அமிர்தசரஸில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி மிகுந்த
கொண்டாட்டமாகவே தொடங்கியது, அன்று... பைசாகித் திருவிழா. அதாவது,
புத்தாண்டுக் கொண்டாட்டம். வீடுகளை அலங்காரம் செய்து, உறவினர் மற்றும்
நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர் மக்கள். நறுமணத்தின் ஊடாக துர்நாற்றம் பரவுவது போல இருந்தது ஜெனரல் டயரின் உத்தரவு.
ரௌலட் சட்டத்தைத் தொடர்ந்து உருவான இந்திய மக்களின் எதிர்ப்பை ஒடுக்க
வேண்டும் என்று, படை வீரர்களுக்கு ஜெனரல் டயர் உத்தரவு இட்டிருந்தார்.
இதையடுத்து, அமிர்தசரஸ் நகரின் முக்கிய வீதிகளில் படை வீரர்களின்
அணிவகுப்பு நடந்தது. மக்களை அச்சுறுத்திப் பணியவைக்க வேண்டும் என்ற
நோக்கத்துக்காகவே, அந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது
வெளிப்படையாகத் தெரிந்தது.முரசுகள் முழங்கியபடியே அணிவகுப்பு சென்றது. அமிர்தசரஸின் இன்ஸ்பெக்டர்
அஷ்ரப்கான், சப் இன்ஸ்பெக்டர் உபயதுல்லா ஆகிய இருவரும், ஆளுக்கு ஒரு
குதிரையில் அணிவகுப்புக்கு முன்னால் சென்றனர். அவர்களுக்குப் பின்னால்,
இரண்டு கார்கள் வந்தன. ஒன்றில், ஜெனரல் டயர் மற்றும் இர்விங் இருந்தனர்.
மற்றொரு காரில், ரெகில் மற்றும் போலமர் என்ற ஆங்கிலேய அதிகாரிகள்
இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து, சாரை சாரையாக ஆயுதம் ஏந்திய காவல் படை
வீரர்கள் விறைப்பாக நடந்து வந்தனர். ரயில்வே லைனை ஒட்டிய பாலத்தைக் கடந்து,
ஹால் பஜாரை வந்து அடைந்தது அணிவகுப்பு. வழி எங்கும் உருதுவிலும்
ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்ட எச்சரிக்கை செய்தி அடங்கிய நோட்டீஸ்,
மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.
'மக்கள் திரண்டு நிற்கவும், போராட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தவும் தடை
விதிக்கப்பட்டு இருக்கிறது. இதை மீறுபவர்கள்
கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்’ என்று, அந்த நோட்டீஸில் கூறப்பட்டு
இருந்தது. அந்தச் செய்தியை, முரசு அடிப்பவன் உரத்த குரலில்
அறிவித்துக்கொண்டே வந்தான். வீதியில் நின்றிருந்த மக்கள், சலனமற்ற
முகங்களுடன் அமைதியாக அதைக் கேட்டுக்கொண்டு இருந்தனர்.ஒவ்வொரு வீதியாகக் கடந்து அணிவகுப்பு சென்றது. இதைக் கேலி செய்யும் விதமாக,
உள்ளுர் மாணவர்கள் ஒன்றிணைந்து போட்டி ஊர்வலத்தை நடத்தினர். தகர டின்களைத்
தட்டிக்கொண்டே, 'இன்று இரவு ஜாலியன் வாலாபாக்கில் ஒரு மாபெரும் கூட்டம்
நடக்கிறது. மக்கள் அனைவரும் தவறாமல் அதில் கலந்துகொள்ளுங்கள். நாட்டு
நடப்பு பற்றி லாலா கன்யாலால் அந்தக் கூட்டத்தில் பேசுகிறார்’ என்று
அறிவித்துக்கொண்டே சென்றனர்.மதியம் 12.30 மணிக்கு நகரின் மத்தியப் பகுதியில், அணிவகுப்பில்
சென்றுகொண்டு இருந்த ஜெனரல் டயரிடம் இந்தப் போட்டி ஊர்வலம் பற்றிய செய்தி
தெரிவிக்கப்பட்டது. 'எனது உத்தரவை மக்கள் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள்,
என்னைக் கேலி செய்கிறார்கள். நான் யார் என்பதை இந்த மூடர்களுக்கு காட்ட
வேண்டும்’ என்று, ஆவேசத்துடன் கூறினார் டயர். 400 அதிரடிக் காவல் படை
வீரர்களைத் தயாராக இருக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.மதியம் 1 மணிக்கு, மிகுந்த கோபத்துடன் அலுவலகத்துக்குத் திரும்பினார் டயர்.
அன்று நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்களைப் பற்றிய
தகவல்களை திரட்டினார். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரலாக
பஞ்சாப் மாநிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் ஜெனரல் டயர். இவரது
முழுப் பெயர் ரெஜினால் எட்வர் ஹேரி டயர். ஐரீஷ் வணிகரின் மகனாக
இந்தியாவில் பிறந்த டயர், சிம்லாவில் படித்தவர். பிறகு, அயர்லாந்து சென்று
உயர் கல்வி கற்றதோடு, ராணுவப் பயிற்சிப் பள்ளியில் படித்தவர். பர்மா
யுத்தத்தில் கலந்துகொண்டு சிறப்பாக சேவை செய்தார் என, பிரிட்டிஷ் இந்திய
ராணுவத்துக்கு மாற்றப்பட்டார். முதல் உலகப் போரில் கலந்து கொண்டவர்
என்பதால், 1915-ல் பதவி உயர்வில் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.ஜெனரல் டயர் முன்கோபக்காரர். இந்தியர்களை மிக மோசமாக நடத்துபவர் என்ற
குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதில்
திறமைசாலி என்று, அவரை முக்கியப் பணியில் நியமித்து இருந்தது பிரிட்டிஷ்
நிர்வாகம். குறிப்பாக, பஞ்சாபில் தலைதூக்கி வரும் சுதந்திரப் போராட்டத்தை
முடக்க வேண்டும் என்பதில் அன்றைய பஞ்சாப் கவர்னராக இருந்த மிக்கேல் ஒ
டயருடன் இணைந்து, ஜெனரல் டயர் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
அன்று, பஞ்சாபில் பிரிட்டிஷ் அரசுக்குச் சவாலாக விளங்கிய டாக்டர் சத்யபால் மற்றும் வழக்கறிஞர் சிகாபுதீன் கிச்லா ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களுடைய போராட்டத்தை
ஒடுக்குவதில் டயர் முக்கியப் பங்கு வகித்தார். 1919-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம்
தேதி இருவரும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, பெரிய கலவரம் வெடித்தது.
பிரிட்டிஷ் குடியிருப்புகள் தாக்கப்பட்டன. வங்கி அடித்து நொறுக்கப்பட்டது.
அதிகாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடக்கத்
தடியடி நடத்தி விரட்டியதோடு, துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. ஆனாலும்,
அவ்வளவு எளிதாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.அமிர்தசரஸ் நகரின் ஒரு வீதியில், 'மிஸ் மார்சிலா ஷெர்வுட்’ என்ற
இளம்பெண்ணை, ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துத் தாக்க முயற்சித்தனர்.
உள்ளுர் இளைஞர்கள் சிலர் அவர்களைத் தடுத்து, 'நமது கோபம் பிரிட்டிஷ் அரசின்
மீதுதானே தவிர, பிரிட்டிஷ் குடும்பங்களின் மீது இல்லை’ என்று கூறி அந்த
இளம்பெண்ணை வீட்டில் கொண்டுபோய்விட்டனர். இந்த சம்பவம், டயருக்கு மிகுந்த
கோபத்தை ஏற்படுத்தியது.பிரிட்டிஷ் குடும்பங்களின் கௌரவத்தை சீர்குலைத்த இந்தியர்களைப் பழிதீர்க்க,
'மார்சிலா வழிமறிக்கப்பட்ட அந்த வீதியை எந்த இந்தியன் கடந்து போக வேண்டும்
என்றாலும், கையை ஊன்றித் தவழ்ந்துதான் போக வேண்டும்’ என்று உத்தரவு
பிறப்பித்தார் டயர். அது போதாது என, நகரில் எந்த வீட்டிலும் பின் வாசலுக்கு
கதவு இருக்கக் கூடாது. அது, எதிரிகள் தப்பி ஓட உதவக்கூடியது என்றும் ஓர்
உத்தரவு இட்டார். இந்தியர்கள் படிக்கும் கல்வி நிலையங்கள், மத சபைகள்
அத்தனையும் கண்காணிக்கப்படுவதோடு, எவரையும் சந்தேகத்தின் பெயரால் கைது
செய்யவும் உத்தரவு இட்டிருந்தார்.இந்தச் சூழலில், பாக் மைதானத்தில் ஆட்கள் திரளுகிறார்கள் என்ற தகவல்,
ஜெனரல் டயரின் மனதில் இருந்த கோபத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது.
ரகசியப் போலீஸாரை வைத்து, மைதானத்தின் வரைபடம் மற்றும் அதில்
கலந்துகொள்ளும் முக்கிய நபர்களின் பட்டியலைத் தயாரித்தார்.ஜாலியன் வாலாபாக் மைதானம் 250 அடி நீளமும் 200 அடி அகலமுமான ஒரு திறந்த
வெளி இடம். அது, சீரற்றுப் பள்ளமும் மேடுமாக இருந்தது. அந்த
மைதானத்துக்குள் நுழைவதற்கு இரண்டரை அடி அகலம்கொண்ட ஐந்து வாசல்கள்
இருந்தன. அந்த மைதானத்தின் தெற்குப் பகுதியில் அதிக வீடுகள் கிடையாது. மற்ற
பகுதிகளில், மைதானத்தை ஒட்டியே வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. அந்த
வீட்டின் சுவர்கள் மைதானத்தின் முதுகு போல அமைந்து இருந்தன.தென் பகுதியில் ஒரு சமாதியும், அதைச் சுற்றி நான்கு சிறிய மரங்களும்
இருந்தன. கிழக்குப் பகுதியில் ஒரு பெரிய கிணறு இருந்தது. முறையான
பயன்பாட்டில் இல்லாத அந்தக் கிணற்றை ஒட்டி மூன்று மரங்கள் இருந்தன.
மைதானத்தின் ஓர் இடத்தில் சற்று உயரமான திட்டு போல ஒரு மேடு இருந்தது. அந்த
மைதானத்தில் இசைக் கச்சேரி, நடன நிகழ்ச்சி, மதச் சொற்பொழிவு ஆகியவை
நடத்துவது வழக்கம். ஆகவே, அங்கே எந்த கூட்டம் நடந்தாலும் அருகில் உள்ள
பெண்கள் குழந்தைகள், வயதானவர்கள் எனக் கூட்டம் திரண்டுவிடும்.
ஜெனரல் டயர், ஜாலியன்வாலா பாக் மைதானத்தை அதற்கு முன்பு பார்த்ததே
கிடையாது. ஆகவே, அதன் வரைபடத்தை கையில் வைத்தபடியே கூட்டத்துக்கு எவ்வளவு
பேர் வந்திருக்கிறார்கள் என்று, கேப்டன் பிரிக்கைக் கேட்டார். அவர்,
இரண்டாயிரம் இருக்கக்கூடும் என்றார். உண்மையில் அப்போது, ஜாலியன் வாலா பாக்
மைதானத்தில் 20,000 பேருக்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். மாலை 4.30
மணிக்கு, எட்டு பேச்சாளர்கள் பேசி முடித்து இருந்தனர். மேடையில், டாக்டர்
கிச்லாவின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. ஜெனரல் டயர், தனது படையோடு
ஜாலியன் வாலாபாக் மைதானத்தை நோக்கிக் கிளம்பினார்.ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் உள்ளே நுழைந்த ஜெனரல் டயர், ஐந்தாவது வாசலை
மறைத்து தனது காவலர்களை நிறுத்தினார். உயரமான திட்டில் இருந்தபடியே
கூட்டத்தைக் கவனித்தார். சலசலப்பு இல்லாமல் பொதுக் கூட்டம் நடந்து கொண்டு
இருந்தது. ஒரு சிறுவன், ஊதுகுழலை ஊதிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு
இருந்தான். பிரிட்டிஷ் காவலர்கள் மைதானத்துக்குள் வந்து இருப்பதை அறிந்த
சிலர், உரத்த குரலில் அதை மற்றவர்களுக்குத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment