ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன்,
பேரறிவாளன் மூவரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவி பிரதீபா பாட்டீல்
நிராகரித்துவிட்டதை அடுத்து, மரண தண்டனைக்கு எதிரான குரல்கள்
தமிழ்நாட்டில் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.இந்தியாவில் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் நிறைவேற்றுவது
குறைந்து வருகிறது. 2004க்குப் பிறகு இந்திய அளவில் யாரும்
தூக்கிலிடப்படவில்லை.
அதற்கு முந்தைய தூக்கு 1995ல் தமிழ்நாட்டில் ஆட்டோ சங்கரைத்
தூக்கிலிட்டதுதான்.
இந்தியாவில் 2004ல் தூக்கிலிடப்பட்டவர் தனஞ்சய் சாட்டர்ஜி. தாம் வேலை
பார்த்த வீட்டுச் சிறுமியைப் பாலியல் வன்முறை செய்து கொன்றதாகத்
தண்டிக்கப்பட்டவர்.
அவரது கருணை மனுவை அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நிராகரித்தபின்
தனஞ்சய் தூக்கிலிடப்பட்டார். கலாம் தன் முன்பு இருந்த 55 கருணை
மனுக்களில்,
இருபது வழக்குகளின் தண்டனையை மறு பரிசீலனைக்கு உட்படுத்தும்படி அரசுக்குக்
கோப்பினைத் திருப்பி அனுப்பினார். இதர கருணை மனுக்கள் மீதும் முடிவு
எடுக்காமல் தள்ளிப்
போட்டார். பல குடியரசுத் தலைவர்கள் இப்படித்தான் செய்து வந்தார்கள். மரண
தண்டனையைச் சட்டத்திலிருந்தே நீக்குவதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு
இல்லை.
அதைப் பாராளுமன்றம்தான் செய்ய வேண்டும். குடியரசுத் தலைவி பிரதீபா
பாட்டீல் இதுவரை 20 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை ஏற்று அவர்களின்
தூக்குத் தண்டனையை ரத்து செய்திருக்கிறார்.
பிரதீபா பாட்டீல் ராஜீவ் வழக்கில் மரண தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை
நிராகரிப்பதற்கு முன்பு, இன்னும் இருவரின் கருணை மனுக்களையும்
நிராகரித்திருக்கிறார்.
ஒருவர் பஞ்சாப் பேராசிரியர் தேவேந்திர சிங் புல்லார். இளைஞர் காங்கிரஸ்
தலைவர் பிட்டாவைக் கொலை செய்ய புல்லார் சதி செய்ததன் அடிப்படையில்
காலிஸ்தான் தீவிரவாதிகள்
தாக்குதல் நடத்தியபோது பிட்டா தப்பினார். வேறு பலர் இறந்தனர். இந்த
வழக்கில் புல்லாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிரதீபா பாட்டீல் மன்னிக்க மறுத்த இன்னொருவர் அசாமைச் சேர்ந்த மகேந்திர
தாஸ். இவர் தொழிற்சங்க விரோதத்தினால் ஒருவரை பட்டப் பகலில் மார்க்கெட்டில்
தலையை
வெட்டிவிட்டு வெட்டிய தலையுடன் போலீசில் சரணடைந்தவர். கருணை மனுக்கள்
நிராகரிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இவர்கள் இன்னும்
தூக்கிலிடப்படவில்லை.
காரணம், அனுபவமுள்ள தூக்குப் போடுபவர் யாரும் கிடைக்காததுதான். பல
சிறைகளில் அந்தப் பதவி ஆளில்லாமலே இருக்கிறது. இந்தியாவும் இதர நாடுகளைப்
போல மரணதண்ட
னையை அதிகாரபூர்வமாகவே ஒழித்துவிடலாம். அதுதான் சரி.
இப்போது தமிழ் நாட்டில் மரண தண்டனையை எதிர்த்துக் குரல் எழுப்புபவர்கள்
ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக் கப்பட்டிருப்போர் சார்பாக எழுப்புகிறார்கள்.
நெடுமாறன்,
வைகோ, ராமதாஸ், திருமாவளவன், சீமான் என்று வெவ்வேறு அரசியல் நடத்திக்
கொண்டிருக்கும் இவர்களை ஒன்றுபடுத்துவது மரண தண்டனைக்கெதிரான கோட்பாட்டு
அறம் அல்ல. இவர்கள் எல்லாரும் விடுதலைப் புலிகள் சார்பாளர்கள் என்பதுதான்.
விடுதலைப் புலிகள் ஈழத்தில் சுமார் பத்தாண்டுகள் சுதந்திரமாக ஆட்சி நடத்திய
போது, கவிஞர் செல்வி போன்றவர்களுக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றியதை
இவர்கள் கண்டுகொண்டதே இல்லை. இந்தியாவில் 2004ல் கொல்கத்தாவில் தனஞ்சய்
சாட்டர்ஜியைத் தூக்கிலிட்டபோது இவர்கள் யாரும் குரல் எழுப்பவில்லை.
தமிழ்நாட்டிலேயே ஆட்டோ சங்கரின் தூக்கின்போதும் இவர்கள் மரண தண்டனைக்கு
எதிரான இயக்கம்
நடத்திவிடவில்லை.
அடுத்தபடியாக தர்மபுரியில் இரண்டாயிரமாவது ஆண்டில் ஜெயலலிதாவுக்கு ஹோட்டல்
ப்ளசண்ட் ஸ்டே வழக்கில் தண்டனையை நீதிமன்றம் அறிவித்ததும், தெருக்களில்
வெறியாட்டம் ஆடி, கோவை விவசாயப் பல்கலைக்கழக பஸ்சை எரித்து அதிலிருந்த
கல்லூரி மாணவியரில் மூவர் மரணத்துக்குக் காரணமான அ.தி.மு.க.வினர்
ராஜேந்திரன்,
முனியப்பன், நெடுஞ்செழியன் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டால்,
அப்போது மரண தண்டனைக்கு எதிரான குரல்களில் இப்போது ஒலிக்கும் குரல்களில்
எத்தனை
தொடர்ந்து கேட்கும் என்பதும் சந்தேகம்தான். தம் கட்சியினருக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனைக்கு எதிராகக்
குடியரசுத் தலைவரிடம் கட்சி சார்பில் அ.தி.மு.க எம்.பி. களைக் கருணை மனு
தரச் செய்த ஜெயலலிதா,
ராஜீவ் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பாக இதுவரை முணு
முணுத்தது கூட இல்லை. ஆனால் ஈழப் பிரச்னையில் திடீர் என்று ஆர்வம்
காட்டிவரும் அவர்
இதிலும் தலையிட்டு தூக்குத் தண்டனையை நிறுத்திவிடுவார் என்று தவறாகப் பல
தமிழ் தேசியவாதிகளும் புலி ஆதரவாளர்களும் நம்புகிறார்கள். பஸ் எரித்த
அ.தி.மு.க.வினரின்
கருணை மனுவுக்கு வலு சேர்ப்பதற்காக ஜெயலலிதா, இனி இதிலும் குரல்
கொடுத்தால்தான் உண்டு. மற்றபடி வாய்ப்பு இல்லை.
எப்போதுமே யாரையாவது தவறாக நம்பிக் கொண்டிருப்பதே தமிழ் தேசியர்களின்
வழக்கமாகி விட்டது. ஒரு கட்டம்வரைக்கும் கருணாநிதியை நம்பிக்
கொண்டிருந்தார்கள்.
21 வருடங்களாகச் சிறையில் இருந்துவரும் ராஜீவ் வழக்கின் ஆயுள் தண்டனைக்
கைதியான நளினிக்கு காந்தி, பெரியார், அண்ணா பிறந்த நாட்களில் மன்னிப்பு
கொடுத்து
விடுவிக்க கருணாநிதி முன்வரவே இல்லை. ஏழே வருடம் சிறையில்
இருந்தவர்களையெல்லாம் அவர் விடுவித்தார். அழகிரியின் ஆதரவாளர்களான கொலைக்
குற்றவாளிகளை
விடுவித்தார். அவரவர் அரசியல் கொள்கைகள், நியாயங்கள், சார்புகள் அடிப்படையில்தான் மரண
தண்டனைக்கு எதிர்ப்போ ஆதரவோ இங்கே பேசப்படுகிறது என்பது வருத்தமான விஷயம். ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை கிடையாது. இது வரை உலகில்
135 நாடுகளில் மரண தண்டனை சட்டத்திலிருந்தே நீக்கப்பட்டு விட்டது.
அங்கெல்லாம்
கொலைக் குற்றங்கள் பெருகி விடவில்லை. தொடர்ந்து மரண தண்டனையை படுதீவிரமாக
நிறைவேற்றிவரும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் குற்றங்கள் குறைந்து
விடவும்
இல்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மரண தண்டனை கூடவே கூடாது என்று சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் மனிதர்கள்
எல்லாரும் முழுக்க முழுக்கச் சரியாகச் செயல்படக்கூடியவர்கள் அல்ல
என்பதுதான்.
அரசு அமைப்பு, நீதித்துறை அமைப்பு, காவல் துறை அமைப்பு எல்லாமே மனிதர்களால்
நிர்வகிக்கப்படுபவை. மனிதர்கள் ஒரு போதும் தவறே செய்யமுடியாதவர்கள் என்று
ஒருபோதும்
அறிவியல்ரீதியாக நிரூபிக்க இயலாது.வழக்கை விசாரிப்பவர்களோ, நீதி வழங்கு
பவர்களோ தவறு செய்திருந்தால், என்ன ஆகும்? மீதி எந்தத் தண்டனையையும் விட
மரண
தண்டனை கொடூரமானது. அதில் ஏற்படும் இழப்பை ஒருபோதும் சரி செய்யவே
முடியாது. அதிகமாக மரண தண்டனைகளை நிறைவேற்றுகிற அமெரிக்காவில், மறுபரிசீலனையில் 139
கைதிகள் மரண தண்டனையிலிருந்து தப்பித்திருக்கிறார்கள். மறுபரிசீலனை
இல்லையென்றால்? அவர்களும் கொல்லப்பட்டிருப்பார்கள். எனவே சட்டப்படி
கொலையை, தண்டனையாகத் தரும் அதிகாரம் ஓர் அரசுக்கு இருக்குமானால் அது மிகப்
பெரிய
ஆபத்தில் முடியும் வாய்ப்பே இருக்கிறது. அதன் விருப்பு வெறுப்புகளெல்லாம்
தண்டனையிலும் பிரதிபலிக்கலாம். இன்றும் அமெரிக்காவில் அதிகமாக மரண
தண்டனைக்கு
உள்ளாகுபவர்கள் கறுப்பினத்தவரும் ஏழைகளும்தான்.
இருபது வயதில் கைதாகி 21 வருடங்களாக தம் வாழ்நாளில் பாதிக்கும் மேலாக
சிறையிலேயே கழித்திருக்கும் பேரறிவாளன் செய்ததாகச் சொல்லப்படும்
குற்றமெல்லாம் ராஜீவ் கொலையாளிகளுக்கு இரண்டு பேட்டரி செல், ஒரு கார்
பேட்டரி, ஒரு மோட்டார்
சைக்கிள் வாங்கிக் கொடுத்தது மட்டும் தான் என்று சொல்லப்படுகிறது. இதற்குப்
போய் மரண தண்டனையா என்ற வாதம் நமக்குத் தேவையற்றது. பேரறிவாளன் நேருக்கு
நேர்
ராஜீவ் மீது குண்டு வீசினாலும் கூட மரண தண்டனை தருவதை நான் ஆதரிக்கவில்லை.
யாருக்கும் எப்போதும் மரண தண்டனை கூடாது என்பது என் கருத்து.கொலை செய்தவருக்கு சட்டத்தின் பெயரால் மரண தண்டனை விதித்து அவரைக்
கொல்வதும் இன்னொரு கொலைதான். ஒருவர் உயிரை எடுக்க இன்னொருவருக்கு உரிமை
இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், அது மனிதர்களுக்கு மட்டு மல்ல,
மனிதர்களால் உருவாக்கப்படும் அரசு போன்ற அமைப்புகளுக்கும் பொருந்தும். கொலை
செய்வோருக்கு
மரண தண்டனை விதித்தால்தான் அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்ய மற்றவர்கள்
பயப்படுவார்கள் என்ற வாதம் உலகம் முழுவதும் தவறென்று
நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஒரு
கொலைக்கு, பதில் கொலை என்பது ‘கண்ணுக்குக் கண்’ சித்தாந்தம். அப்படிப் பழி
வாங்கிக் கொண்டே போனால் முழு உலகமும் குருடாகிவிடும் என்பார் காந்தி. எனவே
என்னையே ஒருவர் கொலை செய்தாலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று
சொல்வதுதான் உண்மையான மரண தண்டனை எதிர்ப்பாகும்.
இந்த வாரப் பூச்செண்டு!
1. எப்போதும் நான் மரண தண்டனையை ஆதரிக்கமாட்டேன் என்று சொல்லியிருப்பதற்காக தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு இ.வா.பூ.
2. உயிர்களுக்குப் பேராபத்து ஏற்படுத்திவரும் பூச்சிக் கொல்லி
எண்டோசல்ஃபானை தமிழகத்தில் தடை செய்யப் போவதாக அறிவித்திருக்கும் ஜெயலலிதா
அரசுக்கு இ.வா.பூ.
இந்த வார ஆச்சர்யம்!
பணக்காரர்கள் எப்போதும் வரிகட்ட விரும்ப மாட்டார்கள். வரியைக் குறைக்கும்
அரசாங்கங்களைத் தான் அவர்களுக்குப் பிடிக்கும். இதுதான் உலகம் முழுவதும்
எப்போதும் இருந்து
வரும் நியதி. இந்த வார ஆச்சர்யமாகத் திகழ்பவர் உலகப்பெரும் பணக்காரரான
வாரன் பஃபெ(ட்). உலகத்தின் மூன்றாம் பெரும் பணக்காரரான வாரன் ஏற்கெனவே தாம்
இறப்பதற்கு
முன் தம் சொத்தில் பாதியையாவது பொதுநலனுக்கு நன் கொடையாகக் கொடுத்துவிடப்
போவதாக அறிவித்திருப்பவர்.
தற்போது அமெரிக்கா கடன் சுமையில் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில்,
அதைச் சமாளிக்க அமெரிக்க அரசு பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும்
என்று
வாரன் பஃபெட் சொல்லியிருக்கிறார். பணக்காரர்கள் ஏதோ அழிந்து வரும்
அபூர்வமான உயிரினம் போலவும் அதைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக விதவிதமான
சலுகைகளை
அமெரிக்க நாடாளுமன்றம் கொடுத்து வருவதாகவும் அவர் கிண்டல்
செய்திருக்கிறார்.
சென்ற வருடம் தாம் கட்டிய வரி பெரும் தொகையென்றபோதும், அது தன்
வரிவிதிப்புக்கான வருவாயில் வெறும் 17.4 சதவிகிதம் தான் என்றும் வாரன்
சொல்லியிருக்கிறார்.
ஆனால் தம்மிடம் வேலை பார்க்கிற இருபது பேர் 41 சதவிகிதம் வரை வரி
செலுத்தியிருப்பதை வாரன் சுட்டிக்காட்டினார்.
மிக அதிக வருமானம் உள்ள நானூறு அமெரிக்கர்கள் 19 வருடங்களுக்கு முன்னால்
29 சதவிகிதம் வரியாகச் செலுத்தினார்கள். இப்போது அவர்கள் வருமானம் ஆறு
மடங்கு அதிகமாகிவிட்டது. ஆனால் வரிவிகிதம் குறைந்து 21 சதவிகிதமாகி விட்டது
என்கிறார் வாரன். மாதச் சம்பளக்காரர்கள்தான் அதிக வரி செலுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.புதிய வரிவிகிதங்களை முடிவு செய்யப் போகும் 12 பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கு வாரன் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். “பத்து
லட்சம் டாலருக்கு மேல் சம்பாதிக்கும்
சுமார் இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கும் வரியை உயர்த்துங்கள். ஒரு கோடி
டாலருக்கு மேல் சம்பாதிக்கும் சுமார் 8500 பேருக்கும் வரியைக் கூட்டுங்கள்.
சாதாரண
சம்பளக்காரர்களுக்கு வரி ஏற்றாதீர்கள்” என்று கேட்டிருக்கிறார் வாரன்.
அதிக வரி விதித்தால், பணக்காரர்கள் தொழிலிலும் வியாபாரத்திலும் முதலீடு
செய்வதை நிறுத்திவிடுவார்கள் என்பது பொய் என்று சொல்லும் வாரன், இருபது
முப்பது
வருடங்களுக்கு முன்னால் தமக்குப் பெரும் வரி விதிப்பு இருந்தபோதும், தாம்
பெரும் முதலீடுகள் செய்து லாபமடைந்ததை நினைவுபடுத்துகிறார்.வாரன் குரலை
ஒபாமா கேட்கிறாரோ
இல்லையோ இந்தியப் பணக்காரர்களும் மன்மோகன்சிங்கும் கேட்டால் சரி.
தயவு செய்து அவர்களை மீட்க உதவுங்கள்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அன்பு அண்ணானுக்காக ஆசையாய் ஒரு மடல்
என்ன கொடுமை சார்!
ReplyDelete