Search This Blog

Monday, April 02, 2012

ஐ.பி.எல். - வஞ்சிக்கப்படும் சென்னை ரசிகர்கள்!

நீங்கள், சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகரா? சென்னை சேப்பாக்கத்தில் மேட்ச் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகிறீர்களா? எடுத்து வையுங்கள் ரூ.700ஐ. என்னால் வரிசையில் நின்று அடிதடிபட்டு டிக்கெட் வாங்க முடியாது என்கிறீர்களா? ஆன்லைனில் 700 ரூபாய் டிக்கெட் விற்பனை கிடையாது. 1200 ரூபாய் இருந்தால் மட்டும்தான் டிக்கெட் வாங்க முடியும். சென்னையைப் போல மற்ற ஊர் ரசிகர்களுக்கும் இதே மாதிரியான நிலைமைதானே என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.9 அணிகள் உள்ள ஐ.பி.எல்.-லில், சென்னை, பெங்களூரூ தவிர மற்ற அணிகளின் டிக்கெட்டுகள் ரசிகர்களின் வாங்கும் திறனுக்கு ஏற்றபடிதான் நிர்ணயம் செயப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் குறைந்த விலை டிக்கெட், ரூ.300 மட்டுமே. ‘மேட்ச் பார்க்க எல்லோரும் வரவேண்டும் என்று விரும்புகிறோம். நிறைய மாணவர்களை மைதானத்தில் பார்க்க விரும்புகிறோம்’ என்று பேசுகிறார் கொல்கத்தா அணியின் டைரக்டர் வெங்கி மைசூர். இந்தக் கரிசனம் ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தினரிடம் இல்லை? கொல்கத்தா போல மற்ற அணிகளின் டிக்கெட் விலைகளும் மிகக் குறைந்த விலையிலேயே உள்ளன. மும்பை- ரூ.625, பஞ்சாப் மொஹலி - ரூ.375. ஜெப்பூரில் ரூ.200, புனேவில் ரூ.250, விசாகப்பட்டினத்தில் ரூ.300 என எல்லா அணிகளும் ரசிகர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். 
சென்னை ரசிகர் 700 ரூபாய் கொடுத்தாலும் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்துதான் மேட்ச் பார்க்க முடியும். சினிமா தியேட்டர் போல கிரிக்கெட் மைதான டிக்கெட்டுகளுக்கு வரிசை எண் கிடையாது. ஒருவேளை நீங்கள் லேட்டாகப் போக நேர்ந்தால் உட்கார இடமில்லாமல் போகலாம். சரி, 700 ரூபாயைக் கொடுத்துவிடலாம் என்றாலும் சென்னை ரசிகர்கள் ஆன்லைன் வழியாக டிக்கெட்டுகளை வாங்கிவிட முடியாது. ரூ.1200க்கு அதிகமான விலையுள்ள டிக்கெட்டுகளே ஆன்லைனில் வாங்க முடியும் என்பது சென்னை ரசிகர்களை மிகவும் ஏமாற்றுகிறது. ஆனால், மற்ற அணிகளின் குறைந்த விலையுள்ள டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற முடியும். ‘தமிழக அரசு 25 சதவிகித வரி விதித்திருப்பதால் எங்களுக்கு வேறு வழியில்லை’ என்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இதே வரி மற்ற மாநிலங்களிலும் உண்டு. ஆனாலும், ரசிகர்களின் நலனில் மற்ற அணிகள் செலுத்திய அக்கறையை சென்னை சூப்பர் கிங்ஸ் செய்யத் தவறிவிட்டது.
இந்த வருடம், புனே அணியைப் பார்த்துப் பரிதாபப்படாமல் இருக்க முடியாது. ஏற்கெனவே யுவ்ராஜ் இல்லாமல் அவர்கள் படாதபாடு பட்டுவிட்டார்கள். இப்போது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஹோப்ஸும் காயம் காரணமாக விலகிவிட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் லெவியை மும்பை வாங்கிவிட்டது. யுவ்ராஜ் இல்லாததால் கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திரங்கள் மிளிரும் ஐ.பி.எல். அணிகளுக்கு மத்தியில் புனே வாரியர்ஸ் அணி களையிழந்து இருக்கிறது. முதல் ஐ.பி.எல்.-லில், ராஜஸ்தானும் பார்க்க ஏதோ ரஞ்சி அணிபோல இருந்தது. பிறகு, கோப்பையைத் தட்டிச் சென்றது அந்த அணிதான். புனேவும் அப்படியொரு திருப்பத்தைத் தரட்டும்.சென்ற வருட ஐ.பி.எல்.-ஐ தோனி வென்றபோது, கிரிக்கெட் உலகம் கொஞ்சம் அரண்டுதான் போனது. தோனி தொட்டதெல்லாம் பொன்னான நேரமது. ஆனால், கடந்த ஒரு வருடத்தில் தோனி அப்படியே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டார். எதிர்வரும் ஐ.பி.எல்.-லும் தோற்றுவிட்டால் அவருக்குப் பெரிய நெருக்கடியை உண்டாக்கும். இரண்டு முறை கோப்பை வாங்கியது முக்கியமல்ல. மூன்றாவது தடவையாகப் பெறுவது தான் தோனிக்கு - பெரியநம்பிக்கையை அளிக்கக் கூடியதாக இருக்கும்.சென்ற ஐ.பி.எல்., டெலிவிஷன் ரேட்டிங்கின்படி ஃபிளாப். உலகக் கோப்பைக்குப் பிறகு உடனே ஆரம்பிக்கப்பட்டதால் ரசிகர்கள் சோர்ந்து போனார்கள் என்று சொல்லப்பட்டது. அதனால், இந்த வருடம் பி.சி.சி.ஐ.க்கு - பெரிய அமிலச் சோதனைதான்.

1 comment:

  1. தோணி சற்று சறுக்கி தான் உள்ளார்...

    பார்ப்போம் இந்த ஐபிஎல் போட்டிகளில்

    ReplyDelete