Search This Blog

Sunday, August 14, 2011

ஃபிக்ஸட் டெபாசிட்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களை உயர்த்தியதால், ஒரு நல்ல விஷயமும் நடந்திருக் கிறது; ஒரு கெட்ட விஷயமும் நடந்திருக்கிறது. கெட்ட விஷயம், கடனுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்திவிட்டது. இதனால் வீட்டுக் கடன், கார் கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்பக் கட்ட தவிக்கும் நிலை. நல்ல விஷயம், ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் கணிசமாக உயர்ந்திருப்பது. முதலீட்டு விஷயங்களில் ரிஸ்க்கே எடுக்க விரும்பாதவர்கள் இந்த நல்ல செய்தியைக் கேட்டு சந்தோஷத்தின் எல்லைக்கே போயிருக்கிறார்கள்.  

'இந்த நேரத்தில் முதலீட்டாளர் கள் புதிதாக ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் போடலாமா? வட்டி தொடர்ந்து ஏறுமா அல்லது குறைந்துவிடுமா?’  


''மூத்த குடிமக்கள், பணி ஓய்வு காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு தற்போதைய நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு லாபகரமாக மாறி இருக்கிறது. பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் நிலையில், ஆர்.பி.ஐ. இன்னும் ஒரு சுற்று வட்டியை உயர்த்தவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி இன்னும்கூட கொஞ்சம் அதிகரிக்கலாம்.இப்படி ஒரு எதிர்பார்ப்பு பரவலாக இருப்பதால், மொத்த தொகையையும் ஒரே நேரத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிட வேண்டாம். பாதியை இப்போதும், இன்னொரு பாதியை ரிசர்வ் வங்கியின் அடுத்த நடவடிக்கை பற்றி தெரிந்துகொண்ட பிறகும் போடலாம்'' .


 ''வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கம்பெனிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிக வட்டி கிடைக்கும். அதேநேரத்தில், ரிஸ்க்கும் இருக்கிறது. வங்கி டெபாசிட்டை எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்து விட்டு பணத்தை திரும்பப் பெற முடியும். ஆனால், கம்பெனி டெபாசிட்டுகளில் பணத்தைப் பெற 10-15 நாட்களாகும். தவிர, கம்பெனி டெபாசிட்டுகளில் பணத்தைப் போடுவதற்கு முன் அந்த நிறுவனம் எப்படிப் பட்டது, என்ன மாதிரி தொழில் செய்கிறது, அந்த தொழிலுக்கு இப்போதுள்ள வாய்ப்பு என்ன, அந்த நிறுவனத்தின் தரக் குறியீடு எப்படி என்பதை எல்லாம் கவனிப்பது அவசியம். அந்த நிறுவனம் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு, ஆண்டு வருமானம் ஆகியவற்றைக் கவனித்த பின்னர் முதலீடு செய்வது நல்லது''.



கவனிக்க வேண்டிய விஷயங்கள்

வங்கிகளைப் பொறுத்தவரை, குறுகிய காலம் அல்லது நீண்ட காலம், இதில் எதற்கு பணம் தேவை என்பதைப் பொறுத்து வட்டியை நிர்ணயிக்கும். குறுகிய கால முதலீட்டுக்கு அதிக வட்டி கிடைக்கும்பட்சத்தில் அதில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். அல்லது கையிலிருக்கும் பணத்தை ஒரு வருடம், இரண்டு வருடம் மற்றும் மூன்று வருட முதிர்வு காலம் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களில் பிரித்து முதலீடு செய்வது சிறந்தது.ஃபிக்ஸட் டெபாசிட் விதிமுறைகளை கவனமாகப் படியுங்கள். குறிப்பாக, பணத்தை இடையில் எடுக்கும் போது ஏதாவது அபராதம் உண்டா என்பதையும் கவனியுங்கள். அபராதம் உண்டெனில் எவ்வளவு என்பதையும் கேட்டுக் கொள்ளுங்கள். அபராதம் விதிக்காத வங்கியை தேர்வு செய்வது நல்லது''.
''வங்கியில் டெபாசிட் கணக்கு தொடங்கும்போது வரி பிடித்தம் தொடர்பான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வட்டி பெறும் வாடிக்கையாளர் களுக்கு வங்கியே 10% டி.டி.எஸ். பிடித்தம் செய்துவிடும். வரி பிடிக்க வேண்டாம் என்றால் 15 ஜி (பொதுவானவர்களுக்கு), 15 ஹெச் (மூத்த குடிமக்களுக்கு) என்ற படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். கூடவே, பான் எண்ணையும் குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் 20% வரி பிடித்துவிடுவார்கள்.'' 

நன்றி : 

பத்மநாபன் 
திருவண்ணாமலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர்  

ராமகிருஷ்ணன் வி.நாயக்
பஜாஜ் கேபிட்டல் நிறுவனத்தின் தலைமை துணை தலைவர்  

விகடன் 



No comments:

Post a Comment