சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருகிறது.
காலநிலைகள் மாறுகின்றன. பனிப்பிரதேசங்கள் வேகமாக உருகி வருகின்றன.
அதனால் கடலில் நீர்மட்டம் உயர்கிறது. நீர் மட்டம் உயர்ந்தால் நிலப்
பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்தச் சூழல் கேடுக்கு
முக்கியக் காரணம் மனிதர்கள்
என்பதால், பூமியைக் காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் நமக்கே இருக்கிறது.
அதற்காக உருவாக்கப்பட்டதுதான் பூமி தினம்.
* வீடுகளில் குண்டு பல்புகளுக்குப் பதில் குழல் பல்புகளைப் பயன்படுத்தலாம்.
* தேவை இல்லாதபோது விளக்கு, மின் விசிறி போன்றவற்றை நிறுத்தி விடலாம்.
* வீடுகளில் மரங்கள், செடிகளை வளர்க்க வேண்டும்.* தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
* பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* காகிதங்களைச் சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்த வேண்டும்.
* தனி வாகனங்களைத் தவிர்த்து பேருந்து, ரயில் போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.
* பிளாஸ்டிக் குப்பைகள், வாண வேடிக்கைகள் போன்றவற்றை கொளுத்தக்கூடாது.
இந்த விஷயங்களை நீங்களும் பயன்படுத்துங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் எடுத்துச் சொல்லுங்கள்.
சூரியக் குடும்பத்தில் நம் பூமிதான் அற்புதமானது. பூமியில் மட்டும்தான்
உயிரினங்கள் வாழ்கின்றன. நாம் வாழும் பூமி சூரியக் குடும்பத்தின் மூன்றாவது
கோள்.
பாறைக் கோள்களில் மிகப் பெரியதும், 5வது பெரிய கோளும் பூமிதான்.பூமியின் வயது சுமார் 454 கோடி ஆண்டுகள். பூமிக்கும் சூரியனுக்கும், நமது
துணைக்கோளான சந்திரனுக்கும் ஒரே வயதுதான். சூரிய நெபுலாவிலிருந்துதான்
பூமி
உருவானது. பூமி பிறந்து சுமார் 200 கோடி ஆண்டுகள் வரை எந்த உயிரினமும்
உருவாகவில்லை. முதலில் உருவான உயிர்கள் ஆக்சிஜனை
சுவாசித்து உயிர் வாழவில்லை. அப்போது இருந்த பாக்டிரியாக்கள், பாசிகள், ஒரு
செல் உயிரிகள், ஆல்காக்கள் எல்லாம் ஹைடிரஜனை வெளியேற்றியே உயிர்
வாழ்ந்தன.
நம் புவிக் கோளில் தாவரங்கள் உருவான பின்புதான் வளி மண்டலத்தில் ஆக்சிஜன்
வந்தது. பூமியில் தாவரங்கள் உருவான பிறகு, அவை வெளியிட்ட ஆக்சிஜன் தான்
நமது வளிமண்டலத்தில் சேர்ந்தது. அதன் பின்னரே, உயிரிகள் ஆக்சிஜன் மூலம்
சுவாசிக்கத் தொடங்கின. எனவே சுவாசிப்புக்கு ஆக்சிஜன் கை கொடுத்தது ஓர்
எதிர்பாராத நிகழ்வு. மிகப் பெரிய பரிணாம நிகழ்வு. இப்போது நம் புவிக் கோளில் மனிதனையும் சேர்த்து சுமார் 10 கோடி வகை
உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியின் உயிரின மண்டலம் வளி மண்டலம், பூமியின்
காந்தப்புலன்,
சூரியக் கதிர் வீச்சு, புவியின் சீதோஷ்ண நிலை பொறுத்து பூமியின்
நிலைப்பாடு மாறுகிறது. இப்படியே போனால், இந்தப் பூமி இன்னும் 230 கோடி
ஆண்டுகள் வாழலாம்.
பூமி உருவானாதிலிருந்து இன்று வரை ஏராளமான மாற்றங்கள் பூமியில்
நிகழ்ந்துள்ளன. பூமியின் முகத்தோற்றம் அவ்வப்போது இயற்கை நிகழ்வுகளால்
மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதனால் சில நன்மைகளும், சில தீமைகளும் நமக்கு உண்டாகி இருக்கின்றன. மனிதன் உருவான பின்புதான் பூமியில் அழிவு ஆரம்பித்தது. முக்கியமாக நாம்
பயன்படுத்தும் ஏராளமான பொருள்கள் பூமியின் இயல்பை, முகத் தோற்றத்தை அடியோடு
மாற்றிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை, காடுகளை நமது
பொருளாதார தேவைகளுக்காக அழிப்பதும், பூமியை நம் சுய லாபத்துக்காக அளவுக்கு
அதிகமாக
மாசுபடுத்துவதும்தான். உலகின் நுரையீரல்களான தாவரங்கள் மனிதனின்
தேவைகளுக்காக ஏராளமாக அழிக்கப்படுகின்றன. இப்போதைய உடனடித் தேவை மனிதனால்
பூமிக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவை உடனடியாக நிறுத்த
வேண்டியதுதான். பூமியைக் காக்க வேண்டும், அதன் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற
விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான்
பூமி தினம். உலகம் முழுவதும் பூமியின் சமன் நிலையைக் காப்பாற்றும்
விதத்தில், புவி தினத்தை ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22-ம் நாள்
அனுசரிக்கிறார்கள்.
1970, ஏப்ரல் 22-ல் 141 நாடுகளை ஒருங்கிணைத்து புவி தினத்துக்கான மாநாடு
நடத்தப்பட்டது. புவியை நாம் எப்படிக் காப்பாற்றலாம் என்று திட்டமிட்டு,
அதற்கான
செயல்பாடுகள் உலக மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது. முக்கியமாக
வருங்காலச் சந்ததிக்கு, பூமியைப் பத்திரமாக, பாதுகாப்பாகக் கொடுத்துச்
செல்லவேண்டிய பொறுப்பு
நமக்கு இருக்கிறது என்று புவிதினத்தில் வலியுறுத்தி சொல்லப்படுகிறது. அது
தொடர்பான நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன.சர்வதேச புவி நாள் கொண்டாடப்பட்ட பிறகே, சூழல் பாதுகாப்பு இயக்கமும்,
காற்றைச் சுத்தப்படுத்தும் சட்டமும் தொடங்கப்பட்டன. இந்தப் புவியில்
பசுமையைத் தக்க
வைக்க அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுதான் புவி தினத்தின்
முக்கிய நோக்கம். இன்று புவி தின செயல்பாடுகளில், சுமார் 175 நாடுகளும், 50
கோடிக்கு
மேற்பட்ட மக்களும் பங்கேற்கின்றனர்.உலகம் முழுவதும் உள்ள சூழல் தொடர்பான அமைப்புகள் புவிதினத்திலும்,
அதையொட்டிய ஒரு வாரத்திலும், பூமியைப் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை
விதைத்து,
மக்களிடையே அது தொடர்பான செயல்பாடுகளையும் செய்கின்றன. காற்றைச் சுத்தப்படுத்துதல், இருக்கிற மரங்களை வெட்டாமல் பாதுகாத்தல்,
புதிய மரங்களை நடுதல், அழிக்க முடியாத பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து
பூமியைக்
காப்பாற்றுதல், குறைவாக புதை படிம எரிபொருள்களைப் (Fossil fuel)
பயன்படுத்துதல், குறைவாக ஆற்றல் வாகனங்களைப் பயன்படுத்துதல், பொது
ஊர்திகளில்
பயணம் செய்தல் போன்றவற்றை நாம் அனைவரும் கண்டிப்பாகக் கடைபிடிக்க
வேண்டும். முக்கியமாக நமக்கு ஆக்சிஜன் தரும் தாவரங்களைப் பாதுகாக்க
வேண்டும். புவி தினம் என்பது ஏதோ பூமியைக் காப்பாற்றத்தானே, நமக்கென்ன என்று எண்ணிவிட
வேண்டாம். பூமியைப் பாதுகாத்தல் என்பது மனித இனத்தையும், பூமியில்
வாழுகின்ற அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றும் செயல். பூமியைக்
காப்பாற்றி, மனித சமுதாயத்தையும், மற்ற உயிரினங்களையும் கட்டாயம் காப்போம்
என
உறுதி ஏற்போம்.
மோகனா
No comments:
Post a Comment