Search This Blog

Wednesday, April 11, 2012

எனது இந்தியா! ( கஜினி ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


ஜினி முகமது இந்தியாவின் மீது 17 முறை படைஎடுத்தார் அல்லவா? அப்போது, கைபரைக் கடந்துதான் இந்தியாவுக்குள் வந்து இருக்கிறார். ''கஜினியின் நோக்கம் நாடு பிடிப்பது இல்லை, கோயில்களில் கொள்ளை அடிப்பது​தான்'' என்கிறார் வரலாற்று ஆய்வாளர் எம்.ஆர்.ராஜகோபாலன். இவரது ஆய்வுப்படி, ''கஜினி முகமது 16 முறை தோல்வி அடையவில்லை. அத்தனை போரிலும் கஜினி ஜெயித்து இருக்கிறார்'' என்று குறிப்பிடுகிறார். அதோடு, இந்தப் படையெடுப்புகளின் விரிவான பட்டியலையும் முன்வைக்கிறார்.கஜினியின் முதல் படையெடுப்பு கைபர் கணவாயை ஒட்டிய இந்தியாவின் எல்லை நகரங்களின் மீதான தாக்குதல். 2. கி.பி 1001-ல் பெஷாவர் மற்றும் வால்ஹிந்த் மீதான தாக்குதல். 3. பீராவின் மீது, 4. மூல்தான் மீதான தாக்குதல். இவை நடந்தது கிபி 1006-ல். அதன் பிறகு, 5. படையெடுப்பு நவாஸாவின் மீது, 6. நாகர்கோட், 7. நாராயண், 8. மறுபடியும் மூல்தான், 9. நிந்துனா, 10. தானேசர், 11. லோக்காட், 12. மதுரா மற்றும் கனோஜீ, 13. ராகிப், 14. லோக்கோட் மற்றும் லாஹோர், 15. குவாலி​யர், 16. சோம்நாத், 17-வது முறை ஜாட் மன்னர்கள் மீது படைஎடுத்துச் சென்று வென்று இருக்கிறான்.

ஆகவே, கைபர் பாதை... இந்தியாவைக் கொள்ளையிடச் சென்ற குதிரைகளின் இடை​விடாத குளம்பொலி ஓசையைக் கேட்டு இருக்கிறது. வாளில் சொட்டும் குருதியில் நனைந்து இருக்கிறது. கைபரை எந்த மன்னராலும் முழுமையாகத் தனது கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அது, ரத்தம் குடிக்கும் சாலை என்கிறார் பீட்டர் ஹாப்ரிக் எனும் வரலாற்று ஆசிரியர்.மொகலாய சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் உருவாக அடிக்கோலிட்டது இந்தப் பாதையைக் கடந்துவந்த பாபரின் படைகளே. அதற்கு முன்னதாக அடிமை வம்சத்தை டெல்லியின் அரியணையில் அமரச்செய்த முகமது கோரியின் படையெடுப்பும் கைபரைக் கடந்தே வந்து இருக்கிறது. ஆகவே, கைபர் கணவாயை இந்தியாவின் அரியணையை நோக்கிச் செல்லும் ராஜபாட்டை என்று, மொகலாய வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.இந்தப் பாதை இந்தியாவின் நிலையான ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்ட பிரிட்டிஷ்​காரர்கள், தனது முழுமையான கட்டுப்​பாட்டில் கைபரை வைத்துக்கொள்ள போரா​டினர். 1839-ல் ஆப்கானிஸ்தானைப் பிடிப்பதற்காக கைபர் வழியாக பிரிட்டிஷ் படை நடத்திச் சென்றது. இந்தப் படை​யெடுப்பு, பிரிட்டிஷ் ராணுவத்துக்குப் பெரும் சவாலாக இருந்தது. நிறைய பொருட் சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்பட்டது. மூன்று ஆப்கான் யுத்தத்திலும் கைபர் கணவாய்தான் முக்கியக் கேந்திரமாக இருந்தது.1836-ம் ஆண்டு, ஹரிசிங் என்ற சீக்கிய ராணுவத் தலைவர் கைபர் கணவாயின் முகப்பில் பெரிய கோட்டை ஒன்றைக் கட்டி அதில் தனது படைவீரர்களை நியமித்தார். காபூல் அரசன் தாஸ்த் முகமது, சீக்கியர்கள் கோட்டை அமைப்பதன் வழியே காபூலைப் பிடிக்கத் திட்டம் இடுகிறார்கள் என்று முடிவு செய்து, பெரும் படையுடன் ஜம்ருத் கோட்டையை தாக்கினார்.  

கோட்டையின் உள்ளே 1,000 சீக்கியர்கள் காவலுக்கு இருந்தனர். வெளியே இருந்த 25,000 காபூல் படை வீரர்களை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதோடு, தண்ணீரும் உணவும் கோட்டைக்குள் போக முடியாதபடி காபூல் படை தடை செய்துவிட்டது. அப்போது, ஹரிசிங் பெஷாவரில் இருந்தார். எனவே, என்ன செய்வது எனத் தெரியாமல் சீக்கியப் படை குழப்பத்தில் ஆழ்ந்தது.இந்தச் சூழலில் ஹரிசரண் கௌர் என்ற இளம்பெண் முக்காடு அணிந்துகொண்டு ஜம்ருத் கோட்டையில் இருந்து தப்பி, காபூல் வீரர்களை ஏமாற்றி வெளியேறி பெஷாவரை அடைந்தாள். ஹரிசிங்கிடம் நிலைமையை விளக்கினாள். உடனே அவர், ஒளிந்து தாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி, ஹரிசிங்கின் படைகள், ஒளிந்து காபூல் படைகளைத் தாக்கத் தொடங்கின. எதிர்பாராத தாக்குதலைச் சமாளிக்க முடியாத காபூல் படைகள், கைபர் கணவாயின் உள்ளே ஓடத் தொடங்கின.மலைக் குகைகள் அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக மாறின. ஆகவே, கைபர் கணவாயின் உள்ளே ஒளிந்தபடியே அவர்கள் சண்டையிட ஆரம்பித்தனர். பலத்த சண்டையின் முடிவில் ஹரிசிங் கொல்லப்பட்டார். ஆனால், சீக்கியர்களே வென்றனர். அதுமுதல், கைபர் கணவாயின் ஜம்ருத் கோட்டை சீக்கியர்கள் கைவசமே இருந்து வந்தது. கணவாய்க் காவலையும் அவர்களே மேற்கொண்டனர்.இந்தப் பாதை வழியேதான், கோகினூர் வைரம் கொண்டுசெல்லப்பட்டு இருக்கிறது. டெல்லியில் இருந்த மயில் ஆசனம், விலை உயர்ந்த வைரங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்த நாதிர்ஷா, 300 யானைகள், 10,000 குதிரைகள், 10,000 ஒட்டகங்கள் மற்றும் ஏராளமான பொருட்களை இதே கைபர் கணவாய் வழியாகத்தான் கொண்டுசென்றார்.1878-ல் நடந்த இரண்டாவது ஆப்கன் சண்டைக்குப் பிறகு, கைபர் கணவாய்ப் பகுதியில் ரயில் பாதை அமைக்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. அதற்கு முக்கியக் காரணம், ஆப்கான் வழியாக கைபர் பாதையை ரஷ்யா தன்வசமாக்கிக்கொள்ளும் என்ற பயம் பிரிட்டிஷ் அரசுக்கு இருந்ததுதான். அதைத் தடுப்பதற்காகவும், பயண வழியை எளிதாக்கவும் மலைப் பகுதியில் ரயில் பாதை அமைப்பது என்று முடிவு செய்தனர். 1905-ல்தான் இந்தப் பணி முறையாகத் தொடங்கியது. பெஷாவர் அருகில் உள்ள கச்சாகார்கி என்ற இடத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பம் ஆனது. 1907-க்குள் மேற்கு நோக்கி 32 கிமீ தூரத்துக்கு ரயில் பாதை அமைத்துவிட்டனர். மலைப் பாதையில், தண்டவாளம் அமைப்பது மிகவும் கடுமையான வேலையாக இருந்தது. கடும் மழையும் நோயும் கூலியாட்களை வாட்டி வதைத்தது. பணியிடத்திலேயே ஏராளமானோர் இறந்துபோனார்கள். 1925-ல் இந்தப் பணி முடிவு பெற்று, முறைப்படி பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. 34 குகைகள், 92 பாலங்களைக் கடந்து செல்கிறது இந்த ரயில் பாதை. இரண்டாம் உலகப் போரின்போது, இந்தப் பாதையைப் பயன்படுத்தி ஜெர்மன் ராணுவம் உள்ளே நுழைந்துவிடக்கூடும் என்று பயந்த பிரிட்டிஷ், இதை முழுமையாக மூடித் தனது காவலில் வைத்திருந்தது. பின்னாட்களில், ஆயுதங்கள் மற்றும் போதை மருந்துக் கடத்தல் என்று, கைபர் கணவாய் சூதாட்ட வழியாக மாறியது. இன்றும், கைபரைக் கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தால் சகலவிதமான ஆயுதங்களும் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன.

பிரிட்டிஷ் காலத்திலேயே ராணுவத்தைத் தாக்கிய பழங்குடிகள் அவர்கள் வசம் இருந்த துப்பாக்கிகளைப் பிடுங்கிச்சென்று, அதேபோல கள்ளத் துப்பாக்கி செய்து சந்தையில் விற்றனர். அந்தக் கள்ளத் துப்பாக்கியின் பெயரே கைபர் துப்பாக்கிதான். இந்த வகைத் துப்பாக்கிகளில் இன்றும் பிரிட்டிஷ் ராணுவக் குறியீடுகள் பொறிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.ஒசாமா பின்லேடனின் பிரச்னைக்குப் பிறகு, கைபர் கணவாய் வழியில் நான்கு சோதனைச் சாவடிகளை பாகிஸ்தான் நிறுவியது. பலத்த சோதனைக்குப் பிறகே வாகனங்களை அனுமதிக்கிறார்கள். கைபரைப் போலவே, போலன்... பாகிஸ்தானையும் ஆப்கானையும் இணைக்கும் இன்னொரு மலைப் பாதை. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இருந்து காந்தகருக்குச் செல்லும் இந்த வழி, ஆப்கான் எல்லைக்கு 120 கிமீ தூரத்தில் இருக்கிறது. இந்தக் கணவாய் வழியாகவே கிரேக்கர், துருக்கியர், பெர்ஷியர், ஹுன் எனப் பலரும் இந்தியாவுக்குள் வந்து இருக்கிறார்கள். பலூசி மற்றும் பிராகு இன மக்கள் இந்தக் கணவாய் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்கள். 1883-ல் ராபர்ட் குரோவ்ஸ் சாண்டிமேன் குறிப்பிட்ட தொகையை ஆண்டு வரியாகச் செலுத்தி போலன் கணவாயைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள ஓர் ஒப்பந்தம் உருவாக்கினார். 89 கி.மீ. தூரம் உள்ள போலன் கணவாய்ப் பாதை, ஆழமான பள்ளத்தாக்கின் ஊடாகவும், மலைக் குகைகளின் ஊடாகவும் செல்கிறது.போலனிலும் 1880-ல் தொடங்கிய ரயில் பாதை அமைக்கும் பணி 1885-ல் முடிவடைந்தது. 1886-ல் ரயில் பயணம் தொடங்கியது. ஆனால், இரண்டே ஆண்டுகளில் போலன் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ரயில் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டன. ஆகவே, புதிய ரயில் பாதை 1890-ல் அமைக்கப்பட்டது. இன்று வரை, அந்த ரயில் பாதையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.கைபரும் போலனும் நூற்றாண்டுகளாக இந்தியாவைக் கைப்பற்றத் துடித்த எத்தனையோ மன்னர்களின் ஆசையை, அவர்களின் வெற்றி தோல்விகளை கண்டிருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ் சந்திர போஸ், 1941 ஜனவரி 17 அன்று தப்பினார். பெஷாவரைக் கடந்து கைபர் கணவாய் வழியாக ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். அங்கிருந்து ரஷ்யா வழியாக 71 நாட்கள் பயணித்து பெர்லின் நகரை அடைந்தார் என்கிறார்கள்.

அலெக்சாண்டரில் இருந்து சுபாஷ் சந்திர போஸ் வரை எத்தனையோ ஆளுமைகளைக் கண்ட கைபர் போலன் பாதைகள் கடந்த காலத்தின் நினைவுகள் படர இன்றும் தன் பயன்பாட்டைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.புழுதி படிந்துகிடக்கும் அந்த மலைப் பாறைகள், மனிதர்களின் பேராசைகள் காற்றில் பறக்கும் தூசியைப் போல எழுந்து அடங்கிவிடக்கூடியவை என்பதை அறிந்தவை போல மௌனமாக உறைந்து இருக்கின்றன.மனிதர்கள், பாதைகளிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்வது இல்லை. சாலையின் பாடலைக் கேட்க முடிந்தவன், தன்னை அறிந்துகொள்வதுடன், உலகின் இயல்பையும் அறிந்துகொள்வான், அதுதான் உண்மையான வாழ்க்கைப் பாடமாகவும் இருக்கக்கூடும்.

விகடன் 

1 comment:

  1. வராலாற்று பகிர்வு கைபர் பற்றி நிறைய தகவல்கள் புதைந்து கிடக்கின்றன ...

    ReplyDelete