Search This Blog

Friday, August 12, 2011

தோனி 'ஊஊஊ'


இந்திய அணி வீரர்கள் டிரெண்ட் பிரிட்ஜ் ஆடுகளத்துக்குள் நுழைந்தபோது பால்கனியில் இருந்த இங்கிலாந்து வீரர்கள் கைதட்டினார்கள். இக்காட்சியை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்குப் புரியவில்லை. என்றாலும் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. ஆனால், மைதானத்தில் கடும்கோபத்தில் இருந்த ரசிகர்கள், உதடுகளைக் குவித்து ‘ஊஊஊ’ என்று ஊளையிட்டு தோனிக்குக் கண்டனத்தைத் தெரிவித்தார்கள். ஆனால், அடுத்த சில நொடிகளில் நடந்ததுதான் திருப்பம். தேநீர் இடைவேளையின்போது, அதிர்ச்சியுடன் மைதானத்தை விட்டு வெளியேறிய பெல் மீண்டும் சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கினார். தோனி அவரைத் திரும்ப அழைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்ட ரசிகர்கள், தோனிக்கும் இந்திய அணியினருக்கும் ‘ஸ்டாண்டிங் ஓவேஷன்’ அளித்தார்கள். அடுத்த நொடி முதல், தோனி செய்தது சரியா என்கிற பட்டிமன்றம் தொடங்கிவிட்டது.

நேர்மை என்றால் இனி ஹமாம் கிடையாது, தோனிதான் என்கிற அளவுக்கு தோனிக்குப் பலத்த பாராட்டுகள். கூடவே கடும் கண்டனங்களும். விதிமுறைப்படி பெல் அவுட். இதை ஏன் தோனி சிக்கலாக்க வேண்டும், பெல் நான்காவது ரன் எடுக்க முயற்சி செய்தது உண்மையே என்று தோனியின் முடிவை பலரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தான் ரன் அவுட் என்று தெரிந்ததும் பெல் அருமையாக நடித்து நிலைமையைத் தமக்குச் சாதகமாக்கிக்கொண்டார். ‘தோனி இடத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் முடிவை மாற்றியிருக்க மாட்டேன்’ என்று அடித்துக் கூறுகிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான். இன்னொன்றை இங்கே நினைவுகூர வேண்டும்.

2008-கொல்கத்தாவுக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில், ரன் அவுட் என்று நினைத்து பெவிலியனுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக அவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே மெல்ல க்ரீஸுக்கு வெளியே காலை வைத்த சுக்லாவை ரன் அவுட் செய்தார் தோனி. பெவிலியனுக்குச் செல்வது போல க்ரீஸுக்குள் நுழைந்த இஷாந்த் சர்மா அவுட் கிடையாது, சுக்லாதான் என்று நடுவரிடம் வாதிட்டு சுக்லாவை அவுட் செய்தார் தோனி. ஆனால், இந்தத் தடவை, உலகமே பார்த்துக் கொண்டிருந்ததால் தோனி கவனத்துடன் நடந்துகொண்டார். “இதுபோல நம் அணி வீரர்களுக்கு நடந்தால் எப்படி யோசிப்போம் என்று நினைத்தோம், உடனே பெல்லை மீண்டும் வர வழைக்க முடிவு செய்தோம்,” என்கிறார் திராவிட். “கிரிக்கெட் உலகில் இந்திய அணியினர் மட்டும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று மற்ற அணியினர் எதிர்பார்க்கிறார்கள்,” என்று கமெண்ட்ரியில் காட்டமாகப் பேசினார் கவாஸ்கர்.


பெல் சம்பவத்துக்கு ஒருநாள் முன்பு, ஹர்பஜன் தவறான முறையில் எல்.பி. டபிள்யூ ஆனார். நடுவரின் தவறான முடிவை ஏற்றுக்கொண்ட ஸ்டிராஸ், ஹர்பஜனின் அவுட்டைக் கொண்டாடினார். ஆனால், பெல்லின் தவறை தோனி மன்னிக்க வேண்டும் என்று அவர் எப்படி எதிர்பார்த்தார் என்று புரியவில்லை. வான் போல பல முன்னாள் கேப்டன்களும் தாங்கள் ஒருபோதும் பெல்லைத் திரும்ப அழைத்திருக்க மாட்டோம் என்றுதான் கருத்து தெரிவிக்கிறார்கள். இதே நிலை மையில் இங்கிலாந்து இருந்திருந்தாலும் இந்தியாவுக்குச் சாதகமாக நடந்து கொண்டிருக்காது. 

தோனிக்கு இது மோசமான காலக் கட்டம். பேட்டிங், கீப்பிங் மட்டுமில்லாமல் அவருடைய தலைமைப் பண்பும் இங்கிலாந்தில் மோசமாகவே இருக்கின்றன. இந்த நிலையில் தன் அணிக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் ஆடுகளத்தில் பண்புடன் செயல்பட வேண்டும் என்கிற தோனியின் முடிவுக்கு கிரிக்கெட் உலகம் தலைவணங்குகிறது. எந்த கிரிக்கெட் கேப்டனும் இப்படியெல்லாம் தராசு முள்ளை நடுவில் நிற்க வைத்துச் செயல்படுவதில்லை. சோயாப் அக்தரால் தடுக்கப்பட்டுக் கீழே விழுந்து ரன் அவுட் ஆன சச்சினுக்குப் பரிதாபம் காட்ட அன்று யாருமே இல்லை. சமீபத்தில் கூட மேற்கு இந்தியத் தீவுவுடனான டெஸ்ட் போட்டியில் அநியாயமான முறையில் லஷ்மண் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். தோனி, நடந்துகொண்டதுபோல எல்லா கேப்டன்களும் நடந்துகொண்டால் கிரிக்கெட்டுக்கு டி.ஆர்.எஸ். தேவையே இருக்காது.

2 comments:

  1. அருமையான பதிவு நண்பா.தோனியின் செயற்பாடுகள் பற்றி நானும் பல பதிவுகள் எழுதியுள்ளேன்

    நன்றி
    அன்புடன்
    Kss.Rajh(கே.எஸ்.எஸ்.ராஜ்)
    From
    நண்பர்கள்

    ReplyDelete
  2. இந்த நிலையில் தன் அணிக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் ஆடுகளத்தில் பண்புடன் செயல்பட வேண்டும் என்கிற தோனியின் முடிவுக்கு கிரிக்கெட் உலகம் தலைவணங்குகிறது.

    அருமை.

    ReplyDelete