருந்து தப்பிக்க ஆரம்பித்தது அரசு. விளைவு... இன்றைக்கு 50 சதவிகித நிலங்கள் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் பாசன வசதி பெறுபவை. மொத்த நிலத்தடி நீர்ப் பயன்பாட்டில், 75 சதவிகிதம் விவசாயத் துக்குச் செல்கிறது. கால்வாய்ப் பாசனம் மூலம் நீர் பெறும் நிலங்கள் மேலும் மேலும் குறைந்துகொண்டே இருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 35 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் கால்வாய்ப் பாசனத்தில் இருந்து ஆழ்குழாய்க் கிணற்றுப் பாசனத்துக்கு மாறி இருக்கின்றன. இந்த அதீதப் பயன்பாடு நிலத்தடி நீர்மட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்த்தது (தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கியில் 1,000 அடி ஆழத்துக்குத் தண்ணீர் சென்றுவிட்டதாகச் சொல்கி றார்கள் விவசாயிகள்). இப்படி, தண்ணீர் ஆழத்துக்குச் செல்லச் செல்ல, அதில் உப்பு நீர் சேர்கிறது. ஆழத்தில் உள்ள வேதியியல் காரணிகளின் இயல்புக்கு ஏற்ப தண்ணீரின் இயல்பும் மாறுகிறது. இது ஒருபுறம். இன்னொருபுறம், அதீதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு. வயல்களில் கொட்டப்படும் பல்லாயிரக்கணக்கான டன் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் மண்ணில் ஊடுருவி நீரை நஞ்சாக்குக்கின்றன. நீர்வளத் துறை அறிக்கையில், அதிர்ச்சி அளிக்கக்கூடிய இன்னொரு விஷயம், மாநகரங்களுக்கு இணையாக கிராமப் பகுதிகளிலும் நிலத்தடி நீர் நஞ்சாகிவருவது!



கண்காணிப்பின்மையின் விலை

ஒரு நாடு தொழில் வளர்ச்சிக்கு ஆசைப்படுவது தவறு இல்லை. ஆனால், நாட்டைத் தொழிலதிபர்களுக்கு அப்படியே திறந்துவிட்டால் என்னவாகும்? அதன் கொடூர விளைவுகளைத்தான் நாம் இப்போது எதிர்கொள்கிறோம். தொழிற்சாலைகள் எங்கெல்லாம் மிகுந்து இருக்கின்றனவோ, அங்கெல்லாம் நீர் நஞ்சாகி இருக்கிறது. (அம்பத்தூர் நினைவுக்கு வருகிறதா?) தொழிற்சாலைகள் மூலமான பாதிப்பு இரு வகைகளில் நடக்கிறது. ஒன்று, நதிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதன் மூலம் நதி நீரும் நஞ்சாகி, மண்ணிலும் அது ஊடுருவுவது. இன்னொன்று, ஆலை அமைந்து இருக்கும் பகுதியைச் சுற்றி நிலத்தடி நீர் நஞ்சாவது. தொழிற்துறையினரின் அதீதமான, கட்டுப்பாடற்ற செயல்பாடும் அரசின் கண்காணிப்பின்மையும் நீரில் நஞ்சாக மாறுகின்றன!

கழிவுக் கலாசாரம்

இவை தவிர்த்து குப்பை - கழிவு மேலாண்மையில் நாம் காட்டும்  அலட்சியத்துக்கு நீரை விஷமாக்குவதில் முக்கியப் பங்கு உண்டு. ஒவ்வொரு நாளும் இந்தியா லட்சக்கணக்கான டன் குப்பைகளையும் கழிவுகளையும் உற்பத்தி செய்கிறது (டெல்லியில் மட்டும் 8,000 டன் குப்பைகள் உற்பத்தியாவதும் அவற்றைப் பொறுக்க 3.5 லட்சம் பேர் இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?) தவிர, 105 நாடுகள் இந்தியா வைக் குப்பைத் தொட்டியாகப் பயன் படுத்துகின்றன. குஜராத்தின் புமோபோ கோலா, குப்பை இறக்குமதித் துறை முகமாகவே மாறிவிட்டது. தண்ணீரை நஞ்சாக்குவதில் ரசாயனக் குப்பைகளுக்கு - குறிப்பாக மின்னணுக் குப்பைகள், மருத்துவக் கழிவுகளுக்கு - முக்கியப் பங்கு உண்டு. எந்தப் பொறுப்பும் இல்லாமல், பழத் தோலில் இருந்து செல்பேசி ரேடியம் பேட்டரிகள் வரை பாலிதீன் பையில் திணித்து குப்பைத் தொட்டியில் வீசும் கலாசாரம் நீரில் நஞ்சாகப் பிரதிபலிக் கிறது!

உள்ளாட்சிகளின் உபயம்

இப்படி நஞ்சாகி வெளியே வரும் நீரை விநியோகிக்கும்போது, 'எங்களால் இயன்ற உபயம்’ என்று உள்ளாட்சி அமைப்புகளும் கிருமிகளைச் சேர்க்கின்றன. சென்னை மாநகராட்சியில் விநியோகிக்கப்படும் குடிநீர் பல இடங்களில் குடிக்கத் தகுதியற்ற தாக (சாக்கடைக் கழிவுகளும் தொற்றுநோய்க் கிருமிகளும் நிரம்பியதாக) இருப்ப தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட ஒரு மனு அம்பலமாக்கி இருப்பது ஓர் உதாரணம். 2007 முதல் மேற்கொள்ளப்பட்ட சுமார் 440 குடிநீர்ப் பரிசோதனைகளில், சென்னைக் குழாய்களில் இருந்து வரும் தண்ணீர் குடிக்கத் தகுதியற்றதாக இருந்ததாகச் சொல்லி இருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். சுமார் 2,930 கி.மீ. நீளம்கொண்ட சென்னைக் குடிநீர்க் குழாய்களின் சராசரி வயது 50 என்பதும் 166 கி.மீ. அளவுக்குக் குழாய்கள் உடைந்து சீர் செய்யும் நிலையில் இருக்கின்றன என்பதும் சுகாதாரம் இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது என்பதைச் சொல்லும்.

சுத்திகரிப்பா, ஹி...ஹி...

இந்தப் பிரச்னைகளில் இருந்தெல்லாம் தப்பித்துக்கொள்ள சுத்திகரிக்கப்பட்ட நீர் ஒரு நல்ல தீர்வு என்று நீங்கள் நம்பினால், நீங்கள் உங்களையே ஏமாற்றிக்கொள் கிறீர்கள் என்று அர்த்தம். பாட்டில்களிலும் கேன்களிலும் அடைத்து விற்கப்படும் தண்ணீரிலும் பெருமளவு கிருமிகள் இருப்பதைக் கண்டறிந்து இருக்கிறது இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம். தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உற்பத்தித் துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு இருக்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் 6 லட்சம் 20 லிட்டர் கேன்கள்; 25 லட்சம் 1 லிட்டர் 2 லிட்டர் பாட்டில்கள்; 20 லட்சம் 250 மி.லி. பாக்கெட்டுகள் தண்ணீர் விற்பனையாகிறது. இவ்வளவு பெரிய துறையைக் கண்காணிக்க என்று ஒரு வலுவான அமைப்பு நம்மிடம் இல்லை. ஆகையால், அவர்கள் வைத்ததுதான் 'சுத்தம்’.இதேபோல, நீரைச் சுத்தப்படுத்த ஒரே விதமான சுத்திகரிப்பு அமைப்பு போதுமானது அல்ல; அது நீரின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக, அதீத உப்பைச் சுத்திகரிக்க 'ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ்’ அமைப்பு தேவைப்படும். அதீத இரும்பைச் சுத்திகரிக்க 'அயர்ன் ரிமூவர்’ அமைப்பு தேவைப்படும். ஆக, ஒரே ஓர் அமைப்பைக்கொண்டு, சுத்திகரித்த தண்ணீரை அருந்தலாம் என்று நினைப்பதும் கண் துடைப்புதான்.இந்தச் சுத்திகரிப்பு அமைப்புகளை எல்லாம் நம்புவதற்கு, தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து பானையில் ஊற்றிவைத்து அருந்தும் பழைய முறை மேலானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால், இவை எல்லாம் தற்காலிகத் தீர்வுகள்தான். விஷமாகும் நீரின் இயல்பை மாற்ற நாம் அடிப்படையையே மாற்ற வேண்டும்.சுகாதாரமற்ற நீரால் உலகில் ஒவ்வோர் ஆண்டும் 50 லட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள்; இந்தியாவின் பெரும்பாலான மரணங்கள் தொற்றாநோய்கள் எனப்படும் புற்றுநோய், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, இதய நோய் உள்ளிட்டவற்றால் நிகழ்கின்றன என்ற செய்திகளின் பின்னணியில், நிலத்தடி நீரைப் பொதுச் சொத்தாக மாற்ற வேண்டும் என்ற நம்முடைய பிரதமரின் சமீபத்திய அறைகூவலை நினைத்துப்பாருங்கள்... கூசவில்லை?

சமஸ்
விகடன்     
  

1 comment:

  1. அருமையான தகவல் நண்பா ஒவ்வொரு இந்தியனும் யோசித்து செயல்பட வேண்டியது

    ReplyDelete