Search This Blog

Friday, May 18, 2012

ஜகம் நீ... அகம் நீ..! - 7


வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோயில் அழகுறத் திகழ்கிறது. இது வியாச முனிவர் வழிபட்ட ஆலயம். இங்கே நுழைவாயில் அருகில் கொட்டகை போட்டுத் தங்கியிருந்தாராம் மகாபெரியவா. ''முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, மைசூர் மகாராஜா ஜெயசாமராஜ உடையார் எல்லாம் வந்து மகாபெரியவாளைத் தரிசித்து உரையாடியது இங்கேதான்'' என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் வைத்தியநாதன். உள்ளே நுழைந்து வணங்கி வழிபடுகிறோம் ஸ்ரீவியாச சாந்தாலீஸ்வரரை.''இன்னிக்கு பிரதோஷம். நிறைய கூட்டம் வரும்'' என்றார் ஆலய குருக்கள். உடனே, ''அடடே... அப்படியானால் இன்னிக்கு பிரசாதம் கொடுத்தால் பெரியவா ஆசீர்வாதம் எல்லாருக்கும் கிடைக்கும்னு சொல்லுங்க'' என்ற வைத்தியநாதன், சங்கரபக்த ஜன சபை சார்பாக பிரதோஷம்தோறும் பிரசாதம் வழங்க, குருக்களிடம் ஏற்பாடுகள் செய்யச் சொன்னார். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே வல்லபாசார்யர் என்னும் குஜராத்திய ஞானியின் மடமும் உள்ளது.'மிக நன்று! மகாசீலர்கள் பாதம் பதிந்த மண்ணைத் தரிசிக்கும் புண்ணியம் நமக்கும் வாய்த்ததே’ என உள்ளுக்குள் உவகை பொங்க, சின்னகாஞ்சிபுரத்துக்கு நடக்க ஆரம்பித்தோம்.சின்னகாஞ்சிபுரத்தில் மிக அற்புதமாய் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபுண்ணியகோடீசுவரர். கோயில் சிறியதுதான் என்றாலும், திருப்பெயருக்கு ஏற்ப புண்ணியம் கோடி தருவதில் கீர்த்தியானவர் இந்த ஸ்வாமி என விளக்கிச் சொன்னார் வைத்தியநாதன். அவரைத் தரிசித்து முடித்து, வேகவதி நதிக்கரையில் எழுந்தருளும் ஸ்ரீவேகவதீஸ்வரரைத் தரிசிக்கச் சென்றோம். இங்கேயும் மகா பெரியவா தங்கியிருந்தாராம்.

மகா பெரியவா, மடத்தில் இருக்காமல் இப்படிக் கோயில்களில் வந்து தங்கியிருக்க விரும்பியது ஏனாம்?!'ஒரு விஷயம் அவர் மனசுல பட்டதுன்னா பட்டதுதான். எப்பவும் பகவான் பக்கத்துலேயே இருக்கணும்னு நினைச்சிருக்கலாம். ஆனால், இதுபற்றி யாரும் அவரிடம் கேட்டதில்லை. ஒரு கோயில்ல சில நாள் இருக்கணும்னு அவருக்கு தோணித்துன்னா, அங்கே தங்கிடுவார். ஒருவேளை... இந்த மாதிரியான சின்ன சின்ன கோயில்களுக்கும் ஜனங்கள் திரளா வந்து வழிபடணும்னு அவர் நினைச்சிருக்கலாம். இன்னிக்கு அது நடக்குது இல்லையா?! மகாபெரியவா தங்கியிருந்த கோயில்... அவர் வழிபட்ட தலம்னு எவ்வளவோ பேர் தரிசிக்க வருகிறார்கள் இல்லையா?'' என விளக்கம் தருகிறார் வைத்தியநாதன்.அவர் சொல்வதும் வாஸ்தவம்தான். பெரியவா தங்கியிருந்தார் என்றால், அதற்கு விசேஷம் ஏதாவது நிச்சயம் இருந்திருக்கும் என்று நம்பிக்கையோடு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நிறையவே இருக்கிறார்கள். மகாபெரியவா மக்களைச் சந்திக்கும் பொருட்டு ஒவ்வோர் இடமாகத் தேடிப் போய் அமர்ந்து அருள்பாலித்தது ஒருபுறம் இருக்க, புராதனமான கோயில்கள் மக்களின் புழக்கம் இல்லாமல் போய்விடக்கூடாது என்ற அவருடைய அக்கறையும் இதில் வெளிப்படுகிறது.சேஷாத்திரி மடத்துக்கு வந்தோம். இங்கே மடத்தின் பின்னே மகாபெரியவா தங்கியிருந்த இடம், எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. ஒரு வில்வமரத்துடன் திகழும் தோட்டம் போன்ற அந்த இடத்தில், பெரியவா விஸ்ராந்தியாக இருப்பாராம். மடத்தின் பக்கத்திலேயே மகாபெரியவாளுக்கு கனகாபிஷேகம் நடந்த வீடு உள்ளது.அந்த வீட்டின் முன்பகுதியில் உள்ள இடத்திலேயே கனகாபிஷேக வைபவமும் அதையட்டிய விசேஷங்களும் நிகழ்ந்தனவாம். தெரு முழுக்க ஜனக்கூட்டம் திரண்டு நின்று, மகாபெரியவாளின் கனகாபிஷேகத்தை தரிசித்து மகிழ்ந்தார்களாம். அன்று மணக்கால் நாராயண சாஸ்திரிகள், எசையனூர் சுப்பிரமணிய கனபாடிகள், அப்பாகுட்டி சாஸ்திரிகள் முதலானோரும் மகாபெரியவாளுடன் இருந்தார்களாம்.

முன்பு காஞ்சி சங்கர மடம் இருந்த இடத்தையும் காண்பித்த வைத்தியநாதன், 'இப்போ இருக்கிற இடத்துக்கு வருவதற்கு முன்னாடி சங்கர மடம் இங்கேதான் இருந்தது. இப்ப இங்கே வேத பாடசாலை செயல்படுது'' என்கிறார். மடம் இருந்த இடம் என்பதால் தெய்வீகமாகத் திகழ்கிறது சூழல். அங்கிருந்து ஓரிக்கை கிராமத்துக்குச் சென்றோம். பாலாற்றங்கரையில் இருக்கும் அழகிய கிராமம் அது.'மகா பெரியவா அடிக்கடி இங்கே வருவார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மட்டப்பாறை வெங்கட் ராமய்யரின் சம்பந்தி வெங்கட கிருஷ்ணய்யர் வீட்டில் பலமுறை தங்கியிருக்கார். அவங்க குடும்பத்தை, 'என் மன்றம் குடும்பம்’னு சொல்லுவாங்க. பெரியவா இங்கே மூன்று முறை வியாச பூஜை பண்ணியிருக்கார்...'' என வைத்தியநாதன் விவரித்தபடி வர, பெரியவா தங்கியிருந்த அந்த வீட்டை அடைந்தோம்.அந்த வீட்டில்... கோட்டை அடுப்பு வைத்தது, பக்கத்து அறையில் சுவாஸினி பூஜை பண்ணினது, பி¬க்ஷ வாங்கிக் கொள்ளும் ரூம், சந்திரமௌலீசுவரர் பூஜை பண்ணின இடம், வருபவர்களிடம் எல்லாம் உட்கார்ந்து விசாரிக்கும் திண்ணை என்று எல்லா இடங்களையும் காட்டினார் அந்தக் குடும்பத்தின் மருமகள் சசிரேகா.தொடர்ந்து பேசிய வைத்தியநாதன், ஓரிக்கை கிராமத்து பாலாற்றங்கரையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை விவரித்தார்:''விழுப்புரத்தில் சிறுவயதில் மகாபெரியவாளுடன் படித்த முஸ்லிம் நண்பர் ஒருவர், தன்னுடன் படித்தவரே இப்போதைய சங்கராச்சார்யார் என்று தெரிந்துகொண்டதும், அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தேனம்பாக்கம் வந்தார். 'பெரியவா பாலாற்றங்கரையில் இருக்கிறார்’ என்றதும் நேராக ஓரிக்கை- பாலாற்றங்கரைக்கே வந்துவிட்டார். வெகுநேரம் பழங்கதைகளை எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரும். புறப்படும்போது அந்த முஸ்லிம் நண்பர், 'நீங்க இப்போ பெரிய மகான். ஜனங்கள் எல்லோரும் உங்களை வந்து பார்த்து வாழ்த்து வாங்கிட்டுப் போறாங்க. உங்களைப் பார்த்ததன் ஞாபகமாக எனக்கும் நீங்கள் ஏதாவது தர வேண்டும். அதை நான் பத்திரமா வெச்சுக்குவேன்’ என்றார்.

பெரியவா சிரிச்சுட்டார். 'என்னைப் பார்த்தாய் அல்லவா?  நான் ஒரு சந்நியாசி.  என்கிட்டே என்ன இருக்கு?  உனக்கு நான் என்ன தர முடியும்? இந்தக் காஷாய வஸ்திரம் ஒண்ணுதான் எங்கிட்டே இப்போ இருக்கு!’ என்றார். உடனே அந்த நண்பர், 'சரி, அதில் ஒரு சிறு துண்டைத் தாருங்கள். போதும்’ என்றார். சட்டென்று தம்முடைய காவி வஸ்திரத்திலிருந்து ஒரு சின்ன துண்டைக் கிழித்து, தன் பால்யகால சிநேகிதனுக்குக் கொடுத்தார் மகாபெரியவா.அதைப் பெற்றுக்கொண்டபோது... அந்த முஸ்லிம் நண்பர் அடைந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை கிடையாது!

No comments:

Post a Comment