Search This Blog

Friday, August 26, 2011

ஜெ.வைச் சந்திக்கத் தயக்கமில்லை! - வைகோ பேட்டி


சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறாததற்குக் காரணம் தொகுதிகள் பிரச்னையா... அல்லது ம.தி. மு.க.வைவிட ஜூனியர் கட்சியான தே.மு. தி.க.வுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமா?

தே.மு.தி.க.வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் நாங்கள் கூட்டணியில் இடம் பெறாமல் தவிர்த்தோம் என்பதில் உண்மை கிடையாது. ஒதுக்கப்பட்ட தொகுதி எண்ணிக்கை எங்களுக்குப் போதாது என்ற காரணத்தால்தான் நாங்கள் கூட்டணியில் இல்லாத நிலை உருவானது. ம.தி.மு.க.வுக்கு தமிழகம் முழுவதும் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லையென்றாலும் கணிசமாக வோட்டு வங்கி இருக்கிறது. எங்கள் கட்சிக்கு உள்ள கட்டமைப்பு உறுதியானது. எனவே ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட எங்கள் தோழர்கள் பலர் விருப்பப்பட்டார்கள். 2006முதல் ஐந்து வருட காலம் அ.தி.மு.க.வின் நம்பிக்கைக்குரிய உற்ற தோழனாக நாங்கள் இருந்தோம். ஆறு தொகுதிகள் என்று தொடங்கி இறுதிக் கட்டத்தில் பன்னிரண்டு தொகுதிகள்தான் எங்களுக்கு என்று தீர்மானித்தார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர். அந்த நாட்களில் எனக்கேற்பட்ட மனப் போராட்டத்தைச் சொல்லி மாளாது. வெளியில் எங்களுக்கு 18 தொகுதிகள் கொடுக்கப்பட்டதாகப் பேச்சு உலவியது. இதனால் சின்ன குழப்பம். நல்ல வேளையாக ஜெயலலிதாவே எழுதிய கடிதத்தில் 12 தொகுதிகள் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. நடந்தது என்ன என்பது பன்னீர்செல்வத்துக்கும் செங்கோட்டையனுக்கும் முழுக்கத் தெரியும். இறுதியில் எங்கள் உயர்மட்டக்குழு கூடி தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவை எடுத்தது. ‘தனித்துப் போட்டியிட்டிருக்கலாமே’ என்று பலர் கேட்கிறார்கள். அப்படிப் போட்டியிட்டால் வோட்டுக்களைப் பிரித்து யாரோ வெற்றி பெற வைகோ உதவுகிறார் என்ற அபவாதம் விழுந்திருக்கும். மீடியா கருத்துக்கணிப்பில் எழுபது சதவிகிதம் மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் 68 முதல் 75 சதவிகிதம் மக்கள் நாங்கள் எடுத்த முடிவு சரியென்றும், அ.தி.மு.க. எங்களை நடத்திய விதம் சரியல்ல என்றும் சொல்லியிருந்தார்கள். மற்றபடி கூட்டணி அமையாததற்கு விடுதலைப் புலிகள் ஆதரவு உட்பட வேறெந்த பிரச்னையும் காரணமாக இல்லை."

கட்சி தொடங்கியதிலிருந்து பல்வேறு சோதனைகள், தோல்விகளைச் சந்தித்திருக்கிறீர்கள். உங்கள் கட்சியிலிருந்து பிரமுகர்கள் விலகினாலும் தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருக்கிறார்களே?

எனக்குக் கட்சியில் எல்லோரும் முக்கியம். பாசத்தோடு இயங்கும் கொள்கையுடைய மறவர் கூட்டம் நாங்கள். தமிழக நலன்களுக்காக நாங்கள் நடத்திய போராட்டங்கள் மக்களிடையே எங்களைப் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன. எங்களுக்கும் ஒரு காலம் வரும்."

ம.தி.மு.க.வில் பிரபலமான இரண்டாம் கட்ட பிரமுகர்கள் என்று யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்?

அண்ணாவுடனேயே பழகிய திருப்பூர் துரைசாமி, பட்டிதொட்டியெங்கும் கொள்கை முழக்கம் செய்யும் நாஞ்சில் சம்பத், ஆற்றல்மிகு மல்லை சத்யா, மாசிலா மணி, செந்திலதிபன்... போன்றவர்கள் முதல் கட்டத்திலேயே என்னுடன் இணைந்து போராடுபவர்கள்."  

மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தும் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளாததற்கு வருத்தப்படுகிறீர்களா?

பொதுவாழ்வில் இதுபோன்ற வாய்ப்புகள் வரும்; போகும். தமிழகத்துக்கான, தமிழர்களுக்கான என் கடமையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதையே மிகப் பெரிய மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். ஆனால் ஒரு விஷயத்தில் வருத்தமுண்டு. 2004ல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதது தவறான முடிவு."

உங்களை நம்பி வந்தவர்களை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தீர்கள். இப்போது அவர்கள் உங்களோடு இல்லையே?

அவர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும், வருத்தமும் கிடையாது. இந்த இயக்கத்துக்காக அவர்கள் பாடுபட்டதையும், என்னுடன் பழகிய நாட்களையும் நினைத்துப் பார்த்துக் கொள்வேன்."

தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகமே இல்லை என்கிறதே தி.மு.க.?

துணிச்சலோடு சட்டமன்றத்திலேயே அதற்காகப் போராட வேண்டியதுதானே?"

நில அபகரிப்பு வழக்குகள் பழிவாங்கல் நடவடிக்கை என்று தி.மு.க. சொல்கிறதே!    

பழி நடவடிக்கை என்று மக்கள் நினைக்கவில்லை. தவறு செய்தவர்கள் மீது நட வடிக்கை எடுப்பதில் ஆட்சேபணை இல்லை என்று தி.மு.க. தலைமையே கூறியிருக்கிறதே!" 

வாரிசுப் பிரச்னைகளால் தி.மு.க. ஆட்டம் கண்டுள்ள நிலையில், உங்கள் தலைமையில் எதிர்கால தி.மு.க. வழிநடத்தப்படும் வாய்ப் பிருக்கிறதா?

தி.மு.க. பற்றி எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. என் மீது கொலைப் பழி போட்டு வெளியேற்றியது ஆறாத ரணமாக இன்னமும் இருக்கிறது. மறுமலர்ச்சி தி.மு.க. ஓர் அடர்த்தியான திராவிட இயக்கமாக ஆயிரக்கணக்கான என் இளைய தோழர்களால் கட்டமைக்கப்பட்டு வீரநடை போடுகிறது. பெரியார், அண்ணா உருவாக்கிய திராவிட இயக்கம் என்றைக்கும் தமிழகத்தில் இருக்கும். பல வடிவங்களாக இப்போது இருக்கிறது. எனினும், ம.தி.மு.க. அண்ணா வகுத்த பாதையில் எந்தக் கொள்கை சமரசமும் மேற் கொள்ளாமல் எந்தக் குடும்பத்தையும் முன்னிறுத்தாமல் உண்மையான திராவிட வடிவமாக விளங்குவது எல்லோரும் அறிந்த ஒன்று."

தலைமைச் செயலகக் கட்டடம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாமே?

இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் அணுகுமுறை சரியல்ல; சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்று கட்டடத்தை உருவாக்கும்போது, தேவையான உள்கட்டமைப்புகள் வேண்டும். ஆனால், தலைமைச் செயலகம், அலுவலகப் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டு கட்டப்பட்டது. இப்போது மருத்துவமனைக்கு ஏற்ப உள் கட்டமைப்பை மாற்றுவதற்கு ஏகப்பட்ட செலவாகும். அதற்குப் பதிலாக அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால், மீண்டும் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர முற்படுவது அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்படுமோ என்றுதான் தோன்றுகிறது."

ராஜீவ்காந்தி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு நிராகரிக்கப்பட்ட மூன்று பேருக்காக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து அவர்கள் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்வீர்களா?

கடுமையான தண்டனையிருந்தால் தான் குற்றங்கள் குறையும்; மக்களுக்கு பயம் இருக்கும் என்ற கண்ணோட்டம் தவறானது. அமெரிக்காவில் எட்டு மாநில அரசுகள் மரண தண்டனையை ரத்து செய்து விட்டன. அங்கே மாநிலங்களுக்கு இதுபோன்று செயல்பட உரிமை உள்ளது. அந்த மாநிலங்களில் குற்றங்கள் குறைந்து போயிருக்கின்றன. பல்லாண்டு காலமாக, தனிமை நிலையில் மரண பயத்தோடு இருக்கும் ஒருவன் அன்றாடம் செத்துப் பிழைக்கிறான் என்பதே உண்மை. மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றோர் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள். உலகில் 135க்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. நமது நாட்டில் மாநில அரசு மற்றும் நீதிமன்றங்களின் தலையீட்டால் சி.ர.பாலன், குருசாமி நாயக்கர் போன்றோர் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டனர். எனவே தற்போது கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள மூன்று பேர் உயிரைக் காப்பாற்ற உயர்ந்தபட்ச நடவடிக்கை எடுப்போம். ‘மூன்று பேர் உயிர்காக்கும் இயக்கம்’ என்ற அமைப்பு பழ.நெடுமாறனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் ஒத்துழைப்பையும் வேண்டி, முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார் பழ.நெடுமாறன். அப்படி முதல்வரைச் சந்திக்கப் போகிற குழுவில் ஒருவராகச் செல்ல எனக்குக் கொஞ்சமும் தயக்கமில்லை."

வைகோ, தமிழ்நாட்டுப் பிரச்னைகளைப் பேச மாட்டார். அவருக்கு எப்போதும் ஈழத் தமிழர்கள் பற்றிதான் கவலை" என்று உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம்?

நான் கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் பேசினால் அதில் கால் மணி நேரம்தான் ஈழப் பிரச்னை குறித்துப் பேசுவேன். அதில் விடுதலைப் புலிகள் பற்றி நான் சொன்னவைகளைப் பற்றித்தான் மீடியா வெளியிடும். மற்ற தமிழ்நாட்டுப் பிரச்னைகளைப் பற்றி நான் பேசியதைப் போட மாட்டார்கள். இதன் காரணமாகத்தான் இந்த விமர்சனம். தனியாருக்குத் தாரை போக இருந்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை, பொதுத் துறையிலேயே தொடர வைத்தது நான்தான். 1200 கி.மீ. நடைப்பயணம் வந்தபோது நான் ஈழப் பிரச்னையைப் பற்றிப் பேசவே இல்லையே. நமது தமிழ்நாட்டு நதி நீர் பிரச்னைகளுக்காக என்னைவிடப் போராடிய வேறு தமிழ்நாட்டு அரசியல்வாதியைக் காட்டுங்கள் பார்க்கலாம். முல்லைப் பெரியாறு பிரச்னை பற்றி மட்டும் 648 ஊர்களில் பேசியிருக்கிறேன். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று முதலிலிருந்தே குரல் கொடுப்பவன் நான். இப்போது இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நானே ஆஜராகி வாதாடுகிறேன். இவ்வளவுக்கும் மேல் ஈழத் தமிழர்கள் நலனில் எனக்கு ஆழ்ந்த அக்கறை உண்டு என்பதும் நிஜம்தான்!" 

ஜெ- நூறு நாள்?

இலவசங்கள் சமுதாயத்துக்குக் கேடு என்று சொல்லிவிட்டு இப்போது அவரே இலவசங்களை அள்ளிவிடுவது ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற தத்துவத்துக்கு வேட்டு வைப்பதாக இருக்கிறது. நீண்ட கால நோக்கில் இது சமுதாயத்துக்கு நல்லதல்ல. மக்களுக்கு அதிகபட்சம் கேடு விளைவிக்கின்ற மதுவை ஒழிப்பதற்கு நடவடிக்கை இல்லை. விற்பனையை அதிகப்படுத்தும் முயற்சிகளால் வருங்காலத் தலைமுறை குறித்த கவலை மேலோங்குகிறது. டாஸ்மாக் கடைகளை ஒழித்தால் வரலாற்றில் கல்வெட்டாக ஜெயலலிதாவின் பெயர் நிலைக்கும். சமச்சீர் கல்விக் குழப்பம், ஆட்சி அமைந்தவுடன் மக்கள் மனத்தில் அரசைப் பற்றிய கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி விட்டது. மாநில உரிமைகளைப் பறிக்க நினைக்கும் மத்திய அரசின் போக்கை வன்மையாகக் கண்டித்தது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் போட்டது வரவேற்கத்தக்கவை."      

No comments:

Post a Comment