Search This Blog

Wednesday, August 03, 2011

ஸ்டாலின் கைது... காரணம் திவாகரனா?

சிக்கலில் டெல்டா போலீஸ்

'விபத்தில் இறந்த ஒரு மாணவ​னின் மரணத்துக்கு, தி.மு.க-வின் சமச்சீர்கல்விப் போராட்டம்தான் காரணம்!’ என்று குற்றம் சாட்டி, கைது களேபரம் நடத்தி இருக்கிறது தமிழக போலீஸ். இதில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் கை​தாக... தமிழகம் முழுவதும் மறியல் நடத்தித் திமிலோகப்படுத்திவிட்டது தி.மு.க.!  கடந்த 29-ம் தேதி 'சமச்சீர் பாடப் புத்தகங்களை உடனே வழங்க வேண்டும்’ என்று தி.மு.க. சார்பில் தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்... திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து, தி.மு.க-வினரோடு ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வீடுகளுக்குப் புறப்பட்டனர். தஞ்சாவூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றில் சில மாணவர்கள் ஏறினர். சற்று நேரத்தில், மஞ்சக்கொல்லை என்கிற இடத்தில் லாரி ஒன்று மோதி, அந்தப் பேருந்து கவிழ்ந்ததில், 12 பேருக்கு காயம். விஜய் என்கிற மாணவன் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.

 இதற்கிடையில், மன்னார்​குடியில் வாக்காளருக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தார் ஸ்டாலின். வழியில் கொரடாச்சேரி அருகே, பேருந்து விபத்தில் பலியான மாணவன் விஜய்யின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிவிட்டு, திருத்துறைப்பூண்டிக்குக் கிளம்பினார். ஆனால், ஆலத்தம்பாடி என்ற இடத்தில் ஸ்டாலின் காரை போலீஸ் வாகனங்கள் வழிமறித்தன. தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரவிக்குமார், திரூவாரூர் எஸ்.பி. தினகரன் ஆகியோர் ஸ்டாலினுடன்இருந்த திருவாரூர் தி.மு.க, மாவட்டச் செயலாளர் கலைவாணனைக் கைது செய்ய முயன்றனர். காரணம் இல்லாமல் கைது செய்யப்படுவதாக, ஸ்டாலின் மற்றும் தி.மு.க-வினர் சாலை மறியல் செய்தனர். உடனே ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு, திருவாரூர் வர்த்தக சங்கக் கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனர். இந்தத் தகவல் பரவியதும், தமிழகம் முழுக்க தி.மு.க-வினர் போராட்டத்தில் இறங்க... சற்று நேரத்தில், 'கலைவாணன் மட்டும்தான் கைது’ எனக் கூறி, ஸ்டாலின் உள்ளிட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்!


அன்று இரவு மன்னார்குடிப் பொதுக் கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, ''விபத்து நடந்த அன்று கலைவாணன் ஊரில்தான் இருந்தார். அப்போது ஏன் அவரைக் கைது செய்யவில்லை? ஸ்டாலின் வந்த பிறகு கைது செய்து, பிரச்னையை வேண்டும் என்றே தூண்டி இருக்கிறது காவல் துறை. 'ஸ்டாலினைக் கைது செய்தால் நடப்பதே வேறு’ எனத் தொண்டர்கள் முழங்கியதால், பயந்துபோய் விடுதலை செய்துவிட்டனர்!'' என்றார்.அடுத்துப் பேசிய ஸ்டாலின், ''எங்கள் காரை வழிமறித்த போலீஸார் கலைவாணனை 'விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்றனர். 'வாரன்ட் இருக்கிறதா? யார் புகார் கொடுத்தது?’ என்று கேட்டபோது, பதில் சொல்லவில்லை. இந்த நிகழ்ச்சி​யைத் தடுக்க வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட திட்டம்தான் அது. முடிந்ததா? நாம் 2016-ல் ஆட்சியைப் பிடிப்போம். போகிற போக்கைப் பார்த்தால், அதற்கு முன்பே தேர்தல் வரும்போலத் தெரிகிறது!'' என்று பேசினார்.

''தமிழகத்தில் அமோக வெற்றியை அ.தி.மு.க. அடைந்தாலும், சசிகலாவின் சொந்த ஊரான மன்னார்குடியில் தோல்வி அடைந்தது. சசிகலாவின் சகோதரர் திவாகரன் இதில் ரொம்பவே அப்செட். அவரை இன்னும் வெறுப்பாக்கும் விதமாகத்தான் திருவாரூரில் நடத்த வேண்டிய நன்றி அறிவிப்புக் கூட்டத்தை, மன்னார்குடியில் நடத்தத் திட்டமிட்டது தி.மு.க. இதில் கடுப்பான திவாகரன், கார்டன் வரை ஆதங்கத்தைக் கொண்டு போனதால்தான் ஸ்டாலின் கைது வரை போனது!'' 

விகடன்


1 comment: