Search This Blog

Thursday, April 05, 2012

நாளந்தா பல்கலைக்கழகம்!


ஒரு நாட்டின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் உலக அளவில் கல்வி பறைசாற்றிக் கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியுமா? அதுதான் நாளந்தா பல்கலைக் கழகம். 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கல்வி நிலையம்தான் இந்தியாவின் அருமை, பெருமைகளை உலகம் முழுவதும் பரவச் செய்தது. உலகம் முழுவதிலும் ஆராய்ச்சி மாணவர்கள் இந்தக் கல்வி நிலையத்தைத் தேடி வந்தார்கள். நாளந்தா பல்கலைக்கழகம்தான் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் என்பது மட்டுமல்லாமல், மாணவர்கள் தங்கி, படித்த முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது.கி.பி.427-ம் ஆண்டில் குப்த பேரரசரான குமாரகுப்தர்தான் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிக்கும் இடம்’ என்று பொருள். 14 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடந்த இந்தப் பல்கலைக்கழக கட்டடம் முழுவதும், சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. இது அன்றைய உலகின் புத்தமதத் தத்துவத்தின் மையமாகத் திகழ்ந்தது. பிகார் மாநிலம், பாட்னாவில் இருந்து 55 மைல் தொலைவில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் அடுத்த 900 ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.அசோகர் காலத்துக்கு முன்பிருந்தே சிறந்த கல்வி கற்கும் இடமாக நாளந்தா விளங்கி வந்தது. புத்தர் தமது கடைசிப் பயணத்தின் போது நாளந்தா நகருக்கு வந்து தனது போதனையைச் செய்திருக்கிறார். புத்தரின் முக்கிய சீடரான சாரிபுத்தர் நாளந்தாவைச் சேர்ந்தவர்தான்.இப்போது தேசிய கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு எப்படி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதோ, அதே போன்றதொரு நுழைவுத் தேர்வு, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கும் நடத்தப்பட்டதாக சீன யாத்திரிகர் யுவான்சுவாங் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கும் 10 பேரில் 2 அல்லது 3 பேருக்குத்தான் இடம் கிடைத்தது என்பதையும் அவர் தம் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இங்கு உயர்கல்வி மட்டுமே வழங்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலிருந்தும் குறிப்பாக சீனா, கொரியா, ஜப்பான், திபெத், இந்தோனேஷியா, பாரசீகம், துருக்கி, இலங்கை, மங்கோலியா போன்ற நாடுகளிலிருந்து மாணவர்கள் படித்துச் சென்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் தங்குமிடம், உணவு, உடை, மருந்து ஆகியவை கல்வியுடன் இலவசமாக வழங்கப்பட்டன. 


கல்வி ஏட்டுச் சுரைக்காயாக இருந்து விடாமல், ஆராய்ச்சிக்கான விதையாக மாற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பாடமும் விவாதங்கள் மூலமாகவே, மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. ஒருநாளைக்கு பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட நூறு விரிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர். இங்கு புத்தமதத் தத்துவங்கள் குறிப்பாக, மகாயான கருத்துகள் பயிற்றுவிக்கப்பட்டன. புத்தமதத் தத்துவங்களுடன் இதர இந்தியத் தத்துவங்கள், மேற்கத்திய தத்துவம், மருத்துவம், சுகாதாரம், கட்டடக் கலை, சிற்பக் கலை, வானியல், வரலாறு, சட்டம், மொழியியல், யோக விஞ்ஞானம் போன்ற பாடங்கள் கற்றுத் தரப்பட்டன.  எட்டு தனித்தனி வளாகங்களில் ஆலயங்கள், தியான மண்டபங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றுடன் புத்தமதத் துறவிகளின் மடங்களும் இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்திருக்கின்றன. ஆங்காங்கே பூங்காக்கள், குளங்கள் அமைக்கப்பட்டு, படிப்பதற்கேற்ற சூழலும் இருந்திருக்கிறது. பல்கலைக்கழகத்துக்குள் பிரம்மாண்டமான நூலகமும் இருந்தது. ஒன்பது மாடி உயரம் கொண்ட மூன்று கட்டடங்களில் லட்சக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. பல்கலைக்கழகத்தின் முழு நிர்வாகமும் புத்தமதத் துறவிகளால் மேற்கொள்ளப்பட்டன. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்துத் துறவிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகளை மீறுபவர் யாராக இருந்தாலும், மடாலயத்திலிருந்து வெளியேற்றப்படுவர்.முதலில் குப்த மன்னர்களாலும், பின்னர் ஹர்ஷர், பால வம்ச மன்னர்கள் எனத் தொடர்ந்து பல மன்னர்கள் பல்கலைக்கழகத்தின் புரவலர்களாக இருந்து, பல்கலைக் கழகத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். ஹர்ஷரின் காலத்தில் பல்கலைக்கழகத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள 200 கிராமங்களின் வருவாய் ஒதுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக விளைநிலங்களும், காய்கறித் தோட்டங்களும், பசுக்களும் இருந்தன. பல்கலைக் கழகம் புகழின் உச்சத்திலிருந்தபோது அதில் 10,000 மாணவர்கள் படித்துவந்தனர். 2000 ஆசிரியர்கள் பணியாற்றினர். யுவான்சுவாங், யி ஜிங் உள்ளிட்ட பலர் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள்தான். 

தர்மகீர்த்தி, தர்மபாலர், சந்திரபாலர், குணமதி, ஸ்திரமதி, பிரபமித்திரர், ஜீன மித்திரர் போன்ற புகழ்பெற்ற தத்துவ ஞானிகளும், மேதைகளும் அங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றினர். கட்டடக்கலை, கல்வி, வழிபாடு என்று ஒருசேர பல்வேறு விஷயங்களைத் தன்னுள் கட்டிக்காத்து, இந்தியாவின் கலாசார பெருமைகளைச் சர்வதேச நாடுகளுக்குப் பறைசாற்றி வந்த நாளந்தா பல்கலைக்கழகம், ஆப்கானிஸ்தானிலிருந்து வட இந்தியாவின் மீது படையெடுத்து வந்த பக்தியார் கில்ஜி என்ற ஆப்கானிய படைத் தளபதியால் சூறையாடாப்பட்டு, முற்றிலும் தீக்கிரையானது. நூலகத்தில் இருந்த பல்வேறு நாட்டின் ஆய்வு நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளாக அறிவூட்டி வந்த பல்கலைக்கழகம் மிகப் பெரிய அழிவைச் சந்தித்தது. பொலிவிழந்த அந்தக் கல்விக்கூடம் ஒரு சில ஆசிரியர்களுடனும் சில நூறு மாணவர்களுடன் தொடர்ந்தது.கடைசியாக கி.பி.14-ம் நூற் றாண்டில் சகலராஜா என்னும் மன்னரின் மறைவுடன், ஆதரிப்போர் யாருமின்றி பல்கலைக்கழகம் செயலிழந்தது. பல்கலைக்கழகத்தைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் இங்கு வந்து படித்த வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடிகிறது. ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களோடு ஒப்பிடும்போது 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகவும், ஐரோப்பாவின் பலோக்னா பல்கலைக்கழகத்தோடு ஒப்பிடும்போது 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்கலைக்கழகமாகவும் நாளந்தா விளங்குகிறது. இன்று வரை நிலைத்திருந்தால் உலகிலேயே தொன்மையான பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கியிருக்கும்.

அகிலன்

No comments:

Post a Comment