Search This Blog

Wednesday, April 25, 2012

பட்ஜெட் டூர் !

கோடை விடுமுறை வந்து விட்டாலே... 'என்ன... ஊட்டி, கொடைக்கானல் கிளம்பலயா?' என்கிற விசாரிப்புகள்தான் முன்னே வந்து நிற்கும். ஆனால், சீஸன் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் அந்த இடங்களுக்கெல்லாம் சென்றால், 'சென்றோம்... வந்தோம்' என்று பேர் பண்ணுவதுதான் உண்மையாக இருக்கும். உண்மையிலேயே சுற்றுலாவில் மனம் நிறைய வேண்டும், அதேசமயம் பர்ஸுக்கும் பங்கம் வராதிருக்க வேண்டுமா?! இதோ... இந்த லிஸ்ட்டில் உங்களுக்கு விருப்பமானதை 'டிக்’ செய்யுங்கள்!பெரியவர், சிறியவர் தலா இருவர் கொண்ட குடும்பத்துக்கு இரு நாள் சுற்றுலாவாக குறைந்தது இரண்டாயிரம், அதிகபட்சம் நான்காயிரம் என்பதான வரையறைக்குள் அடங்கும் இந்த பட்ஜெட் சுற்றுலாவை, இந்த வருட ஸ்பெஷல் ஆக்குங்கள். பட்ஜெட் பணத்துக்கு மட்டுமே... சந்தோஷத்துக்கு அல்ல!

கலகல ஏலகிரி!  

மத்திய வர்க்கத்தினரின் ஊட்டி... ஏலகிரி. வேலூரிலிருந்து திருப்பத்தூர் சாலையில் பொன்னேரி வந்தால்... அங்கிருந்து 15 கி.மீ. மலைப்பாதையில் ஏலகிரி காத்திருக்கும். ரயில் மார்க்கம் எனில்... ஜோலார்பேட்டை வந்து அங்கிருந்து பஸ் பிடிக்கலாம். நடுவில் நீரூற்று, ஓரத்தில் சிறுவர் பூங்காவுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்கானூர் ஏரி, அதை ஒட்டி அமைந்திருக்கும் அரசு மூலிகைப் பண்ணை மற்றும் பழப்பண்ணை, வேலவன் கோயில், தொலைநோக்கி இல்லம், மூலிகை மணக்கும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி... இவற்றோடு ஏலகிரியிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் இருக்கும் காவலூரில் இந்தியாவின் மிகப்பெரும் தொலை நோக்கியை குழந்தைகளுடன் காண மறக்காதீர்கள். சாகசப்பிரியர்களுக்கான பாரா கிளைடிங், பைக்கிங், ட்ரெக்கிங் போன்ற விளையாட்டுகள்... உள்ளூர் விளையாட்டு கழகத்தினரால் நடத்தப் படுகிறது.

அரசு வழங்கும் யாத்ரா நிவாஸ் தங்குமிட வாடகை ரூ.250-ல் துவங்குகிறது. குழுவாக செல்பவர்கள் தங்குவதற்கும் சிறப்பு வசதிகள் உண்டு. சொந்த வாகனம் இருந்தால்... கூடுதல் சௌகரியம்.

ஜில் ஜில்... ஏற்காடு! 

சேலத்தில் இருந்து 36 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, மலையை அடையலாம். நடுவில் நீரூற்றுடன், அமைந்த ஏரிதான் ஏற்காட்டின் மையக் கவர்ச்சி. கண்கவர் பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மே மாதம் இங்கே நடக்கும் மலர் கண்காட்சி, ஹைலைட். தவிர தொலைநோக்கியுடன் கூடிய 'லேடீஸ் ஸீட்’, தொலை நோக்கி இல்லாமலேயே ரசிக்க வைக்கும் 'பலோடா பாயின்ட்’, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, திகிலூட்டும் கரடி குகை, பக்தி மணம் கமழும் சேர்வராயன் மற்றும் ராஜேஸ்வரி அம்மன் கோயில்கள் என்று குடும்பத்தினர் அனைவரும் திருப்திபடலாம்!

கொல்லி ஃபால்ஸ்! 

பத்து வருடங்கள் முன்பு வரை மர்மம், அமானுஷ்யம், சித்தர்கள் என்றே வெளியுலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட கொல்லிமலை... இன்று வெகுஜனங்களை ஈர்க்கும் அள  வுக்கு மாறியிருக்கிறது. இதற்குக் காரணம், அதன் தூய்மை    மற்றும் கையைக் கடிக்காத செலவுகள்தான். 'எகோ டூரிசம்’ எனப்படும் சுற்றுச்சூழலுக்கான சிறப்பு சுற்றுலாத் தலமாக மாநில அரசு கொல்லிமலையை அங்கீகரித்துள்ளது. நாமக்கல்லில் இருந்து கொல்லிமலைக்கு தனிப்பேருந்து அல்லது வாடகை வாகனங்கள் கிடைக்கும். 26 கி.மீ. தூர மலைப்பாதை பயணத்      தில், கொல்லிமலை உங்களை வர வேற்கிறது.  600 அடி உயரத்திலிருந்து கொட்டும் 'ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி', அண்ணன் என்று வைத்துக் கொண்டால்... 'கொல்லி ஃபால்ஸ்' அதன் தம்பி மாதிரி. வாசலூர் பட்டி படகுத் துறையில் போட்டிங் போகலாம். சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் அருமையான வியூ பாயின்ட்டுகள் உண்டு. கொல்லிப்பாவை, அரப்பளீஸ்வரர், சமணர் கோயில்கள் என ஆன்மிக வெரைட்டியும் விரிந் திருக்கிறது.கையைக் கடிக்காத வகையில்... மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஹோட்டல்கள் இருக்கின்றன. தனி வாகனம் இருந்தால்... நல்லது.

டாப்ஸ்லிப், வால்பாறை! 

சுற்றுலாவை காட்டு விலங்குகள், பறவைகள் என மறக்க முடியாத நினைவுகளால் நிறைக்க வேண்டுமா? ஒரு நடை பொள்ளாச்சி பக்கம் வாருங்கள்! பொள்ளாச்சியில் தங்கிக்கொண்டு அருகில் இருக்கும் ஆனைமலை சரணா லயம் (37 கி.மீ.), டாப்ஸ்லிப் (30 கி.மீ.),  வால்பாறை (64 கி.மீ.) போன்ற குளுமை தவழும் கானுயிர் மையங்களை தரிசிக்கலாம்.ஆனைமலை சரணாலயத்தில் புலி, சிறுத்தை, யானை, முள்ளம்பன்றி மற்றும் பெயர் தெரியா பறவையினங்களை அருகிலேயே பார்க்கலாம். காட்டெருமைகள், விதவிதமான மான்கள் மற்றும் யானைகள் டாப்ஸ்லிப்பின் ஸ்பெஷல்.மரகதப் பச்சை போல விரிந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், வால்பாறையின் ஸ்பெஷல். அருகிலிருக்கும் ஆழியாறு அணை, மங்கி ஃபால்ஸ், நல்லமுடி பூஞ்சோலை, நம்பர் பாறை போன்ற ஸ்பாட்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பிச்சாவரம் த்ரில் போட்டிங்! 

உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடுகளை உள்ளடக்கியது, பிச்சாவரம். சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் இருக்கும் இந்த ஸ்பாட்டுக்கு பேருந்து வசதிகள் உண்டு. சுனாமியையே எதிர்த்து நிற்கும் சுரபுன்னைக் காடுகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் படகு சவாரி... பிச்சாவரத்தின் தனிச்சிறப்பு. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரிக்கும் விடுதியில் முன்பதிவின் பேரில் தங்கும் வசதி உண்டு.

குருசடை - ராமேஸ்வரம்! 

ராமேஸ்வரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் குருசடைத்தீவு பிராந்தியம், கடல் வாழ் உயிரினங்களுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதி. கடல் வாழ் உயிரினங்களின் அதிசயம் மற்றும் வண்ணமயமான பவளப்பாறைகளின் அழகையும் கண்டு ரசிக்கலாம். மீன் வளத்துறை யின் முன் அனுமதி பெற்றே இங்கே செல்ல முடியும். தீவில் உணவு வசதி ஏதும் கிடையாது.1,212 தூண்கள் நிரம்பிய மண்டபம்... ராமேஸ்வரம் கோயிலில் இருக்கிறது. நாட்டின் மிக நீளமான பாலமான பாம்பன் பாலம், கப்பலுக்கு வழி விட்டு இரண்டாகப் பிரிவது... அவசியம் காண வேண்டிய காட்சி. இங்கிருந்து 18 கி.மீ. தூரத்தில், கடற்கோளால் அழிந்த தனுஷ்கோடியின் மிச்சங்களைப் பார்க்கலாம்.

தேக்கடி யானை சவாரி! 

தமிழகம்-கேரளத்துக்கு இடையே நீண்டகால பிரச்னையாக இருக்கும் முல்லை-பெரியாறு அணையின் நீர்பரப்புதான் இந்த தேக்கடி!  இதன் ஸ்பெஷலே... படகுப் பயணம்தான். அதை அடுத்து பூங்கா உலா மற்றும் காட்டுக்குள் யானை மீதான சவாரி போன்றவையும் உண்டு. குமுளி ஷாப்பிங்கில் இயற்கை வாசனை திரவியங்கள் கிடைக்கும். இரு மாநில மக்களால் வணங்கப்படும் மங்கலதேவி (கண்ணகி) கோயில்... தேக்கடியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது.

எஸ்.கே.நிலா       

2 comments: