திருவனந்தபுரம் பத்மநாபசாமி, திருப்பதி கோயில்களுக்கு நிகராகக் கட்டுக்
கடங்காத செல்வம் கொண்ட ஓர் அமைப்பு, பி.சி.சி.ஐ. எனப்படுகிற இந்திய
கிரிக்கெட் வாரியம்.
பிதுங்குகிற அளவுக்குப் பணம் படைத்திருப்பதால் இயல்பாக உலக அரங்கில்
அளவற்ற அதிகாரம். (எவ்வளவு தூரம் என்றால் நடுவரைக்கூட ஓடஓட விரட்டும்
அளவுக்கு.)
சர்வதேச கிரிக்கெட் வாரியக் கூட்டங்களில் பி.சி.சி.ஐ. சொல்லுக்கு மறு
அப்பீல் கிடையாது. இந்த அமைப்புக்காக ஆடுகிற 20வயதுகூட நிரம்பாத, மீசை
முளைக்காத
வீரர்களெல்லாம் கோடிகளில் கொழிக்கிறார்கள். சர்வம் செல்வம் மயம்.
இருந்தும் என்ன பிரயோசனம்? சர்வதேச அரங்கில் இந்திய கிரிக்கெட்டுக்குத்
தொடர்ந்து அவமானங்கள்
நேர்ந்து கொண்டிருக்கின்றன. காரணம், அனைத்துத் துறைகளிலும் தென்படும்
நிர்வாக ஒழுங்கீனம்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு கிரிக்கெட் வீரர்
காயத்திலிருந்து மீளும்போது அவர் முறையாக லோக்கல் மேட்சுகளில் ஆடி தம்மை
நிரூபிக்கவேண்டும்.
அப்போதுதான் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் ஆட வாய்ப்பளிக்கப்படும்.
ஆஸ்திரேலியாவின் இளம்புயல் பொலிஞ்சர் இலங்கைச் சுற்றுப் பயணத்துக் குத்
தேர்வு (டெஸ்ட் போட்டி)
செய்யப்பட வில்லை. இத்தனைக்கும் ஜாகீர்கான் போல அவர் தம் உடல்தகுதியை
நிரூபித்த பிறகும் இந்த நிலைமை. நீ போய் லோக்கல் மேட்சுகளில் ஆடி
முழுத்தகுதியோடு வா
என்று உறுதியாகச் சொல்லிவிட்டது ஆஸி நிர்வாகம். ஆனால், ஜாகீர்கான்
விஷயத்தில் என்ன நடந்தது? ஐ.பி.எல்.லில் கர்மசிரத்தையாகக் கலந்து கொண்டவர்,
பிறகு,
காயம் காரணமாக மேற்கு இந்தியத் தீவுத் தொடரில் பங்கேற்கவில்லை. கடந்த
மூன்று வருடங்களில், காயம் காரணமாக 8 தொடர்களில் அவர் இடம்பெறவில்லை என்பது
இங்கே நினைவுகூரத்தக்கது. இங்கிலாந்து தொடர் அதிமுக்கியமானது. இருந்த
போதும், தான் தகுதியடைந்துவிட்டதாக ஜாகீர்கான் சொன்னவுடன் அதை வேத வாக்காக
ஏற்றுக்கொண்டது பி.சி.சி.ஐ. சரியான உடல் தகுதியை அடைந்தாரா என்று
முழுதாகப் பரிசோதிக்காததால் இங்கிலாந்தில் பி.சி.சி.ஐ.யின் மானம் காற்றில்
பறந்து கொண்டிருக்கிறது. உடல் தகுதியில்லாத வீரரை இந்தத் தொடரில் தேர்வு
செய்தது எப்படி என்று கிரிக்கெட் நிபுணர்கள் சரமாரியாகக் கேள்வி
கேட்கிறார்கள்.
எல்லோரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு இந்தியா திரும்பி விட்டார்
ஜாகீர்கான்.
இதைவிடக் கொடுமை, ஜாகீர்கானை ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்த்துக்
கொண்டது. ஜாகீர்கானின் உடல் தகுதியைக் கணக்கில் கொள்ளாமல் கண்ணை
மூடிக்கொண்டு அணியில் சேர்த்த விதம் அபாயகரமானது. அடிப்படை விதிமுறைகள்
எதுவும் அணித்தேர்வில் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது இந்தப்
பிரச்னைகளிலிருந்து
புலப்படுகிறது. இதே அணியில் ராகுல் திராவிடைச் சேர்த்ததைவிட பெரிய
அநியாயம் எதுவுமில்லை. பவுன்ஸ் உள்ள பிட்சுகளில் மட்டும் திராவிடை ஆட
அழைப்பதால்
யாருக்கும் எந்தப் பாதகமுமில்லை. காரணம், ராகுல் திராவிட் சமர்த்தர்.
அதிர்ந்து பேசமாட்டார், பிரச்னை செய்யமாட்டார். பிறகென்ன என்றெண்ணிப்
பந்தாடிவிட்டது
தேர்வுக்குழு.
ஐ.பி.எல்.-க்கு முன்பே, இந்திய வீரர்கள் நிறைய நாட்கள் கிரிக்கெட் ஆடுவதாக
முன்னணி வீரர்களிடமிருந்து கருத்து எழுந்தது. ஐ.பி.எல். வந்தபிறகு
இயந்திரங்கள்
ஆகிவிட்டார்கள் வீரர்கள். ஐ.பி.எல்.லால் இந்தியக் கிரிக்கெட்டுக்கு
நேர்ந்த பலன்களை விடவும் உபாதைகள்தான் அதிகம். ஒவ்வொரு ஐ.பி.எல்.லின்
போதும் முன்னணி வீரர்கள்
காயமடைந்து முக்கியமான டூரில் பங்கேற்க முடியாமல் போய்விடுகிறது. அல்லது
காயமடையாத வீரர்களைச் சக்கையாகப் பிழிந்துவிடுகிறது ஐ.பி.எல். கடந்த ஒரு
வருடத்தில்
13 டெஸ்டுகள், 20 ஒருநாள் ஆட்டங்கள், 16 ஐ.பி.எல். மற்றும் 6 சாம்பியன்
லீக் ஆட்டங்கள் என்று பொதி மாடு போல உழைத்திருக்கிறார் தோனி. ஓய்வே இல்லை
என்று
அவர் வெளிப்படையாகவே பேசிவிட்டார்.
குறையில்லா செல்வம், கை சொடுக்கும் அதிகாரம், உலகத்தரத்தில் வீரர்கள் என
எல்லாம் இருந்தும் இந்தியக் கிரிக்கெட்டுக்கு நேர்கிற அவமானங்களுக்குக்
காரணம், மோசமான
நிர்வாகம். அடிப்படை விதிமுறைகளில்கூட ஒழுங்கு காட்டாத எந்த ஓர் அமைப்பும்
இறுதியில் படுகுழியில் தான் விழும். நிச்சயம் இந்தியக் கிரிக்கெட்
வாரியத்துக்குச் சிறப்பு
ஆலோசகர்களின் வழிகாட்டல் அவசியமாகப்படுகிறது. வீரர்களின் தேர்வு,
வீரர்களின் உடல் தகுதி, ஆட்டங்களுக்கான முறையான அட்டவணைகள் என்று எல்லா
விஷயங்களிலும்
தள்ளாடுகிறது பி.சி.சி.ஐ. தம் தவற்றை உணர்ந்து துரித நடவடிக்கையில்
ஈடுபட்டால் மட்டுமே இந்தியக் கிரிக்கெட் மீதான கறைகளைத் துடைக்கமுடியும்.
இல்லாவிட்டால்
பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நேர்ந்த கதிதான்.
நல்ல பதிவு...எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா ஒரு சராசரி அணி...அவ்வளவே...
ReplyDelete