Search This Blog

Tuesday, August 23, 2011

ஆகஸ்ட் 23.. அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினம்!

அடிமை வியாபாரத்தையும், அது ஒழிந்த விதத்தையும் நினைவுப்படுத்தும் சர்வதேச தினம் தான், 'அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினம்' (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition).

மனித இன வரலாற்றில் அடிமை வியாபார முறையையும், அதனை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீவிர  நடவடிக்கைகளை யாரும் அவ்வளவு சுலபமாக மறகக் முடியாது.  சர்வதேச அளவில் அடிமை வியாபாரத்தைப் பற்றியும், அதனை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் நினைவூட்டும் தினமான இது கடந்த  1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1998-ல் ஹைத்தி நாட்டிலும், 1999-ல் செனகல் நாட்டிலும் இந்தத் தினத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இந்தத் தேதியில் ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றன.

'அடிமை' வரலாறு..

கடந்த 1791, ஆகஸ்ட் 22-ம் தேதி இரவும் ஆகஸ்ட் 23ம் தேதியும் செயின்ட் டோமிங் (Island of Saint Domingue) என்கிற நாட்டில் (தற்போதைய ஹைத்தி நாடு) அடிமை வியாபாரத்துக்கு எதிரான கிளர்ச்சி ஏற்பட்டது. இது கலவரமாக உருவெடுத்தது. இதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் இனியும் தொடரக் கூடாது என்பதை  நினைவுகூரும் விதமாகவே இந்தத் தினம் உருவானது. அடிமை முறை என்பது உங்களின் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும். நம் ஊர்களில் கூட செங்கல் தயாரிப்பு சூளைகள் போன்றவற்றில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக குறைந்த கூலிக்கு வேலை வாங்குவதாக அணமை ஆண்டுகளில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பொதுவாக, மற்ற மனிதர்களை அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் விலைக்கு வாங்கி அல்லது அடிமைப்படுத்து அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக வேலை வாங்கும் முறையை அடிமை முறை. 

விலை நிர்ணயம்...  

ஓர் அடிமையின் விலை என்பது  அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, பணிவு மற்றும் அடிமைத் தனத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. வசதி படைத்த கிரேக்கர்கள் பத்து, இருபது அடிமைகளை கூட வைத்திருக்கிறார்கள். கிரேக்க அடிமைகள் சொந்த பெயரை பயன்படுத்த முடியாது. ஏஜமானர்களே பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த மனிதாபிமானமற்ற அடிமை முறை வரலாற்றுக் காலம் முதல் பல நாடுகளில் நடைமுறையில் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் அடிமைகள் என்பவர்கள் மனிதநேயம் சிறிதும் இல்லாமல் அவர்களின் எஜமானர்களால் நடத்தப்பட்டனர். கிட்டத்தட்ட உணர்வு இல்லாத சடப்பொருள்களாகவே அடிமைகள் நடத்தப்பட்டிருக்கிறார்கள். பல நாடுகளில் பெண் 'செக்ஸ்' அடிமைகள் கூட இருந்திருக்கிறார்கள். அடிமைமுறையின் முக்கிய மூல காரணமாக, பணம், பொருள் மற்றும் பூமியின் மீதான ஆசை, மற்றவர்களை அடக்கி ஆளும் ஆதிக்க ஆசையே இருந்திருக்கிறது. 

  உலகில் உள்ள பெரிய மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் எல்லா இனங்களும் தங்களை விட கீழ் நிலையிலிருந்த இனத்தவர்களை கொடுமையான அடிமை முறை மூலம் கடுமையான வேலை வாங்கி இருக்கிறார்கள். அந்த அடிமைகளை அடித்து உடைத்து காயப்படுத்தி துன்புறுத்தி இருக்கிறார்கள். அதே நேரத்தில், அவர்களுக்கு சரியான உணவு, உடை, உறைவிடம் எதையும் வழங்காமலே இந்தக் கொடுமைகளை மேற்கொண்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. ஐரோப்பியர்கள், அடிமை முறையை ஓர் உற்பத்தி முறையாக உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாக மாற்றினார்கள். உலகிலிருந்த அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்பிடும் போது ஐரோப்பியர்களின் அடிமை முறை மிகவும் மோசமான முறையாக வர்ணிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக அடிமை முறை தொடர்ந்திருக்கிறது. அடிமை முறையால் சுமார் 6 கோடி ஆபிரிக்கர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பல கோடி அடிமைகள் சித்திரவதை, நோய், மன துயரத்தால் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். 

குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை..!


பழங்காலத்தில் இனங்கள் இடையே போர் ஏற்படும் போது, தோல்வி நாட்டின் மன்னர்கள், போர்வீரர்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாம் கூட அடிமைகளாக கருதப்பட்டனர். மெசபடோமியா கலாச்சார கால நீதிமுறைகளில் அடிமுறை முறை என்பது சமூக வழக்காக இருந்துள்ளது. பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது மற்றும் அவர்களை பாலியல் இச்சைக்கு உட்படுத்துவது பழங்காலத்திலிருந்து இன்று வரை அடிமைமுறையின் மோசமான நிகழ்வாக இருக்கிறது. அடிமைகளை கொண்டு கல் உடைத்தல், கட்டிடம் மற்றும் சுரங்க வேலை, பண்ணை வேலை, அரண்மணை வேலை போன்றவற்றில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் அரசர்கள் வீட்டு வேலை செய்ய பெரும்பாலும் அடிமைகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கல்வெட்டுகள் மூலம் அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது என தெரிய வந்திருக்கிறது. புராதன எகிப்தியர் போர்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப்படுத்தி இருக்கிறார்கள். அடிமைகள் முதலில் அரசர் குடும்பத்துக்கு சொந்தமாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசாக கொடுக்கலாம். இந்த அடிமைகளை கொண்டு கடுமையான மற்றும் மனிதர்கள் செய்ய கூசும் வேலைகளை வாங்கி இருக்கிறார்கள். யூத இனம், எகிப்து, கிரேக்கம், அரேபியா, சீனாவிலும் அடிமைமுறை பெரும்பங்கு வகித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் அடிமைகள் சந்தையில் விற்கப்பட்டனர். அடிமைக்குப் பிறந்தவர்களும் அடிமையே என்றாக்கி இருந்தனர். பழங்காலத்தில் ஏதென்ஸில் 21,000 மனிதர்களும் அவர்களுக்கு சேவை செய்ய 4,00,000 அடிமைகளும் இருந்திருக்கிறார்கள்.   

புராதன காலத்தில் அடிமை முறை காணப்பட்டதாக கூறப்படுகிறது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு பெயரில்லை, அவர்கள் திருமணம் கிடையாது. சொத்து இருந்தால் பறிமுதல் என பல கொடுமைகள் நடந்தேறி இருக்கின்றன.
 

சோழர் காலத்தில்..!

பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் பெரிய அளவில் இருந்ததாக தெரியவில்லை.  அதே நேரத்தில், தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. ராஜாக்களும், வசதி படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். அடிமைகள் மீது ஆடு, மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச் சின்னம், சிவன் கோவில் அடிமைகளுக்கு திரிசூலச் சின்னம், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னம் இடப்பட்டன. மத்திய காலத்தில் அடிமை வியாபாரம் புதுப் பரிமாணம் எடுத்தது. ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்திருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இரு இனங்களுக்கிடையே போர் ஏற்பட்டு அதில் வென்றவர்கள், தோல்வி அடைந்தவர்களை ஆபிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு அடிமையாக விற்றனர். அடிமை வியாபாரம் செய்து வந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு ஆசைப்பட்டு தன் இனத்தவர்களை பிடித்துக் கொடுத்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.

அடிமை வியாபாரம் நடத்த மேற்கு ஆபிரிக்கக் கடற்கரையோரங்களில் சில கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவர்கள் அமெரிக்க நிலச்சுவான்தார்களுக்கு விற்கப்பட்டனர். இப்படி அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் வெள்ளையர் நிலங்களில் சம்பளம் எதுவும் இல்லாமல் உழைத்து தங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபடாமலேயே வாழ்நாளை கழித்திருக்கிறார்கள். மதங்களும் மன்னர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18- ம் நூற்றாண்டின் பின் பகுதியில்தான் அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787-ல் ஆரம்பிக்கப்பட்ட 'அடிமை ஒழிப்பு குழுவின்" முதல் தலைவர்.

பிரெஞ்சு புரட்சியின் போது முதல் குடியரசு பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. மாவீரன் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன், அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19- ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அடிமைகளில் பலர் பலசாலிகளாக இருந்தனர். அவர்கள் கூடி பேச வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்தது. சிந்தனை மற்றும் கருத்து வெளியிடும் உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் ஹைத்தி நாட்டில் 1791, ஆகஸ்ட் ஆகஸ்ட் 23 ம் தேதி அடிமைகள் புரட்சி செய்தனர். ஐ.நாவின் நடவடிக்கையால் சிலி 1823-ல், ஸ்பெயின் 1837-ல், டொமினிகன்  குடியரசு 1844-ல், ஈகுவடார் 1854-ல், பிரேசில் 1888-ல் அடிமை முறையைத் தடை செய்தன. 

பராக் ஒபாமா..

அமெரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டவர்களின் பரம்பரையினரே இன்றைக்கு அவர்கள் அமெரிககவின் ஜனாபதி ஆப்பிரகாம் லிங்கன் முயற்சியால் அங்கு சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள் . கறுப்பினத்தவர்கள் வாக்குரிமை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ஒரு கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவை ஜனாதிபதியாகக் கூடிய அளவிற்கு கறுப்பினத்தவர்கள் முன்னேறி இருக்கிறார்கள். வெவ்வேறு வடிவங்களில் இன்றளவும் ஆங்காங்கே அடிமை முறை விரவிக் கிடக்கின்றன. இந்த இழிநிலைக்கு எதிராக, பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களைக் காத்த நேபாளத்தின் அனுராதா கொய்ராலா போன்ற சமகால சமூகப் போராளிகளும் தொடர்ந்து பாடுபட்டு வருவதும் கவனத்துக்குரியது.20ம் நூற்றாண்டில், ஐ.நா. சபை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்றவை, பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்கு பல சட்டங்களை இயற்றியுள்ளன. ஓரிரு நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாக தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அடிமை முறை பூரணமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட முடியாது. குறிப்பாக, ஏழை தொழிலாளர்கள், பணக்கார முதலாளிகளிடம் அடகு வைக்கப்படுவது இன்றும் நடக்கிறது. - இன்று உலகம் முழுக்க சுமார் 13 கோடி சிறுவர்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இது அடிமை முறையின் நவீன வடிவமாக இருக்கிறது. வீட்டு பணிப்பெண்களும் இதில்தான் அடக்கம்.   



சரவணன் 

விகடன்  



1 comment:

  1. நல்ல பதிவு. இது சம்பந்தமான புத்தகங்கள் கிடைக்குமா? விபரங்கள் இருந்தால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். நன்றி.
    rathnavel_n@yahoo.co.in
    rathnavel.natarajan@gmail.com
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

    ReplyDelete