Search This Blog

Sunday, April 29, 2012

அருள் மழை ----------- 57


பிடிப்பைத் தந்த பிரான்!

பல வர்ஷங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒருநாள் மடத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண "கியூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர்.

"பெரியவா...........நான் ஸர்வீஸ்லேர்ந்து ரிடையர் ஆய்ட்டேன்.........கொழந்தைகள்...ன்னு யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரகம் பண்ணணும்"

பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி. "வாழ்றதுக்கு ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?"

"ஆமா........."

"எதாவுது கார்யம் குடுத்தா பண்ணுவியா?"

"உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்"

அவரை அப்படியே விட்டுவிட்டு அடுத்து வந்த மற்றொரு தம்பதியிடம் குசலப்ரஸ்னம் பண்ண ஆரம்பித்தார். அவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய பெண்ணும் வந்திருந்தாள்.

"இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்..........."

கையை உயர்த்தி ஆசி கூறினார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா இதை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பி, "பிடிப்பு வேணும்...னியே! இதோ........இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும்"

"செஞ்சுடறேன் செஞ்சுடறேன்" பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார். பெரியவா அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார். அவருக்கு புரிந்தது........."ஆமா, இவ என் ரெண்டாவது சம்ஸாரம். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளை கல்யாணம் பண்ணிண்டேன்". பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவ்ரமான மாறுதல்!

"சரி..........ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?............."

"இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு". பெரியவாளுக்கு எப்டி தெரியும்?

ரொம்ப கூனிக்குறுகி, "இவ சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா......நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்.............." துக்கத்தால் குரல் அடைத்தது.

"ம்ம்ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ.......ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........." அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி!

என்னது? இது சத்யம் சத்யம்! பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்! உண்மைதான்! பல வர்ஷங்களுக்கு முன் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டே ஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும், விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளை தாங்களே வளர்த்து வருவதாக கூறினார்கள்.
பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.
-----------------------------------------------------------------------------------------

இப்போது அதிகமாக எல்லார் வாயிலும் அனுபவம் இல்லாமலே வரும் வாக்யம் "எல்லாமே pre planned " என்பது. மஹான்களின் சந்நிதியில் அது சஹஜமாக, அனுபவத்திலும் வரும். நம் வீடுகளில் கண்ணாடியை எங்கேயோ வைத்துவிட்டு, வீடு முழுக்க தேடியதும், வீட்டார் யாராவது "இதோ இருக்கு" என்று எங்கிருந்தோ கண்ணாடியை எடுத்துக் குடுப்பது போல், சர்வ சாதாரணமாக "cosmic level " ல் விளையாடக்கூடியவா பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்.

1 comment:

  1. ஆச்சரியமாக இருக்கிறது.
    அருமையான பதிவுக்கு நன்றி.

    ReplyDelete