Search This Blog

Sunday, April 29, 2012

ஐ.பி.எல். ஆடுகளம்


முனாஃப் படேல் எப்போதும் இப்படித்தான். யாராவது அவருடைய பந்தை பவுண்டரிக்கோ, சிக்ஸருக்கோ விரட்டினால் உடனே பேட்ஸ் மேனை ‘ஸ்லெட்ஜ்’ பண்ண ஆரம்பித்துவிடுவார். எந்த பேட்ஸ்மேனும் சிக்ஸர் அடித்த பிறகோ விக்கெட்டைப் பறிகொடுத்தாலோ பௌலரை ஒன்றும் சொல்வதில்லை. ஆனால், முனாஃப் போன்ற பௌலர்கள், பேட்ஸ்மேனை வசைபாடுவதால் நெருக்கடிக்குள்ளாக்கி விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என்று எண்ணுகிறார்கள். டெக்கானுக்கு எதிரான மேட்சில், அம்பயரிடம் கடும் வாக்குவாதம் செய்ததால் முனாஃப் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்ற ஞாயிறு அன்று நடந்த மேட்சில், பேட்ஸ்மேனைக் கண்டபடி திட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார் முனாஃப். ‘நடுவர் முனவைக் கண்டிக்கவேண்டும். கட்டாயம் கடும் விளைவுகள் இருந்தால் தான் இது போன்ற வரம்புமீறல்கள் தடுக்கப்படும்’ என்று டி.வி . கமெண்ட்ரியில் கோபத்துடன் பேசினார் கவாஸ்கர். ஸ்ரீசாந்த் நிலைமை முனாஃப்புக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும். ஐ.பி.எல்.லில் சௌரவ் கங்குலி, ராகுல் திராவிடின் அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து மற்ற அணிகளுக்குக் கடும் சவாலைக் கொடுக்கும் என்று யாருமே நினைத்திருக்கமுடியாது. பீட்டர்சன் விக்கெட்டை வீழ்த்தி கைகளை விரித்துக்கொண்டு குதூகலமாக ஓடிய கங்குலி, ஐ.பி.எல்.லின் முதல் பாதியில் தோனி- சச்சினை விடவும் அதிக சிக்ஸர்கள் அடித்திருக்கும் திராவிட் என இருவருமே இந்த ஐ.பி.எல். லில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 


ஒவ்வொரு வருட ஐ.பி.எல்.லிலும் ஓர் இந்திய வீரர் தம்மை முன்னிறுத்திக் கொள்வார். முதல் ஐ.பி.எல்.லில் யூசுப்பதான், இரண்டாவது ஐ.பி.எல்.லில் நெஹ்ரா, மூன்றாவது ஐ.பி.எல்.லில் அஸ்வின், நான்காவது ஐ.பி.எல்.லில் ராகுல் சர்மா... என பல வீரர்களுக்கு இந்திய அணிக்குள் நுழைவதற்கான கதவைத் திறந்து வைத்திருக்கிறது ஐ.பி.எல். இந்த வருடம், ரெஹனா. இவர் ஏற்கெனவே இந்திய அணியில் இடம் பிடித்துவிட்டாலும் நிரந்தமான ஓர் இடம் இன்னும் வாக்கவில்லை. இந்த ஐ.பி.எல்.ரெஹனாவின் முழுத் திறமையையும் காண்பித்துவிட்டது. புதிய தலைமுறையின் அடையாளமாக இருக்கிறார் ரெஹனா என்று கிரிக்கெட் நிபுணர்கள் புகழ்கிறார்கள்.இன்றைய மும்பை இண்டியன்ஸ் அணிபோல 2008ல் பீமபலம் கொண்ட அணியாக இருந்த டெக்கான் சார்ஜர்ஸா இது என்று கேட்கும் அளவுக்கு ஐ.பி.எல்.லில் மோசமான ஆட்டத்தை அவ்வணி வெளிப்படுத்தி வருகிறது. முதல் வருட ஐ.பி.எல்.லில், அணியில் இடம்பிடித்த கில்கிரிஸ்ட், ரோஹித் சர்மா, ஆர்.பி. சிங், ஓஜா, பீட்டர்சன், கிப்ஸ், ரைமண்ட்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களை மற்ற அணிக்குத் தாரை வார்த்துவிட்டு சங்ககரா, டுமினி, ஸ்டீன் என்று ஒரு குறுகிய நட்சத்திரக் கூட்டத்தை நம்பி டெக்கான், களத்தில் இறங்குவது எத்தகையை பரிதாபமான நிலைமை! டெக்கான் நிர்வாகம், ஏலத்தில் என்னதான் செய்துகொண்டிருந்ததோ! மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள், டெக்கான் ரசிகர்கள்தான். அவர்களுக்கு இந்த வருடம் ஐ.பி.எல். கிடையாது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான டக் பொலிஞ்சர். 2010ல், இவர் சென்னை அணிக்குள் நுழைந்த பிறகுதான் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தது சி.எஸ்.கே. சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டுமுறை ஐ.பி.எல்.ஐ வென்றதிலும், ஒருமுறை சாம்பியன் லீக்கைக் கைப்பற்றியதிலும் பொலிஞ்சரின் பங்கு மிக அதிகம். ஆனால், 2010ல், ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்டுகள் ஆட இந்தியாவுக்கு வந்திறங்கியபோது, தென்ஆப்பிரிக்காவில் சி.எஸ்.கே. அணிக்காக சாம்பியன் லீக் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தார் பொலிஞ்சர். இதனால், டெஸ்ட் போட்டிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு பொலிஞ்சர்மீது விழுந்தது. இதுவே ஆஸ்திரேலிய அணியிலிருந்து பொலிஞ்சரை மெல்ல மெல்ல விலக்கி வைத்தது. இப்போது, அவர் ஆஸ்திரேலிய அணியின் எந்த ஓர் எதிர்காலத் திட்டத்திலும் இல்லை. இதனால், இந்த ஐ.பி.எல்.லில் தம்மை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பொலிஞ்சர்.  அவ்வப்போது தோற்றாலும், ஐ.பி.எல்.லில், சி.எஸ்.கே.வுக்கு நிகராக குழு மனப்பான்மை உள்ள அணி எதுவுமில்லை. சென்னை சூப்பர் கிங்ஸில் அதிக ரன்களை எடுத்திருக்கும் டுபிளஸி, ‘ஹஸ்ஸி சூப்பர் கிங்ஸ்க்குத் திரும்பி விட்டால் நான் விலகத் தயாராக இருக்கிறேன்’ என்று சொல்லுமளவுக்குச் செம்மையான குழு ஒன்றை உருவாக்கியிருக்கிறார் தோனி. இதனால் தான், கடந்த நான்கு ஐ.பி.எல்.களிலும் அரையிறுதிக்குச் சென்ற ஒரே அணி என்கிற பெருமை சி.எஸ்.கே.வுக்கு உண்டு.

No comments:

Post a Comment