மனஸை வைத்துத்தான் ஸகல எண்ணமும், உணர்ச்சியும்; இவை இல்லாதபோது ஜீவன்
ஜடத்துக்கு ஸமானம் தான் என்பதால் மனஸைத் தான் ‘நாம்’ என்று நினைக்கத்
தோன்றுகிறது. ஆனால், இது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ, கிடமாகவோ எதுவோ ஒன்றாக
உயிரோடு இருக்கப் பண்ணுவதாக இன்னொன்று இருக்கிறது என்னும்போது
அதுதான் நம்முடைய நிஜமான ‘நாம்’ என்று ஆகிறது. எப்படியென்றால், மனஸ்
இல்லாதபோதும் அது இருக்கிறது. ஆனால், அது இல்லாமல் போனால் மனஸும் இல்லாமல்
போய்விடுகிறது. சரீரத்தை விட்டு உயிர்த் தத்வம் போய்விட்ட பிறகு அந்த
சரீரத்துக்கு உணர்ச்சியும் போய்த்தானே விடுகிறது? பிணத்துக்கு மனஸ் உண்டா?
ஸரி, சரீரத்தை
விட்டுப் போன உயிர்த் தத்வம் இந்த சரீரத்தில் இல்லாமல் போனாலும், தானே
அடியோடு இல்லாமல் போய்விடுகிறதா என்றால் இல்லை. அதுதான் உயிராயிற்றே,
அப்படியிருக்க
அதுவே எப்படிச் சாக முடியும்? இதேமாதிரி, சரீரம் சாவதோடு மனஸும்
செத்துவிடுவதில்லை. கர்மாக்களை அநுபவிப்பதற்காக ஜீவன் இன்னொரு பிறப்பு
எடுக்கும்போது,
புதுப் பிறவியில் அது மறுபடியும் வேலையை ஆரம்பித்துவிடுகிறது. புதுப்பிறவி
உண்டாகிறது என்னும்போதே உயிர்த் தத்வம் மறுபடி ஒரு உடம்பில் வேலை செய்ய
ஆரம்பித்து
விடுகிறது என்று ஏற்பட்டு விடுகிறது. ஒரு உடம்பை விட்டுப்போன உயிர் இன்னொரு
உடம்பை எடுத்துக்கொள்கிறது. மனஸும் இப்படிப் பண்ணுகிறது. அந்த மனஸையும்
இந்த
உயிர் தத்வந்தான் தன்னோடு சேர்த்து எடுத்துக் கொண்டு போய் இன்னொரு
உடம்பிலிருந்து வேலை செய்ய வைக்கிறது.
மனஸ் வேலை செய்யாத நித்ரை, மூர்ச்சை முதலான ஸமயங்களிலும் உயிர் இருக்கிறது;
ஆனால், உயிர் இல்லாத சரீரத்தில் மனஸ் வேலை செய்ய முடியவே இல்லை;
அப்போது உடம்பும் அழுகி, கெட்டு, வீணாய் விடுகிறது என்பதிலிருந்து உயிரை
ஒட்டிக் கொண்டுதான் மனஸ் வாழ முடியும். உடம்பும் வாழ முடியும், தனியாக
அவற்றால் ஜீவிக்க
முடியாது என்று தெரிகிறது. உடம்பை நாசம் பண்ணிவிட்டு உயிர் இன்னோர்
உடம்பில் பிரவேசித்த பிற்பாடு, ஆனால் பிற்பாடு தான் மனஸ் அந்தப் புதிய
உடம்பிலே வேலை
தொடங்குகிறது என்பதிலிருந்தும் உயிர்தான் மனஸும் தனக்கு அடிப்படையாகப்
பற்றி வாழும் தத்வமென்பது ‘கன்ஃபர்ம்’ ஆகிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment