Search This Blog

Saturday, August 20, 2011

ஊழலுக்கு எதிரான அண்ணா போராட்டம் - சிலிர்த்து எழுந்தது இந்தியா!


து இன்னொரு சுதந்திரப் போராட்டம்’ - அண்ணா ஹஜாரே உண்ணா​​விரதத்தைத் தொடங்கும் முன் தன் போராட்டத்தை இப்படி வர்ணித்தபோது, அவர் சற்று அதிகமாகவே பேசுவதாகக் கூறியவர்கள் உண்டு. ஆனால், நேர்மையாகச் செயல்படுபவர்களுக்கு இந்த நாடு எவ்வளவு மோசமான எதிரியாக மாறி இருக்கிறது என்பதையும், தங்கள் பதவி​களைக் காப்பாற்றிக்​கொள்ள நம்முடைய ஆட்சி​யாளர்கள் எந்த அளவுக்கு அடக்கு​முறை​களைப் பிரயோகிப்பார்கள் என்பதையும், அண்​ணாவின் கைது அவர்​களுக்குச் சொல்லி இருக்கும்!

கடந்த இரு வாரங்​களாகவே டெல்லி ஆட்சி​யாளர்​களின் முழுக் கவனமும் அண்ணா மீதுதான் இருந்தது. போராட்டத்துக்கு ஏகப்பட்ட அலைக்கழிப்பு கொடுத்த பிறகு, 'மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி; 5,000 பேருக்கு மேல் கூடக் கூடாது; 100 வாகனங்களுக்கு மேல் நிறுத்தக் கூடாது’ என்று 22 நிபந்தனைகளை விதித்தது டெல்லி காவல் துறை. 'சாத்தியமே இல்லாத இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது’ என்று அண்ணாவின் குழுவினர் அறிவித்ததையே சாக்காகச் சொல்லி, போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது. காவல் துறையின் அடாவடியான நிபந்தனைகளைக் குறிப்பிட்டு, பிரதமருக்கு அண்ணா கடிதம் எழுதியும் பிரயோஜனம் இல்லை.


உடனே அமைச்சர்களும் கட்சித் தலைவர்​களும் அண்ணாவுக்கு எதிராகக் களம் இறக்கப்பட்டனர். முதல் தாக்குதலை நடத்தியது அமைச்சர்கள் பிரணாப் - அம்பிகா - கபில் சிபல் அணி. அடுத்த தாக்குதலைத் தொடுத்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, ''அண்ணாவே ஓர் ஊழல்வாதி'' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், எதுவும் எடுபடவில்லை.இதனிடையே, சுதந்திர தின விழாவில் பிரதமர் உரையும் அண்ணாவுக்கு நேரடியாகவே மிரட்டல் விடுத்தன. எந்த ஓர் அச்சுறுத்தலுக்கும் அண்ணா குழுவினர் அசரப்போவதில்லை என்று தெரிந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர் ஆட்சியாளர்கள். அதிகாலையிலேயே அண்ணா குழுவினரைச் சுற்றிவளைத்த போலீஸார், போராட்டத்துக்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா மட்டும் அல்லாமல் ஷாஹீத் பூங்கா, ராஜ்காட், ஜவஹர்லால் நேரு மார்க், அருணா ஆசப் அலி மார்க், டெல்லி கேட், திலக் மார்க் என்று பிரதான இடங்கள் பலவற்றிலும் 144 தடை உத்தரவை அமல்படுத்தினர். மேலும், அண்ணா குழுவினரைக் கைதுசெய்து உடனடியாக சிறைக்குக் கொண்டுசெல்ல ஏதுவாக இரண்டு சிறப்பு நீதிபதிகளையும், உள்துறை முதன்மைச் செயலர் மூலம் கேட்டுப் பெற்றனர். இவ்வளவு முடிவுகளுக்கும் பின்னணியில் இருந்தவர் ராகுல் காந்தி. காலை 9 மணிக்குள் சிறைக்குள் அண்ணாவைத் தள்ளி​விட்டால், போராட்டத்தை முடக்கிவிடலாம் என்று திட்டமிட்டது அரசு. ஆனால், அண்ணாவோ நாட்டையே போராட்டக் களமாக்கினார்.


அண்ணாவின் போராட்டம் தொடங்கிய செய்தியைக் கேட்க ஆவலோடு இருந்த மக்கள், அவர் கைது செய்யப்பட்டதைக் கேட்டதும் கொந்தளித்தனர். டெல்லியில் காவல் துறைக் கட்டுப்பாடுகளையும் மீறி அலை அலையாகக் குவிந்தனர். மகாராஷ்டிரத்தில் மக்கள் கொந்தளித்தனர். மும்பையில் ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் மேதா பட்கர் பங்கேற்றார். அண்ணாவின் சொந்த ஊரான ராலேகான் சித்தியில் மக்கள் சாலையிலேயே நாள் முழுவதும் உட்கார்ந்திருந்தனர். உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் காலையிலேயே ஆயிரக்கணக்கானோர் பிரமாண்டப் பேரணி நடத்தினர். ஆந்திரத்தில் மக்கள் பெரும் திரளாகக் கூடுவதை உணர்ந்த சந்திரபாபு நாயுடு, ஹைதராபாத்தில் தெலுங்கு தேசம் தலைமையில் பேரணியை அறிவித்தார். தமிழகத்தில் சென்னையில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கால வரையறையற்ற உண்ணாவிரதத்தில் இறங்கினர். காஷ்மீரில் தொடங்கி தமிழகம் வரை நாடு முழுவதும் மறியல்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள்...


இதற்குள் நாடாளுமன்றத்தில் பிரளயமேஏற்பட்டு இருந்தது.  'அண்ணா கைது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் ஒரே குரலில் கூறின. மக்களவைக் கூடியதும் பிரதமர் அறிக்கை வாசித்தார். ''ஊழலை ஒழிக்க எந்த மாய மந்திரமும் நம்மிடம் இல்லை. அமைதியை நிலைநாட்ட போலீஸார் மிகக் குறைந்த அளவிலான நடவடிக்கையையே எடுத்துள்ளனர்'' என்று மன்மோகன் பேசியபோது அவை கொந்​தளித்தது. எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜும், அத்வானியும் பிரதமரைக் கடுமையாகச் சாடினர். அவை ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் மாநிலங்களவையிலும் தனது விளக்கத்தை அளித்தார். அங்கும் அவர் பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை. 'அண்ணா கைதுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்க வேண்டும்’ என்று எதிர்க் கட்சிகளுக்கு அழைப்புவிடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ''இந்தக் கைது, அடிப்படை மனித உரிமையையே மீறும் செயல்!'' என்றார் குருதாஸ் தாஸ் குப்தா. அரசு எதிர்பார்க்காத வகையில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் நின்றன. அதனால் பெரும் சங்கடத்துக்கு உள்ளான அரசு, அண்ணாவை விடுவிப்பதாக அறிவித்தது. ஆனால், போராட்ட அனுமதி இல்லாமல் விடுதலையாக அவர் மறுத்தார். வேறு வழியின்றி அரசு இறங்கி வந்தது. டெல்லி ராம் லீலா மைதானத்தில் 15 நாட்கள் அனுமதியுடன் போராட்டத்தில் அமர்ந்தார் அண்ணா.

''என் உயிர் முக்கியம் இல்லை. இந்த நாடு ஊழலில் இருந்து விடுபட வேண்டும். அதுவரை போராடுவோம்!'' என்றார்.

விகடன் 

No comments:

Post a Comment