Search This Blog

Friday, April 06, 2012

வெள்ளி கிரகம் என்றும் ஒரு புதிர்


பூமி தனது அச்சில். ஒரு தடவை சுற்றி முடிக்க 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அதைத்தான் நாம் ஒரு நாள் என்று கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். திடீரென பூமி மக்கர் செய்ய ஆரம்பித்து ஒரு தடவை சுற்றி முடிக்க 28 மணி நேரம் எடுத்துக் கொள்வதாக வைத்துக்கொள்வோம். அவ்வளவுதான் நமது அன்றாட வாழ்க்கை, நிலை குலைந்து விடும். சூரிய மண்டலத்தில் பூமியின் உடன்பிறப்பு என்று சொல்லத்தக்க வெள்ளி கிரகத்தில் இப்போது இப்படியான கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது வெள்ளி கிரகம் தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிக்க இப்போது அதிக அவகாசம் எடுத்துக்கொள்வதாகத் தெரிய வந்துள்ளது. அதாவது அதன் சுழற்சி வேகம் குறைந்துள்ளது. இந்தக் கிரகத்தை சுற்றிக்கொண்டிருக்கும் வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆளில்லா விண்கலம் இதைக் கண்டுபிடித்துள்ளது. நல்லவேளை, வெள்ளி கிரகத்தில் ‘மனிதர்கள்’ யாரும் இல்லை. ஆரம்ப காலத்திலிருந்தே வெள்ளி கிரகம் ஒரு புதிராக இருந்துவந்துள்ளது. வெள்ளி பற்றிய விஷயங்களை எளிதில் அறிந்துகொள்ள இயலவில்லை. செவ்வாய் கிரகம் தனது அச்சில் ஒருமுறை சுழல்வதற்கு 24 மணி, 37 நிமிஷம் 22 வினாடி ஆவதாக பிரெடரிக் கெய்சர் என்ற டச்சு விஞ்ஞானி 1862-ம் ஆண்டிலேயே துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறிவிட்டார். அவரால் சக்திகொண்ட டெலஸ் கோப்பைப் பயன்படுத்தி செவ்வாயை விரிவாக ஆராய முடிந்தது. செவ்வாயின் நிலப்பரப்பு குறித்த மேப்புகளையும் கெய்சர் தயாரித்தார்.

ஆனால் யாரும் வெள்ளி கிரகத்தை டெலஸ்கோப் மூலம் ஆராய முற்படவில்லை. காரணம் டெலஸ் கோப் மூலம் பார்த்தால் வெள்ளி கிரகத்தில் உள்ள எதுவும் தெரியவில்லை. வெள்ளி கிரகத்தை அடர்த்தியாகப் போர்த்தியுள்ள வெண்மையான மேகங்கள் மட்டுமே தெரிந்தன. டெலஸ்கோப்பை என்றைக்குத் திருப்பினாலும் அதே வெண்மையான மேகங்கள். பக்கத்து வீட்டில் யாரோ புதிதாகக் குடி வந்திருக்கிறார்கள். நீங்கள் பக்கத்து வீட்டு ஜன்னல் வழியே யாராவது தெரிகிறார்களா என்று கவனிக்கிறீர்கள், ஆனால் பக்கத்து வீட்டு ஜன்னல்கள் அனைத்தும் திரை போட்டு மறைக்கப்பட்டுள்ளன. வெள்ளி கிரகம் இதுபோன்ற மேகங்களால் நிரந்தரமாக மறைக்கப்பட்டுள்ளது. ஆகவே விஞ்ஞானிகள் ரேடியோ அலைகளை அனுப்பி வெள்ளி கிரகத்தை ஆராய முற்பட்டனர். ராடார் கருவிகள் மூலம் வெள்ளி கிரகத்தை நோக்கி அவர்கள் செலுத்திய ரேடியோ அலைகள் வெள்ளி கிரகத்தின் தரையில் பட்டு மீண்டும் பூமியை நோக்கித் திரும்பி வந்தன. ரேடியோ அலைகள் மேகங்களை ஊடுருவிச் செல்லும் என்பதால் இந்த அலைகள் பயன்படுத்தப்பட்டன. இப்படி எதிரொலித்து வந்த ரேடியோ அலைகளை ஆராய்வதன் மூலமே வெள்ளி பற்றிய பல தகவல்கள் தெரிய வந்தன. விண்வெளி ஆய்வுப் பணிகளுக்கு ராடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது 1960களில்தான் சாத்தியமாகியது என்பதால் அதன் பிறகே வெள்ளி பற்றிய மர்மங்கள் ஒவ்வொன்றாகத் தெரிய வந்தன.சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங்களுடன் ஒப்பிட்டால் வெள்ளி கிரகம் ஒரு வகையில் அலாதியானது. பூமி உட்பட மற்ற எல்லா கிரகங்களும் தமது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கின்றன. ஆகவேதான் சூரியன் கிழக்கில் உதிக்கிறது. ஆனால் வெள்ளி கிரகம் தனது அச்சில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது. ஒருவர் வெள்ளி கிரகத்தில் இருக்க நேரிட்டால் சூரியன் மேற்கே உதித்து கிழக்கே அஸ்தமிக்கும். ஆகவே அவர் யாரிடமாவது சபதம் செய்தால் ‘மேற்கே உதிக்கிற சூரியன் கிழக்கே உதித்தாலும் இனி வீட்டு வாசற்படி மிதிக்க மாட்டேன்’ என்று மாற்றிச் சொல்ல வேண்டும்.

இந்த விசித்திரம் ஒருபுறம் இருக்க, வெள்ளி தனது அச்சில் மிக மிக மெதுவாகச் சுழல்கிறது. ஆகவே வெள்ளியில் ஒருநாள் என்பது பூமிக் கணக்குப்படி 243 நாள்களாகும். வெள்ளியில் ஒரு நாள் என்பது இப்படி மிக நீண்டதாக உள்ளதால் வேறு பிரச்னை ஏற்படுகிறது. சூரியனை வெள்ளி கிரகம் ஒரு தடவை சுற்றி முடிக்க 225 நாள்களே ஆகின்றன. ஆகவே வெள்ளி கிரகத்தில் ஒருநாள் என்பது ஒரு வருடத்தை விட நீண்டது.’ நாளைக்கு வரேன்னு சொல்லாதீங்க, வேலை ரொம்ப தள்ளிப் போயிடும்.நீங்க அடுத்த வருஷமே வந்துடுங்க, சீக்கிரம் முடிஞ்சுடும்’ என்று வெள்ளி கிரகத்தில் ஒருவர் மற்றவரிடம் சொன்னால் அது அர்த்தமற்றதாக இருக்காது.என்றாவது ஒருநாள் பல நூறு பேர் செவ்வாய் கிரகத்தில் போய் குடியேற முடியலாம். ஆனால் வெள்ளி கிரகத்தின் பக்கமே தலை காட்ட முடியாது. ஏனெனில் வெள்ளியில் ‘அமுக்குப் பிசாசு’ இருக்கிறது. வெள்ளி கிரகத்துக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பினால் அது கீழே போய் இறங்குவதற்குள் அப்பளம் போல நொறுங்கி விடும். வெள்ளி கிரகத்தில் உள்ள பயங்கர காற்றழுத்தமே இதற்குக் காரணம். வெள்ளியில் உள்ள காற்றழுத்தமானது பூமியில் உள்ளதைப் போல 90 மடங்கு உள்ளது. ஆகவே நாலா புறங்களிலிருந்து காற்றழுத்தம் நசுக்கும். யானையின் காலடியில் சிக்கிய தகர டப்பா போல எதுவாக இருந்தாலும் நொறுங்கி விடும். கடந்த காலத்தில் அமெரிக்காவும் ரஷியாவும் ஆளில்லா விண்கலங்கள் பலவற்றை வெள்ளி கிரகத்துக்கு அனுப்பின. ஓரிரு ரஷிய விண்கலங்களே தப்பிப் பிழைத்தன. அவையும் சிறிது நேரமே செயல்பட்டன. இது போதாதென வெள்ளியின் மேகங்களில் கந்தக அமிலத் திவலைகள் உள்ளன. எந்த விண்கலத்தையும் இந்த அமிலம் அரித்தெடுத்து விடும்.ஒருவேளை வெள்ளி கிரகத்தின் அமுக்குப் பிசாசிடமிருந்து தப்ப முடியலாம்.. அமில மழையிலிருந்தும் தப்பலாம். ஆனால் வெள்ளியின் அக்கினி குண்டத்திலிருந்து தப்ப முடியாது. அந்தக் கிரகத்தில் எந்த இடமாக இருந்தாலும்-இரவாக இருந்தாலும் அங்கு வெப்பம் சுமார் 450 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும். இந்தக் கடும் வெப்பத்தில் எந்த விண்கலமும், எந்தக் கருவியும் செயல்பட முடியாது. சூரிய மண்டலத்திலேயே கடும் வெப்பம் உள்ள கிரகம் வெள்ளிதான். 

வெள்ளி கிரகம் பூமியை விட சூரியனுக்கு சற்றே அருகாமையில் உள்ளது என்பது இதற்குக் காரணம் அல்ல. சூரியனிடமிருந்து பூமி பெறுகிற வெப்பத்தில் ஒரு பகுதி பின்னர் வான் வழியே மேல் போய் விடுகிறது. ஆனால் வெள்ளி கிரகத்தில் இப்படி நிகழாதபடி மேகங்கள் தடுத்து விடுகின்றன. ஆகவே வெள்ளி கிரகம் அடுப் ின் வெப்பம் வெளியேற வழியில்லாமல் எல்லா ஜன்னல்களும் மூடப்பட்ட சமையலறை போல உள்ளது.ஏப்ரல் 15 தேதி வாக்கில் சூரிய அஸ்த மனத்துக்குப் பிறகு நீங்கள் மேற்கு வானில் வெள்ளி கிரகத்தைக் காணலாம். அது பளீரென வைர மூக்குப் பொட்டு போல ஜொலிக்கும். அதன் ஜொலிப்புக்கு வெள்ளியின் மேகங்களே காரணம். பார்வைக்கு வெள்ளி கிரகம் அழகாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அது நரகத்துக்கு ஒப்பானது. இந்திய ஜோசிய சாஸ்திரத்தின்படி வெள்ளி கிரகத்துக்கு சுக்கிரன் என்று பெயர். ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுக்கு சுக்கிர தசை வந்தால் சந்தோஷப்ப்டுவார்கள். யாருக்காவது திடீரென அதிர்ஷ்டம் அடித்தால் ‘அவனுக்கு சுக்கிர தசை’ என்று சொல்வதுண்டு. ஆனால் வெள்ளி (சுக்கிரன்) கிரகத்துக்கோ என்றென்றும் சனி தசைதான் போலிருக்கிறது! 

என்.ராமதுரை

2 comments:

  1. வெள்ளி குறித்த இதுவரை அறியாத பல அற்புதத் தகவல்களை
    விரிவான பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அற்புதத் தகவல்களை தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete