Search This Blog

Monday, August 01, 2011

அரசியல் - டிஷ்யூம்... டிஷ்யூம்

டிஷ்யூம்... டிஷ்யூம்-1


ஒரு மாவட்டத்தில் அமைச்சரும், மாவட்டச் செயலாளரும் வெவ்வேறு நபர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குள் உள்குத்து நடந்துகொண்டே இருக்கும். இது இரண்டு கழகங்களுக்கும் பொருந்தும் பொதுவான தியரி. அ.தி.மு.க.வின் காஞ்சி மாவட்டச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ராசேந்திரனுக்கும், அமைச்சரும் தாம்பரம் நகரச் செயலாளருமான சின்னையாவுக்கும் ஏழாம் பொருத்தம். சின்னையா போன்றவர்களுக்கு எங்கே அமைச்சர் வாய்ப்பு வரப் போகிறது என்று மாவட்டச் செயலாளர் இதுவரை உதாசீனப்படுத்தி வந்தார். இப்போது அமைச்சரது சீஸன். கட்சி நிகழ்ச்சியோ, அரசு நிகழ்ச்சியோ மாவட்டச் செயலாளர் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். ஆனால், அமைச்சர் தரப்பு மாவட்டச் செயலாளரிடம் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தை மாற்றிச் சொல்லி விடுகிறதாம். விளைவு: நிகழ்ச்சி முடிந்த பிறகு மா.செ. போகிறார். மா.செ. தரப்பு கடுகடுக்க, அமைச்சர் தரப்பு உள்ளுக்குள் மகிழ்கிறது. இந்த உள்குத்து எதில் போய் முடியுமோ, அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும்! 

டிஷ்யூம்... டிஷ்யூம் - 2


தங்கபாலு ராஜினாமா கடிதம் கொடுத்து இரண்டு மாதங்களாகியும், தில்லி தலைமை அன்றாடம் சந்திக்கும் தலைவலி காரணமாக தமிழக காங்கிரஸ் தலைமைக்கு வேறு ஒருவரை நியமிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. தங்கபாலு ராஜினாமாவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ‘இதைச் சாதகமாக எடுத்துக்கொண்டு துள்ளி ஆடுகிறார் தங்கபாலு’ என்று மற்ற கோஷ்டிகள் பொறாமைப்படுகின்றன. சமீபத்தில் கடலூர், தென் சென்னை மாவட்டங்களுக்கு அதிரடியாகத் தமது ஆட்களைத் தலைவராக நியமித்து விட்டார் தங்கபாலு. கோஷ்டிகள் அதிர்ந்து போய் தலைமையிடம் முறையிட்டன. வழக்கம் போல் தலைமையிடம் மௌனம். இதற்கிடையில் கட்சியிலிருந்து தங்கபாலு வால் நீக்கப்பட்ட ஜி.ஏ.வடிவேலு, ஜோதி ராமலிங்கம், இதயதுல்லா போன்ற புள்ளிகள் கட்சியின் பொதுக் குழுவை(?) ஆகஸ்ட் முதல் வாரம் கூட்டியுள்ளனர். உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தலைவராகும் தகுதியுள்ள ஐந்து பேர் பெயர்ப் பட்டியலை, தலைமைக்கு அனுப்பப் போகிறார்களாம். தங்கபாலு தரப்பும் மோதலுக்குத் தயாராகிறது.  

வெளுக்கும் கறுப்பு



நிலப்பறிப்பு விவகாரங்களில் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கைதாகி விடுகின்றனர். ஆனால் இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பெரும்பாலான நீதிமன்றங்களில் அனுமதி கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் அனுபவமில்லாத அரசு வழக்கறிஞர்கள்தான்," என்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர். மதுரையில் கைது செய்யப்பட்ட தளபதி, அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் போன்றவர்களை போலீஸ் காவலுக்கு அனுப்ப நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை. வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்யாதவர்கள் கூட, பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்துத் தள்ள வேண்டியதைத் தள்ளி அரசு வழக்கறிஞராக ஆகிவிடுகிறார்கள். தி.மு.க. அனுதாபிகளான வழக்கறிஞர்களும் அரசு வழக்கறிஞர்கள் ஆகிவிட்டார்கள். மதுரையில் நீதிமன்றமே போகாமல் பள்ளி நடத்தும் ஒருவர், படிப்பு மட்டும் இருப்பதால், அரசு வக்கீலாக வந்து விட்டார். இவரைப் போன்ற அனுபவமில்லாதவர்கள் அரசு வழக்கறிஞராக இருந்தால், நாளை பிடிபட்டவர்கள் எல்லோரும் விடுதலை கூட ஆகிவிடலாம். மாவட்ட நீதிமன்றங்கள் என்றில்லை. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரே சரியாக வாதாடவில்லை. அதனால்தான் சமச்சீர் கல்வி வழக்கில் இத்தனை குழப்பங்கள்," என்கிறார் ஆளும் கட்சியின் வழக்கறிஞர் அணி பிரமுகர் ஒருவர்.

கூடா நட்பு!

பிரணாப் முகர்ஜி கருணாநிதியை வந்து சந்தித்துவிட்டுச் சென்றபிறகு அலைக் கற்றை ஊழல் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் ஒரு தொய்வு விழுந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அன்னிய நாடுகளில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ள பணத்தை முடக்குவது, கலைஞர் தொலைக்காட்சியை முடக்குவது, சாதிக்பாட்சா மர்ம மரண வழக்கு ஆகியவற்றில் பத்திரிகைகளில் காட்டப்படும் பரபரப்பு உண்மையில் அதிகார மட்டத்தில் இல்லை என்கிறார்கள். மூன்றாம் குற்றப் பத்திரிகையில் தயாநிதியின் பெயர் இடம் பெறாமல் போனாலும் ஆச்சர்யம் வேண்டாம்," என்கிறார் ஒரு தில்லி காங்கிரஸ் பிரமுகர். இந்த நிலையில் கனிமொழி ஜாமீனில் வெளிவந்தபிறகு, நடக்க இருக்கும் மத்திய அமைச்சரவையின் மாற்றத்தில் கனிக்கும் அமைச்சராகும் வாய்ப்பு இருக்கிறதாம். கூடா நட்பு ‘கை’ கொடுக்கிறது!  

வருவான் வடிவேலன்


காமெடி கிங் வடிவேலுவுக்கு, புதிய படங்கள் ஏதும் புக் ஆகவில்லை. முடக்கப் பட்டிருக்கிறார் வடிவேலு. எனக்கு முதல்வர் மீது எந்தக் கோபமோ வருத்தமோ கிடையாது. தே.மு.தி.க. தனியாக நின்றிருந்தால், நான் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்திருக்க மாட்டேன். காரணம் அந்தச் சூழலில் தே.மு.தி.க. தோற்கும் என்று தெரியும். அம்மாவை நான் எங்கும் விமர்சனம் செய்யவில்லை" என்று நண்பர்களிடம் புலம்பும் வடிவேலு, விரைவில் ஜெ.வைச் சந்திக்கக்கூடும். சொந்தமாகப் படமெடுக்கும் ஐடியாவும் இருக்கிறதாம் வடிவேலுவுக்கு.  

No comments:

Post a Comment