Search This Blog

Friday, August 26, 2011

லோக்பால் ஊழலை ஒழிக்குமா? - ஓ பக்கங்கள், ஞாநி


நம் நாட்டில் லஞ்சம் ஊழல் எல்லாம் ஒழியாமல் இருப்பதற்கு ஒரே காரணம் இன்னும் லோக்பால் வராமல் இருப்பதுதான் என்பது போன்ற ஓர் அசட்டு நம்பிக்கை மத்தியதரவர்க்க மக்கள் மனத்தில் இப்போது பலமாக ஏற்பட்டுவருகிறது. அண்ணா ஹசாரேவை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்று இரு தரப்பிலும் பெருவாரியானவர்களுக்கு லோக்பால் பற்றிய விவரங்களே தெரியாமலும் இருக்கின்றன. 


அசல் பிரச்னையான லோக்பால் பற்றியும், லஞ்சம் ஊழலை ஒழிப்பது எப்படி என்பது பற்றியும் நிதானம் தவறாமல் மீடியாவில் இதுவரை ஒலித்த குரல்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று இன்ஃபோசிஸ் நிறுவன வேலையை உதறிவிட்டு இந்திய அரசின் குடிமக்களுக்கான மின்னணு அடையாள அட்டை வழங்கும் திட்டத் தலைவராகப் பணியாற்றும் நந்தனும் அவர் மனைவி ரோஹிணியும், அண்மையில் பெங்களூருவில் சூழல் கல்வி நிறுவனம் தொடங்குவதற்காக சொந்தப் பணம் 50 கோடி ரூபாயை நன் கொடையாக அளித்தவர்கள்.  அருணா ராய் ஆறு வருடங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பின் அதிலிருந்து விலகி சமூகப் பணியில் ஈடுபட்டவர். தகவலறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்ற சோனியா காந்தியை சம்மதிக்க வைத்து வெற்றி பெற்றவர். மக்களின் தகவலறியும் உரிமைக்கான தேசிய பிரசார அமைப்பு என்ற அமைப்பை அருணா உருவாக்கினார். இப்போது அண்ணா ஹசாரேவின் அணியில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் இருவரும் அருணாவுடன் அந்த அமைப்பில் இன்னமும் இருக்கிறார்கள். லோக்பால் மசோதா வடிவத்தில் மட்டுமே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது. அருணா, அரவிந்த் இருவரும் மகசாசே விருது பெற்றவர்கள். நந்தன், அண்ணா ஹசாரே இருவரும் பத்ம பூஷன் பெற்றவர்கள்.


நந்தன் நீலகேணி, “லஞ்சம் ஊழலை ஒழிக்க லோக்பால் மட்டும் போதவே போதாது. பல முனைகளில் நடவடிக்கை தேவை. அதில் ஒன்று லோக்பால். ஊழலில் இருவகை. ஸ்பெக்ட்ரம் போன்ற மேலிடத்தில் நடக்கும் பெரிய ஊழல்கள். கம்யூனிட்டி சர்ட்டிஃபிகேட்டுக்காக தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் தர வேண்டியிருப்பது போன்ற சில்லறை ஊழல்கள். முதல்வகை ஊழல்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் அன்றாடம் உரசுபவை அல்ல. ஆனால் தொலைநோக்கில் பாதிப்பவை. இரண்டாம் வகை சில்லறை ஊழல்கள் உடனடியாக அன்றாடம் பாதிப்பவை. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறுவிதமான தீர்வுகள் தேவை.  “எல்லா அரசு அலுவல்களும் வெளிப்படையாக நடக்கும் விதத்தில் டெக்னாலஜியைப் பயன்படுத்தினால் சில்லறை ஊழல்களை ஒழிக்கலாம். பெரிய ஊழல்களுக்குக் கடும் சட்டங்கள் தேவை. இதையெல்லாம் உட்கார்ந்து பேசி அலசித் தீர்மானிக்க வேண்டும். சட்டம் இயற்றும் பாராளுமன்றத்தின் நிலைக் குழுக்கள் ஒன்றும் முட்டாள்கள் நிரம்பியது அல்ல. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என்று உலகின் எந்த நாட்டுப் பாராளுமன்றக் குழுவுக்கும் நிகரான அறிவும் உழைப்பும் இங்கேயும் உள்ளது” என்கிறார் நந்தன். “எல்லா அரசியல்வாதிகளும் மோசம் என்ற மிடில் க்ளாஸ் பார்வையைத் தொடர்ந்து ஊக்குவிப்பது ஆபத்தானது” என்பது நந்தன் கருத்து.இதே பார்வையை இன்னொரு கோணத்தில் இருந்து முன்வைக்கிறார் அருணா ராய். வெவ்வேறு மட்டத்தில் இருக்கும் வெவ்வேறு ஊழல்களை ஒழிக்க வெவ்வேறு சட்டங்கள் தேவை. பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.கள் தனி. அரசு ஊழியர்களில் உயர் அதிகாரிகள் தனி, கீழ் மட்டம் தனி. நீதித் துறைக்கு முற்றிலும் தனியான கண்காணிப்பு அமைப்பு தேவை. இதுதவிர ஊழல்களில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தர தனி அமைப்பும் சட்டமும் தேவை. இந்த நான் கையும் எப்படிச் செய்யலாம் என்பது பற்றி அவர் சார்ந்திருக்கும் அமைப்பு விரிவாக அறிக்கைகள் தயாரித்திருக்கிறது. மன்மோகன் அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் போதாது. அண்ணா ஹசாரே குழுவினர் முன்வைக்கும் லோக்பால் இன்னொரு ராட்சத அமைப்பாக மாறிவிடும். இரண்டும் தீர்வல்ல என்பது அருணாராய் கருத்து. 

நந்தன், அருணா இருவருமே அண்ணா ஹசாரே குழுவினரின் பிடிவாத அணுகுமுறையைக் கடுமையாக நிராகரிக்கிறார்கள். மக்கள் கருத்தையும் ஆதரவையும் திரட்ட போராட்டம் நடத்துவதை இருவரும் ஆதரிக்கிறார்கள். ஆனால், தாங்கள் எழுதியிருக்கும் லோக்பாலைத்தான் அரசு ஏற்று நிறைவேற்ற வேண்டும், அதுவும் ஆகஸ்ட் 31க்குள் செய்ய வேண்டும் என்றெல்லாம் அண்ணா ஹசாரே அணியினர் பிடிவாதம் பிடிப்பதை அருணாவும் நந்தனும் (நானும்) ஏற்கவில்லை.அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் எட்டாவது நாளை எட்டும்வரை பிடிவாதமாக இருந்த அவரது அணியினர், மெல்ல தங்கள் பிடிவாதங்களைத் தளர்த்தி வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் எதையும் செய்ய முடியாது என்பதும், தங்கள் கருத்துக்கு, பல மாற்றுக் கருத்துகள் அரசிடம் மட்டுமல்ல, மற்ற பொதுமக்களிடையேயும் இருக்க முடியும் என்பதும் மெல்ல மெல்ல அவர்களுக்கு உறைத்து வருகிறது. முதலில் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்து ஒரு மாதமாகப் பிரசாரம் செய்த டைம்ஸ் நவ், என்.டி.டிவி, ஹெட்லைன்ஸ் டுடே, சி.என். என். ஐ.பி.என். சேனல்கள் எல்லாம் கூட கடந்த ஒரு சில தினங்களாக மாற்றுக் கருத்துகள் இருப்பதை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கின்றன.  சி.என்.என். ஐ.பி.என். ஒரு சமரசத் தீர்வையே முன்வைத்தது. அரசு தன் மசோதாவைத் திரும்பப் பெறவேண்டும். அண்ணா அணியினரும் தங்கள் மசோதாவை மட்டுமே சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட வேண்டும். இன்னொரு ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். அதில் அரசு, அண்ணா அணியினர், எதிர்க்கட்சிகள், எம்.பி.கள், சட்ட அறிஞர்கள், சமூகப் பிரபலங்கள் இடம்பெற வேண்டும். ஒரு மாதத்துக்குள் அந்தக் குழு விவாதித்து முடிவு செய்து தரும் சட்ட முன்வடிவை ஏற்றுக் கொண்டு பாராளுமன்றம் சிறப்புக் கூட்டம் நடத்தி, தீபாவளிக்குள் லோக்பால் சட்டத் தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் தீர்வு யோசனை. இதையேதான் மன்மோகன் அரசு வேறு வடிவத்தில் இத்தனை நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அரசின் லோக்பால் சட்ட முன்வடிவு பாராளுமன்ற நிலைக்குழு முன்பு உள்ளது. பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை நிலைக்குழுவிடம் தெரிவிக்கலாம். அண்ணா ஹசாரே குழுவின் மசோதாவையும் நிலைக்குழுவிடம் தருகிறோம். நிலைக்குழு ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு மாதம் ஆகும். அதன்பின் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றலாம்.

லோக்பால் வந்தால் என்ன லாபம், என்ன நஷ்டம்?  

லோக்பால் ஒன்றும் அண்ணா ஹாசாரேவின் கண்டுபிடிப்பல்ல. உலக அளவில் இந்த அமைப்பு 140 நாடுகளில் இருக்கிறது. உயர் மட்ட ஊழல்கள் பற்றி விசாரிப்பதிலேயே பெரும்பாலும் இவை அக்கறை காட்டுகின்றன. இந்தியாவில் லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதைப் பற்றி நேரு காலத்திலேயே பேசியிருக்கிறார்கள். முதன்முதலில் 1968ல் மக்களவையில் சட்ட முன் வடிவு கொண்டுவரப்பட்டது (அதுதான் அரவிந்த் கேஜரிவால் பிறந்த வருடம்!). மசோதா நிறைவேறும் முன்பே அவையின் ஆயுள் முடிந்துவிட்டது. அதன் பின்னர் ஏழு முறை மக்களவையில் லோக் பால் மசோதாவை அரசு கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவையின் ஆயுள் முடிந்துவிட்டதால் நிறைவேறவில்லை. 1985ல் மசோதா திரும்பப் பெறப்பட்டது. கடைசியாகக் கொண்டு வந்தது 2001ல். ஒவ்வொரு முறையும் மசோதாவை விவாதிக்க நிலைக்குழுவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். நிலைக்குழுக்களும் விவாதித்து, கருத்துசொல்லியிருக்கின்றன.  
 
இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஒரு லோக்பால் போதாது. மாநிலத்துக்கு ஒரு லோகாயுக்தா தேவை என்று சொல்லப்பட்டது. இதையடுத்து 18 மாநிலங்கள் லோகா யுக்தாவை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் நாட்டில் இல்லை. குஜராத்தில் உண்டு. ஆனால், அங்கே ஏழரை வருடமாக லோகாயுக்தா பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை. கர்நாடகத்தில் லோகாயுக்தாவாக இருப்பவர் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. இவர்தான் அண்மையில் பி.ஜே.பி முதலமைச்சர் எடியூரப்பா மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தவர். இவர் அண்ணா ஹசாரேவின் அணியில் இருப்பவர். அண்ணாவின் லோக்பால் மசோதாவை எழுதியதில் முக்கிய பங்காற்றியவர்.லோக்பால் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அண்ணாஹசாரே கேட்பதற்கெல்லாம் முன்பாகவே சோனியா காந்தியின் காங்கிரஸ் 2004லேயே சொல்லிவிட்டது. அது அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அதன்படி இந்த வருடம் ஜனவரியில், ஊழலுக்கெதிரான நடவடிக்கைகளை வகுப்பதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர் குழுவை மன்மோகன் சிங் அமைத்தார். அந்தக் குழுவை லோக்பால் மசோதாவை உருவாக்கும்படி சொன்னார். 
 
அதன்பிறகுதான் அண்ணா ஹசாரே அணியினர் திடீரென்று களத்தில் குதித்தார்கள். மசோதாவை உருவாக்கும் குழுவில் மக்கள் சார்பாக, தாங்களும் இடம்பெற வேண்டுமென்று அண்ணா உண்ணாவிரதம் இருந்தார். உடனே அரசு அவரையும் அவர் சொன்னவர்களையும் குழுவில் சேர்த்துக் கொண்டது. மசோதாவை உருவாக்குவதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அரசு தான் தீர்மானித்த மசோதாவை பாராளுமன்றத்தில் வைத்தது. அண்ணா தங்கள் மசோதாவைத்தான் ஏற்கவேண்டுமென்று உண்ணா விரதம் தொடங்கினார். 
 
இரண்டு மசோதாக்களுக்கும் என்ன வித்தியாசம்? மூன்றாவதாக அருணா ராய் போன்றவர்கள் முன்வைக்கும் மசோதா என்ன சொல்லுகிறது?  
 
பிரதமரை லோக்பால் விசாரிக்கலாமா கூடாதா என்பதில் கருத்து வேறுபாடு பற்றி மட்டுமே எல்லாரும் மீடியாவில் அதிகம் பேசி வருகிறார்கள். பிரதமர் பதவியில் இருந்து விலகியபிறகு அவரை லோக்பால் விசாரிக்கலாம் என்கிறது மன்மோகன் அரசு. பதவியில் இருக்கும்போதே விசாரிக்க வேண்டும் என்கிறது அண்ணா குழு.ஆனால் வித்தியாசங்கள் பிரதமர் பற்றி மட்டுமல்ல. அண்ணா ஹசாரே சொல்லும் லோக்பால், இன்னொரு போட்டி அரசாங்கத்தையே உருவாக்கிவிடும் ஆபத்து இருப்பதாக அதை மறுப்பவர்கள் சொல்கிறார்கள்.அது அப்படித்தானா?
 
(விவாதிப்போம்)
 
  
1.எட்டு நாள் உண்ணாவிரதம் இருந்ததுமே பதறிப் போய் அண்ணாஹசாரேவுடன் பேச்சு நடத்தும் அரசு ஏன் பத்து வருடமாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரம் ஷர்மிளாவுடன் இதே போல பேச்சு நடத்த முன்வருவதே இல்லை? ஷர்மிளாவை மட்டும் தற்கொலை முயற்சி என்று கைது செய்து கட்டாய குளூகோஸ் ஏற்றிக் கொண்டிருப்பது ஏன்? அதை ஏன் அண்ணாவுக்குச் செய்யவில்லை?

2.கறுப்புப் பணம் ஏராளமாக உருவாக்கப்பட்டு, புழங்கிக் கொண்டிருக்கும் சினிமா துறையினருக்கு ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கும் தார்மிகத் தகுதி உண்டா?  

3. இந்தியாவின் மிகப்பெரிய அணு உலைகள் அமைக்கப்படும் கூடன்குளத்தில் அந்தக் கிராம மக்கள் சுதந்திர தினத்தன்று நடத்திய கிராம சபையில் தங்கள் ஊரில் அணு உலை இருக்கக் கூடாது என்று தீர்மானம் நிறை வேற்றி, ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக அரசு அலுவலகத்துக்குச் சென்று ரேஷன் கார்டுகளைத் திருப்பித் தந்த போராட்டத்தை ஏன் தமிழ், ஆங்கில டி.வி.சேனல்கள் முதல் பெரிய பத்திரிகைகள் வரை தேசியப் பிரச்னையாகக் கருதவில்லை?


No comments:

Post a Comment