Search This Blog

Saturday, April 28, 2012

எனது இந்தியா! (பிரிவினையின் பெயரால்... !) - எஸ். ராமகிருஷ்ணன்....


ஒரு குடும்பத்தின் சொத்துக்களை இரண்டாகப் பிரிப்பது என்றாலே, பல பிரச்னைகள் எழும். மனக் கசப்புகள் உருவாகிவிடும். ஒட்டுமொத்த இந்தியா​வை இரண்டாகப் பிரித்து ஒன்றை பாகிஸ்தானாகவும் மற்றதை இந்தியா​வாகவும் துண்டு போட்ட சம்பவம் இந்திய வரலாற்றில் என்றும் மறக்க முடியாத நிகழ்வு.இந்தியாவை இரண்டாகத் துண்டு போட்டவர் யார் தெரியுமா? சிரில் ஜான் ரெட் கிளிஃப் என்ற பிரிட்டிஷ் வழக்​கறிஞர். இந்தியாவைப் பற்றி துளியும் அறிந்​திராத 'ரெட் கிளிஃப்’தான், இந்தி​யாவை இரண்டாகப் பிரித்து எல்லைக் கோடு​களை வகுத்தார் என்பது ஆச்சர்யமாக இருக்​கிறதா? வரலாற்று விசித்திரங்களில் இப்படி எத்தனையோ முரண்கள் உண்டு.1947-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி, பிரிட்டிஷ் வழக்கறிஞரான சிரில் ஜான் ரெட் கிளிஃப், இந்தியாவுக்கு அவசரமாக வந்து சேர்ந்தபோது, எந்த வேலைக்காக தான் அழைக்​கப்பட்டு இருக்​கிறோம் என்பதுகூட அவருக்குத் தெரியாது. அவர் அதற்கு முன் ஒரு முறைகூட இந்தியாவுக்கு வந்தது இல்லை. பிரிட்டிஷ் விசுவாசியான அவர்,  தங்கள் ஆளுகையின் கீழ் இருந்த இந்தியாவின் அரசியல் செயல்பாடுபற்றியோ, இங்கு நடைபெற்று வந்த சுதந்திரப் போராட்டம் பற்றியோ எதுவும் அறியாதவர். இவ்வளவு ஏன், இந்தியாவில் எந்த நதி எந்த மாநிலத்தில் ஓடுகிறது, இந்தியாவில் எத்தனை மாகாணங்கள் இருக்​கின்றன என்பதுகூடத் தெரி​யாது. அவரது ஒரே தகுதி, பிரிட்டிஷ் விசுவாசி என்பது மட்டும்தான்.

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் பிறந்து ஆக்ஸ்ஃபோர்டில் கல்வி கற்று வழக்கறிஞராகவும், பிரிட்டிஷ் தகவல் துறையின் டைரக்டர் ஜெனரலாகவும் பணியாற்றியவர் ரெட் கிளிஃப்.இந்தியாவின் புதிய வைஸ்ராயாக நியமிக்கப்பட்ட மௌன்ட் பேட்டன், இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தானை உருவாக்குவது என முடிவு செய்தார். 1947-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அதற்கான தீர்மானம் முன்மொழியப்​பட்டது. பஞ்சாப் மற்றும் வங்காளம் ஆகிய மாகாணங்களில் இந்தியப் பிரிவினை குறித்து ஆதரவுத் தீர்மானங்​கள் நிறை​வேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து லாகூரிலும் கல்கத்தாவிலும் கலவரம் ஏற்பட்டுப் பதற்றமான சூழல் நிலவியது.இந்தச் சூழலில், இந்தியாவை இரண்டாகப் பிரித்​தால் மிகப் பெரிய வன்முறை நடக்கும் என்பது மௌன்ட் பேட்​டனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அதைப்பற்றிக்  கவலைப்படாமல் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவதற்கு முன், ஜின்னாவின் விருப்பப்படி இந்தியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 1947-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி, மௌன்ட் பேட்டன் ஓர் அறிவிப்பு வெளி​யிட்டார். அதன்படி, 'இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்து, பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்தியாவின் 40 சதவீத நிலப்பகுதி அப்போது மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அந்தப் பகுதிகளில் பிரிட்டிஷ் அரசு எந்தத் தலையீடும் செய்யாது. அவர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் எதில் சேர வேண்டும் என்று விரும்புகிறார்களோ... அதில் இணைந்துகொள்ளலாம். சிந்துப் பகுதியைப் பொருத்தவரை, அவர்களின் தனித்த முடிவுக்கே அரசு விட்டுவிடுகிறது. இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் வழங்கப்பட உள்ளது. இந்தியாவையும் பாகிஸ்தானையும் முறையாகப் பிரிப்பதற்கு  ஒரு கமிஷன் அமைக்கப்பட உள்ளது. அந்தக் கமிஷனில், நான்கு நீதிபதிகள் இருப்பார்கள். அதில் இரண்டு பேர் காங்கிரஸ் பிரதிநிதிகள். மற்ற இருவர், முஸ்லிம் லீக் பிரதிநிதிகள்’ என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.அப்போதே, லாகூர் யாருக்கு? கல்கத்தா யாருக்கு? ஓடும் ஆறுகளை எப்படிப் பிரிப்பது? மலைகளையும் வனங்களையும் எப்படித் துண்டு போட முடியும்? எனப் பலத்த வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. அரசுத் தரப்பில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி மற்றும் முஸ்லிம் அல்லாதோர் வாழும் பகுதி என்ற அடிப்படையில்தான் நாடு பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்தியாவை இரண்டாகப் பிரிக்க யாரை நியமித்தாலும் பிரச்னையைச் சமாளிக்க முடியாது என்று நினைத்த மௌன்ட் பேட்டன், பிரிட்டனில் இருந்து ரெட் கிளிஃபை வரவழைப்பது என்று முடிவு செய்தார். மௌன்ட் பேட்டனுக்கு முன்னதாக, இந்தியாவைப் பிரிப்பது தொடர்பாக வைஸ்ராய் வேவல் பிரபு ஒரு திட்டத்தை முன்மொழிந்து இருந்தார். அது குளறுபடிகள் நிறைந்ததாக இருந்தது. எனவே, முறையாக ஒரு கமிஷனை நியமித்து இந்தியாவைப் பிரிப்பது என்று முடிவு செய்யப்​பட்டது.


இதற்காக, இரண்டு கமிஷன்கள் நியமிக்கப்பட்டன. ஒன்று, பெங்கால் கமிஷன் எனப்படும் வங்காளத்தின் எல்லைகளை நிர்ணயிக்கும் குழு. மற்றொன்று, பஞ்சாப் கமிஷன் எனப்படும் பஞ்சாப் மாகாணத்தை இரண்டாகப் பிரித்து எல்லைகளை நியமிக்கும் குழு. இந்த இரண்டு கமிஷன்களுக்கும் தலைவராக சிரில் ஜான் ரெட் கிளிஃப் நியமிக்கப்பட்டார். அவருக்கு  மாதச் சம்பளமாக ரூ. 40,000 அறிவிக்கப்பட்டது.அவரோடு மெகர்சந்த் மகாஜன், தேஜாசிங், தீன்முகமது, முகமது முனிர் ஆகிய நான்கு பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 1947-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி, இந்தியாவுக்கு வந்து சேர்ந்த ரெட் கிளிஃப், இந்தப் பிரிவினையை செய்து முடிக்க எத்தனை நாள் அவகாசம் தரப்படும் என்று கேட்டார்.ஐந்து வாரங்களுக்குள் இந்தியாவை இரண்டாகப் பிரித்து, எல்லைக் கோடுகளை உருவாக்கித் தர வேண்டும் என்று, அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்​பட்டது. அது, மிகவும் குறைவான காலம். இந்தியாவின் நில வரைபடங்கள், மக்கள் தொகை, நீர்ப்பாசன முறைகள் போன்றவற்றை ஆராய்ந்து, அதில் இருந்துதான் எல்லைக் கோட்டை உருவாக்க முடியும். எனவே, அவகாசம் இன்னும் அதிகமாக வேண்டும் என்று கேட்டார்.ஆனால், முடியாது என்று கூறிய பிரிட்டிஷ் அதிகாரிகள், தேவையான அனைத்து விவரங்களையும் அரசே வழங்கி உதவி செய்யும் என்று, நிர்பந்தம் செய்தனர். அதன்படி, 1931-ல் தயாரிக்கப்பட்ட நில வரைபடங்கள் மற்றும் 1941-ல் எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவை கிளிஃபிடம் தரப்பட்டன. பண்டைய இந்தியா தொடங்கி 19-ம் நூற்றாண்டு இந்தியா வரையிலான வரைபடங்கள் அவரது மேஜையில் குவிக்கப்பட்டன. ஆனால், அந்தப் புள்ளி விவரங்கள் முழுமையானவை இல்லை என்று அரசு அதிகாரிகளே கூறினர். மேலும், பதிவேடுகளில் உள்ள விவரங்களுக்கும் வரைபடத்தில் காணப்படும் நிலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தது. மிகவும் நெருக்கடியான நிலையில் கண்ணைக் கட்டிக் காட்டில்விட்டது போன்ற குழப்பமான மனநிலையில் தவித்தார் ரெட் கிளிஃப்.ரெட்கிளிஃபைச் சந்தித்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், அதைப்பற்றி தனது கட்டுரை ஒன்றில் மிக விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். கமிஷன் அறிவிக்கப்பட்டபோது, சிம்லாவில் இருந்தார் ரெட் கிளிஃப். கடும் வெயில் வாட்டி வதைக்கும் ஜூன் மாதத்தில், களப் பணிகளைச் செய்வது மிகச் சிரமம். ஆகவே, ஜூலை மாதத்தில் பணியைத் தொடங்கலாம் என்று, அவர் கூறினார். ஆனால், மௌன்ட் பேட்டனோ ஒரு நாளைக்கூட வீணடிக்கக் கூடாது என்று சொல்லி, அவரை உடனே களப் பணியில் இறங்கச் செய்தார். இது, ரெட் கிளிஃபுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. மேலும், தனது குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கும் ரெட் கிளிஃபுக்கும் ஆரம்பத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது.




ஒரு முஸ்லிம் லீக் உறுப்பினர், எப்படியாவது டார்ஜிலிங்கை பாகிஸ்தானோடு இணைத்துவிடுங்கள். ஆண்டுதோறும் அங்கே நான் குடும்பத்தோடு சுற்றுலா போய்க்கொண்டு இருக்கிறேன். அதை இந்தியாவுக்குத் தந்துவிட்டால், அங்கே சுற்றுலா போக சிரமம் ஆகிவிடும் என்ற கோரிக்கையை ரெட் கிளிஃபிடம் வைத்தார். அதைக் கேட்டு எரிச்சல் அடைந்த ரெட் கிளிஃப், அந்த உறுப்பினரோடு சண்டை போட்டார். அவர் உடனே, ரெட் கிளிஃப் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டைக் கிளப்பினார்.இன்னொரு பக்கம், சட்ட வல்லுனராக இருந்த மெகர்சந்த் மகாஜனோடு, ரெட் கிளிஃப் மிக நெருக்கமாகப் பழகியது மற்ற உறுப்பினர்களுக்குப் பொறாமையை ஏற்படுத்தியது. அதனால், இந்தியாவுக்குச் சாதகமாக லாகூரை பிரித்துக் கொண்டுபோய்விடுவார் மகாஜன் என்ற பொய்ப் பிரசாரம் செய்யத் தொடங்கினர்.இன்னொரு பக்கம், சட்ட வல்லுனராக இருந்த மெகர்சந்த் மகாஜனோடு, ரெட் கிளிஃப் மிக நெருக்கமாகப் பழகியது மற்ற உறுப்பினர்களுக்குப் பொறாமையை ஏற்படுத்தியது. அதனால், இந்தியாவுக்குச் சாதகமாக லாகூரை பிரித்துக் கொண்டுபோய்விடுவார் மகாஜன் என்ற பொய்ப் பிரசாரம் செய்யத் தொடங்கினர்.ஆனால், இதில் நிறையப் பிரச்னைகள் இருந்தன. சீக்கியர்களின் புனித ஸ்தலமான நான்கானா சாகிப் கோவில், மேற்குப் பஞ்சாபில் இருந்தது. அது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்றாலும், சீக்கியப் புனித ஸ்தலம் உள்ளதால் அதை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

விகடன் 

No comments:

Post a Comment