புதிய
பொருளாதாரக் கொள்கை எல்லாம் பழையதாகிவிட்ட நிலையில் தற்போது அடுத்தகட்ட
சீர்திருத்தத்துக்கு நம்நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதன் ஓர்
அங்கமாக நிலங்களை கையகப்படுத்துவது முதல் நிதித் துறை வரையிலான பல
சீர்திருத்தங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது மத்திய அரசு. என்னென்ன
சீர்திருத்தங்கள் வரவிருக்கின்றன, அவற்றால் என்னென்ன மாற்றங்கள், பயன்கள்
என்பதை எல்லாம் துறை வாரியாகப் பார்ப்போம்.
வங்கித் துறை!
மாற்றம்!
புதிய தனியார் வங்கிகளுக்கு அனுமதி கொடுக்க மத்திய அரசு
முடிவெடுத்திருக்கிறது. இதற்காக மத்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளிலும்
மாற்றம் வரவிருக்கிறது.
விளைவு!
அதிக மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
யாருக்கு லாபம்?
ரிலையன்ஸ் கேபிட்டல், மஹிந்திரா ஃபைனான்ஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட்
ஃபைனான்ஸ், எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் வங்கிகளாக மாற
நிறைய வாய்ப்புள்ளது.
மைக்ரோ ஃபைனான்ஸ்.
மாற்றம்!
தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ்
நிறுவனங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு
திட்டமிட்டிருக்கிறது.
விளைவு!
அனைத்து மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின்
கட்டுப்பாட்டுக்குள் வரும். வங்கிகளுக்கு இருப்பது போல, மைக்ரோ ஃபைனான்ஸ்
நிறுவனங்களுக்கும் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள்
இருக்கும்.
யாருக்கு லாபம்?
அனைத்து மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கும் இது நல்ல செய்திதான்.
குறிப்பாக சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள எஸ்.கே.எஸ். மைக்ரோ
ஃபைனான்ஸுக்கு.
இன்ஷூரன்ஸ்.
மாற்றம்!
இன்ஷூரன்ஸ் துறையில் தற்போது 26% வரை அந்நிய முதலீடு
அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை 49 சதவிகிதமாக அதிகரிக்கும் பரிந்துரை
நாடாளுமன்ற அனுமதி கிடைக்காமல் அப்படியே கிடக்கிறது. விரைவில் இந்த
பரிந்துரைக்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
விளைவுகள்!
இந்திய இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும். இன்னும்
நிறைய மக்களுக்கு இன்ஷூரன்ஸ் சென்றடைய வாய்ப்பிருக்கும். பொதுத் துறை
ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஐ.பி.ஓ. வர நிறைய வாய்ப்புண்டு.
யாருக்கு லாபம்?
அனைத்து ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு.
பென்ஷன் ஃபண்ட்!
மாற்றம்!
அனைத்து பென்ஷன் ஃபண்டுகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை
பி.எஃப்.ஆர்.டி.ஏ-வுக்கு (pension fund regulatory and development
authority) வழங்குவது. இம் மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று
சட்டமாகும் பட்சத்தில், பென்ஷன் ஃபண்டுகளை இந்த அமைப்பு மட்டுமே நிர்வகிக்க
முடியும்.
விளைவு!
பென்ஷன் ஃபண்டுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாது.
யாருக்கு லாபம்?
அரசுத் துறை பி.எஃப்.ஆர்.டி.ஏ.வுக்கு.
நிலம் கையகப்படுத்தும் மசோதா!
மாற்றம்!
வளர்ச்சிப் பணிகளுக்கு மக்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தும்போது
என்னென்ன விதிமுறைகள் நடைமுறைப்படுத்த வேண்டும், எவ்வளவு இழப்பீடு கொடுக்க
வேண்டும் என்பது குறித்த புதிய மசோதாவை கொண்டு வரப் போகிறது மத்திய
அரசாங்கம்.
விளைவு!
இடம் நகர்ப்புறமாக இருக்கும் பட்சத்தில் சந்தை மதிப்பைவிட இரண்டு மடங்கு
இழப்பீடு கிடைக்கும். இதுவே கிராமப்புறமாக இருக்கும் பட்சத்தில் சந்தை
மதிப்பைவிட ஆறு மடங்கு இழப்பீடு கிடைக்கும். இதனுடன் இடமாற்றத்துக்கு ஆகும்
செலவு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, முதியவர்கள் எனில் 20
வருடங்களுக்கு பென்ஷன் உட்பட நில உரிமையாளருக்கு இன்னும் நிறைய சலுகைகள்
கிடைக்கும்.
யாருக்கு நஷ்டம்?
புதிதாக தொடங்கப் பட இருக்கும் தொழிற் சாலைகளுக்கு.
சுரங்கம் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) மசோதா!
மாற்றம்!
சுரங்க நிறுவனங்கள், தங்களுடைய கடந்த வருட லாபத்தில் 26 சதவிகிதத்தை அந்த
பகுதியில் இருக்கும் மக்களுக்காக சுரங்க வரி என்ற பெயரில் செலவிட வேண்டும்.
சுரங்கம் அல்லாத நிறுவனங்கள், அந்த பகுதி மக்களுக்கு கொடுக்கும் ராயல்டி
தொகையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்.
விளைவு!
சுரங்கம் மற்றும் தாதுக்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் நிகர லாபம் பாதிக்கப்படும்.
யாருக்கு நஷ்டம்?
கோல் இந்தியா, என்.எம்.டி.சி., இந்துஸ்தான் ஜிங்க் போன்ற நிறுவனங்கள்.
ஜி.எஸ்.டி. மசோதா!
மாற்றம்!
அனைத்து வகையான வரிகளையும் நீக்கிவிட்டு ஒரே வரிவிதிப்பு கொண்டு வருவதற்கான
முயற்சி இது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலாகும் என்று
சொல்கிறார்கள்.
விளைவு!
பொருட்களின் விலை சிறிது குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால், எஃப்.எம்.சி.ஜி. ஆட்டோ துறைகளில் நுகர்வு அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.
யாருக்கு லாபம்?
ஐ.டி.சி., இந்துஸ்தான் லீவர், மேரிக்கோ, கோல்கேட் பால்மோலிவ் போன்ற பல நிறுவனங்கள்.
மாநில மின் வாரிய சீர்திருத்த மசோதா!
மாற்றம்!
பல்வேறு மாநில மின் வாரியங்கள் 1,500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருக்கின்றன.
இந்த தொகையில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம். மத்தியபிரதேசம், ராஜஸ்தான்,
ஹரியானா போன்ற மாநிலங்கள் மட்டும் 70 சதவிகிதத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.
தவிர, வளர்ந்த நாடுகளில் பகிர்மான இழப்பு 5% எனில், இந்தியாவில் 30% வரை
இருக்கிறது. இதை குறைக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
விளைவு!
மாநில வாரியங்கள் தாங்களாக கட்டணங்களை உயர்த்துவதற்கான அனுமதி கிடைக்க
வாய்ப்புள்ளது. மேலும், மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கு
வாய்ப்பு ஏற்படும்.
யாருக்கு லாபம்?
பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ரூரல் எலெக்ட்ரி பிகேஷன் கார்ப்பரேஷன், எல்
அண்ட் டி, ஜெயப்பிரகாஷ் பவர், அதானி பவர் போன்ற நிறுவனங்களுக்கு.
எண்ணெய் நிறுவனங்கள்!
மாற்றம்!
கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் எண்ணெய் நிறுவனங்கள் அதிக
நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இதை தடுக்க சில திட்டங்களை மத்திய அரசு
கொண்டுவர முயற்சித்து வருகிறது.
விளைவு!
ரயில்வே துறைக்கு கொடுக்கும் டீசலை 30 பைசா வரை உயர்த்துவது.
விமானங்களுக்கு கொடுக்கும் எரிபொருளை சந்தை விலைக்கே விற்பது.
வீடுகளுக்கு கொடுக்கப் படும் மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஒரு ஆண்டுக்கு 6 முதல் 8 ஆக குறைப்பது.
ஆறு லட்ச ரூபாய்க்குமேல் ஆண்டு சம்பளம் வாங்கு பவர்களுக்கு மானிய விலை கேஸ் சிலிண்டரை நிறுத்துவது.
எண்ணெய் நிறுவனங் களுக்கு மானியங்கள் கொடுக்காமல், நேரடியாக மக்களுக்கே கொடுப்பது.
யாருக்கு லாபம்?
ஐ.ஓ.சி., ஆயில் இந்தியா, பி.பி.சி.எல்., ஹெச்.பி.சி.எல், போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு.
இத் துறை தவிர நிலக்கரி, கேபிள் டிவி., டெலிகாம், உரம் போன்ற பல்வேறு
துறைகளில் மாற்றங்கள் காத்திருக்கின்றன. ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில்
நடப்பதைப் பார்த்தால் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வர இன்னும் சில காலம்
பிடிக்கும் என்றே தோன்றுகிறது.
நன்றி - விகடன்
அனைத்து பொருளாதார பாராளுமன்ற
ReplyDeleteதீர்மானங்கள் குறித்த தகவலும்
அதனால் உண்டாகும் விளைவுகள் குறித்த
பதிவு மிக மிக அருமை
பயனுள்ள பதிவு பதிவிட்டமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்