Search This Blog

Thursday, August 25, 2011

டெல்லி சலோ! - அரசு மிரள்கிறது

தேசம் திரள்கிறது... அரசு மிரள்கிறது

ண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவான நாடு தழுவிய மக்கள் போராட்டங்கள், மாற்று அரசியலுக்கான புதிய பாதைகளைத் திறந்துவிடும் வாசல். விரக்தியின் விளிம்பில் இருக்கும் இந்தியா, இன்னொரு காந்தியை எதிர்பார்க்கிறது. 

இந்த சுதந்திர தின விழா வில், தன் உரையில் தேசப் பிதா காந்தியை நினைவுகூர மறந்துபோனார் மன்மோகன் சிங். இந்தியாவின் 65-வது சுதந்திர தின வரலாற்றில் பிரதமரின் உரையில் காந்தி விடுபட்டுப் போனது இதுவே முதல் முறை. ஆனால், காந்தியின் இடத்தை - பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் - ஒரு காந்தியவாதி பிடித்திருந்தார். பிரதமருடைய சுதந்திர தின உரையின் முக்கிய கவனத்தை அண்ணா சுவீகரித் துக்கொண்டார். ''ஊழலை ஒழிக்க அரசிடம் மந்திரக்கோல் ஏதும் இல்லை. 'லோக்பால்’ தேவைதான். ஆனால், எந்த வகையில் அது இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்'' என்று தன்னு டைய உரையில் குறிப்பிட்டார் மன்மோகன். அதற்கு முந்தைய நாள் இரவு, குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலும், இதே கருத்துதான் இடம் பெற்று இருந்தது. ''ஊழல், புற்றுநோயைப் போன்றது. அதை ஒழிக்க ஒரே ஒரு மருந்தோ, தீர்வோ இருக்க முடியாது. நாட்டுக்கு உகந்த சட்டம் இயற்றும் வல்லமையும் அதிகாரமும்கொண்டது நாடாளுமன்றம். அதன் பணிகளில் வெளியாட்கள் குறுக்கிட முடியாது. நாடாளுமன்றம் போன்ற மக்கள் பிரதிநிதிகளின் அமைப்புகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலோ, கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலோ, அறிந்தும் அறியாமலும்கூட எவரும் ஈடுபடக் கூடாது'' என்றார் பிரதிபா பாட்டீல்கொல்கத்தா வில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரணாப் முகர்ஜியோ, ''அண்ணா, அரசுக்கு மட்டும் சவால் விடவில்லை; ஒட்டுமொத்த நாடாளு மன்ற அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கு கிறார்'' என்றார். நாட்டை ஆளும் மன்றங்களுக்கு மக்கள்தான் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கத்தான் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கிறார்கள். ஆனால், அவர்களால் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க முடியவில்லை என்றால், அவர்களை எதிர்த்துப் போராடுவதும் மக்களின் கோரிக்கையை வலியுறுத்துவதும் எப்படித் தவறு ஆகும்?அண்ணா தன்னுடைய போராட்டத்தை ஊழலுக்கு எதிரானதாகத் தொடங்கினார். அரசு அதை முதலில் தனக்கு எதிரானதாக மாற்றிக்கொண்டது. அடுத்து, நாடாளுமன்ற அமைப்புக்கு எதிரானதாக மாற்ற முற்பட் டது. கடைசியில், அது இன்றைய அரசிய லுக்கே எதிரானதாக மாறிக்கொண்டு இருக்கிறது.போராட்டத்துக்கு முன்னரே அநீதியாக அண்ணாவைக் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது அரசு. மக்கள் சிறைக் கதவுகளைப் பூக்களால் அலங்கரித்து அந்த இடத்தையே போராட்டக் களமாக்கினர். திஹார் சிறையில் இருந்து அண்ணா விடுவிக்கப்பட்டபோது, டெல்லி யில் மழை கொட்டியது. மக்கள் குடை கூடப் பிடிக்காமல், தேசியக் கொடிகள் ஏந்தி அந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

அண்ணா உண்ணாவிரதம் தொடங்கி அன்றைக்கு மூன்றாவது நாள். ராஜ்காட்டில் காந்தி சமாதியில் நுழைந்தபோது, கிட்டத் தட்ட அவர் ஓடினார். அவருடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், தடுமாறினார்கள் காவலர்கள். போராட் டக் களமான ராம்லீலா மைதானத்தின் மேடையில் ஏறியபோது, ''எனக்குக் கொஞ்சம் சோர்வாக இருந்தது. அவ்வளவுதான். அதுவும், தேசியக் கொடியுடன் திரண்டு இருக்கும் உங்களைப் பார்க்கும்போது போய்விட்டது. நான் முக்கியம் இல்லை. போராட்டமே முக்கியம்'' என்றார் அண்ணா. பேசி முடிக்கும்போது, மேடையில் நின்று தேச பக்தி முழக்கங்களின் முதல் பகுதியை அவர் முழங்க, அடுத்த பகுதியைக் கீழே நிற்கும் கூட்டம் நிறைவு செய்தது: ''வந்தே... மாதரம்!''; ''இன்குலாப்... ஜிந்தாபாத்!''; ''பாரத் மாதா கீ... ஜே!''அண்ணாவிடம் எந்த உத்வேகத்தைப் பார்க்க முடிகிறதோ, அதே உத்வேகத்தை தேச எல்லைகளைக் கடந்து நடக்கும் அவருக்கு ஆதரவான போராட்டங்களிலும் பார்க்க முடிகிறது.


 அண்ணா ஓர் எளிய மனிதர். அவர் ஒரு பெரிய சித்தாந்தவாதி அல்ல. நிச்சயம் அவர் இன்னொரு காந்தி அல்ல. நிச்சயம் இன்னொரு ஜெயப்ரகாஷ் நாராயணனும் அல்ல. அண்ணா ஆதரவுப் போராட்டங்களில் குவிவோர் யார்? அவர்கள் ஓய்வுபெற்ற அதிகாரிகளாக இருக் கலாம்; பள்ளி, கல்லூரி மாணவர்களாக இருக்கலாம்; வீட்டு வேலை கள் நீங்கலாக எந்த அரசியலும் தெரியாத குடும்பப் பெண்களாக இருக் கலாம்; 'ஃபேஸ்புக்’கில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு பர்கர் சாப்பிடப் போகும் கணினிப் பொறியாளர்களாக இருக்கலாம்; கூலித் தொழிலாளிகளாக இருக்கலாம்... அவர்கள் எவரும் ஆட்சி அதிகாரத்தின் மையத்தில் இருப்பவர்கள் அல்ல; விளிம்பில் இருப்பவர்கள். இந்தச் சிறுபான்மைக் கூட்டத்தால் என்ன மாற்றத்தை உருவாக்கிவிட முடியும்?இந்தப் போராட்டக்காரர்கள் பலவீனமான சிறுபான்மைக் கூட்டமாக இருக் கலாம். ஆனால், ஜனநாயகத்தில் அவர் களும் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். இந்தப் போராட்டங்கள் இந்தியாவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடக் கூடியவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரு மகத்தான மாற்றத்துக்கான அடித்தளத்தை இந்தப் போராட்டங்கள் உருவாக்கத் தொடங்கி இருக்கின்றன. நிர்வாகச் சீர்கேடுகளாலும் முறைகேடுகளாலும் நிரம்பி வழியும் இந்திய அரசு மீதான விரக்தியையும், கோடீஸ்வரர்களாலும் கிரிமினல்களாலும் நிரம்பி வழியும் அரசியல் கட்சிகள் மீதான ஏமாற்றத்தையும் இந்தப் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. ஒரு நல்ல தலைவ னுக்கான தேவையை அறைகூவல் விடுக் கின்றன. ஊழலோடு பின்னிப் பிணைந்த மரபார்ந்த அரசியலுக்கு எதிரான மனோ பாவத்தை மக்களிடம் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.

இந்தியாவில் அரசியல் கட்சிகளை அல்லது அமைப்புரீதியிலான இயக்கங்களைத் தாண்டி இதற்கு முன் இத்தகைய போராட்டங்கள் நடந்தது இல்லை. இப்போது நடக்கிறது. அரசியல் அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு, சென்னை மெரினா வில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம் என்றாலோ, ஊழலுக்கு எதிராக ஒரு போராட்டம் என்றாலோ... இப்போது ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். யார் இந்தக் கூட்டத்தை நடத்துகிறார்கள் என்று மக்கள் கேட்கவில்லை. யார் கூட்டத்தில் பேசுகிறார்கள் என்று மக்கள் பார்க்கவில்லை. தார்மீக ரீதியாகத் தங்களுடைய எதிர்ப்பையோ ஆதரவையோ தெரிவிக்க வருகிறார்கள் மக்கள்.ஊழல் என்பது அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகிவிட்ட ஒரு சமூகத்தில், இது நல்ல அறிகுறி. அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் இது ஒரு பெரும் எச்சரிக்கை.ஓர் அரசாங்கத்தின் மீது இவ்வளவு வெறுப்பு இருக்க முடியுமா என்கிற அளவுக்கு மக்களிடம் வெறுப்பைச் சம்பாதித்து இருக்கிறது காங்கிரஸ் அரசு.

ஆனாலும், நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளை அமைப்புகளை வைத்து இருக்கும் எதிர்க் கட்சிகளால் ஏன் ஒரு போராட்டத்தைக்கூட மக்கள் போராட்டமாக மாற்ற முடியவில்லை? ஓர் அண்ணாவால் முடியும் காரியத்தை ஏன் ஓராயிரம் அரசியல் அமைப்புகளால் சாதிக்க முடிய வில்லை?அண்ணா இன்னொரு காந்தியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியா இன்னொரு காந்திக்கான தேடலைத் தொடங்கிவிட்டது. 'மெழுகுவத்திப் போராளி’களால் என்ன செய்ய முடியும் என்று கேட்பவர்கள் அல்ஜீரிய புரட்சி வரலாற்றைப் படிக்கக் கடவதாக!


விகடன்

No comments:

Post a Comment