Search This Blog

Saturday, April 07, 2012

எனது இந்தியா! ( ரத்தம் குடிக்கும் சாலை ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

 
ரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்று சரித்திரப் புத்தகத்தில் வாசித்து இருக்கிறோம். ஆரியர்கள் என்பவர் யார் என்பது பற்றி முற்றிலும் முரண்பட்ட கருத்துக்கள் வரலாற்று அறிஞர்களுக்கு இடையே நிலவுகின்றன. ஆரியர் களின் படையெடுப்பு குறித்து, வாதப் பிரதிவாதங்கள் இன்றும் தொடர்கின்றன.ஆரியர் படையெடுப்பு நடக்கவே இல்லை, அவர்கள் நாடோடி இனம் என்று ஒரு சாரார் சொல்கின்றனர். ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து வட மேற்கு இந்தியாவைத் தன்வசமாக்கிக்கொண்டனர், அங்கே இருந்து கங்கைச் சமவெளிக்கும் தக்காணம் மற்றும் தென் இந்தியாவுக்கும் பரவினர் என்று மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர். இந்தச் சர்ச்சைகளால் புதுப்புதுக் குழப்பங்கள்தான் தோன்றுகிறதே தவிர, சரியான விளக்கமோ, வரலாற்று ஆதாரங்களோ முழுமையாக இன்னும் கிடைக்கவில்லை.  நாடு பிடிக்கும் ஆசையில் படையோடு வந்த மன்னர்கள் பலரும் கைபர் கணவாய் வழியாகவே இந்தியாவுக்குள் நுழைந்து இருக்கின்றனர். கைபரைக் கடப்பது ஒரு சவால். அதைத் தாண்டிவிட்டால், இந்தியாவுக்குள் செல்ல ஒரு தடையும் இல்லை. இந்தியாவின் நாசித் துவாரம் என்று குறியீடாக அழைக்கப்படும் கைபர் கணவாய் இந்தியாவின் மிக முக்கியமான புவியியல் அம்சமாகும்.
 
 
 
கடந்து சென்ற மனிதர்களை சாலைகள் ஒரு போதும் நினைவுவைத்துக்கொள்வது இல்லை என்று ஒரு பழமொழி இருக்கிறது. ஒருவேளை, கைபர் கணவாய் நினைவுவைத்திருந்தால், அது எத்தனை கதைகளைச் சொல்லும்? எவ்வளவு சம்பவங்களை ஞாபகப்படுத்தும்? கைபர் கணவாயைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்து வென்றவர்கள், தோற்ற வர்கள், பாதியிலேயே இறந்துபோனவர்கள் என்று வரலாற்றின் பக்கங்களில்தான் எத்தனை விசித்திர மான சம்பவங்கள்.பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் மலைப் பாதைதான் கைபர் கணவாய். பண்டைய இந்தியாவில் இது ஓர் எல்லைப் பகுதி. ஹிந்துகுஷ் மலைத்தொடரில் அமைந்துள்ளது. 53 கி.மீ. நீளம் உள்ள இந்தப் பாதை 3,500 அடி உயரத்தில் இருக்கிறது. ஹிந்துகுஷ் மலைத்தொடர் மிகவும் கூர்மையானது. ஊசி மலையான அதன் மீது ஏறிக் கடப்பது எளிதானது இல்லை. இன்று, கைபர் கணவாயைக் கடப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, பண்டைய பட்டு வணிகச் சாலை என்று அழைக்கப்படும் வணிகர் களின் புராதனச் சாலை. இன்னொன்று, கார், டிரக் போன்ற வாகனங்கள் செல்லும் நவீனச் சாலை. இந்த இரண்டையும் தவிர, கைபர் கணவாயில் உள்ள லண்டிகோத்வால் என்ற இடத்தில் இருந்து பெஷாவருக்குச் செல்லும் ரயில் பாதையும் இருக்கிறது.அந்தக் காலத்தில், கைபர் கணவாயைக் கடப்ப தற்கு ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது. அந்த வழி மலையைக் குடைந்து செல்லும் சிறிய பாதை. அந்தப் பாதை மண் சரிவுகள் நிரம்பியது. மழைக் காலத்தில் அதைக் கடப்பது மிகவும் சிரமம். கைபர் கணவாய்ப் பகுதியில் வசிப்பவர்கள் பதான்கள் என அழைக்கப்படும் பூர்வகுடிகள். இவர்கள் போர் மறவர்கள். துணிச்சலாக சண்டையிடுவதில் பெயர் பெற்றவர்கள். பதான்களை மீறி, கைபரைக் கடந்து செல்வது எளிதான காரியம் இல்லை.  கி.மு. 327-ல் அலெக்சாண்டர் படையெடுத்து ஆசியா மைனர், ஈராக் மற்றும் ஈரானை வென்று, அங்கே இருந்து காபூல் நகருக்குச் சென்றார். இந்தி யாவைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் நெடுநாட்களாகவே இருந்தது. இந்தியா மிகுந்த செல்வச் செழிப்பான நாடு என்று, ஹெரோடஸ் எழுதிய வரலாற்றுக் குறிப்புகளை வாசித்த அலெக்சாண்டர், எப்படியாவது இந்தியாவைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
 
 
அலெக்சாண்டரின் படையெடுப்பைத் தடுப்பதற் காக தக்ஷசீலத்தைச் சேர்ந்த அம்பி அரசனும், ஜீலத்தின் போரஸ் அரசனும் படை திரட்டிக் காத்திருந்தனர். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தன்னை எதிர்க்க முடியாதபடி அரசியல் சூழல் இருப் பதை அறிந்துகொண்ட அலெக்சாண்டர், தனது படையோடு கைபர் கணவாயைக் கடந்துவிட்டால் வெற்றி நிச்சயம் என்று உறுதியாக நம்பினார்.அலெக்சாண்டரின் படையெடுப்பைத் தடுப்பதற் காக தக்ஷசீலத்தைச் சேர்ந்த அம்பி அரசனும், ஜீலத்தின் போரஸ் அரசனும் படை திரட்டிக் காத்திருந்தனர். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தன்னை எதிர்க்க முடியாதபடி அரசியல் சூழல் இருப் பதை அறிந்துகொண்ட அலெக்சாண்டர், தனது படையோடு கைபர் கணவாயைக் கடந்துவிட்டால் வெற்றி நிச்சயம் என்று உறுதியாக நம்பினார்.அலெக்சாண்டர் 19 மாதங்கள் இந்தியாவில் தொடர்ந்து சண்டை நடத்திக்கொண்டு இருந்தார். தொடர்யுத்தம் காரணமாக அவரது படையினர் சோர்வுற்றுப்போயிருந்தனர். ஊர் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் அவர்களை பீடித்துக் கொண்டது. கடுமையான வெக்கையும் அவர்களைப் பலவீன மாக்கியது.வென்ற நிலப்பரப்புகளில் தனது கிரேக்க ஆளுனர் களை நியமித்த அலெக்சாண்டர், படைகளின் உத்வேகம் முற்றிலும் குறைந்துபோனதால் நாடு திரும்பலாம் என்று முடிவு செய்து புறப்பட்டார். வழியில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாபிலோனில் அலெக்சாண்டர் மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 32.
 
 
அசோகர் காலத்தில், கைபர் பிரதேசம் முழுவதும் பௌத்தம் மேலோங்கி இருந்தது. விகாரைகள், ஸ்தூபிகள், குகைக் கோயில்கள் என முக்கிய பௌத்த ஸ்தலங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. இன்றும், பாமியான் குகைகளில் புத்தரின் மிகப் பெரிய சிலைகள் இருக்கின்றன.ஒரு பக்கம், நாடு பிடிக்க படைநடத்தி வந்தவர்கள். மறு பக்கம், வணிகர்கள் என்று இரண்டு விதமான தொடர்இயக்கம் கைபர் கணவாய் வழியாக நடை பெற்று வந்தது. பட்டு வணிகத்துக்குப் பெயர்போன சீனாவில் இருந்து, வணிகர்கள் கைபர் வழியாகவே இந்தியாவுக்கு வந்தனர். அதனால், அந்தச் சாலையே பட்டு வணிகச் சாலை என்று அழைக்கப்பட்டது. குஷானர்கள் காலத்தில் இந்த வணிகச் சாலை மிகவும் புகழ்பெற்று விளங்கியது.சீனா, இந்தியா, கிரேக்கம், பெர்சியா, அரேபியா, ரோம் மற்றும் எகிப்து நாடுகள் தங்களுக்குள் பண்டங்களை பரிமாறிக்கொண்டன. இதற்காக, வணிகர்கள் வந்து போன சாலையே பட்டுச் சாலை என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சாலையில் பல ஊர்களில் வணிகச் சந்தைகள் அமைக்கப்பட்டு இருக்கும். சீனாவில் இருந்து பட்டு, சாடின் துணி, கஸ்தூரி, வாசனைத் திரவியங்கள், அலங்கார நகைகள், தேயிலை மற்றும் புரோசிலின் பாத்திரங்கள் போன்றவை விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. அதுபோல மிளகு, கிராம்பு, சந்தனம், அகில் மற்றும் தந்தம் ஆகியவற்றை இந்திய வணிகர்கள் விற்பனைக்குக் கொண்டுசென்றனர். தங்கம், வெள்ளி மற்றும் கண்ணாடிச் சாமான்களை ரோமானியர்கள் வணிகம் செய்தனர். இதற்காக வணிகர்கள் மாதக்கணக்கில் வண்டிகளில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. சீனாவில் இருந்து செல்லும் வடக்கு வழி மற்றும் தெற்கு வழி ஆகிய இரண்டு பாதைகளில் பட்டு வணிகம் நடைபெற்று இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வணிகர்கள் தங்கள் பொருட்களுடன் ஹிந்துகுஷ் மலைப் பகுதியைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. பட்டுச் சாலையின் முக்கியப் பிரச்னை, வழிப்பறிக் கொள்ளையர்கள். அவர்கள், மறைந்திருந்து தாக்கி பொருட்களைப் பறித்துக் கொண்டு போய்விடுவார்கள். இந்த வழிப்பறி பற்றி, யுவான் சுவாங் எழுதி இருக்கும் பயணக் குறிப்பு விளக்கமாக கூறுகிறது.''ஆப்கானிஸ்தானில் பயணம் செய்யும்போது பாமியான் புத்த சிலைகளைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தச் சிலைகள் மெய்மறக்கச் செய்யும் கலைப் படைப்புகள். மலைக் குகைகளில் நிறைய புத்த சிலைகள் இருப்பதை காண முடிந்தது. ஹிந்துகுஷ் மலையைக் கடந்து வருவது மிகவும் ஆபத்தானது. மிகவும் குறுகலான மலைப் பாதை பகலிலும் இருண்டுதான் இருக்கும். மலைகளுக்கு இடையே முறையான பாதை இருக்காது. சில இடங்களில் தொங்கு பாலங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் தொங்கிக்கொண்டுதான் கடந்து செல்ல வேண்டும். இந்த ஆபத்தைத் தாண்டி வந்தபோது வழிப்பறிக் கொள்ளையரிடம் மாட்டிக்கொண்டேன். அவர்கள் என்னை அடித்து உதைத்து பணத்தைப் பறிக்க முயன்றனர். நான் ஓர் துறவி என்பதை எடுத்துச் சொல்லியும் அவர்கள் மனம் இரங்கவில்லை. கைப்பொருளைப் பறித்துக் கொண்டு என்னைத் துரத்திவிட்டனர்.  பட்டு வணிகக் குழு ஒன்று என்னை அடையாளம் கண்டு, எனக்கு உணவும் குடிநீரும் தந்து தங்களோடு இணைத்துக்கொண்டனர். அப்படித்தான் ஹிந்துகுஷ் மலையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தேன்'' என்று, யுவான் சுவாங் குறிப்பிட்டு இருக்கிறார்.
 
கி.பி. 997-ல் அமீர் சுபக்தாஜின் என்ற முஸ்லீம் ஜெனரல் தனது படையோடு கைபரைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தார். இவரே, இந்தக் கணவாயைக் கடந்த முதல் இஸ்லாமியத் தளபதி. அதைத் தொடர்ந்து தைமூர், முகமது கோரி, பாபர் எனப் பல மன்னர்களின் படைகள் கைபர் கணவாயைக் கடந்து இந்தியாவுக்குள் வந்து இருக்கின்றன.



விகடன்

No comments:

Post a Comment