Search This Blog

Friday, April 27, 2012

'கலப்பட' டீ

நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்குப் பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் ரத்தமும் இருக்கிறது’ - 40 ஆண்டுகளுக்கு முன் பி.எச்.டேனியல் எழுதிய 'எரியும் பனிக்காடு’ புத்தகத்தின் சாரம்சம் இது. தேநீரையும் இந்தியனையும் பிரிக்க முடியாதபடி, காலம் மா(ற்)றிவிட்டது. அடுத்த ஆண்டில், இந்தியாவின் தேசியப் பானமாக அறிவிக்கப்பட இருக்கிறது தேநீர்! தேசியத் திட்டக்குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, '83 சதவிகித இந்தியர் களின் வீடுகளில் தேநீர் நுகரப்படுகிறது. அதனால், தேநீர் தேசியப் பானமாக அறிவிக்கப்படும்’ என்று சொல்லி இருக்கிறார். அசாம் மாநிலத்தில் முதன் முதலாகத் தேயிலையைப் பயிரிட்டவர் மணிராம் திவான். இவர், சுதந்திரப் போராட்ட வீரரும்கூட. அவரது 212-வது பிறந்த நாள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வருகிறது. அன்றைய தினம்தான் தேநீரைத் தேசியப் பானமாக அறிவிக்க திட்டமிட்டு உள்ளது மத்திய அரசு.தேசியப் பானம் என்ற அளவுக்குத் தேநீர் கருதப் பட்டாலும், இன்று பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்துவது கலப்படத் தேயிலையைத்தான். அது சரி, தேயிலைத் தூளில் எப்படிக் கலப்படம் செய்கிறார்கள்?

இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் 'திக்’ காகவே இருக்குமாம்!

முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது!

மஞ்சனத்தி இலை - குதிரை சாணம்: மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்து, காய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால், மினுமினுக்கும் கலப்படத் தேயிலைத் தூள் ரெடி!

புளியங்கொட்டை: புளியங் கொட்​டையை லேசாக வறுத்து, ரொம்பவும் மிருதுவாக அரைக்காமல் தேயிலைத் தூள் பதத்தில் அரைத்து, தண்ணீர் சேர்த்துக் காய வைத்து (அப்போதுதான் துவர்ப்பு தெரியாமல் இருக்குமாம்) தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள்!

மரத்தூள், தேங்காய் நார்: மலிவாக அல்லது இலவசமாக சில இடங்களில் கிடைக்கும் மரத் தூள்தான் கலப்படக்காரர்களின் முதல் சாய்ஸ். மரத் தூளுடன் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் ரசாயனத்தைச் சேர்த்து தேயிலைத் தூளுடன் கலக் கிறார்கள். இதுதவிர, டீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலைத் தூளைச் சேகரித்தும் கலப்படத் தூளைத் தயாரிக்கிறார்கள்.

ஓரிஜினல் தேயிலைத் தூளின் விலை ஒரு கிலோ 270 முதல் 310 வரை விற்கப்படுகிறது. ஆனால், கலப்படத் தேயிலைத்தூள் கிலோ 60-க்கே கிடைக்கிறது. பெரும்பாலான ரோட்டோர டீக் கடைகளில் நாம் அருந்துவது கலப்படத் தேநீர்தான். இதை அருந்தினால் சில ஆண்டுகளில் தோல் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, கிட்னி பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

எப்படிக் கண்டுபிடிப்பது? கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீரை ஊற்றி தேயிலைத் தூளை ஒரு சிட்டிகை விடுங்கள். உடனடியாகப் பொன் நிறமாக தண்ணீர் மாறினால் அது கலப்படத் தூள்!

எது ஒரிஜினல்? தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று... இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.

உணவுப் பொருளில் கலப்படம் செய்து விற்றால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். தேசியப் பானம் ஆன பிறகாவது, தேயிலைக் கலப்​படத்தைத் தடுக்குமா அரசு?

விகடன் 

2 comments:

  1. நெஞ்சம் பதறுகிறது.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  2. நல்ல தகவலை தந்துள்ள நண்பருக்கு நன்றி
    சு. சிவசுப்ரமணியம் தலைவர்
    கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
    9488520800
    Web: www.cchepnlg.blogspot.in, www.cchepeye.blogspot.in
    Facebook: http://facebook.com/cchepnilgiris

    ReplyDelete