Search This Blog

Wednesday, August 10, 2011

உணர்வுகளே பார்வையாக....ஒரு முதல்வர்!

விட்டமின் கதை


திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வராக டாக்டர் கே.எம். பிரபு பொறுப்பேற்றுள்ளார். ஒரு வித்தியாசமான மனிதர். இரண்டு கண்களிலும் பார்வை இல்லை. ஆனால் கல்லூரி முதல்வருக்கான அத்தனை பணிகளையும் யாருடைய துணையுமின்றிச் செய்கிறார். இந்தியாவிலேயே முதன் முதலாக இரண்டு கண்களின் பார்வையையும் இழந்த ஒருவரை தமிழக அரசு, கல்லூரி முதல்வராக்கியுள்ளது.  அலுவலகத்தில் உள்ளே நுழைபவரை பெயர் கேட்கிறார் அல்லது அதை மட்டும் உதவியாளர் சொல்கிறார். உடனே அவர் சம்பந்தப்பட்ட பணிகள் பற்றிப் பேசுகிறார். அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் பற்றிச் சொல்கிறார். கோப்புகளில் குறிப்பிட வேண்டியவை பற்றி விளக்குகிறார். அடுத்து அவர் கையெழுத்துப் போடவேண்டிய கோப்புகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. அவற்றைத் தம் முன் இழுத்து வைத்துக் கொண்டு கையெழுத்துப் போடும் இடத்தைக் கண்டுபிடித்து, ஒரு விசிட்டிங் கார்டை கையெழுத்துப் போடும் பகுதியில் வைத்து, அதன் ஓர விளிம்பை ஒரு எல்லையாக வைத்துக்கொண்டு பச்சை நிற மையால் பளிச்சென கையெழுத்திடுகிறார்.

“ஈரோடு அருகே உள்ள கேசரிமங்களம் என்ற ஊர்தான் எனது சொந்த ஊர். சிறு வயதிலேயே ஆங்கிலப் புலமையை நன்கு வளர்த்துக் கொண்டேன். நிறைய புத்தகங்கள் படித்துக் கொண்டே இருப்பேன். 16 வயதில் மாலைக்கண் நோய் ஏற்பட்டு பார்வை மங்கியது. 18 வயதில் பார்வை முற்றிலும் போய் விட்டது. எந்த வைத்தியமும் சரியாகவில்லை. வாழ்க்கை இருளடைந்து விடுமோ என்று எண்ணினேன். ஆனாலும் நம்பிக்கை தளரவில்லை. சென்னை, குருநானக் கல்லூரியில் பி.யூ.சி., கிறிஸ்துவ கல்லூரியில் எம்.ஏ. முடித்தேன். அதில் எனக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. பின்னர் திருவண்ணாமலை அரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கில ட்யூட்டராக சில நாள் வேலை பார்த்தேன். பின்பு எம்.ஃபில் படித்து, சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர், அடுத்து ஹைதராபாத்தில் உயர் கல்வி படித்து சிறந்த மாணவர் என்ற பெயரோடு, நந்தனம் அரசுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்.

இப்படியே போய்க்கொண்டிருக்கும் போது இடையில் பெற்றோர் சொன்னபடி திருமணம். அதன் பின்னர் டாக்டர் பட்டம், பிறகு மாநிலக் கல்லூரியில் வேலை. இதற்கிடையில், ஹரியானா பஹத்பூர் சிங் பெண்கள் பல்கலைக்கழகத்தில், ‘லாங்வேஜ் லேப்’ என்ற புதிய கல்வித்திட்டத்தை உருவாக்கி, எல்லோரும் ஆங்கிலத்தில் சுலபமாகப் பேச வழி வகை ஏற்படுத்தினேன். பலரும் இது ஒரு சாதனை, மைல்கல்... என்றெல்லாம் சொல்கிறார்கள். அதுபற்றி எனக்குத் தெரியவில்லை.கண் பார்வையற்ற என்னை, கல்லூரி முதல்வராக்கி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு என் குடும்பத்தோடு நன்றி சொல்லிக்கொள்கிறேன். அவர் எதிர்பார்த்த திறமையான நிர்வாகத்தை என்னால் தர முடியும். என்னைப்போல் இன்னும் பலர் திறமை இருந்தும் மேலே வர முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தமிழக முதல்வர் உதவ வேண்டும். எதிர் காலத்தில் இன்னும் சிறப்பாகச் செயலாற்றுவேன். பொறுப்புகள் வரும். பெயரெடுப்பேன்,” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தார் பிரபு.


50க்கும் மேற்பட்ட ஆங்கிலப் புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார் பிரபு. இவரது வழிகாட்டுதலில் பலர் டாக்டர் பட்டம் பெற்று இருக்கிறார்கள். ஆங்கிலக் கல்வி, நிர்வாகம், புத்தகம் எழுதுதல் என்றில்லாமல், இந்த மனிதர் சமையலிலும் வெளுத்து வாங்குவாராம். சிறிய அளவில் கூட உப்பு, புளி கூடிவிடாமல் குழம்பில் இருந்து எழுகின்ற வாசனையை நுகர்ந்தே அளவின் தன்மைகளைக் கூறி, கூடுதல் குறைவுகளைச் சரிசெய்து கொள்வாராம். சமையலுக்கென்றே தனியாகப் படித்தாராம் (அதையும் விடவில்லை). உணர்வுகளாலேயே பார்வையைப் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.டாக்டர் பிரபு, பார்வையற்ற மாணவர்களுக்கு மட்டுமல்ல, பார்வையுள்ள மாணவர்களுக்கும் ஓர் முன்னுதாரணம்.

விகடன் 

1 comment:

  1. பார்வையற்ற மாணவர்களுக்கு மட்டுமல்ல, பார்வையுள்ள மாணவர்களுக்கும் ஓர் முன்னுதாரணம்...அறிமுகத்துக்கு நன்றி...நண்பா..

    ReplyDelete