Search This Blog

Sunday, April 15, 2012

இரு மாணவர்கள் தற்கொலை - ஓ பக்கங்கள், ஞாநி


காதல் வந்தால் சொல்லியனுப்பு.... உயிரோடிருந்தால் வருகிறேன்’, - இது ஒரு பிரபலமான சினிமாப் பாடல். காதலுக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்புதான் இந்த வாரம் என் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அடுத்து ஐ.ஐ.டி.யிலும் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களில் காதல் பிரச்னையும் ஒன்று என்று செய்திகள் சொல்கின்றன. காதல் ஏன் எப்படிப் பிரச்னையாகிறது?

என் காதல் அனுபவங்களைப் பற்றி பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு கட்டுரையில் ஒருபகுதி இப்படிப் போகிறது - சிறந்த காதலர்களால்தான் சிறந்த நட்பைப் புரிந்து கொள்ளமுடியும். காதலைக் கண்டு பயப்படுகிறவர்கள்தான் ஆண்- பெண் நட்பைக் கண்டும் அஞ்சி அஞ்சி சாவார்கள். எல்லா நட்பும் காதலாக மலரவேண்டியது இல்லை என்பது அவர்களுக்குப் புரியாது. எல்லா ஆண்- பெண் நட்பும் காமத்திலேயே சென்று முடியும் என்பது அவர்களின் நிரந்தர பயம். உறவுகளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பது நம் சமூகத்தில் புரையோடியிருக்கிற நோய். செக்ஸ், காதல் பற்றியெல்லாம் ஆரோக்கியமான சூழல் இல்லாமல் வக்கரிப்பான சினிமாக்களே இதற்கு ஆசானாக விளங்குவது இந்த நோயின் இன்னொரு அறிகுறி."படிப்பறிவு இல்லாத அரைகுறை எழுத்தறிவு உள்ள இளைஞர்களும் காதல் ‘தோல்வி’யில் தற்கொலை செய்கிறார்கள். உயர்படிப்பு படிக்கும் அறிவார்ந்த இளைஞர்களும் அதையே செய்கிறார்கள். எனவே காதல் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் இரு சாராருக்கும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

காதலில் ‘தோல்வி’ என்பது என்ன?

ஒருதலைக் காதலைத் தோல்வி என்கிறார்கள். எனக்குப் பிடித்த பெண்ணுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் அது காதல் தோல்வியாம். உடனே தற்கொலை. இந்த ‘தோல்வி’ லாஜிக்படி பார்த்தால் காதலிக்காமல், ஏற்பாடு செய்யும் திருமண முயற்சிகளில் பெண் பார்க்கப் போகிறவனுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவன் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா? அல்லது அவளுக்குத் தன்னைப் பிடிக்கச் செய்ய வேண்டும் என்று டார்ச்சர் செய்யமுடியுமா?காதல் ஹார்மோன்களின் தூண்டுதலினால், உடலின் தேவைகளுடன் மனத்தின் தேவைகளும் சேர்ந்துகொண்டு உசுப்பிவிடும் ஓர் உணர்வு. இதைப் பக்குவமாக வசப்படுத்தத் தவறினால் பழத்தை வெட்டுவதற்கு பதில் கையை வெட்டும் கத்தியாகிவிடும்.

காதலில் இறுதி வெற்றி என்பது என்ன?

அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்லத் தோன்றுகிறது. காதலின் இயல்பான முற்றுப்புள்ளி காமம்தான் என்றே பொதுவாக நம்பப்படுகிறது. கல்யாணத்தில் முடிவதுதான் நிஜக் காதல் என்றும் சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்த வரையில் காதலின் இறுதி வெற்றி என்பது அதில் வயப்பட்டிருந்த இருவருக்குமே அந்த அனுபவம் எந்தக் காலத்தில் நினைத்துப் பார்த்தாலும், துளியும் வலிகளற்ற இனிமையாகவே இருக்க முடியுமானால் அதுதான் வெற்றி பெற்ற காதல். இந்த இனிமையைத் தொடர்ந்து நீடிப்பதற்கான கருவியாக திருமணமும் அமைந்தால் அது போனஸ் வெற்றி. திருமணத்துக்குப் பிறகு காதலைத் தொலைத்துவிட்டவர்கள் வாய்ப்பை நழுவவிட்ட முட்டாள்கள்; சபிக்கப்பட்டவர்கள்."ஆனால், நம் சமூகத்தில் இன்று காதல் என்பது ஆணும் பெண்ணும் சாமர்த்தியமாகத் தமக்கான, தமது இச்சைகளைப் பூர்த்தி செவதற்குத் தோதான அடிமையை வடிவமைத்து வசப்படுத்தும் சூழ்ச்சியாக மாற்றப்பட்டிருக்கிறது. காதல் ஒருவர் தன்னையும் அழித்துக் கொள்ளாமல், எதிர் நபரையும் அழிக்காமல் இருவரையும் வளப்படுத்தும் பகிர்தல். ஆனால் இன்னொரு நபரைத் தன் விருப்பப்படி மாற்றியமைத்து, தம் உடமையாக்கிக் கொள்ளும் மனநிலையாகவே காதல் பயன்படுத் தப்படுகிறது. அப்படி முடியாவிட்டால், இருவரில் ஒருவர் மற்றவரை அழிப்பதாகவோ தன்னையே அழித்துக் கொள்வதாகவோ முடிகிறது.தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றும் ஒருவன் எப்படி காதலனாவான்? அதில் எங்கே இருக்கிறது காதல்? தன் அன்பை ஒருவர் ஏற்காவிட்டால், அந்த அன்பை இனி யாருக்குமே காட்ட முடியாது என்று சொல்லி தன்னையே அழித்துக் கொள்ளும் மனத்தில் ஏது காதல்? என்னைக் காதலிக்க மறுத்தால் நான் கையைக் கிழித்துக் கொள்வேன், சாவேன் என்று மிரட்டி எதிராளை அன்பு செலுத்தக் கட்டாயப்படுத்துவது பிளாக்மெயில்தானே?

ஆனால், காதல் என்பது என்னவென்றே தெரியாமலே தாங்கள் காதலிலிருப்பதாக நம்பும் பலரை சினிமாவும் ஊடகங்களும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. இன்றைய வாழ்க்கை முறையின் விளைவாக உடல் முதிர்ச்சி பத்து பதினோரு வயதிலேயே ஏற்படத் தொடங்கிவிடுகிறது. பெண்கள் பருவமெதும் வயது 14லிருந்து இன்று பத்தைத் தொட்டுவிட்டது.ஆனால், மன முதிர்ச்சிக்குக் குறைந்தபட்ச வயது தேவை. கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடி அலைந்து ஒரு வேலை கிடைத்து அதில் பல மனிதர்களுடன் உறவாடும் வேளையில்தான் மனப்பக்குவம் தொடங்குவது சாத்தியமாகிறது. இது பொதுவிதி. விதிவிலக்குகள் மிகக் குறைவாக எப்போதும் இருப்பார்கள். சுமார் 22, 23 வயதுக்குப் பிறகு தோன்றும் காதலில்தான் உடல் தேவையும் மனத்தேவையும் இணைந்த தேடல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அதற்கு முன்பு நம் மனத்தின் தேவைகள் என்ன என்று யோசித்துத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து வாழ்க்கையின் குறிக்கோள்களை வகுத்துவிடும் வாய்ப்பு குறைவு. உடலின் தேவைகள் மட்டுமே உறைக்கக்கூடிய வயதாகவும் மனம் எப்போதும் குழம்பிக் குழம்பித் தெளிவைத் தேடும் முயற்சியிலுமாக இருக்கும்.ஆனால், நம் சினிமாக்காரர்கள் எந்த சமூகப் பொறுப்பும் இல்லாதவர்கள்.அறியாத வயசு, புரியாத மனசு, ரெண்டும் சேர்ந்து காதல் செயும் நேரம் என்று நட்பையும் காதலையும் குழப்பியடித்து, தங்கள் கல்லாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். சுமார் இருபது வருடம் முன்னர், பள்ளி இறுதி வகுப்பிலேயே கமர்ஷியலாக நுழைத்த காதலை இப்போது எட்டாங் கிளாசுக்குக் கொண்டு போய்விட்டார்கள்.பொறுக்கியாக இருந்தால்தான் பெண்கள் விரும்புவார்கள் என்று ஒரு சூத்திரத்தை சினிமா விடாப்பிடியாகக் கையாண்டு வருகிறது. அசல் வாழ்க்கையில் காதல் இப்படியெல்லாம் இல்லை. இவனை நியாயமாக வெறுப்பதற்குப் பதிலாக ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியாமலே மயங்கும் பெண்களும்,ஏன் இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவே கஷ்டப்படும் பையன்களும் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு பள்ளி மாணவன் ‘காதல் தோல்வியால்’ தற்கொலை செய்து கொண்டபோது அவன் ஒருதலையாக காதலித்த மாணவியிடம் விசாரித்தார்கள். ‘நிறைய பசங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்காங்க. நான் எல்லார் கிட்டயும் நோதான் சொல்லியிருக்கேன். மத்தவங்கள்லாம் ஒண்ணும் செத்துப் போகலே. இவன் செத்துப் போனா அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?’ -மாணவி கேட்ட நியாயத்தை யாரும் பரிசீலிப்பதில்லை.குழந்தைகள் சைட்டடிப்பது, பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக நெருக்கமாக உட்கார்ந்து கிசுகிசுப்பது என்று விடலைச் செயல்களைச் செய்வதை கமர்ஷியல் விளம்பரங்கள் பாலியல் தொனியுடன் காட்ட ஆரம்பித்துவிட்டன.சினிமாவை முன்தணிக்கை செய்யும் அரசு, டி.வி. விளம்பரங்களுக்கு முன்தணிக்கை பற்றி யோசிப்பது கூட இல்லை.வணிகச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த வேண்டிய அரசின் பிரதமர், கொலை வெறிப்பாட்டின் கமர்ஷியல் வெற்றியையடுத்து அதன் நடிகரை சர்வதேச பிரமுகருடன் விருந்து சாப்பிட அழைப்பதென்பது அரசு வணிகத் துறையின் தரகராக மாறிவிட்ட சூழலின் அடையாளம்தான்.இந்தச் சூழலில் சராசரி இளைஞர்கள் எப்படி தங்களுக்கான பக்குவத்தை அடைவார்கள்?தேர்வுக்கான பாடங்கள், அவற்றை வசப்படுத்துவதற்கான உத்திகள் இவற்றையெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நேர்த்தியாகவும் திறமையாகவும் சொல்லித்தர ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.ஆனால் விடலைப் பருவத்துப் பெண்ணுக்கோ ஆணுக்கோ தன் உடலையும் தன் மனத்தையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பதற்கான கல்வி இல்லை.அதற்கான வழிகாட்டுதல் இன்று குடும்பத்திடம் கிடைப்பது இல்லை. மிடில் க்ளாஸ் குடும்பமும் அரசைப் போலவே பன்னாட்டு கம்பெனிகள் சார்ந்த கனவுலகில் திளைத்துக் கொண்டிருக்கின்றன.படிப்போடு சேர்த்து வாழ்க்கைக்கான திறன்களையும் வளரிளம் பருவத்திலேயே நம் சிறுவர்களுக்கு தரத் தவறினால் அதிகம் படித்தவன், கொஞ்சம் படித்தவன் என்று எல்லா தரப்பு இளைஞர்களிடையிலும் காதல் தோல்வி தற்கொலைகள், பரீட்சைத் தோல்வி தற்கொலைகள் பெருகுவது உறுதி.

பள்ளிப்படிப்போடு முடித்துவிட்டு மேலே படிக்க வசதியில்லாமல், குடும்பச் சூழலினால் வேலைகளுக்குச் செல்லும் இளைஞர் கூட்டம் இன்று மிகப் பெரிது. டீன் ஏஜில் இருக்கும் அந்தப் பிரிவினர் வாழ்க்கை என்பது கையில் கொஞ்சம் காசு புரள்வதாகவும், அன்றாட அலுவல் நிமித்தம் ஆண், பெண் சேர்ந்து உறவாடும் சூழலுடையதாகவும் இருக்கிறது. ஆனால் மனப்பக்குவம் இன்னும் வரப்பெறாத நிலையில் அந்த உறவுகளில் கடும் சிக்கல்கள் உருவாகின்றன. காத்திருக்கின்றன.இனி தாமதிக்காமல் பள்ளிப்பருவத்திலேயே வாழ்க்கைத் திறன்களுக்கான கல்வியை தினசரி பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்காவிட்டால், நாம் பல அருமையான உயிர்களை அபத்தமான காரணங்களுக்காக பலி கொடுக்கும் சமூகமாகி விடுவோம்.கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் உளவியல் ஆலோசகர்களை நியமிப்பது என்பது தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாகவே மாறும். ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தன் உடலையும் மனத்தையும் புரிந்துகொண்டு தம்வசத்தில் வைத்திருக்கும் சமூகமே நம் கனவாக இருக்கவேண்டும். அது நனவாக பள்ளிக் கூடத்திலேயே பணிகளைத் தொடங்க வேண்டும். ஆரோக்கியமான இளம் மனங்களைச் சிதைத்து நச்சாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள், விளம்பரங்கள், சினிமாக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் வேண்டும். சில கோடி ரூபா லாபங்களுக்காக பல கோடி மனிதர்களை பலி கொடுக்க முடியாது.

இந்த வாரக் கேள்வி: தோழர் நல்லக்கண்ணுவுக்கு...

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் கடந்த 200 நாட்களாக உறுதியுடன் நடந்தபோது, அதை இழிவு படுத்தியும் கண்டித்தும் உலையைத் திறந்தே தீரவேண்டும் என்றும் உங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழங்கிவந்தது. இப்போது திடீர் ஞானம் வந்து இடிந்தகரைக்குப் போய் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். இப்போதாவது செய்தீர்களே என்று மகிழ்ச்சியடைய முடிய வில்லையே. இதை உங்கள் கட்சி மார்ச் 18க்கு முன்னரே செய்திருந்தால் போராட்டம் வலிமையடைந்திருக்கும். பெரும் படைகளைக் கொண்டு அரசுகள் மக்களை மிரட்டி ஒடுக்கியபோது மௌனமாக இருந்தது துரோகம் இல்லையா? இப்போது ஆதரவு காட்டுவதன் மர்மம் என்ன? நிஜமான மனமாற்றமா? அல்லது அடுத்த தேர்தலுக்காக மக்களுடன் சமரசமா? உண்மையான சுய விமர்சனம் என்றால், போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தோழர் தா.பாண்டியன் மீது கட்சி நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த குடியரசுத் தலைவர்?

வாசகர்கள் ஆலோசனைகள் வந்த வண்ணம் உள்ளன. நான் பரிந்துரைத்த கோபால கிருஷ்ண காந்தி மம்தா ஆதரவாளர், இடதுசாரி எதிர்ப்பாளர் என்று இடதுசாரி நண்பர் ஒருவர் ஆட்சேபித்திருக்கிறார். இப்போதைய துணை ஜனாதிபதி அன்சாரியே நல்ல சாய்ஸ் என்பது அவர் கருத்து. இன்னொரு வாசகர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ் குப்தாவைப் பரிந்துரைத்துள்ளார். சில வருடங்கள் முன்னர் நான் பரிந்துரைத்த ஆர்.நல்லகண்ணு, இரா. செழியன் ஆகியோரை ஏன் இப்போது விட்டுவிட்டேன் என்று ஒருவர் கேட்கிறார். பிரதமரின் வயது 60க்குக் கீழும் கனவு ஜனாதிபதியின் வயது 70க்குக் கீழுமிருக்க வேண்டும் என்பது என் கனவு. அதனால் 80க்கு மேற்பட்டவர்களை இந்த முறை ஆட்டத்தில் சேர்க்கவில்லை.   

 

No comments:

Post a Comment