Search This Blog

Saturday, August 13, 2011

இந்தக் குழப்பம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? - ஓ பக்கங்கள், ஞாநி


சமச்சீர் குழப்பத்தில் ஒரு கட்டக் குளறுபடி ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இனி அடுத்த கட்டக் குழப்பங்கள் ஆரம்பிக்கும்.நடந்த குளறுபடிகளுக்கு முழுக்க முழுக்க ஜெயலலிதாதான் பொறுப்பு என்று சித்திரிக்க தி.மு.க. கடுமையாக முயற்சித்து வருகிறது. தங்களை முற்போக்காளர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பும் மீடியாக்களும் பத்திரிகைகளும் கல்வி சமத்துவத்துக்குத் தாங்கள் பெரும் ஆதரவாளர்கள் போல வேஷங்கட்டிக் கொண்டு இந்த ஆட்டத்தில் உப பாத்திரங்களாகிவிட்டன. உண்மையான சமச்சீர் கல்விக்கான முக்கிய அம்சங்களில் தாய் மொழிவழிக் கல்வியும் ஒன்று என்பதை இவை ஒருபோதும் ஆதரிக்காதவை.

சமச்சீர் கல்விக் குளறுபடிகளுக்கு கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் பொறுப்பேற்க வேண்டிய குற்றவாளிகள். கருணாநிதி செய்யவேண்டியவற்றை அரைகுறையாகச் செய்து ஏமாற்றியவர். அந்த அரைகுறை வேலையையும் தொடரவும் விடாமல், முழுமையுமாக்காமல் குழப்பியவர் ஜெயலலிதா.  இதில் ஏற்பட்ட கால விரயத்துக்கு நீதிமன்றங்களும் பொறுப்பேற்க வேண்டும். இப்போது உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை முதல் கட்ட அப்பீலிலேயே கொடுத்திருக்கலாம். திரும்பவும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி, நிபுணர் குழு அமைக்கச் சொல்லியெல்லாம் கால விரயம் செய்திருக்கத் தேவையே இல்லை. ஒரு மாதம் மிச்சமாகி இருக்கும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஒரு பாடம் என்று பூரிப்புடன் சொல்லி, கழகக் கண்மணிகளை பட்டாசு வெடித்துக் கொண்டாட வைத்திருக்கும் கருணாநிதி, அதே தீர்ப்பில் அவருக்கும் ஒரு பாடம் சொல்லப்பட்டிருப்பதை வசதியாக மறைத்துவிட்டார். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் நேரில் கேட்கும் துணிச்சல் நமது நிருபர்களுக்கும் கிடையாது. 


“பாடப்புத்தகங்களில் சில இடங்களில் குறிப்பாக, தொடக்கக்கல்வி வகுப்புகளுக்கான பாடப்புத்தகத்தில் முன்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சித் தலைவரை தனிப்பட்ட முறையில் பெரு மைப்படுத்தும் விதத்திலும், அவருக்குச் சுய விளம்பரம் தேடும் வகையிலும், மேலும் இளம் மாணவர்களிடையே அவருடைய கொள்கைகளின் தாக்கத்தை ஏற்படுத்தும் வகை யிலும் எழுதப்பட்டு இருப்பது சந்தேகமற்ற வகையில் தெரி கிறது,” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக் காட்டியிருக் கிறார்கள். இவற்றை ஓர் உத் தரவின் மூலம் பாடப் புத்தகங் களில் இருந்து (ஜெயலலிதா) அரசு அகற்றியிருக்க முடியும் என்றும், மொத்தமாக சமச்சீர் கல்விச் சட்டத்தையே மாற்ற முற்பட்டது தவறு என்றும் நீதிபதிகள் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள். 

பாடத்திட்டத்திலும் பாடப் புத்தகத்திலும் தேவைப்படும் மாற்றங்களைச் செய்து கொள்ளும் அதிகாரம் ஏற்கெனவே சமசீர் கல்விச் சட்டத்தின் கீழ் அரசுக்கு இருக்கிறது என்றும் அதற்குத் தனி சட்டமோ சட்டத்திருத்தமோ தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.இன்னும் சில விஷயங்களை உச்ச நீதிமன்றம் செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும். முத்துக் குமரன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம் ஏன் எல்லாப் பரிந்துரைகளையும் நிறைவேற்ற வகை செய்யவில்லை என்பதைக் கேட்டிருக்க வேண்டும். சமமான பள்ளித் தரம், சமமான ஆசிரியர் தரம் இரண்டும் இல்லாமல் பொதுப் பாடத்திட்டம் மட்டும் மாற்றத்தைத் தந்துவிடாது.


கருணாநிதி முதன்முதலில் 2009ல் சமச்சீர் கல்வியைக் கொண்டுவந்தபோது பொதுப் பாடத்திட்டத்தை 2010லிருந்து முதல் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் மட்டுமே கொண்டு வந்தார். இது சரியான அணுகுமுறை. இதன்படி அடுத்த ஆண்டு இந்த மாணவர்கள் முறையே 2ம் வகுப்புக்கும் 7ம் வகுப்புக்கும் செல்லும்போது அந்த வகுப்புகளில் புதிய பாடத்திட்டத்தின் படி படிப்பார்கள். இப்படியே படிப்படியாக ஒவ்வோராண்டும் இரு வகுப்புகளுக்குப் புது ( பொது) பாடத் திட்டம் நடைமுறையில் வர முடியும். மொத்தமாக ஐந்தே ஆண்டுகளில் எல்லா வகுப்புகளுக்கும் பொதுப் பாடத்திட்டம் வந்துவிடும். ஆனால் இதைத் தொடர்ந்து செய்யாமல் கருணாநிதி அரசு அடுத்த வருடத்தில் ஒரேயடியாக மொத்தமாக எல்லா வகுப்புகளுக்கும் புதுப் பாடத்திட்டம் என்று உத்தரவிட்டுவிட்டு (தேர்தலில் தோற்றதால்) போயும் விட்டது. அதை ஜெயலலிதா நிறுத்த முற்பட்டபோது, 2வதிலும் 7வதிலும் மட்டும் தான் பொதுப் பாடத்திட்டத்தைத் தொடர்வதாகவும் மற்ற வகுப்புகளுக்குப் படிப்படியாகக் கொண்டு வருவதாகவும் முடிவெடுத்திருந்தால், எந்தச் சிக்கலும் ஏற்பட்டிராது.

இப்போதுகூட உச்ச நீதிமன்றம் அந்த வழிமுறையைப் பரிந்துரைத்திருக்கலாம். ஏனென்றால் இப்போது பத்தாவதில் இருக்கும் மாணவர்கள் ஒன்பதாண்டு காலம் வேறு பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள். திடீரென புதுப் பாடத் திட்டத்தை பத்தாவதில் சந்திப்பது தேவையற்ற அழுத்தத்தைத் தரும் வாய்ப்பு உள்ளது.தமிழ்நாட்டில் பல மெட்ரிக் பள்ளிகள் இந்தச் சமச்சீர்கல்வியை விரும்பாததால், சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்துக்கு மாற ரகசியமாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாக நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதில் அவர்களுக்கு ஒரு சின்னச் சிக்கல் இருக்கிறது. அப்படி மாற, தங்களுக்கு ஆட்சேபணையில்லை என்ற நோ அப்ஜெக்ஷன் சர்ட்டிபிகேட்டை மாநில அரசு தரவேண்டும். ஜெயலலிதா அரசு இதைத் தருமா? தந்தால் சமச்சீர் கல்வி தடுமாறிப் போகும். எனவே தரக் கூடாது என்று தடுக்க சமச்சீர் கல்வி ஆதரவாளர்கள் அடுத்த இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. தராவிட்டால், மெட்ரிக் பள்ளிகள் அது தங்கள் உரிமை என்று நீதிமன்றத்துக்குச் செல்லக் கூடும். நீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுத்தாலும் அதுவும் புது விளைவுகளை ஏற்படுத்தும்.


உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இந்திய அளவில் புதிய கேள்விகளை எழுப்பக் கூடியது. ஏனென்றால் மெட்ரிக், ஸ்டேட் போர்ட், சி.பி.எஸ்.ஈ, ஐ.எஸ்.சி என்று பல்வேறு பாடத் திட்டங்கள் பல மாநிலங்களிலும் உள்ளன. கல்வி என்பது தற்போது மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் இருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் மத்திய அரசின் சி.பி.எஸ்.ஈ தவிர மாநிலத்தின் பாடத்திட்டமாக இனி ஒரே ஒரு பாடத்திட்டம் இருக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இதர மாநிலங்களில் இப்படியில்லை. இனி ஒவ்வொரு மாநிலத்திலும் சி.பி.எஸ்.ஈ. தவிர ஒற்றைப் பாடத்திட்டம் மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்லுமா? சொல்லாவிட்டால், அங்கெல்லாம் சமச்சீர் கல்வி வேண்டாமா?  சி.பி.எஸ்.ஈ, மாநிலத்தின் சமசீர் கல்வி என்று இரண்டு திட்டங்கள் ஒவ்வொரு மாநி லத்திலும் இருக்க வேண்டுமா? ஏன் அதையும் குறைத்து ஒரே திட்டமாக இருக்கக் கூடாது? அப்படியானால் சி.பி.எஸ்.ஈயையே எல்லாரும் பின்பற்றும்படி மத்திய அரசு நிர்ப்பந்திக்க முடியுமா ? சமச்சீர் கல்வி பற்றி மத்திய அரசின் கொள்கை என்ன ? 

வேறு மாநிலங்களிலிருந்தோ, சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தில் படிப்பவர்களோ இந்தக் கேள்விகளுடன் உச்ச நீதிமன்றத்தை அணு கினால், பிரச்னை மேலும் சிக்கலாகக்கூடும். கல்வி என்பதே முதலில் மத்திய, மாநில அரசு களின் பொதுப்பட்டியலில் இருக்க வேண் டுமா, மாநில அரசின் வசம் மட்டும் இருக்க வேண்டுமா என்ற கேள்வியும் கூர்மையடையும்.இந்தக் கேள்விகள் எழுவதும் விவாதம் நடப்பதும் நல்லது. உலகின் முன்னேறிய நாடுகளில் பொதுப்பாடத் திட்டம் என்பது இல்லை. அமெரிக்காவில் மாநில அரசுகளின் கையிலும் இல்லை. கல்வி மாவட்டம் எனப் படும் நமது மாவட்ட அளவிலேயே கல்வித் திட்டமும் பாடப் புத்தகங்களும் முடிவு செய் யப்படுகின்றன. தேச அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் என்னென்ன திறன்கள் மாண வர்கள் அடைந்திருக்க வேண்டும் என்பது மட்டுமே வரையறுக்கப்படுகிறது. பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் பாடப் புத்தகங் களிலிருந்து தமக்கு உகந்தவற்றை வெவ்வேறு பள்ளிகள் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன.

இங்கேயும் மெட்ரிக் பள்ளிகளும் சி.பி. எஸ்.ஈ பள்ளிகளும் பாடப் புத்தகத் தேர்வில் மட்டும் இந்த முறையைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றன. ஆனால் இது பாடப் புத்தக வெளியீட்டாளர்களுக்கும் பள்ளி நிர்வாகங் களுக்கும் வணிக ரீதியில் லாபகரமானதாக மாற்றப்பட்டுவிட்டது. இப்போது எல்லா பாடப் புத்தகங்களையும் அரசே மலிவு விலையில் வெளியிடுவதால் இந்த வணிகம் கட்டுப்படுத்தப்படும். அதே சமயம் பாடப் புத்தகத்தில் என்ன இருக்கும் என்பதை முடிவு செய்ய அரசுக்கு முழு அதிகாரம் கொடுத் தால், கருணாநிதி செய்தது போல சுயவிளம் பரப் பாடங்களும் உள்ளே வரும் என்ற சிக் கலுக்குத் தீர்வு தேவைப்படுகிறது. பாடப் புத்தகங்களை உருவாக்க சுயாட்சி அதிகார முள்ள அறிஞர் குழு உருவாக்கப்பட வேண்டி யிருக்கிறது. 


என்ன பாடத்திட்டம், என்ன பாடங்கள், என்ன பாடப் புத்தகங்கள் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பிரித்து நகராட்சி, உள்ளாட்சி அளவில் விநியோகிக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. செங்கற்பட்டில் படிக்கும் மாணவனுக்கு செங்கற்பட்டின் வரலாறு தெரியாது; ஆனால் உலக வரலாறு பாடம் இருக்கும். இதையெல்லாம் உள்ளூர் அமைப்புகளிடம் அதிகாரம் கொடுத்தால் மாற்ற முடியும். பள்ளிகளின் நிர்வாகத்தைக் கூட காமராஜர் காலத்தில் இருந்ததைப் போல மாவட்ட நிர்வாகத்தின் நேரடிக் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்தால் ஆசிரியர் களின் பணி ஒழுக்கத்தை மேம்படுத்த முடியும். சாதியும் பணமும் பெரும் செல் வாக்கு செலுத்தும் நம் கிராம அமைப்பில் இதிலெல்லாம் கூடவே சிக்கல்களும் இருக் கின்றன. 

எல்லாவற்றை விடப் பெரிய சிக்கல், இந்தப் பிரச்னைகளில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர் கள் பங்கு பெற்று, பல கருத்துகளை முன் வைத்து முடிவுகளை யோசிப்பதற்கான, எடுப்பதற்கான எந்த அமைப்புரீதியான வழிமுறையும் நம்மிடம் இல்லை என்பதுதான். தினமும் இரண்டு வேளை என் வீட்டு வாசலை மறித்து கார்களை நிறுத்த வைத்து சாலையை நெரிசலாக்கித் தொல்லை செய்து கொண்டிருக்கும் பள்ளியின் நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூட இங்கே வழியில்லை. 

இந்த வார வருத்தம்


பல ஏழை இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருந்துவந்த சூளைமேடு நகராட்சிப் பள்ளியின் ப்ளஸ் டூவின் புகைப்படத் தொழில் பாடப் பிரிவை நிறுத்தவேண்டாமென்று சென்ற வருடம் நான் இந்த ஓ பக்கங்களில் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தேன். நிறுத்தப் போவதில்லை என்று மேயர் மா.சுப்பிரமணியன் எனக்குத் தெரிவித்தார். ஆனால் இந்த வருட கல்வியாண்டு ஆரம்பத்தில் பாடப்பிரிவு மூடப்பட்டது தெரிந்து, புதிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதினேன். ஜூலை 11 அன்று முதல்வருக்கு அனுப்பிய கடிதத்துக்கு ஆகஸ்ட் 10 அன்று சென்னை மாநகராட்சியிலிருந்து பதில் வந்திருக்கிறது. என் கோரிக்கை ஏற்கப்படவில்லையாம். காரணம் என்ன? 26.02.2009ல் போட்ட அரசாணை எண் 277ன்படி இந்தப் பாடப்பிரிவு தொழிற்கல்விப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதுதான் காரணமாம். 

இதுதான் அரசு இயந்திரத்தின் அசட்டுத்தனம். 2009ம் வருட ஆணைதான் ஸ்டாலின் காலத்தில் போடப்பட்டது. அதை மாற்றும்படிதான் நான் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தேன். ஏன் மாற்றமுடியாது என்பதற்கு எந்தக் காரணமும் சொல்லாமல், அதே ஆணையைக் காட்டி இப்போது கடிதம் அனுப்புகிறது அரசு இயந்திரம். இந்த மாதிரி அதிகார வர்க்கத்தை வைத்துக் கொண்டு இங்கே ஒரு சின்ன மாற்றம் கூட வராது. நியாயப்படி என்ன செய்திருக்க வேண்டும்? முதலமைச்சரின் அலுவலகம் என் கடிதத்தை மாநகராட்சிக்கு அனுப்பி காரணம் கேட்டிருக்க வேண்டும். காரணம் தெரிந்ததும் அதைப் பரிசீலித்து முடிவெடுத்து எனக்குப் பதிலை முதல்வர் அலுவலகம்தான் அனுப்ப வேண்டும். ஆனால் என்ன நடந்திருக்கிறது? என் கடிதத்தை முதலமைச்சர் அலுவலகம், மாநகராட்சிக்கு அனுப்புகிறது. அதுவே நேரடியாக எனக்குப் பதில் அனுப்பிவிட்டது. முதலமைச்சர் பார்க்கவே இல்லை என்பது நிச்சயம். 

இந்தியாவிலேயே ப்ளஸ் டூவில் புகைப்படம் கற்றுத் தந்த பெருமைக்குரிய ஒரே பள்ளியிலும் இப்போது அது மூடப்பட்டு விட்டது என்ற வருத்தத்தைப் பதிவு செய்கிறேன். அங்கே படித்து இன்று இந்தியா முழுவதும் திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றும் பல இளம் நண்பர்களும் என்னோடு சேர்ந்து வருத்தப்படுவார்கள்.  


No comments:

Post a Comment